ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஆஞ்சநேயரும் சனிப்பிரதோஷமும்

சனிப்பிரதோஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
சனிப்பிரதோஷம்

பி. சந்திரமௌலி

உஜ்ஜயினி நாட்டின் அரசன் சந்திரசேனன். இவர் உஜ்ஜயினியில் கோயில்கொண்டிருக்கும் வீர மாகாளர்மீது அதீத பக்தி கொண்டவர். இதைக் கண்டு இவரிடம் நட்புகொண்ட மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னருக்கு அரிய வகை சிந்தாமணி ரத்தினத்தைப் பரிசளித்தார்.

அந்த அற்புத ரத்தினத்தின் மகிமையை அறிந்த அண்டைநாட்டு அரசர்கள், அதைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி தூதர்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள். தூதர்கள் கொண்டு வந்த தகவல்கள் மிரட்டும் தொனியில் இருந்தன. உஜ்ஜயினி யின் அரசர் கலங்கவில்லை.

``இழிமனம் படைத்தோரின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன். அவர்களிடம் ரத்தினத்தை ஒப்படைக்கவும் மாட்டேன். அதனால் போர் மூளும் எனில் அதற்கும் நான் தயார்’’ என்று அறிவித்தார்.

அதனால் கோபம் கொண்ட அயல்நாட்டு அரசர்கள் படைகளுடன் வந்து உஜ்ஜயினியைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால், சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம்போல் அன்றும் வீரமாகாளர் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபட்டார். சிவபெருமானைத் துதித்து முழு மனதோடு தியானம் செய்தார்.

ஆஞ்சநேயரும் சனிப்பிரதோஷமும்
ePhotocorp

அவர் செய்த வழிபாடுகளைப் பார்த்த யாதவச் சிறுவன் ஒருவனுக்கு, அதேபோல் நாமும் வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வீடு திரும்பியவன், கையில் கிடைத்ததைக் கொண்டு பூஜைக்குத் தயார் ஆனான். கருங்கல் ஒன்றை எடுத்துச் சிவலிங்கம் போல நட்டுவைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாகக் கொண்டு பூஜித்தான். நிறைவில் மன்னன் செய்தது போன்று தானும் தியானத்தில் ஆழ்ந்தான். நேரம் இரவு ஆனது. தாயார் தேடி வந்தாள். தியானத்தில் இருந்தவனைக் கண்டதும் அவளுக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

ஏதோ விளையாடுகிறான் என்று கருதி, மகன் முதுகில் நாலு சாத்துச் சாத்தி, சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங் கல்லையும் பிடுங்கி எறிந்துவிட்டு, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கிவிட்டாள். அவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்துவிட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான். மீண்டும் அவன் விழித்தெழுந்தபோது, வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. சிறுவன் வியந்தான்.

சற்று நேரத்தில் அவன் அம்மாவும் விழித்தாள். வீடே ஜொலிஜொலிப்பதைக் கண்டு திகைத்தவள், மகன் மூலம் விஷயம் அறிந்து சிலிர்த்தாள். இந்தத் தகவலை மன்னர் கவனத்துக்கும் கொண்டு சென்றாள். அவரும் உடனடியாக சிறுவனின் வீட்டுக்குப் புறப்பட்டார்.

அங்கே இறைவன் எழுந்தருளி இருந்ததையும் அவரால் விளைந்ததையும் கண்ட மன்னர், இறைவனை வலம் வந்து வணங்கினார். யாதவச் சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக்கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள்.

சனிப்பிரதோஷம்
சனிப்பிரதோஷம்
subodhsathe



ஊருக்குள் கோலாகலம் குடிகொண்டிருக்க, அதனால் எழுந்த ஆரவாரத்தைச் செவிமடுத்த பகையரசர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். நாட்டைப் பகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் இப்படியொரு குதூகலக் கொண்டாட்டமா என்று குழம்பினார்கள். பின்னர் முழு விவரமும் தெரியவந்தது. சந்திரசேனனின் சிவ பக்தி, அவர் வழிபாடுகளால் உந்தப்பட்டு சிறுவன் செய்த பூஜை, அதனால் உண்டான பலன் ஆகிய அனைத்தையும் அறிந்தவர்கள் சிலிர்த்தார்கள். தங்களின் தவற்றுக்காக வருந்தினார்கள்.

உடனடியாக படைகளை விலக்கிக்கொண்டார்கள். தொடர்ந்து சந்திரசேனனைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்கள். அனைவரும் இணைந்து சென்று மகாகாளரை தரிசித்து மகிழ்ந்தார்கள். அந்த நேரத்தில் மேலும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ருத்ர அம்சத்தினரான அனுமன் அங்கே தோன்றினார். யாதவச் சிறுவனை அணைத்துக் கோண்டார்.

‘‘மன்னர்களே! இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவபெருமான் அருள்புரிந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவ பெருமானைப் பூஜை செய்த தைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையும் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது. இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹா விஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஶ்ரீதரன்’ என்று அழையுங்கள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஶ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.

சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்பவர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா? வரும் அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 5 ஆகிய நாள்களில் சனி மகா பிரதோஷம் வருகிறது. அற்புதமான இந்த நாள்களில் நாமும் சிவதரிசனமும் வழிபாடும் செய்து வரம்பல பெறுவோம்.