Published:Updated:

மீனாளின் நயன தீட்சை

ஶ்ரீமீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமீனாட்சி

நவராத்திரி சிறப்புத் தகவல்

மீனாளின் நயன தீட்சை

நவராத்திரி சிறப்புத் தகவல்

Published:Updated:
ஶ்ரீமீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமீனாட்சி

அன்னைக்கு அற்புதக் கோயில் ஒன்றை எடுக்க வேண்டும் என்று மன்னன் முடிவு செய்தான். அந்த தேசத்தின் சிற்பியருள் அற்புதத் திறமை வாய்ந்த ஒருவரை அழைத்து அந்த சிற்பத்தைச் செய்யச் சொன்னான். சிற்பியோ அம்பிகையின் பக்தன். தியானத்தோடு அம்பிகையை வணங்கித் தன் பணியைத் தொடங்கினான்.

மீனாளின் நயன தீட்சை

மீனாள் மற்ற பெண்களைப் போல இல்லை. அவள் வீர மங்கை. பட்டத்து அரசி. அப்படியே தியானித்து சிற்பி சிலை வடித்ததால் அம்பிகையின் திருமேனி கம்பீரமாக நின்ற கோலத்தில் அமைந்தது. நம் சொல்லும் செயலுக்கும் மட்டுமல்ல மனதில் உதிக்கும் எண்ணங்களுக்கும் அவளே காரணம் அல்லவா. அன்னை, தான் அங்கே பிரத்யட்சமாய்க் கோயில்கொண்டாள் என்பதை விளக்க விரும்பினாளோ என்னவோ மன்னன் மனத்தில் சிறு சந்தேகம் தோன்றியது.

‘அம்பிகை முறையாகக் கோயில்கொண்டிருக்கிறாளா... ஆவாஹனம் முறையாக நடந்திருக்கிறதா? அவளுடைய நின்ற கோலம் சரிதானா! சிற்ப சாஸ்திரத்தில் ஏதேனும் பிழை இருக்குமோ’ என்று சந்தேகம் கொண்டான் மன்னன். சிற்பியை அழைத்துத் தன் சந்தேகத்தைச் சொல்லி அதைத் தீர்க்க வேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லிச் சென்றான்.

சிற்பிக்கோ தலை சுற்றியது. தான் அறிந்த கலைகள் யாவும் அன்னை அருளியதே. இந்நிலையில் அதில் பிழை என்றால் அதைக் கண்டறியவாவது தனக்குத் தகுதியிருக்கிறதா என்று வருந்தினான். அனைத்தும் உணர்ந்த அன்னையே இந்தப் பிரச்னைக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்று அவள் பாதம் பணிந்து வேண்டிக்கொண்டு சென்றான்.

மறுநாள் ஆலயம் திறந்தது. மன்னனும் சிற்பியும் மக்களும் கூடியிருந்தனர். கருவறைத் திரை விலக்கப்பட்டது. கருவறையில் கண்ட திருக்காட்சி அனைவரையும் திகைக்கச் செய்தது. அதே அன்னை. ஆனால் கொஞ்சம் மாறுபட்ட திருக்கோலம். நேற்றுவரை கம்பீரமாக நின்றகோலத்தில் அருளிய தேவி இன்று தன் திருக்கோலத்தை திருபங்கிக் கோலத்திற்கு மாற்றியிருந்தாள்.

மீனாளின் நயன தீட்சை

இடுப்பையும் இடக் காலையும் லேசாக வளைத்து, பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைப்பது போன்ற திருக்கோலத்தையே சிற்ப சாஸ்திரத்தில் திருபங்கிக் கோலம் என்று அழைப்பார்கள். அன்னை மீனாட்சி அந்தத் திருக்கோலத்துக்கு மாறியிருப்பதைக் கண்ட மன்னன் தன் பிழையை உணர்ந்தான். சிற்பியிடம் மன்னிப்புக் கேட்டான். சிற்பியோ அனைத்தும் அன்னையின் திருவிளையாடல் என்று சொல்லி அவள்தாள் பணிந்தார். இப்படி மதுரையில் அவள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல.

அன்னை மீனாட்சி அவள் திருநாமம். அங்கையர்கண்ணி என்கிறது தமிழ். மீன் போன்ற கண்களை உடையவள் என்று பொருள். அவளின் திருமுகத்தில் கண்களைக் கண்டால் காருண்யம் பொழியும். அவள் கண் அழகைக் கண்டுவிட்டால் வேறு கவலைகள் இருக்காது. எப்படி வேர் வழியாக நீர் புகுந்து பூவாகிக் கனியாகிறதோ அதுபோல அவளை தரிசித்த கண்கள் வழியாகக் கருணை புகுந்து அகக் கண்ணைத் திறந்துவிடும். இதற்கு நயன தீட்சை என்று பெயர். ஆம் தீட்சைகளில் மூன்றுவகை உண்டு என்பார்கள் பெரியோர்கள். ஒன்று கோழி தீட்சை, இரண்டு நயன தீட்சை மூன்றாவது ஆமை தீட்சை.

கோழி எப்படித் தன் முட்டைகளை அடைகாத்து ரட்சித்து குஞ்சிபொரிக்கிறதோ அதேபோன்று தாய் உடன் இருந்து ஸ்பரிசித்து ஞானம் வழங்கினால் அது கோழி தீட்சை. அதாவது தன் ஸ்பரிசத்தால் ஞானத்தை உணரும்படிச் செய்வது. ஆமை தீட்சை என்றால் ஆமை ஓரிடத்தில் முட்டை இட்டுவிட்டுச் சென்றுவிடும். ஆனால் அதன் மனம், கடலுக்குள் இருந்தாலும் முட்டையின் மீதே கவனமாக இருந்து தன் மனதால் காத்து நிற்கும். இப்படி பக்தனின் மனதோடு பேசி அருள்வது மானஸ் தீட்சை. அதாவது ஆமை தீட்சை.

மீன் தீட்சை என்றால் எப்படி மீன் குஞ்சுபொரித்த பின் அதைப் பாதுகாக்காது. ஆனால் அது செல்லும் பாதையில் எல்லாம் தன் பார்வையை வைத்துப் பாதுகாக்கும். அதன் பார்வையே முட்டைகள் குஞ்சு பொரிக்கக் காரணமாகும். இப்படிப் பார்வையாலேயே ஞானத்தின் வழியை உபதேசித்து அளித்தால் அது நயன தீட்சை. மீன் தீட்சை. மீன் போன்ற கண்களை உடையவளான மீனாட்சி பக்தர்களுக்குப் பார்வை தீட்சை அருள்கிறாள்.

மீனாளின் நயன தீட்சை

அன்னை மீனாளின் அருட்பார்வை ஞானத்தை அருள்வதுமட்டுமல்ல ஊனத்தையும் சரிசெய்வது. இதற்கு மதுரை வரலாற்றில் பல்வேறு சாட்சிகள் உள்ளன. நீலகண்ட தீட்சிதரின் கண்களை குணமாக்கிய அம்பிகை, தேதியூர் சுப்பிரமண்ய சாஸ்திரிகளுக்கும் பார்வை அருளி அற்புதம் நிகழ்த்தினார்.

இப்படித் தன் அருட்பார்வையால் அக இருளைப்போக்கி உள்ளொளி தரும் அந்த அம்பிகையின் நவராத்திரித் திருக்கோலம் கண்கொளாக் காட்சி. ஒன்பது நாள்களும் அம்மை அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாள்.

வரும் நவராத்திரி நாள்களில் மீனாட்சியை மனக்கண்ணில் தியானிப்போம். அவள் தன் அருட்பார்வையால் நமக்கு ஞான தீட்சை அருளி நலம் சேர்ப்பாள்.