Published:Updated:

லிங்கவடிவில் விநாயகர்! நினைத்ததை அருளும் நவகிரகங்கள்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்

விநாயகர்
விநாயகர்

திருமணத்தடை உள்ள இளைஞர்கள், மூன்று விழுதில்லாத ஆலமரங்களையும் இணைத்து, மூன்று சுற்று நூலினால் சுற்றிக் கட்டினால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டுவந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

worshipathome
worshipathome

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில், இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, தீவனூர் பொய்யாமொழி விநாயகர் திருக்கோயில்.

சுயம்புவாக இறைவன் எழுந்தருளும் தலங்கள் அனைத்தும் கூடுதல் மகிமை நிறைந்தவை. அவற்றில், விநாயகர் சுயம்புவாய் எழுந்தருளிய தலங்கள் விசேஷமானவை. தமிழகத்தில் 108 தலங்களில் விநாயகர் சுயம்புவாய் எழுந்தருளியிருப்பதாய்ச் சொல்கிறார்கள். அவற்றில் சில தலங்களில் விநாயகர் லிங்க வடிவாய் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி, விநாயகப்பெருமான் பொய்யாமொழி விநாயகர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம், தீவனூர்.

விநாயகப்பெருமான் பொய்யாமொழி விநாயகர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் தீவனூர். இந்தத் தலத்தின்...

Posted by Sakthi Vikatan on Saturday, May 2, 2020

இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பு, கோயிலில் இருக்கும் விழுதில்லா ஆலமரம். திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது தீவனூர். அங்குதான் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு, விநாயகர் லிங்க ரூபத்தில் எழுந்தருளியிருக்கிறார். கற்பூர ஆரத்தி காட்டும் போது, லிங்கத்தில் விநாயகரின் திருமுகத்தை நன்கு தரிசனம் செய்யமுடியும்.

சிறு பிள்ளைகள் மூலம் விளையாடிய விநாயகர்

முற்காலங்களில், இந்த விநாயகருக்கு ‘நெற்குத்தி விநாயகர்’ என்பதே திருநாமம். அன்றைய காலத்தில் இப்பகுதி, ஆடு, மாடுகள் மேய்க்கப்படும் இடமாக இருந்தது. ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பக்கத்தில் உள்ள நெல் வயல்களில் நெற்கதிர்களைத் திருடி, அரிசியாக்கி விளையாட்டாகச் செய்துவந்தனர்.

தீவனூர்
தீவனூர்

ஒருநாள் அந்த நெற்கதிர்களை குத்துவதற்குத் தகுந்த கற்களைத் தேடி அலைந்தபோதுதான், குழவிக்கல் போன்ற ஐந்தரை அங்குல நீலம் கொண்ட கல் ஒன்றைக் கண்டெடுத்து, அதை எடுத்துப்போய் நெற்கதிர்கள் மீது வைத்துவிட்டு வேறொரு சிறிய கல்லை தேடிப் போயினர். திரும்பி வந்து பார்க்கும்போது அரிசி, தவிடு, உமி ஆகியன தனித்தனியாகப் பிரிந்திருந்தன. இந்த அதிசயக் கல்லை கயிறுகளால் சேர்த்து கட்டிவைத்துவிட்டு, இரவு உறங்கி மறுநாள் காலையில் எழுந்துவந்து பார்த்தபோது கல்லைக் காணவில்லை.

அதேநேரம், அருகில் இருந்த ஒரு குட்டையில் குமிழிகள் வெளிப்பட்டன. சிறுவர்கள் நீருக்குள் மூழ்கிப் பார்க்க, அந்தக் கல் தண்ணீரின் ஆழத்தில் கிடந்தது. குமிழிகளும் அதிலிருந்துதான் புறப்பட்டு வருகின்றன என்பதை அறிந்துகொண்டனர். கல்லை எடுத்துக்கொண்டு கரைக்குவந்து, மீண்டும் நெற்கதிர்கள் மீது வைத்துப் போக, அவையும் அரிசி, உமி எனத் தனித்தனியாகப் பிரிந்தன.

நிலத்துக்குச் சொந்தக்காரரான ஏகாம்பரம், நெல் அடிக்கடி திருடுபோவதைக் கண்டு சந்தேகம் கொண்டு, அச்சிறுவர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது அச்சிறுவர்கள், பயத்தில் அனைத்தையும் அவரிடம் கூறினர். இதைக் கேட்ட ஏகாம்பரம் ஆர்வத்தோடு அந்தக் கல்லை வாங்கித் தன் வீட்டின் பரண்மீது வைத்துவிட்டார்.

பொய்யா மொழி விநாயகர்
பொய்யா மொழி விநாயகர்

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய விநாயகர், ‘நான் வெறும் கல் என்று நினையாதே; நானே ஓங்கார வடிவாகிய கணபதி. என்னை நீ ‘ருத்ராட்ஷதாரியாய்’ வழிபட்டு வர உன் வழித்தோன்றல்களுக்குத் துணை நின்று அருள்பாலிப்பேன்’ எனக் கூறி மறைந்தார். அடிப்படையில் வைணவரான ஏகாம்பரம், விநாயகரின் மீது நம்பிக்கை வைத்து, அந்தக் கல்லை ஒரு குடிசையில் வைத்து வழிபடத் தொடங்கினார். பின்பு அதுவே ஆலயமாகி, அனைவரும் வந்து வழிபடும் இடமானது.

மிளகு உளுந்தான அதிசயம்

ஒரு நாள் இரவு, மிளகு வணிகர் ஒருவர் அந்த ஆலயம் வழியே வண்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது விநாயகர் கோயில் பூசாரி நிவேதனப் பொங்கலுக்கு மிளகு இல்லாமல் இருக்க, மிளகு வணிகரிடம்,‘சிறிது மிளகு தாருங்கள்’ என்றார். இலவசமாக உளுந்தைத் தர மனமில்லாத அந்த வணிகரோ ‘இது மிளகல்ல உளுந்து’ எனப் பொய்கூறி அருகே உள்ள உளுந்தூர்ப்பேட்டை கிராமச் சந்தைக்குப் போய்ச் சேர்ந்தார்.

அங்கு சென்று மூட்டைகளை அவிழ்த்தபோது, மிளகு உளுந்தாய் மாறியிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். விநாயகர் ஆலயத்தில் வைத்துப் பொய் சொன்னதால்தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று உணர்ந்து, மனம் வருந்தி நெற்குத்தி விநாயகர் ஆலயத்துக்கு வந்து மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு கேட்டார்.

பின்பு மனம் சமாதானம் அடைந்து சந்தைக்குச் சென்று பார்க்க, உளுந்து மீண்டும் மிளகாக மாறியிருந்தது. தான் பொய்யுரைத்ததனாலேயே இறைவன் திருவிளையாடல் புரிந்தார் என்பதை அறிந்து, இறைவனுக்கு ‘பொய்யாமொழி விநாயகர் எனப் பெயரிட்டு குடிசையில் இருந்த விநாயகருக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினார். பிள்ளையாருக்கும் பொய்யாமொழி விநாயகர் என்ற திருநாமமே நிலைத்துவிட்டது.

அதேபோன்று விநாயகப்பெருமானின் அபிஷேகத்துக்கு இளநீர் கிடைக்குமா என்று அர்ச்சகர் ஒரு வியாபாரியிடம் கேட்க, அவரோ கிண்டலாக ‘உங்கள் விநாயகர் என்ன பெரிய கொம்பு முளைத்தவரா?’ என்று ஏளனமாகப் பேசியுள்ளார். ஆனால், அன்றுமுதல் அவர் தோட்டத்தில் காய்க்கும் காய்கள் எல்லாம் தும்பிக்கை வடிவம் கொண்ட காய்களாகவே காய்க்கத் தொடங்கியுள்ளன. அதைக் கண்டதும் மனம் வருந்திய அந்த வியாபாரி, விநாயகரின் ஆலயத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்டார். அதன்பின் அவர் தோட்டத்தில் வழக்கம்போல காய்த்தன.

பிரார்த்தனைச் சிறப்புகள்

இந்த ஆலயத்தில் மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவை மும்மூர்த்திகளாக பக்தர்களால் கருதப்படுகிறது. மேலும், இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் ஒரே கல்லால் ஆனவை. நம் மனதில் வேண்டுதல் ஒன்றை நினைத்துக்கொண்டு நவகிரகங்களில் ஏதேனும் ஒன்றின்மீது இரு கைகளின் ஆள்காட்டி விரல்களை தனித்தனியே வைத்து வேண்டிக்கொள்ள, அவை நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

பொய்யா மொழி விநாயகர்
பொய்யா மொழி விநாயகர்

திருமணத்தடை உள்ள இளைஞர்கள், மூன்று விழுதில்லாத ஆலமரங்களையும் இணைத்து, மூன்று சுற்று நூலினால் சுற்றிக் கட்டினால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். மேலும் குழந்தை பாக்கியம், கட்டடப் பணியில் தொய்வு, நிலத்தகராறு ஆகியன நீங்க இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். சொந்த வீடு வேண்டுபவர்களும் செல்வம் மற்றும் கல்வியில் மேன்மை வேண்டுபவர்களும் இங்குவந்து வேண்டிக்கொள்ள, அனைத்தும் விரைவில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு