Published:Updated:

`கற்சிலையும் வேண்டாம் கற்கோயிலும் வேண்டாம்!'

பரநாச்சி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பரநாச்சி அம்மன் கோயில் ( ஓவியர் ஜெ.பி. )

குடிசைக் கோயிலில் அம்மனின் அருளாட்சி! ஓவியங்கள்: ஜெ.பி.

`கற்சிலையும் வேண்டாம் கற்கோயிலும் வேண்டாம்!'

குடிசைக் கோயிலில் அம்மனின் அருளாட்சி! ஓவியங்கள்: ஜெ.பி.

Published:Updated:
பரநாச்சி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பரநாச்சி அம்மன் கோயில் ( ஓவியர் ஜெ.பி. )

பெரிய கற்கோயில் இல்லை; உயர்ந்த கோபுரம் இல்லை; மதில்களோ மண்டபங்களோ எதுவும் இல்ல; கருவறையில் கற்சிலையும் இல்லை; தினசரி நான்கு கால பூஜைகளும் இல்லை. ஆனாலும் கருங்குளம் கிராமத்தில், வயலுக்குள் ஏகாந்தமாகக் குடிகொண்டிருக்கும் பரநாச்சி அம்மனின் சக்திக்கும் அருளுக்கும் சிறிதும் குறைவில்லை!

`கற்சிலையும் வேண்டாம் கற்கோயிலும் வேண்டாம்!'

சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருஸ்தலமான பட்ட மங்கலத்துக்கு அருகே அமைந் துள்ளது கருங்குளம் கிராமம். இந்த கிராமத்தின் எல்லையில் அடர்ந்த காடும் வயல்களும் சூழ்ந்த வெளியில், மண்சுவருக்கு நடுவே விளாரிமாரில் வேய்ந்த குடிசையையே கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கிறாள் அன்னை பரநாச்சி.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பங்குனி மாதம் கடைசி செவ்வாய் அன்று நடைபெறும் புரவி எடுப்பு விழாவின் போது மட்டுமே இவளைக் கோயிலுக்கு வெளியே பார்க்க முடியும். அதேபோல், இந்த அன்னையை ஆண்கள் மட்டுமே வாயிலுக்கு அருகே அமர்ந்து வணங்க முடியும். பெண்கள் மண் சுவருக்கு வெளியே நின்றபடிதான் வணங்க வேண்டும்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், பல பக்தர்கள் வந்திருந்தனர். அன்னை அருளும் குடிலுக்குள் நுழைய இரண்டடி உயரத்துக்குச் சிறிய நுழைவாயில் தரையில் அமர்ந்து தலையைக் குனிந்தபடிதான் பூசாரி கருவறைக் குள் நுழைந்தார். உள்ளே அவர் தீபம் காட்டும்போது, அந்த வெளிச்சத்தில் நிழலுரு வாகத் தெரிகிறது அன்னையின் முகம். வியப்பும் பிரமிப்பும் விலகாமலேயே அவளை வணங்கிவிட்டு, பூசாரியிடம் அந்தக் கோயிலின் வரலாறு குறித்து விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கற்சிலையும் வேண்டாம் கற்கோயிலும் வேண்டாம்!'

“400, 500 வருஷங்களுக்கு முன்னால நத்தம் பக்கத்தில் இருக்கிற உலுப்பக்குடி கிராமத்தில், கரந்தமலை என்கிற இடத்தில்... சின்ன மலை மேல ஒரு கோயில் இருந்தது. ஒருநாள், அங்கிருந்த அம்மனை தரிசிக்கக் குழந்தை யோடு வந்தாள், கோயில் குருக்களின் மனைவி. தரிசனம் முடிந்ததும், விளையாடிக்

கொண்டிருந்த குழந்தையை அங்கேயே கணவரின் பொறுப்பி விட்டுச் சென்றாள். ஆனால் குருக்களோ உச்சிக்கால பூசை முடிந்ததும் குழந்தை இருப்பதையே மறந்து

விட்டுக் கோயிலை்ப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.

`குழந்தை எங்கே’ன்னு அந்த அம்மா கேட்டதும்தான் அவருக்குப் புள்ளையோட ஞாபகமே வந்தது. உடனே கோயிலுக்கு ஓடினார். பொதுவாக கோயில் நடை சாத்திட்

டால், அடுத்த கால பூசைக்கு இடையில் திறக்கக் கூடாதுன்றது சாஸ்திரம். அதனால, குருக்கள் கோயில் கதவின் சாவித் துவாரம் வழியா புள்ளையோட பேரைச் சொல்லிக் கூப்பிட்டார்.

உள்ளிருந்து ஒர் அசரீரி கேட்டிருக்கு. `உன் குழந்தை என்னோட தான் விளையாடிட்

டிருக்கு. சாயந்திரம் வந்து கூட்டிட்டுப் போ’ என்றதாம் அசரீரி. குருக்களுக்குச் சந்தோஷம். வீட்டுக்குப் போய் குழந்தை அம்பாளோடதான் விளையாடிக்கிட்டு இருக்குன்னு மனைவிக் கிட்ட சொன்னார். ஆனால் அவளோ நம்பவில்லை. இப்பவே புள்ளையோட வரணும் இல்லேன்னா நான் உசுரோட இருக்க மாட்டேன்னு அழுதிருக்காங்க.

அதனால் பதறிப்போன குருக்கள் கோயிலுக்கு ஓடிப்போய், சாமியிடம் மன்னிப்புக் கேட்டபடி கதவைத் திறந்தார். அங்கே கருவறையில் பிள்ளை செத்துக் கிடந்திருக்கு. என்னை நம்பாத உனக்குக் குழந்தை கிடைக்காது’ மீண்டும் ஒலித்தது அசரீரி. துடிதுடித்துப்போன குருக்கள் கோபம் கொண்டார். பிள்ளை யைப் பறிகொடுத்த வேதனையில் அம்பாளையே சபித்தார்.

``இவ்வளவு காலம் நான் உனக்கு ஆத்மார்த்தமா பூஜை பண்ணினது உண்மைன்னா... உனக்கு இனிமே கற்கோயில் இல்லாமப் போகட்டும். இனி, என்னோட சாதிசனம் யாரும் உனக்குப் பூஜை பண்ணமாட்டார்கள்’’

அவரின் சாபம் பலித்தது. அந்தக் கோயில் அழிஞ்சுபோச்சு. மூல விக்கிரகத்தை ஒரு பெட்டியில் வெச்சு ஆத்துல விட்டாங்க. அது ஒதுங்கிய இடம்தான் இந்தக் கோயிலுக்குப் பக்கத்துல இருக் கிற கருங்குளம் மிதலைக் கண்மாய்.

பலரும் வந்து பெட்டியை எடுக்கப் பார்த்தாங்க... முடியலை. நிறைவாக எங்க சமூகத்து ஆள்கள் கையில்தான் கிடைச்சது. அதனால இப்போ வரைக்

கும் நாங்கதான் பூசை பண்றோம். அதனால அம்மனுக்கு பர நாச்சியார்ன்னு பேர் வந்தது!’’ என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார் பூசாரி குமார்.

மிதலைக் கண்மாயில் ஒதுங்கிய அம்மன் பெட்டியை முதலில் பார்த்தவர் கோட்டி அம்பலம் என்ற ஊர்ப் பெரியவர். அவர் அன்னையை தியானித்தபோது, அவருக்கு அருள்வாக்கு கிடைத்தது.

`இந்த ஊரில் எனக்கு இடம் கொடுத்தால் ஊரை சுபிட்சமாக வைத்திருப்பேன். கற்கோயில் வேண்டாம்; விளாரிச் செடி களைக் கொண்டு கோயில் கட்டினால் போதும். ஒரு குழந்தையின் மறைவுக்குக் காரணமாக இருந்ததால் எனக்கு நிரந்தர உருவம் தேவையில்லை; சிதைந்து உருமாறும் மண் பதுமையாக வழிபட்டாலே போதும். சேரியில் வசிக்கும் மக்கள் மட்டுமே எனக்குப் பூசைகள் செய்ய வேண்டும்’’ என்று அருள்வாக்கு தந்தாள் அம்பிகை.

மேலும் ஒரு பெண்ணின் சந்தேகத்தாலும் கோபத்தாலும் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதால், பெண்கள் தன்னை தரிசிக்கக் கூடாது என்றும் கட்டளை இட்டாளாம் அன்னை!

`கற்சிலையும் வேண்டாம் கற்கோயிலும் வேண்டாம்!'

அன்னையின் கட்டளையை ஏற்றுக்கொண்ட ஊர் மக்கள், அருகிலிருக்கும் நாச்சியார்புரம் என்ற ஊரிலிருந்து விளாரிமார்களை வெட்டி வந்து கோயில் அமைத்தனர். மண்ணால் அம்மன் உருவம் செய்யப்பட்டு அக்கோயிலில் வைத்து, ‘பர நாச்சியார்’ என்ற திருநாமமும் சூட்டப்பட்டது. பின்னர் அந்த கோட்டி அம்பலம் அன்னையுடன் ஐக்கியமானார். அவருடைய திருவுருவம், இன்றும் விளாரிமாரால் வேயப்பட்ட கருவறைக்குள் பரநாச்சி அம்மன், சப்த கன்னியர் திருவுருவங் களுடன் இருக்கிறது.

கருவறையில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் அன்னை, ஏழு கரங்களில் சூலம் முதலான ஆயுதங்களும் கீழே இடது கரத்தில் அன்னக் கிண்ணம் தாங்கியும் அருள்பாலிக்கிறாள்.

விளாரிமார் கொண்டு வேயப்பட்ட கருவறைக்கு வெளியே, திறந்த வெளியில் பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, நொண்டி, சப்பாணி என்ற பெயர்களில் காவல் பூதங்களும் பண்டாரம், சந்நியாசி, பாம்

பாட்டி, பேச்சி, ராக்காயி, வீரபத்ரர், ஆஞ்சநேயர் போன்ற பரிவார மூர்த்திகளும் காணப்படுகின்றன. இவர்களின் பிம்பங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் திருவிழாவின்போது புதுப்பிக்கப்படுகின்றன.

இந்தக் கருவறையில் இருக்கும் பரநாச்சி அம்மன் மண்ணால் செய்யப்படும் பதுமை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய பதுமை நகர்த் தப்பட்டு, புதிய அம்மன் சிலை வைக்கப்படுகிறது. இப்படியே நகர்த்தப்படும் திருவுருவம் ஒச்சம் ஆகும்வரை கருவறைக்குள்ளேயே தான் இருக்கு மாம். புதிய அம்மன், கோட்டி அம்பலம், சப்த கன்னியர், நகர்த்தப்பட்ட பழைய அம்மன் பதுமை கள் என எல்லாம் சேர்த்து அக் கருவறைக்குள் மொத்தம் 23 சாமி சிலைகள் இருப்பதாகக் கூறுகிறார் பூசாரி.

அம்மன் திருவுருவம் மட்டுமல்ல, அவள் குடியிருக்கும் குடிசை யும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை களையப்பட்டு, புதிய விளாரிமார் கொண்டு வேயப்படுகிறது. இது வேறு எங்குமே, எந்தக் கோயிலிலுமே நாம் காண முடியாத அதிசயம். இங்கு அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்குக் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உண்டு.

`கற்சிலையும் வேண்டாம் கற்கோயிலும் வேண்டாம்!'

சில கட்டுப்பாடுகள்...

இங்கு செவ்வாயும் வெள்ளியும் தரிசனத்துக்கு உகந்த நாள்கள்.

பரநாச்சியார் கோயிலுக்குப் போவதாக இருந்தால் 10 நாள்களுக்கு துக்க நிகழ்வுகளில் கலந்து

கொள்ளாமல் இருக்கவேண்டும். துக்கம் நிகழ்ந்த வீட்டார் 40 நாள்களுக்குப் பிறகே வரவேண்டும்.

கோயிலுக்குள் செல்வதற்கு முன் குளிப்பது அவசியம். திருக்கோயிலின் உட்பிராகாரத்தில் பெண்கள் வலம் வரக்கூடாது. மண் மதிலைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் மட்டுமே வலம் வரலாம்.

கோயிலுக்கு உள்ளேயோ வெளியேயோ பின் புறத்திலோ பூசாரியைத் தவிர, பக்தர்கள் எவரும் தீபமோ, சூடமோ ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள் 3 மாதம் வரை கோயிலுக்கு வரலாம். அதன் பின்னரும், குழந்தை பிறந்து 45 நாள்கள் வரையிலும் வரக் கூடாது. கர்ப்பிணி

களின் குடும்பத்தாரும் இதைப் பின்பற்ற வேண்டும்.

பூப்பெய்திய பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 3 மாதங்கள் வரை கோயில் வளாகத்தின் அருகே கூட வரக் கூடாது. மாத விலக்கான பெண்கள் 10 நாள்களுக்குப் பிறகே கோயிலுக்கு வரவேண்டும்.

மேற்கண்ட விரத முறைகளைப் பின்பற்றும் எம் மதத்தினரும் இக்கோயிலில் வந்து வழிபடலாம்.

வித்தியாசமான வழிபாடு முறை:

இந்தக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் செவ்வாய் கொடுப்பது அல்லது சிறப்பு கொடுப்பது எனப்படுகிறது.

கருங்குளம் மற்றும் சுற்றுப்பட்டு ஊர்க்காரர்கள் சார்பாகவும் மற்ற பக்தர்களின் வேண்டுதலின் பொருட்டும் செவ்வாய் படைப்புகளுக்கும் விழாக்கால சிறப்பு தினங் களுக்கும் மட்டுமே சிறப்பு அபிஷேக, தீப ஆராதனை மற்றும் அர்ச்சனைகள் நடைபெறும். அதுவுமே இரவில்தான் நடைபெறும். அதிலும் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். மற்ற தினங்களில் தீப ஆராதனையும் அர்ச்சனையும் மட்டுமே உண்டு.

அப்படிச் சிறப்பு கொடுக்கும்போதும் 10 நாள்களுக்கு முன்பே ஊருக்குள் தண்டோரா மூலம் ‘இன்னார் இன்ன தேதியில் சிறப்பு கொடுக்கிறார்’ என்று அறிவிக்கப்படும். அந்த 10 நாள்களும் எல்லார் வீடுகளிலும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.

தீட்டுடன் யாரும் ஊரில் இருக்கக் கூடாது. காரைக்குடி, கண்டரமாணிக்கம் போன்ற வெளியூர் பக்தர்களும் அவ்வாறு வந்து கொடுப்பதுண்டு. வெளியூர் ஆட்களாக இருந்தாலும், சுத்தமாக இல்லாவிடில் உள்ளூர் ஆட்கள் வெளியே போய்விடுவார்கள். ஊரே சுத்தமாக இருக்கவேண்டும் என்பது அம்பாளின் விருப்பம்.

அதேபோல், பர நாச்சி கோயிலில் பூசை வைக்கும் உரிமை கொண்ட 13 குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே கருவறைக்குள் சென்று பூஜை செய்யமுடியும். மற்ற ஆண்கள் மேல் சட்டையைக் கழற்றிவிட்டு, குடிசையின் வாயிலருகே நின்று வணங்கலாம். குளித்து விட்டு வருவது உத்தமம். பெண்கள் கோயி லைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மண் மதிலின் வாயிலருகே மண்டியிட்டோ, அமர்ந்தோ அம்மனை வணங்கலாம்.

பால், பன்னீர், இளநீர் என அனைத்து அபிஷேகங்களும் விசேஷ நாள்களில் அம்மனுக்கு உண்டு. சாதாரண நாள்களில் மற்ற கோயில்கள் போல இங்கு நைவேத்தியம் கிடையாது. பழங்கள் மட்டுமே நைவேத்தி யமாகப் படைக்கப்படுகின்றன.

அதேபோல கடா, சேவல் போன்றவற்றைப் பலி கொடுப் பதும் கிடையாது. வெளியில் இருக்கும் சூலத்தின் அருகே பலி கொடுத்து பரிவார தெய்வங்களுக்கு மட்டுமே படைக் கிறார்கள். ஆனால் கோயிலுக்குள் மாமிசம் புழங்குவதில்லை. திருவிழாக் காலம் மற்றும் சிறப்புகொடுக்கும் நாள்களில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு நைவேத்தியம் உண்டு. அது அம்மனுக்கு மிகவும் பிடித்த பால்சோறு!

இப்படி வரலாறு, வழிபாடுகள், நைவேத்தியம் மட்டுமல்ல... பர நாச்சியாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புரவி எடுப்புத் திருவிழாவும் மிக மிக விசேஷமானது.

ஆம்! பர நாச்சியார் அம்மனுக்குப் புதிய சிலை அமைக்கப்படுவதும், குடிசைக்கோயில் மாற்றப்படுவதும் அப்போதுதான் நிகழும். அதேபோல், புதிய அம்மனுக்கு நிகழும் தைல அபிஷேகத்தைக் காண பெரும்கூட்டம் கூடும். பக்தர்களே அம்மனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யலாம் என்பது சிறப்பு.

புதிய அம்மன் பவனி வரும் வேளையில் வீதிகள், வீடுகள் என ஊர் முழுக்க மின் விளக்குகள் அணைக்கப்பட்டு விடும்!

இங்ஙனம் மண்மணக்க நிகழும் இந்த விழாவில் சிலிர்க்க வைக்கும் மேலும் பல சிறப்பம்சங்கள் உண்டு!

அதுபற்றி அடுத்த இதழில் காண்போம்...