Published:Updated:

ஆடிச் செவ்வாயில் அவதரித்த அன்னை பிடாரி... பயம் போக்கும் பராசக்தி வழிபாடு!

சைதை பிடாரி இளங்காளி அம்மன்! #AadiSpecial #Video
சைதை பிடாரி இளங்காளி அம்மன்! #AadiSpecial #Video

பிடாரியை வழிபாடு செய்தால் நம் சகல பயங்களும் விலகும். மன நிம்மதி கைகூடும். திருஷ்டிகள் விலகும்

ஆதியில் மனிதன் வேட்டை சமூகமாக இருந்தான் என்கின்றனர் மானுடவியல் அறிஞர்கள். அப்போது தாய்த் தலைமைக் குடும்பமே இருந்தது. அப்போது தலைவியானவள் அச்சமில்லாதவளாக வீரம் மிகுந்தவளாக இருந்தாள். அந்த ஆதித் தாயை தெய்வமாக வழிபடும் மரபு நம் தமிழ் மரபு. அப்படி ஒரு தாய்த் தெய்வமே அன்னை பிடாரி.

‘பிடாரி’ என்ற சொல் அல்லது பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்தால் அது நாகர் சமூகத்தின் தொல்குடிப் பெயர். பாம்பைப் பிடிப்பவரைப் ‘பிடாரன்’ என்று சொல்கிறோம் அல்லவா... பிடாரனுக்கு இணையான பெண்பால் பெயர் பிடாரி.

அங்காள அம்மன்
அங்காள அம்மன்

‘பிடாரம்’ என்ற சொல்லுக்கு ஆட்டிவைத்தல் என்று பொருள். பகைவர்களை ஆட்டுவித்து ஓடச்செய்பவள் எனும் பொருளில் ‘பிடாரி’ என்ற பெயர் வந்தது என்பார்கள். மற்றொரு பொருளும் உண்டு. பக்தர்களின் பீடையை துன்பத்தை அரிபவள், அதாவது அழிப்பவள் என்பதால் ‘பிடாரி’ என்ற பெயர் பொருத்தம் என்றும் சொல்வார்கள்.

‘பிடாகை’ என்றால் கூடை. கூடையில் வைத்து வழிபடப்பட்ட பெண் தெய்வங்களே பிடாரி ஆனது என்பார்கள் சில பெரியோர்கள். பாம்புப் பிடித்து வைப்பவர்களும் கூடை ஒன்றைச் சுமந்து திரிபவர்கள் என்பதை அறிவோம் அல்லவா.

‘பிடாகை’ எனும் சொல்லுக்கு தனித்திருக்கும் இடம் என்றும் பொருள் கூறுவர். ஊரைவிட்டு ஒதுங்கி அமைந்திருக்கும் இடத்தில் காவல் தெய்வமாக வீற்றிருப்பதால் ‘பிடாரி’ எனப்படுகிறாள்.

நீலகேசியில் சுடுகாட்டுக்குள் இருக்கும் பிடாரி கோயிலில் ஒருவன் ஆடு வெட்டிப் பலி கொடுக்க வரும் போது முனி சந்திரன் என்ற துறவி அதனைத் தடுத்து உயிர்க் கொலை கூடாது என்கிறார். களிமண்ணால் ஆட்டுக்குட்டி செய்து அதனை வெட்டுமாறு அறிவுறுத்துகிறார். அவனும் அவ்வாறே செய்கிறான். இதன் மூலம் பிடாரிக்குத் தனிக் கோயில் இருந்ததை நீலகேசி தெரிவிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் 'அடங்காப் பசுந்துணி பிடர்த்தலைப் பீடம் ஏறிய வெற்றி வேல் தடக்கை கொற்றவை’ என்று துர்கை விவரிக்கப்படுகிறாள். பிடர்த்தலை மீது நின்ற பெண்ணாதலின், பிடாரி ஆனாள் என்றும் கூறுவர்.

தென் தமிழகத்தில் வில்லுப்பாட்டில் பிடாரிக்குரிய கதை பாடப்படுகிறது.

சிவபெருமானுடன் பார்வதியுடன் விளையாடுகையில் அவள் சிவபெருமானின் கண்களை மூடினாள். விளையாட்டு வினையாகி விட்டது. சிவபெருமான் வெகுண்டார். பார்வதியைப் பாதாளலோகத்தில் வசிக்கும் நாக கன்னிகையின் வயிற்றில் பிறக்கும்படி சபித்தார். சாபம் கொடுத்தும் கோபம் தணியாத சிவபெருமான் நாக கன்னியிடம் பார்வதியை எட்டுத் துண்டங்களாக வெட்டிக் கூறு போட்டுக் கொடுத்தார்.

நாக கன்னி தான் இட்ட பாம்பு முட்டைகளுடன் இந்த எட்டுத் துண்டங்களையும் அடைகாத்து வந்தாள். அந்த எட்டு துண்டுகளும் ஆக்ரோஷத்துடன் அஷ்ட காளிகளாக வளர்ந்தன என்கிறது புராணம்.

ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் எட்டும் அஷ்ட காளிகளாகப் அவதரித்தன. இவர்களில் மூன்றாவதாக பிறந்த முப்பிடாரி அல்லது முப்பிடாதி என்பவள் இரும்பு, வெள்ளி, தங்கக் கோட்டைகளைத் தகர்த்த திரிபுர சுந்தரி என்று போற்றப்படுகிறாள்.

இன்று ஆடி செவ்வாய்க்கிழமை. இந்த நாளின் ஆதித் தாய்த் தெய்வமான பிடாரியை நினைத்துப் போற்றுவோம். இன்று அனைவருக்கும் இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது மனபயமும் திருஷ்டியும்தான். பிடாரியை வழிபாடு செய்தால் நம் சகல பயங்களும் விலகும். மன நிம்மதி கைகூடும். திருஷ்டிகள் விலகும்

அடுத்த கட்டுரைக்கு