Published:Updated:

கை, கால், வாயைக் கட்டி பாடையில் படுக்கவைத்து... திகில் கிளப்பும் சீதளா அம்மன் வழிபாடு..!

அம்மன் கோயிலில் `பாடைகட்டி' அதில் ஏறி, நாலுபேர் சுமக்கத் திருக்கோயிலை வலம்வரும், `பாடையேறுதல்' என்னும் சடங்கு நடைபெறுகிறது. `அவ்வாறு பாடையேறி வழிபட்டால் தலையெழுத்தே மாறும்' என்கின்றனர் பக்தர்கள்...

பாடைக்காவடி
பாடைக்காவடி

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்கொண்டுள்ள தலங்கள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். அம்மனை வழிபட உகந்த மாதமாக ஆடிமாதத்தை வகுத்துள்ளனர் முன்னோர்கள். அம்மனின் கருணையைப் பெற இந்த மாதத்தில் பல்வேறு வழிபாடுகளைச் செய்கின்றனர் பக்தர்கள். பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், தொட்டில் கட்டுதல், முடி இறக்குதல், வேப்பிலை ஆடை உடுத்துதல், கண்மலர் செலுத்துதல், நேர்ந்துவிடுதல் என்று பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தி பக்தியுடன் வழிபாடு செய்வர்.

வலங்கைமான் சீதளாதேவி அம்மன்
வலங்கைமான் சீதளாதேவி அம்மன்
கனிமொழி முதல் மஹுவா வரை: நாடாளுமன்றத்தில் விதைக்கப்பட்ட நம்பிக்கை!

ஒவ்வொரு தலத்துக்கும் தனித்துவமான வழிபாட்டுச் சடங்குகளும் உண்டு. உதாரணமாக, பெரியபாளையத்தம்மன் கோயிலில் வேப்பிலை ஆடை வழிபாடும், இருக்கன்குடியில் கரும்புத் தொட்டிலும் விசேஷம். இதுபோன்று, ஓர் அம்மன் கோயிலில் `பாடைகட்டி' அதில் ஏறி, நாலுபேர் சுமக்கத் திருக்கோயிலை வலம்வரும், `பாடையேறுதல்' என்னும் சடங்கு நடைபெறுகிறது. `அவ்வாறு பாடையேறி வழிபட்டால் தலையெழுத்தே மாறும்' என்கின்றனர் பக்தர்கள்.

திருவாரூரிலிருந்து 33 கி.மீ தொலைவில், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது வலங்கைமான். இங்குதான் `பாடைகட்டி மாரி’ என்றழைக்கப்படும் சீதளாதேவி அம்மன் அருள்புரிகிறாள். இந்தக் கோயிலில்தான் பக்தர்கள் பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் நடைபெறுகிறது. தீராத நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து அம்மனை வேண்டிக்கொள்கிறார்கள். அம்மனும் அவர்களின் நோய்தீர்த்து அருள்கிறாள். அன்னையின் அருளாலேயே தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது என்பதை உணர்ந்த பக்தர்கள், அதற்கு நன்றிக்கடனாக இங்குவந்து பாடையேறி சடங்கு செய்கின்றனர்.

பாடைக் காவடி
பாடைக் காவடி

இறந்தவர்களைச் சுமக்கக் கட்டப்படும் பாடையைப்போலவே பாடை கட்டுகிறார்கள். அதில் நேர்த்திக்கடன் செலுத்துபவரைப் படுக்கச் சொல்கிறார்கள். அவரது கை, கால், வாய் ஆகியவற்றைத் துணியால் கட்டி பிணம்போலப் படுக்க வைத்து, நெற்றிக்காசும் வைக்கிறார்கள். பின்பு அவரைச் சுமந்துகொண்டு திருக்கோயிலை வழிபடுகிறார்கள். பாடைக்கு முன்பாக மேளம், தீச்சட்டி ஆகியன ஏந்தி வருகின்றனர் பிறபக்தர்கள். திருவிழாக்காலங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்குவந்து பாடையேறி வழிபாடு செய்கின்றனர்.

இந்த ஆலயத்தின் தலவரலாறு மிகவும் ஆச்சர்யமூட்டுகிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் காதக் கவுண்டர், கோவிந்தம்மாள் என்னும் தம்பதி வாழ்ந்துவந்தனர். ஒருநாள் இவர்கள் ஐயனார் கோயில் ஒன்றில் சிறு குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தனர். குழந்தைப்பேறில்லாத காதக் கவுண்டரும் கோவிந்தமாளும் குழந்தைக்கு `சீதளா’ என்று பெயர் வைத்துச் சீராட்டி வளர்த்தனர்.

வலங்கைமான் அம்மன் கோயில்
வலங்கைமான் அம்மன் கோயில்

ஏழ்மையில் வாடிய காதக் கவுண்டர் குடும்பம் குழந்தையின் வரவுக்குப்பின்னர் செல்வச் செழிப்பானது. அந்தக் கிராமமே, நோய் நொடி நீங்கி சுபிட்சம் பெற்றுவிளங்கியது. குழந்தையின் அழகையும் தேஜஸையும் கண்ட கிராமத்தினர் அந்த மகமாயிதான் குழந்தையாக வந்து அவதரித்திருக்கிறாள் என்பதாகக் கருதினர். எனவே, அவளை அன்போடு பார்த்துக்கொண்டனர்.

ஆனால், அன்னையின் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்தது. ஏழரை வயதிருக்கும்போது குழந்தை பெரியம்மை நோய்கண்டு இறந்துபோனது. ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியது. பொதுவாகக் கிராமப்புறங்களில் அம்மை நோய்கண்டவர்களை அம்மனாகப் பாவித்து அடக்கம் செய்து வழிபடும் வழக்கம் உண்டு. காதக்கவுண்டரும் கோவிந்தம்மாளும் குழந்தையை வெளியிடங்களில் அடக்கம் செய்ய மறுத்து, தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே மஞ்சள் தண்ணீர் ஊற்றி அடக்கம் செய்து வழிபடத் தொடங்கினர்.

பாடைக் காவடி வழிபாடு
பாடைக் காவடி வழிபாடு

குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே தற்போது கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்கின்றனர் பக்தர்கள். இங்கு, கத்தி, உடுக்கை, சூலம், கபாலம், கயிறு மற்றும் அக்னிச் சட்டி ஏந்தி ஐந்து தலை நாகம் குடைபிடிக்கக் காட்சியருள்கிறாள் சீதளா தேவியம்மன். அம்மனுடன் விநாயகர், இருளன், பேச்சியம்மன், மதுரைவீரன் ஆகியோரும் சந்நிதிகொண்டு அருள்கிறார்கள்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் இங்கு திருவிழா களைகட்டும். ஆடி மாதம் மட்டுமல்லாமல் ஆவணி மற்றும் பங்குனி ஞாயிற்றுக்கிழமைகளும் பெரும் விழாபோலக் கொண்டாடப்படுகிறது. அப்போது, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பாடைக்காவடி எடுப்பார்கள்.

தொட்டில் வழிபாடு
தொட்டில் வழிபாடு

இதுகுறித்துக் கோயிலின் தலைமைப் பூசாரி இரா.செல்வத்திடம் கேட்டோம்...

``இங்க பாடைக்காவடி நேர்த்திக்கடன் ரொம்பவும் விசேஷம். மருத்துவர்களால குணப்படுத்த முடியாதுன்னு கைவிடப்பட்டு மரணத்தோட போராடுறவங்க அம்மன்கிட்ட வேண்டிகிட்டு உயிர் பிழைக்கற அதிசயம் இங்க நடக்குது. அவங்க வேண்டுதல் நிறைவேறி உடம்பு சுகமானதும், இங்க வந்து பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துறாங்க. முன்னெல்லாம் ஆவணி, பங்குனி, ஆடி மாதம் வரும் முக்கியமான நாள்கள்ளதான் இங்க பாடைக்காவடி எடுப்பாங்க. ஆனா, இப்பெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திக்கிட்டு வர்றாங்க பக்தர்கள். இதுதான் அம்மனோட அருளுக்கும், மகிமைக்கும் சாட்சி!” என்கிறார் அவர்.