Published:Updated:

சங்கடங்கள் தீரும் சுவாதி... நரசிம்ம ஜயந்தி அன்று கடைப்பிடிக்கவேண்டிய விரத முறைகள்!

சுவாதி நட்சத்திரத்தின் பெருமைகளில் ஒன்றாக நரசிம்ம ஜயந்தி நிலைக்கிறது.

உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு மாறாமல் இருக்கும் ஒரு விஷயம், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்னும் வாதம். கடவுள் எங்கு இருக்கிறார் என்று கேட்பவர்களும், பார்க்கும் அனைத்திலும் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களும் இந்த உலகில் சம காலத்தில் வாழ்கிறார்கள். கடவுள் எங்கே என்று கேட்பவர்களுக்கு, பதிலாக...

`சாணினும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட

கோணினும் உளன்; மாமேருக் குன்றினுமுளன்; இந்நின்ற

தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;

இத்தன்மை காணுதி விரைவின்' என்று பிரகலாதன் தன் தந்தையான ஹிரண்ய கசிபுவுக்குச் சொல்லும் பதிலாகச் சொல்கிறார்.

நரசிம்மர்
நரசிம்மர்

கடவுளை மறுப்பது எப்படி அவரவர் உரிமையோ அதுபோல கடவுளை ஏற்பதும் அவரவர் உரிமை. அவரவர் தம் விருப்பப்படி கடவுளை வழிபட அனுமதிக்க வேண்டும். அவ்வாறில்லாது, கடவுளை மறுப்பதோடு பக்தர்களைத் துன்புறுத்தவும் செய்யும்போது அதை பகவான் பொறுப்பதில்லை.

துஷ்ட நிக்ரஹமே பக்த பரிபாலனத்துக்குத்தான்.

கீதையில் கண்ணன் 

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் 

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே என்கிறார்.

எப்போதெல்லாம் அதர்மம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அதர்மத்தை அழிப்பேன் என்கிறார். தர்மத்தை நிலைநாட்டுவதென்பது துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபாலனமுமே. அதாவது, துஷ்டர்களை அழிப்பதென்பதே பக்தர்களைப் பரிபாலனம் செய்வதற்குத்தான். அதற்கு மிகவும் உகந்த உதாரணம் நரசிம்ம அவதாரம்.

பிரகலாதன் நாராயண மந்திரம் சொல்வதைப் பொறுக்காத அவன் தந்தை ஹிரண்யன், அவனைத் துன்புறுத்தினான். பிரகலாதன் குறித்துச் சொல்லும் கம்பன், 

‘ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,

தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்’ என்பார். தூய்மை என்று சொல்லிக்கொள்ளும் வேதத்தைவிடவும் தூய்மையானவன் பிரகலாதன் என்று சொல்கிறார். வேதத்தைவிடவும் தூய்மையான தன் மகனைத் தான் விரும்பிய இறைவனைத் தொழ அனுமதிக்காது அக்கிரமம் செய்ததனால், பக்தனின் வாக்கை மெய்ப்பிக்க பகவான் நரசிம்மமாக அவதரிக்கவேண்டியிருந்தது.

ஒரு கணத்தில், பிரகலாதன் காட்டிய தூணிலிருந்து நரனும் ஹரியும் கலந்த ரூபமாய் அவதரித்து, ஹிரண்யனை வதம் செய்தார் என்கிறது புராணம்.

நரசிம்மர்
நரசிம்மர்

சங்கடங்கள் தீர்க்கும் சுவாதி

நட்சத்திரக் கூட்டங்களில் மிகவும் ஒளிபொருந்தியது, சுவாதி நட்சத்திரம். ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. அப்பேர்ப்பட்ட இந்த நட்சத்திர தினத்தின் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். சுவாதி நட்சத்திரத்தின் பெருமைகளில் ஒன்றாக நரசிம்ம ஜயந்தி நிலைக்கிறது. ஒவ்வொரு சுவாதியும் நரசிம்மருக்கு விசேஷம். நரசிம்மர் சந்நிதிகளில் சுவாதி அன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்ம மூர்த்திக்கு துளசி மாலை சாத்தி, பானக நிவேதனம் செய்ய, சகல சங்கடங்களும் விலகும் என்பது நம்பிக்கை. சுவாதி நட்சத்திர நாளுக்கு அவ்வளவு மகிமை என்றால், நரசிம்ம ஜயந்தியோடுகூடிய சுவாதி நட்சத்திர நாளின் மகிமை சொல்லில் அடங்காது. இந்த நாளில் நரசிம்மரை வழிபட, சகல நன்மைகளும் வந்து சேரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரத முறைகள்

நரசிம்மர் வழிபாடு குறித்து சிலர் அச்சப்படுவதுண்டு. காரணம், சுவாமி உக்கிரமானவர் என்பதால் வீட்டில் வழிபாடு செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால், அப்படி அச்சப்படவேண்டிய அவசியமில்லை. நரசிம்மர், ஹிரண்யனுக்கு உக்கிரமானவரே தவிர, பிரகலாதனுக்கு சாந்தமானவர். நரசிம்ம சுவாமி உக்கிரமாக இருந்தபோது அன்னை மகாலட்சுமியே அவர் அருகில் செல்ல பயந்தாள். அப்போது, சிறுவனான பிரகலாதன்தான் அவர் முன் சென்று உக்கிரமான அவர் முகத்தைக் காணாமல் தாமரை மலர்போன்ற அவர் பாதத்தைக் கண்டு, அதை நமஸ்கரித்துப் பற்றிக்கொண்டான். பிரகலாதனின் கரங்கள் பட்டதும் நரசிம்மர் தன் உக்கிரம் தணிந்து சாந்த சொரூபியானார் என்கிறது புராணம். எனவே, பக்தர்களுக்கு பகவான் எப்போதும் சாந்தமானவராகவே இருப்பார் என்பதால், அச்சமின்றி வீட்டில் நரசிம்ம வழிபாடு செய்யலாம்.

நரசிம்மர்
நரசிம்மர்

நரசிம்ம ஜயந்தி அன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, நரசிம்மர் படம் அல்லது விஷ்ணுவின் படம் இருந்தால் அதற்கு நமஸ்காரம் செய்து, நாம ஜபம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். துளசித் தீர்த்தம் மற்றும் சுவாமிக்குப் படைத்த பழங்களை உண்ணலாம். மீண்டும் மாலை பிரதோஷ காலத்துக்கு முன்பாக மீண்டும் நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும்.

நரசிம்ம மூர்த்தியைத் தொழுவதற்குப் பல்வேறு ஸ்தோத்திர மாலைகள், கராவலம்பம், அஷ்டோத்திரங்கள் என நிறைய உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி அல்லது கேட்டு, துளசி அல்லது மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். நரசிம்மர் அல்லது பெருமாள் படம் ஏதேனும் ஒன்றுக்கு சந்தன குங்குமம் இட்டு அர்ச்சனையைத் தொடங்க வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்வது அவசியம். நரசிம்மர் பானகப் பிரியர். எனவே, வீட்டில் எளிமையாக பானகம், நீர்மோர், பருப்பு வடை, சர்க்கரைப் பொங்கல், பாயசம் ஆகியனவற்றில் இயன்ற நிவேதனங்களைச் செய்யலாம்.

யோக நரசிம்மர்
யோக நரசிம்மர்

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி எனப்படும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை இந்த நாளில் எண்ணிக்கை இன்றிச் சொல்ல, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:

யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:

தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ: 

நரசிம்மர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். நரசிம்மரை தினமும் தியானம் செய்ய, மனபயம் நீங்கும். போராடும் குணம் அதிகரிக்கும். நரசிம்மரின் மடியிலேயே அன்னை மகாலட்சுமி வாசம் செய்வதால், செல்வம் நம்மிடம் நாடிவந்து சேரும். நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நரசிம்ம ஜயந்தி தினமான இன்று பகவான் நரசிம்ம மூர்த்தியை வணங்கி மகிழலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு