திருக்கதைகள்
Published:Updated:

ஆசையின் விபரீதம்!

குரு நானக் தேவ்ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
குரு நானக் தேவ்ஜி

குரு நானக்

குரு நானக் தேவ்ஜி சீக்கிய மதத்தின் முதல் குரு. இவரது அவதார தினம் வரும் 8.11.2022 செவ்வாய் அன்று ஐப்பசி பௌர்ணமி தினத்தில் வருகிறது. `கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை, அவர் சகலருக்கும் பொதுவானவர்; பெண்ணிலிருந்தே ஆண் பிறந்தான் எனில், பெண் எந்த வகையில் குறைந்தவள்...' இதுபோன்ற பல அற்புதக் கருத்துக்களால் மக்களைக் கவர்ந்த மகான் இவர்.

குரு நானக் தேவ்ஜி
குரு நானக் தேவ்ஜி


ஒருமுறை குருநானக் தன்னுடைய மாணவர்கள் இருவருடன் நடுக்காட்டில் நடந்துகொண்டிருந்தார்கள். சீடன் மர்தானாவுக்குப் பசி வாட்டியது. அதை உணர்ந்த குரு `மர்தானா! உனக்குக் கடுமையான பசி என்றால், அதோ அந்தச் சிகைக்காய் மரத்திலே உள்ள பழங்களைப் பறித்து உண். பசி தீரும். ஆனால், ஒரு பழத்தைக் கூட நீ எடுத்து வரக் கூடாது' என்றார்.

`சிகைக்காய் கசக்குமே எப்படி அதைத் தின்ன முடியும்' என்று எண்ணியவாறு சென்றான் மர்தானா. மரத்தின் மேலேறிப் பழங்களை வயிறு புடைக்கத் தின்றான். அம்மரத்தின் பழங்கள் தேன் போல இனித்தன. அதனால் பசியும் தணிந்தது. ஆனால், குரு கூறிய வார்த்தையை மர்தானா மறந்தான். அடுத்த வேளைக்கு வேண்டி சில பழங்களை பறித்துக்கொண்டு வந்தான்.

அடுத்த வேளை பசி வருமுன்பே பறித்து வைத்திருந்த பழங்களைத் தின்றான். எல்லாம் கசப்பு. விஷம் போல வாயெல்லாம் கசந்து கொண்டே இருந்தது. உமிழ் நீரை பலமுறைத் துப்பியும் அவன் வாயும் கசந்தது. வயிறு குமட்டி அவனை என்னென்னவோ செய்தது.

மர்தாமனாவின் நிலையைக் கண்ட குருநானக் அவனை அழைத்தார். ``மர்தானா! நேற்று கடுமையான பசியால் தேவை ஏற்பட்டபோது உண்டாய். அதனால் அது இனித்தது. இப்போது தேவையில்லாமல் ஆசை ஏற்பட்டதால் தின்றாய். அதனால் கசந்தது இல்லையா?'' என்றார். ஆசையின் விபரீதம் புரிந்தது அந்த மாணவனுக்கு.

``குருவே என்னால் கசப்பைத் தாங்க முடியவில்லை மன்னிக்கவும்'' என்றான் மர்தானா.

``கவலைப் படாதே. சத்நாம் என்று ஜபித்துக்கொள், கசப்பு மறைந்து விடும்'' என்றார்.

அப்படியே அவன் கூற கசப்பு மறைந்தது.

`வாஹே குரு வாஹே குரு வாஹே குருஜி சத்நாம் சத்நாம் சத்நாம்ஜி!

- வி.ஹரி, சென்னை-44