திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

’பாஞ்சாலியின் கிருஷ்ண பக்தி!’

கிருஷ்ண தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ண தரிசனம்

கிருஷ்ண தரிசனம்

பாரதப் போர் நிகழ்ந்தது. பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். பாஞ்சாலி தனது சபதத்தின்படி கூந்தலை முடிந்துகொள்ள வேண்டிய தருணம் வந்தது. ஆனால், நெடுங் காலமாகத் தலையில் எண்ணெய் தடவாததாலும், வாசனாதி திரவியங்களை பூசிக் கொள்ளாததாலும் சிக்கு நிறைந்து காணப்பட்டது திரௌபதியின் கூந்தல்.

இதே வேளையில், தனது அரண்மனையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் பகவான் கிருஷ்ணர். அருகிலிருந்த பாமாவும் ருக்மிணியும் கவலை கொண்டனர். அவர்கள், ‘`பதினெட்டு நாட்களாகப் போர்க்களத்திலேயே இருந்தீர்கள். இப்போது, அரண்மனைக்குத் திரும்பிய பிறகும் என்ன யோசனை?’’ என்று கேட்டனர்.

மெள்ள புன்னகைத்த பகவான், ‘`என் அன்புச் சகோதரி திரௌபதியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவள் என் மீது கொண்ட பக்தி அளப்பரியது. முன்பொரு முறை, நான் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் சிலர் விளையாட்டாகக் கருதி எனது கௌபீனத்தைப் பறித்து வைத்துக் கொண்டனர்.

நான் கரையேற முடியாமல் தவித்தேன். இதையறிந்த திரௌபதி, தன் புடவைத் தலைப்பைக் கிழித்து என் மானம் காக்க உதவினாள். அதன் பலனாகவே... கௌரவசபையில் அவள் துகிலுரியப்பட்டபோது, அவளின் மானத்தைக் காத்து அருள் புரிந்தேன். அன்பர்கள் பிரியத்துடன் எனக்குத் தருவதை, பன் மடங்காக திருப்பி அளிப்பதுதானே எனது கடமை!’’ என்றார். இதைக் கேட்ட பாமாவும் ருக்மிணியும் அவரிடம் கோபித்துக் கொண்டனர்.

‘`அப்படியெனில், நாங்கள் உங்கள் மீது கொண்டிருக் கும் பக்தியைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அப்படித்தானே?’’ என்றனர் கோபம் குறையாமல்.

’பாஞ்சாலியின் கிருஷ்ண பக்தி!’

இதற்கு பதிலேதும் கூறாத பரந்தாமன், தேவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களின் அரண்மனையை அடைந்தார்.

அங்கு, துச்சாதனனின் ரத்தம் தடவப்பட்ட- சிக்குகள் நிறைந்த தனது கூந்தலுடன் போராடிக் கொண்டிருந்தாள் திரௌபதி. இதைக் கண்ட பாமாவும் ருக்மிணியும் அவளது கூந்தலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திரௌபதியின் கூந்தலில் உள்ள ஒவ்வொரு ரோமத்தில் இருந்தும் ‘கண்ணா... கண்ணா...’ எனும் சத்தம் வந்து கொண்டே இருந்தது.

இருவரும் அசந்து போனார்கள். ‘திரௌபதி யின் உள்ளத்தில் மட்டுமல்ல, அவளின் ஒவ்வொரு ரோமமும் கண்ணனின் நாமம் சொல்கின்றனவே!’’ என்று திரௌபதியின் கிருஷ்ணபக்தியை எண்ணி வியந்து நின்றனர்.

- சி.வேல்முருகன், திருநெல்வேலி-2