சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

ஸ்ரீநிவாசா கோவிந்தா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீநிவாசா கோவிந்தா!

ஓவியங்கள்: ராஜா

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

பழந்தமிழர் கலை வடிவங்களில் ஓவியம் முக்கியமானது. ஓவியங்களின் தாய்மடியாகத் திகழ்வது புதுக்கோட்டை மாவட்டம். இங்குதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமயம் பாறை ஓவியங்களும், அஜந்தா, எல்லோராவுக்கு நிகரான சிறப்புடைய சித்தன்னவாசல் குகை ஓவியங்களும் உள்ளன. இந்தச் சிறப்புகளுக்கு மகுடம் சூட்டுவதுபோல் பிறந்தவர்தான் ஓவியர் புதுக்கோட்டை எஸ்.ராஜா.

இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது அதீத ஆர்வம்கொண்டு விளங்கினார் ராஜா. கண் பார்க்கும் எதையும் தத்ரூபமாக வரையக்கூடியவர். ஓவியத்தில் மனம் லயிக்க, பள்ளிக்கல்வியில் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது. இன்டர்மீடியட் படித்த காலத்தில், ராஜாவின் தந்தை படிப்பில் ஆர்வம் செலுத்துமாறு வற்புறுத்தினார். ஓவியத்தை விட்டு விலக இயலாத ராஜா, வீட்டைவிட்டு விலகினார். அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

புதுக்கோட்டை எஸ்.ராஜா
புதுக்கோட்டை எஸ்.ராஜா

இளைஞன் ராஜாவை சென்னை இருகரம் கொண்டு வரவேற்றது. `கலைமகள்’ இதழில் ஓவியராகச் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணியாற்றினார். தொடர்ந்து சில காலம் சினிமாத்துறையிலும் பணியாற்றினார். வணிகரீதியிலேயே ஓவியம் வரைந்துகொண்டிருந்த ராஜாவுக்கு, ஒருகட்டத்தில் இறையருள் ஓவியர் சில்பி வரையும் தெய்வ ஓவியங்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது. தானும் சுவாமி படங்கள் வரைய ஆரம்பித்தார். தெய்வங்களை வரையும்போது ஓர் ஆத்ம சந்தோஷத்தை உணர்ந்தார். சில்பி போலவே ஆலயங்களுக்குச் சென்று வரைய ஆரம்பித்தார்.

ஆனால் அது நீண்ட நாள்கள் தொடரவில்லை. ஒரு விபத்து காரணமாக அவரால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை. எனவே, இருந்த இடத்திலேயே படங்கள் வரைய ஆரம்பித்தார். அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல விருதுகள் தேடிவந்தன. அவற்றுடன் `ஓவியர் திலகம்' என்னும் பட்டமும் ஒட்டிக்கொண்டது.

அந்தக் காலத்தில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகள், ராஜா வரைந்ததாகவே இருக்கும். அவர் வரைந்த மீனாட்சியம்மன், முருகன் திருவுருவங்கள் மக்களால் போற்றப்பட்டன. திருமலை திருப்பதியில் பல மண்டபங்களில் ஓவியர் ராஜா வரைந்த வேங்கடாசலபதி, தாயார் படங்களைப் பார்க்க முடியும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் இப்போதுகூட மூன்று படங்கள் உள்ளன. கண்களில் ஒற்றிக்கொள்ளத் தூண்டும் ஓவியர் திலகம் ராஜாவின் ஓவியங்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. அவர் வரைந்த இறை ஓவியங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் உங்களுக்காக!

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

மணக்குளப் பிள்ளை!

புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்று, அருள்மிகு மணக்குள விநாயகர் ஆலயம். இங்குள்ள ‘ஒயிட் டவுன்’ எனப்படும் இடத்தின் அருகில் ஒரு குளம் உண்டு; ‘மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில்கொண்டதால், ‘மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது ‘மணக்குள விநாயகர்’ என்கிறோம்!

* புதுச்சேரி அருகில் முரட்டாண்டி சாவடி என்ற ஊரில் வசித்த சித்தபுருஷர், தொள்ளைக் காது சுவாமிகள். இவரே அசரீரி வாக்கு மூலம் அறிந்து, மணற்குளத்திலிருந்து பிள்ளையார் திருமேனியை எடுத்து வழிபட்டு வந்ததாகச் சொல்வர்.

* ஒருமுறை, மொம்பரே என்ற பிரெஞ்சுக்காரர் தன் ஆட்களோடு சென்று விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கடலில் வீச முயன்றார். அப்போது கண்பார்வை இழந்தார். பின்னர் மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது தவற்றுக்குப் பரிகாரமாக, கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

* மணக்குள விநாயகர் ஆலயத்தை ஒட்டியே அரவிந்த ஆஸ்ரமம் இருக்கிறது. ஒருநாள் அன்னையின் கனவில் விநாயகர் தோன்றி, தமது ஆலயத்துக்கு தென்புறம் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், ஆஸ்ரமத்துக்குச் சொந்தமான அந்த இடத்தைக் கோயிலுக்கு தானமாக அன்னை சாசனம் செய்து கொடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

* கோயிலில் கிழக்கு நோக்கி அங்குச-பாசம், அபய-வரத முத்திரையோடு அருள்கிறார் பிள்ளையார். மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறமுள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. இந்தக் கோயிலில் விநாயகருக்குப் பள்ளியறை காணப்படுவது சிறப்பு.

* மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு.சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர். மகாகவி பாரதிக்கும் இந்த விநாயகர் மீது தனி அன்பு உண்டு. ‘ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை; வாழும் பிள்ளை; மணக்குளப் பிள்ளை’ என்றெல்லாம் இவரைப் போற்றுகிறார் மகாகவி.

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

அன்னபூரணி போற்றி!

பசிப்பிணி நீங்கவும், வீட்டில் அன்னம் செழிக்கவும் நாம் வழிபடவேண்டிய தெய்வம் காசி அன்னபூரணி. பிரம்மனின் தலையைக் கிள்ளியெறிந்ததால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார் சிவபெருமான். தோஷத்தோடு பிரம்ம கபாலமும் அவரின் திருக்கரத்தில் திருவோடாக ஒட்டிக்கொண்டது.

* அதில் அன்னம் நிரம்பினால் மட்டுமே, சிவனார் கையைவிட்டு அந்த ஓடு நீங்கும். ஆனால், சிவனார் எங்கெங்கெல்லாமோ பிக்ஷை ஏற்றும் திருவோடு நிறைந்தபாடில்லை. நிறைவில் காசிக்கு வந்து அன்னபூரணியிடம் அவர் பிக்ஷை ஏற்றதும் திருவோடு நிரம்பியது; அவர் கரத்தைவிட்டும் அகன்றது என்கின்றன புராணங்கள்.

* ஒருமுறை, கடும் பஞ்சத்தால் பரிதவித்தது காசி மாநகரம். அம்பிகை அன்னபூரணியாக பத்ரிகாஸ்ரமத்திலிருந்து காசிக்கு வந்து, அங்கு வசிக்கும் உயிர்க்கெல்லாம் அன்னமிட்டு பசிப்பிணி போக்கினாள்.

* உலகில் எவ்வளவோ செல்வங்கள் இருப்பினும், அவற்றை அள்ளிக் கொடுத்தாலும் மனம் திருப்தியுறாது. ஆனால் அன்னம் அப்படியல்ல, குறிப்பிட்ட அளவு ஏற்றதுமே மனம் திருப்தியுறும். உள்ளத்தில் ஒருவித பூரணம் ஏற்பட்டுவிடும். அன்னத்தால் ஏற்படும் அந்தப் பூரணத்தை அருள்பவள் ஆகையால் அம்பிகைக்கு, `அன்னபூரணி’ என்று பெயர். அவளிடம் அன்னம் ஏற்கும் இறைவனை, ‘அன்னவிநோதன்’ என்பர்.

* காசியில் தங்க அன்னபூரணியை தீபாவளியையொட்டி மூன்று நாள்களுக்கு மட்டும் தரிசிக்கலாம். தீபாவளித் திருநாளில் தங்கக் கவச தரிசனமும், லட்டுத்தேர் திருவுலாவும் காசியில் பிரசித்தம்.

* உணவு மட்டுமன்றி ஞானம், வைராக்கியம், மோக்ஷ சாதனங்களையும் அருளும் தெய்வம் அன்னபூரணி. தினமும் வீட்டில் பூஜை வேளையில் அன்னபூரணி சதகம், அன்னபூரணி அஷ்டகம் முதலான துதிப்பாடல்களைப் பாடி அம்பிகையை வழிபட, சகல சம்பத்துகளும் உண்டாகும்.

* தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, ஐப்பசி பெளர்ணமியும் அன்னபூரணிக்கு உகந்த நாள். அன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக வைபவத்தைத் தரிசிப்பதாலும் அன்னபூரணிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

கயிலை பாதி காளத்தி பாதி

சர்ப்ப தோஷத்துக்கு நிவர்த்தி அருளும் தலம்; `கயிலை பாதி காளத்தி பாதி' என ஆன்றோர்கள் போற்றும் க்ஷேத்திரம் - திருக்காளத்தி. ஆம், காளத்தியை தரிசித்தால் கயிலையை தரிசித்ததற்கு ஒப்பாகும் என்பார்கள்!

* கண்ணப்ப நாயனாரால் பிரசித்திபெற்ற பதி. பஞ்சபூதத் தலங்களில் `வாயு' தலம் இது. ஸ்ரீ-சிலந்தி; காளம்-பாம்பு; ஹஸ்தி - யானை. இவை மூன்றும் வழிபட்டு சிவகதி பெற்ற ஊர் என்பதால் ஸ்ரீகாளஹஸ்தி எனும் பெயர் வந்ததாம்.

* ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் தங்களின் பாதிப்புகளைக் குறைத்து நல்லன தரும் கிரகங்களாக அருள்புரிகிறார்கள் திருக்காளத்தியில்!

* இத்தலத்து ஈசன் காளத்திநாதருக்கு காளத்தியப்பர், காளத்தீஸ்வரர், வாயுலிங்கேஸ்வரர், குடுமித் தேவர், கணநாதர், மலைமேல் மருந்து என்றெல்லாம் பல திருப்பெயர்கள் உண்டு. அம்பாள் ஸ்ரீஞானபிரசுனாம்பிகை.

* சிவலிங்கத் திருமேனியின்மீது எப்போதும் தங்கக் கவசம் சார்த்தப் பட்டிருக்கும். ஒன்பது பட்டைகள்கொண்ட இந்தக் கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவனுக்கான மாலைகளை இந்தச் சட்டத்தின் மீதே சார்த்துவார்கள்.

* கவசம் நீக்கப்பட்ட நிலையில், இங்கே சிவனருள் பெற்ற மூன்று ஜீவன்களின் உருவைச் சிவலிங்கத் திருமேனியில் காணலாம். அடியில் சிலந்தி, நடுவில் யானைத் தந்தங்கள், மேலே நாகத்தின் ஐந்து தலைகள் ஆகியவை உள்ளன. அதேபோல், சிவலிங்கத் திருமேனியில் வலப்புறம், திண்ணன் கண் அப்பிய வடுவைக் காணலாம் என்பர்.

* மேற்கு நோக்கிய இந்த மூலவருக்கு, ஆவுடையார் பின்னர் செய்து சேர்க்கப்பட்டதாம்; சதுர பீட ஆவுடையார். சந்நிதியில், மூலவருக்குப் பக்கத்தில் மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது. மட்டுமன்றி காளத்தீஸ்வரரின் போகத் திருமூர்த்தம், கைகூப்பித் தொழும் நிலையில் கண்ணப்பர் மேனி (மூலவர் சிலை)யையும் தரிசிக்கலாம்.

* பஞ்சபூதத் தலங்களில் இது வாயுத் தலம் என்பதை நிரூபிப்பது போன்று ஸ்வாமி சந்நிதியில் உள்ள தீபங்களில் ஒன்று மட்டும் அசைந்தாடிக் கொண்டேயிருப்பது கலியுக அதிசயம்தான்!

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

ஸ்ரீகாமாக்ஷி சரணம்!

முக்தி தரும் ஏழு தலங்களில் ஒன்று காஞ்சி. மற்றவை: அயோத்தி, மதுரா, காசி, மாயா, அவந்திகா, துவாரகை. இவற்றில் காஞ்சி மட்டுமே தென்னாட்டில் உள்ளது. காஞ்சியின் நாயகி ஸ்ரீகாமாக்ஷி அம்மன்.

* ஸ்ரீகாமாக்ஷிதேவி, தேவர்களது பிரார்த்தனைக்கு இணங்க, பண்டாசுரனை அழிக்க பிலத் துவாரத்திலிருந்து (அம்பிகையின் கருவறை) தோன்றினாள் என்கிறது தல புராணம்.

* கலைமகளையும் திருமகளையும் கண்ணாக உடையவள் என்று பொருள்படும் வகையில் `காமாட்சி’ எனும் திருப்பெயர்கொண்டதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன. `அடியார்கள் விரும்பியவற்றை வழங்குபவள்’ என்றும் பொருள் சொல்வர்.

* காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி மூவரும் தங்கள் கண்களால் பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர்கள். அதனால் இங்கு அபய- வரத- ஹஸ்த முத்திரைகளைக் காண முடியாது.

* காயத்ரி மண்டபத்தின் நடுவே பஞ்ச பிரம்ம பீடத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியோரை ஆசனமாகக்கொண்டு, நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனக் கோலத்தில் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறாளாம் ஸ்ரீகாமாட்சி.

* மன்மதனின் மலர்க்கணைகளான தாமரை, அசோகு, மா, மல்லிகை, நீலோத்பலம் ஆகிய ஐவகை மலர் அம்புகளையும், கரும்பு வில்லையும் கையில் தரித்து அன்னை காமாட்சி காட்சி தருகிறாள். ‘கரும்பு வில் நமது மனதைக் குறிப்பதால், அம்பாள் தன் மதுரமான மனத்தினால் வில்லைக் காட்டி நம்மை வசப்படுத்துகிறாள். ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஈர்த்து, செயலற்றுப்போவதற்காக ஏற்பட்டவை’ என்பது காஞ்சிப் பெரியவர் கூறிய விளக்கம்.

* ஸ்ரீகாமாட்சி விக்கிரகத்துக்கு எதிரிலுள்ள ஸ்ரீசக்ர தொட்டியில் புடைத்துக் காணப்படும் சிற்ப தேவதைகளை, `அஷ்ட துர்கைகள்’ அல்லது `அஷ்ட காளிகள்’ என்பர். ஸ்ரீசக்ரத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு தேவிகளையும் தரிசிக்கலாம்!

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

அப்பன் பழநியப்பன்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழநி. உடலின் உயிர்நாடியான மணிப்பூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது என்கின்றன ஞான நூல்கள்.

* ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் தலத்தைப் பாடியிருக்கிறார்கள்.

* மலைக்கோயில் கருவறையில் வலக்கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பழநி முருகனை ராஜஅலங்காரத்தில் தரிசித்தால் சகல யோகங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை.

* தினமும் இரவில் முருகப்பெருமானின் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் இந்த சந்தனத்தைக் களைந்து பிரசாதமாகவும் தருவது உண்டு. இது பிணிதீர்க்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பிறகு, மறுநாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்குமாம்!

* தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின் போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.

* இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். ஓதுவார்களும், கட்டியக் காரர்களும் இறைவனின் புகழ் பாட, மூலஸ்தானத்திலிருந்து சுவாமியின் பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக பள்ளியறைக்கு வந்து சேரும். அப்போது, கொப்பரைத் தேங்காய், ஏலக்காய், சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. நிறைவில் அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டிய பிறகு நடை சாத்தப்படும்.

* பாலசுப்ரமணி கவிராயருக்குப் பிறவியிலேயே பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் இல்லை. பெற்றோர் அவரை பழநி முருகனின் பாதத்தில் போட்டு, மனமுருகி அழுதனர். முருகன் அந்தக் குழந்தைக்கு விபூதி பூசி, பேசவைத்தாராம். அந்தக் கவிராயரே பழநி தல புராணத்தை எழுதினார்.

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

ஸ்ரீநிவாசா கோவிந்தா!

`விண்ணோர் தொழும் வேங்கடமாமலை' என்று போற்றப்படும் தலம் திருமலை திருப்பதி. கிருதயுகத்தில் ‘வ்ருஷபாத்ரி’ என்றும், திரேதா யுகத்தில் ‘அஞ்சனாசலம்’ என்றும், துவாபர யுகத்தில் ‘சேஷசைலம்’ என்றும், கலியுகத்தில் ‘ஸ்ரீவேங்கடாசலம்’ என்றும் அழைக்கப்படும் புண்ணியபூமி திருமலை என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.

* திருமலையில் சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார், திருவேங்கடமுடையான். அவருடைய திருமார்பில் பெரிய பிராட்டியாரும் பத்மாவதியும் வீற்றிருக்கின்றனர்.

* மூலவர் சாளக்ராம சிலை; சிற்பி செதுக்கிய சிலை அல்ல. ஸ்வயம் வ்யக்தமாய் (தானாகவே தோன்றியவராய்) ஆவிர்பவித்தவர். இவர், த்ருவபேரம் என்றும், த்ருவமூர்த்தி என்றும், ஸ்தானகமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

* நாகாபரணம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி திலகம், கிரீடம், கட்கம், சங்கு-சக்கரம், அஷ்டோத்தர சதமாலை, சதுர்புஜ லக்ஷ்மி ஹாரம், துளசி பத்ர ஹாரம், ஸஹஸ்ரநாம ஹாரம், சாளக்ராம ஹாரம், ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம் ஆகிய திருவாபரணங்களுடன் தரிசனம் தருகிறார் திருவேங்கடவன்.

* வேங்கடவனுக்குத் தினமும் தோமால சேவை இரு முறையும், அர்ச்சனை மூன்று முறையும், நைவேத்தியம் மூன்று முறையும் நடைபெறும்.

* திருப்பதிக்குச் செல்பவர்கள் முதலில் கீழ்த் திருப்பதியிலுள்ள கோவிந்த ராஜ பெருமாளை சேவிக்க வேண்டும். `அண்ணன் பெருமாள்’ என்று இவர் போற்றப்படுகிறார். அடுத்ததாக அலர்மேல் மங்காபுரம் சென்று பத்மாவதித் தாயாரை தரிசித்த பிறகே மலைக்குச் செல்ல வேண்டும்.

* திருப்பதி திருமலையில் ஸ்வாமி புஷ்கரணியில் நம்மைத் தூய்மை செய்துகொண்டு, அதன் கரையில் கோயில்கொண்டிருக்கும் வராகரை தரிசித்து வழிபட வேண்டும். இவர்தான் பெருமாளுக்குத் திருமலையில் இடம் கொடுத்ததாக வரலாறு.

* நிறைவாக ஏழுமலையான் சந்நிதிக்குச் சென்று, அந்தத் திருவேங்கடவனை பாதாதிகேசமாக தரிசித்து அவரது பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்று மகிழ வேண்டும்.

‘ஓவியர் திலகம்!’ புதுக்கோட்டை எஸ்.ராஜா

ஸ்ரீசாயி அருள்மொழிகள்

உயர்ந்த கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழுக்கள் வரை அனைத்து உயிர்களிடத்தும் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். இந்த உலகில் ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. அது அன்பு மதம்; ஒரு மொழி மட்டுமே இருக்கிறது. அது இதயத்தின் மொழி. நாம் ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும், சேவை செய்தும் மகிழ்வுடன் இருப்போம்.

* முழுமையாக இறைவனிடம் சரணாகதி அடைந்த பிறகு, நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. அவரே சகல காரியங்களிலும் பொறுப்பேற்று உங்களை வழிநடத்துவார்.

* மனம் முரட்டுத்தனமானது. அதை எளிதில் அடக்க இயலாது. ஆனால், அதன் தயவு இல்லாமல் கடவுளை அறிய முடியாது.

* ஆரோக்கியமான வாழ்வை உறுதிசெய்ய மனதை மகிழ்ச்சியோடு வைத்திருங்கள். கவலை, அவசரம், பயம், தயக்கம் போன்றவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கோபம், பொறாமை, ஆணவம் ஆகியவை மிகவும் மோசமான நோய்கள். அவற்றிலிருந்து விலகியே இருங்கள்.

* யார் என்னை நினைக்கிறாரோ, அவரை நான் நிரந்தரமாக நினைவில் வைத்துக்கொள்கிறேன். யார் என்னை அன்புடன் கூவி அழைக்கிறாரோ, அவருக்கு நான் தாமதமின்றி உதவுகிறேன். என் உபதேசத்துக்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவற்றை நான் உடனே கொடுப்பேன்.

* கர்மங்களைக் குறைத்துக்கொள்ள வழி, அவற்றை தைரியமாக அனுபவிப்பதே. அவற்றை அனுபவிக்கும் சக்தியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். அப்போது அது துன்பம் என்ற எண்ணம் ஏற்படாது.

* நீங்கள் எதைச் செய்தாலும் அதை நான் அறிவேன். உங்கள் செயல்கள் நல்லதாகவும், நடத்தை சரியானதாகவும் இருந்தால் அவற்றை நான் ஆசீர்வதித்து உடனிருந்து கவனித்துக்கொள்வேன்.

* நோய், வறுமையில் வாடுவோருக்கு உதவுவதன் மூலம் கடவுளின் அன்புக்குப் பாத்திரராக முடியும். ஒரு பிராணிக்கு உணவளித்து அதன் பசியைத் தணியுங்கள்; என் பசி தீர்ந்துவிடும்.