Published:Updated:

`கல்விக்கு சரஸ்வதி பூஜை... பகை வெல்ல வாராஹி வழிபாடு!' - சிறப்புகள் மிகுந்த `வசந்த பஞ்சமி'

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

கல்வி மேம்பட சரஸ்வதி தேவியையும் பூமி சம்பந்தமான பிரச்னைகள், பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் ஆகியன நீங்க வாராஹியையும் வழிபட உகந்தது வசந்த பஞ்சமி.

அம்பிகையை முழு முதல்கடவுளாக வழிபடும் மார்க்கத்துக்கு சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் அம்மனை வழிபட ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரிகளை வகுத்துள்ளனர். அவை, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வாராஹி நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி. இதில் சியாமளா நவராத்திரி என்பது தை மாத வளர்பிறை நாள்களில் கொண்டாடப்படுவது. வட இந்தியாவில் இந்த நவராத்திரியை விசேஷமாகக் கொண்டாடும் வழக்கம் உண்டு. குறிப்பாக, சியாமளா நவராத்திரியில் வரும் வசந்த பஞ்சமி மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

சரஸ்வதி
சரஸ்வதி

சரஸ்வதி பூஜை

வழக்கமாகத் தமிழகத்தில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியில் வரும் 9 வது நாளையே நாம் சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுகிறோம். புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருள்களை வைத்து கல்விக் கடவுள் சரஸ்வதியை அன்றைய தினத்தில் வழிபடுவது வழக்கம். வட இந்தியாவில் சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் வசந்த பஞ்சமியையே சரஸ்வதி பூஜையாகக் கருதி வழிபாடு செய்கிறார்கள்.

நாளை சரஸ்வதி படத்தையோ, விக்ரகத்தையோ வைத்து அதை மலர்களாலும் சந்தன குங்குமங்களாலும் அலங்கரித்து வழிபாடு செய்வர். மேலும், கல்விக்குரிய பொருள்களையும் நாளை பூஜையில் வைப்பர். கல்வியாண்டில் இந்த வசந்த பஞ்சமிக்குப் பின்புதான் முக்கியமான தேர்வுக்காலங்கள் தொடங்குவதால் மாணவர்கள் மிகவும் பக்தியோடு வழிபடுவர். அம்மனுக்கு முன்பாகக் கருவிகளைக் கொட்டி வைத்து சிறு குழந்தைகள் அவற்றில் எதை எடுக்கிறார்களோ அதில் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

வாராஹி
வாராஹி

இந்த பூஜையை அனைவருமே மேற்கொள்ளலாம். சரஸ்வதியை வெண்ணிற மலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். அன்னைக்கு பால் பாயசம், தேங்காய், பழம் முதலியன நைவேதனம் செய்யலாம்.

வாக்கியம், திருக்கணிதம்... சனிப்பெயர்ச்சி குறித்து ஜோதிடர்கள் சொல்வது என்ன?

பகை தீர்க்கும் வாராஹி வழிபாடு

பொதுவாகவே பஞ்சமி என்பது வாராஹி அம்மனை வழிபட உகந்த திதி. குறிப்பாக, இந்த வசந்த பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ வாராஹி - மன சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் இந்தத் தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்தமாதர்களின் மகிமையை தேவிமஹாத்மியம் முதலான ஞானநூல்கள் விரிவாக விளக்குகின்றன. இந்த நாளில் விரதமிருந்து மாலை வாராஹி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். மேலும், பூமி தொடர்பான பிரச்னைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, வசந்த பஞ்சமி அன்று வாராஹி வழிபாடு செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.

வாராஹி வழிபாடு
வாராஹி வழிபாடு

ஸ்ரீவாராஹிதேவிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து வாராஹியை வழிபட்டால் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

நாளை பஞ்சமி. இன்று (29.1.2020) காலை 10 மணியோடு சதுர்த்தி முடிய பஞ்சமி தொடங்குகிறது. எனவே, இந்த நாள் சதுர்த்தியாகக் கணக்கிடப்பட்டு, நாளை பஞ்சமியாகக் கருதப்படுகிறது. சாந்திரமான (சந்திரன்) அடிப்படையில் நாள் கணக்கிடுபவர்கள் இன்றும் சௌரமானம் (சூரியன்) அடிப்படையில் நாளையும் வசந்த பஞ்சமி வழிபடப்படுகிறது.

பின் செல்ல