Published:Updated:

`தேய்பிறை அஷ்டமியில் பைரவரைத் தொழத் தேயும் துன்பங்கள்' -இன்று வீட்டில் கட்டாயம் இதைச் செய்யுங்கள்!

தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமி

பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் ஒன்றான சனியின் குரு. குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு.

எப்போதையும்விட இப்போதுதான் நமக்கு மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது. இறைவழிபாடு மன வலிமையைக் கொடுக்கும். அதிலும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்ய பயங்கள் விலகி மன வலிமை அதிகரிக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். 

தேய்பிறை அஷ்டமி கால பைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமி கால பைரவர் வழிபாடு

சிவபெருமான் பிரபஞ்ச வடிவானவர். அவரை அருவுருவமாக லிங்க வடிவில் நாம் அனைத்து ஆலயங்களிலும் வழிபடுகிறோம். அதே சிவனின் மகிமை நிறைந்த 64 சிவவடிவங்களையும் மூர்த்தங்களாகப் பெற்று வணங்கி வழிபடுகிறோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமானதும் அதீத பலன்களைத் தருவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள் பைரவ ரூபத்தில் இறைவனை வணங்குவது மிகவும் சிறப்புமிக்கது.

பைரவர் பன்னிருகரங்களுடன் நாகத்தை முப்புரிநூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தியும் பாசக் கயிற்றைக் கையில் கொண்டும், அங்குசம் போன்ற ஆயுதங்களை தரித்தும் வீரமான திருக்கோலம் கொண்டு அருள்கிறவர். நாயை வாகனமாகக் கொண்டவர். பைரவர் அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார். பைரவரே சிவாலயக் காவலர். தினமும் ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் சந்நிதியில் வைத்துச் செல்வர்.

கால பைரவர்
கால பைரவர்

பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் ஒன்றான சனியின் குரு. குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு. பைரவரை வழிபடுவதன் மூலம் சனி பகவானை குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும்.

ஈடிலா மகிமைகளை உடைய பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி. இந்தத் தேய்பிறை அஷ்டமி நாளில் ஆலயங்களில் பைரவருக்குச் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும். தற்போது நிலவும் அசாதாரண சூழலில் யாரும் ஆலயம் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது. எனவே வீட்டிலேயே கால பைரவரை வழிபடலாம்.

வீட்டில் இருக்கும் சிவபெருமான் படத்துக்கு முன்னால் நெய்விளக்கேற்றுங்கள். சிவப்புநிற மலர்கள் கிடைத்தால் அதைச் சாத்தி வழிபடுங்கள். சிவனே பைரவர் ஆதலால் தவறாமல் சிவபுராணம் படியுங்கள். ஆதிசங்கரர் அருளிய காலபைரவாஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். இவையெல்லாம் மனதுக்கு மிகுந்த வலிமையைத் தரும். மேலும், எளிமையாக ஏதேனும் ஒரு பிரசாதம் செய்து நிவேதனம் செய்யுங்கள். குடும்பத்தில் அனைவரும் கூடி நின்று இந்த வழிபாட்டைச் செய்யும்போது அந்த கால பைரவரின் அருள் நம் குடும்பத்தை எப்போதும் காக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

அடுத்த கட்டுரைக்கு