Published:Updated:

`குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்கும்!' -நாளை ஏகாதசிக்கு இணையான விஷ்ணுபதி புண்ணியகாலம்

விஷ்ணுபதி
விஷ்ணுபதி

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கோபம், ஈகோ முதலியவற்றின் காரணமாகத் தோன்றும் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு திகழ்கிறது.

மனித வாழ்வில் பிரச்னைகள், நாம் செய்த முன்வினை காரணமாக உருவாகிக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து விடுபட்டு நற்பயன்களை அடைய இறைவழிபாடு மிகவும் அவசியம். இறைவனை வழிபடப் பல சுப நாள்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாள்களைப் புண்ணியகாலங்கள் என்று அழைத்தார்கள். புண்ணியகாலங்கள் மொத்தம் மூன்று. அவை விஷூ புண்ணியகாலம், ஷடசீதி புண்ணியகாலம், விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷூப் புண்ணியகாலமாகும். இவை பிரம்மாவை வழிபட உகந்தவை. ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி முதலிய மாதங்களின் முதல்நாள் ஷடசீதி புண்ணிய காலம். இவை சிவனை வழிபட உகந்தவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.

ஏகாதசிக்கு இணையான இந்தப் புண்ணியகாலத்தில் விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இந்தப் புண்ணிய காலத்தில் செய்யப்படும் விஷ்ணு வழிபாடு மிகவும் பலன் அளிக்கக் கூடியது.

இன்று குடும்பங்களில் பிரச்னைகள் மிகுந்து அமைதியில்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாகக் கணவன் மனைவிக்கிடையே பிரச்னைகள் தோன்றி இனிக்கவேண்டிய இல்வாழ்க்கை வெறுக்கத் தொடங்கிவிடுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கோபம், ஈகோ முதலியவற்றின் காரணமாகத் தோன்றும் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக இந்த விஷ்ணுபதி புண்ணியகாலம் திகழ்கிறது.

`குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்கும்!' -நாளை ஏகாதசிக்கு இணையான விஷ்ணுபதி புண்ணியகாலம்

விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டியது அவசியம். இந்தப் புண்ணிய காலத்தில் பெருமாள் சந்நிதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய மனம் அமைதி பெறும்.

இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

விஷ்ணு
விஷ்ணு

கும்ப சங்கராந்தி என்று போற்றப்படும் இந்த நாளில் நதிக் கரைகளிலும் சமுத்திரக் கரைகளிலும் சென்று நீராடி வழிபட சகல பாவங்களும் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. நாளை மாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தின் முதல் நாளில் விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பகவான் விஷ்ணுவை வழிபட்டு நன்மைகள் அடைவோம்.

பின் செல்ல