திருக்கதைகள்
Published:Updated:

குரு தரிசனம்! சூரியனின் சீடர்!

சூரியனின் சீடர்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரியனின் சீடர்

- பி.சந்திரமெளலி -

ஞானி சகலரின் மகன் வைசம்பாயனர். வேதங்களில் சிறந்த இவரைச் ‘சகல்யர்’ என்று போற்றினார்கள் தவசீலர்கள். இவருக்குச் சீடர்கள் பலர் உண்டு.

யாக்ஞவல்கியர்
யாக்ஞவல்கியர்


ஒருநாள் வைசம்பாயனர் தன் சீடர்களை அழைத்தார். அவர் களிடம் ‘நாம் அனைவரும் சற்றும் பயமின்றி யாகங்கள் செய்யவும், சுகமாக யக்ஞங்கள் புரியவும், மிதிலா நகரை ஆண்டு வரும் ஜனக மகாராஜாவே காரணம். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் அவரது அரண்மனைக்குச் சென்று, மந்திராட்சதை தந்து, அவரை ஆசீர்வதித்து வரவேண்டும்’’ என்று ஆணையிட்டார்.

அதன்படியே, அனைத்து சீடர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராகச் சென்று, ஜனக மகாராஜாவை ஆசீர்வதித்து விட்டுத் திரும்பினர். சீடர்களில் ஒருவர் பெரும் ஞானவான். மகா விஷ்ணுவின் அருளால் பிறந்தவர் என்று ஞானநூல்கள் போற்றும். இந்த அருளாளரின் முறை வந்தபோது, அவரும் ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார்.

ஆனால், அரசன் அங்கு இல்லாமல் போகவே, கோபத்தில் மந்திராட்சதையை மண்டபத்தில் இறைத்துவிட்டு வந்துவிட்டார். ஜனக மகாராஜா திரும்பி வந்தபோது, அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆம், ஞானவானான அந்தச் சீடரின் ஸ்பரிசம் பெற்ற அட்சதை விழுந்த இடங்களெல்லாம் பூத்துக் குலுங்கியிருந்தன. புஷ்பவனமாகத் திகழ்ந்த அந்தச் சூழல் ராஜாவின் மனத்துக்குக் குதூகலத்தை அளித்தது. அட்சதையை இறைத்துவிட்டுச் சென்ற ஞானியின் மீது ஜனகருக்கு அலாதியான பற்று எழுந்தது.

‘இனிமேல் அனுதினமும் அவரே வந்து, எனக்கு மந்திராட்சதை செய்வித்து ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று ஜனகமகாராஜா தமது விருப்பத்தை வைசம்பாயனரிடம் தெரிவித்தார்.

அவரும் அவ்வண்ணமே செய்யும்படி தன் சீடரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தச் சீடரோ, முதலில் செய்த ஏற்பாட்டின் படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சீடருக்கு வாய்ப்பளிப்பதுதான் முறை என்று எடுத்துச் சொன்னார். இப்படி தான் சொல்வதால் குருவின் வார்த்தையை மீறியதாக எண்ணக்கூடாது என்றும் பணிவோடு எடுத்துரைத்து, சக சீடர்களுக்கும் சம வாய்ப்பளித்தார்.

பிற்காலத்தில் ஜனக மகாராஜாவுக்கே பிரம்மவித்தையைப் போதித்தார் என்கின்றன இவரின் சரிதத்தைச் சொல்லும் ஞான நூல்கள். அவ்வாறு அவர் போதித்த காலத்தில் ஜனக்புரி ஆஸ்ர மத்தை நிர்வகித்து வந்தவர் ‘கண்வர்’ என்ற முனிவர். இவரும் அந்த ஞானவானின் பிரதம சீடரானாராம். அதுசரி... யார் அந்த ஞானவான்?

மந் நாராயணனின் அம்சமான யாக்ஞவல்கியரே அவர். இந்தப் பூமியில் இவரின் அவதாரம் நிகழ்ந்ததே ஓர் அற்புதம்தான்.

பரத கண்டத்தின் வடபாகத்தில் அமைந்திருந்த ஊர் வர்த்த மானபுரம். இங்கு சகலர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவருக்கு சுனந்தா என்ற புதல்வியும், வைசம்பாயனர் என்ற புதல்வனும் இருந்தனர். கலைவாணியின் அம்சமாகத் திகழ்ந்த சுனந்தாவை பிரம்மரதன் என்ற புண்ணிய சீலர் மணந்துகொண்டார்.

விதிவசத்தால், பல காலம் ஆகியும் இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமையவில்லை. எனவே, மந் நாராயணனை மனதில் தியானித்து தவம் செய்தார் பிரம்மரதன். தவத்துக்குப் பலன் கிடைத்தது. மகாவிஷ்ணு காட்சி தந்தார். அவரிடம், ‘சகல கலை களிலும் வல்லவனாகவும், ஞானியாகவும், நற்குணங்கள் கொண்டவனாகவும் ஒரு பிள்ளை பிறக்க அருள் புரியவேண்டும்’ என்று வரம் வேண்டிப் பெற்றார் பிரம்மரதன்.

நாளடைவில் சுனந்தாதேவி கர்ப்பம் தரித்தாள். ஆனால், பிரசவம் ஆகவில்லை. உரிய காலத்தையும் தாண்டி நாள்கள் பல கடந்து, மாதங்கள் கழிந்து, வருடங்களும் ஆயின. பிரசவம் மட்டும் நிகழவே இல்லை. கர்ப்பத்துள் இருக்கும் சிசுவிடமே காரணம் கேட்க, ‘மந் நாராயணனின் அனுக்கிரகம் கிட்டினால் மட்டுமே நான் அவதரிப்பேன்’ என்று குரல் கேட்டது.

பிரம்மரதன் மீண்டும் தவம் இருந்தார். ஐந்து ஆண்டு கர்ப்ப வாசத்துக்குப் பின்பு மகா விஷ்ணுவின் அருளால் குழந்தை நல்லபடியாகப் பிறந்தது. சதபிஷா நட்சத்திரமும் தனுர் லக்னமும் கூடிய சுப நாளில் மந் நாராயணன் அவதரித்தார். இதுவே யாக்ஞவல்கியரின் அவதார தினம்!

பெரியோர்கள் குழந்தைக்கு வைத்த பெயர் ‘ஸானந்தர்’. மகரிஷிகள் மகிழ்ந்து ‘யாக்ஞவல்கியர்’ என்று அழைத்தனர். தேவ குருவாம் பிரகஸ்பதி இவருக்கு நான்கு வேதங்களையும், சகல கலைகளையும், சாஸ்திரங்களையும் கற்பித்து, உபநயனமும் செய்துவைத்தார். பின்னர், விருத்த வியாசரிடம் வேதாத்யயனம் செய்துகொண்டார் யாக்ஞவல்கியர். ரிக் வேதத்தையும், யஜுர் வேதத்தின் 59 பகுதிகளை கற்றுக்கொண்டார்.

தன் தாயின் சகோதரரான வைசம்பாயனரிடமும் ஞானம் கற்றார் யாக்ஞவல்கியர். அவரிடம் இவர் சீடராக இருந்தபோதுதான் ஜனகருக்கு அருள்புரிந்த சம்பவம் நிகழ்ந்தது.

வேதத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கற்ற பின்பு, பதினைந்து பகுதிகள் மிஞ்சியிருந்தன. அவை சூரிய பகவானுக்கு மட்டுமே தெரியும் என்பதால், யாக்ஞவல்கியர் காயத்ரி தேவியை உபாசனை செய்து தவமிருந்தார். காயத்ரிதேவி, சூரிய பகவான் மூலம் மீதமுள்ள பகுதிகளையும் கற்றுக்கொள்ள வழிசெய்து உதவினாள்.

கடுமையான சோதனைகளுக்குப் பின்பு, யாக்ஞவல்கியரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்ட சூரிய பகவான், தன்னைத் தவிர வேறு எவருமே அறியாத யஜுர் வேதத்தின் சில பகுதிகளைக் கற்றுக் கொடுத்தாராம்.

யாக்ஞவல்கியர் இல்லறத்தில் இருந்து கொண்டே, தமது சீடர்களுக்கு சுக்ல யஜுர் வேதத்தையும், மற்ற வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். அத்துடன், ‘யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி’ என்ற நூலையும் தொகுத்தார். இன்றைய பல சட்டதிட்டங்கள், உடலமைப்பு குறித்த அறிவியல் போன்றவற்றை விவரிப்பதில் ஆதி நூலாகத் திகழ்கிறது!

வரும் ஐப்பசி 19 - நவம்பர் 5 சனிக்கிழமை யாக்ஞவல்கியர் ஜயந்தி. அன்றைய தினம் அவரைத் தியானித்து வழிபட்டு குருவருள் பெற்று மகிழ்வோம்.

தேரும் சாரதியும்!

சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே! சுய விசாரணையும், சுய தேடலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மனத்தை அலைபாயாது அடக்குபவனால் மட்டுமே ஆனந்த நிலையை அடைய முடியும். அவனால் மட்டுமே சாதனைகள் புரிய முடியும்.

மனித குலத்துக்குத் தொண்டாற்றும் வகையில் அரிய செயல்கள் செய்யமுடியும்.

உடல் என்பது ஒரு தேர் என்றால், அதைச் செலுத்தும் சாரதியாக மனம் இருக்கிறது. அந்தச் சாரதியை வழிகாட்டிச் செல்லும் எஜமானனாக ‘புத்தி’ இயங்கவேண்டும்.

சாரதி அதாவது மனம் தனக்குத் தோன்றியபடியெல்லாம் தான்தோன்றியாக அலைய ஆரம்பித்துவிட்டால், அவன் உடலாகிய தேரை கண்மூடித்தனமாகச் செலுத்தத் தொடங்கிவிடுவான். விளைவு விபரீதங்களையே தரும்.

புத்தி சரியான பாதையில் மனத்தைச் செலுத்துவதற்கு யோக சாதனைகளும், யோகாசனப் பயிற்சிகளும் உதவுகின்றன.

- யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி