Published:Updated:

குருவின் குரு!

ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசாயிபாபா

ஶ்ரீவெங்குசா மகராஜ் மகிமைகள் - `பாபா மாமி' ரமா சுப்ரமணியன்

ஷீர்டி சாயிபாபா மகா சமாதி நிலையை அடைந்து 103 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. உலகம் முழுவதும் சாயிக்கு பக்தர்கள் பெருகிக் கொண்டே வருகின்றனர். எளிமையும் இனிமையும் நிறைந்த போதனைகளோடு ஶ்ரீ சாயி நிகழ்த்திய அற்புத லீலைகளை, பாபாவின் பக்தர்கள் எல்லோரும் அறிவார்கள். ஆனால் பாபாவின் குருவைப் பற்றிய விவரங்கள், பலரால் அறியப்படவில்லை.

குருவின் குரு!

ஶ்ரீசாயிபாபாவின் குரு ஶ்ரீவெங்குசா மகராஜ். அவர் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் அவதாரம் என்ற தகவல் ஶ்ரீசங்கர் பட்டாச்சாரியா என்பவரால் இயற்றப்பட்ட ஶ்ரீபாத ஶ்ரீவல்லபர் சரிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாயிபாபாவின் தலைசிறந்த பக்தர்களில் ஒருவரான தாஸ்கணு, மகாராஷ்டிர மாநிலத்தில், ஶ்ரீவெங்குசா மகராஜ் வாழ்ந்த சேலாவாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று பல மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து அரும்பாடுபட்டுக் களப்பணி செய்து சேகரித்த விவரங்களை ‘சந்த் கதா ம்ருத்’, ‘பக்த லீலாம்ருத்’ மற்றும் ‘பக்தசாராம்ருத்’ என்ற மூன்று நூல்களாகத் தொகுத்தார்.

அவை மூன்றிலும் சாயிபாபாவைக் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏழு அத்தியாயங்கள் அமைந்துள்ளன. இத்தொகுப்பு ‘ஶ்ரீசாயி குரு சரித்திரம்’ என்ற நூல் வடிவில் வெளிவந்துள்ளது. மேலும் பாபா ஸ்தூல உடலுடன் ஷீர்டியில் வாழும் பொழுதே, இந்தப் புனித நூலை பாபாவின் திருக்கரங்களில் அளித்து ஆசீர்வாதம் பெற்றார் தாஸ்கணு. இந்நூலிலும்  வெங்குசா மகராஜ் பற்றிய தகவல்கள் உண்டு.

அவதூதரும் மகாயோகீஸ்வரருமான ஶ்ரீவெங்குசா மகராஜ். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் காட்சி அளித்து, ஏராளமான அற்புதங்களைப் புரிந்திருக்கிறார். ஶ்ரீசாயிபாபா, ஐந்து வயது பாலகனாக ஶ்ரீவெங்குசா மகராஜிடம் எவ்வாறு வந்து சேர்ந்தார்?

ஒருமுறை ஶ்ரீவெங்குசா மகராஜ் , தன் உறவினர்களுடன் காசிக்குச் சென்றார். திரும்பும் வழியில் அகமதாபாத்துக்கு வந்தார். அங்கு ஒரு தர்காவுக்குள் திடீரென்று நுழைந்தார். தர்காவில் ‘சுராக்ஷா’ என்ற மகான் சமாதி அடைந்து இருந்தார். வெங்குசா மகராஜ் தர்காவுக்குள் நுழைந்ததும் சமாதியில் இருந்து ஒரு குரல் ஒலித்தது.

`வாருங்கள் வெங்குசா மகராஜ். நீங்கள் முற்பிறவியில், மாபெரும் ஞானியான ஶ்ரீராமானந்தராக இருந்தீர்கள். அப்போது தங்களின் மிகச் சிறந்த சீடராகத் திகழ்ந்த பக்த கபீர்தாசர், இப்பிறவியில் ஐந்து வயது பாலகனின் உருவில், விரைவில் உங்களிடம் வந்து சேர்வார். வருங்காலத்தில் உலகத்தாரால் போற்றப்படும் மாபெரும் யோகியான அந்தப் பாலகனை, தக்க தருணம்வரை பாதுகாத்து, ஞானோபதேசம் அளிக்க வேண்டும் என்பது இறைவனின் ஆணை” என்றது அசரீரி.

சமாதியில் அடங்கிய மகானுக்கு மரியாதை செலுத்தியபிறகு, சொந்த ஊருக்குப் புறப்பட்டார் ஶ்ரீவெங்குசா மகராஜ்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் முதுகில் ஒரு குழந்தையைச் சுமந்தபடி வந்தார். இருவரும் பசியுடனும் சோர்வுடனும் திகழ்ந்தனர். அவர்களின் தோற்றத்தைக் கண்ட பணியாளர்கள், அவர்களை அங்கிருந்து விரட்ட யத்தனித்தனர். தொலைவிலிருந்து இக்காட்சியைக் கண்ட, ஶ்ரீவெங்குசா மகராஜ், விரைந்து வந்தார். ஒருவித தெய்விகப் பொலிவுடன் திகழ்ந்தான் பாலகன். அவனே பிற்காலத்தில் மிகப் பெரிய யோகியாகத் திகழப் போகும் ஶ்ரீசாயிபாபா என்பதை, வெங்குசா மகாராஜ் கண்டுகொண்டார்.

குருவின் குரு!

இறைக் கட்டளைப்படி பாலகனை தன் இல்லத்திலேயே பாதுகாப்பாக வளர்த்தார். அவரின் குடும்பத்தார் இதை விரும்பவில்லை. அதனால் இருவரையும் பிரிக்க பல சதிவேலைகளைச் செய்தனர். இறைவனுடைய கருணையால், அவை யாவும் முறியடிக்கப்பட்டன. சில வருடங்களில் அவனை அங்கு அழைத்துவந்த பெண்மணியும் இறந்துபோனார். இனியும் அங்கு இருந்தால் அவன் உயிருக்கே ஆபத்து விளையும் என்று கருதினார் ஶ்ரீவெங்குசா மகராஜ்.

ஆகவே, இளைஞனாக வளர்ந்துவிட்ட ஶ்ரீசாயிபாபாவை அழைத்துக்கொண்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அங்குதான் குருவுக்கும் சீடருக்கும் இடையே ஞானப் பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த நிலையில் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்த சுற்றத்தார், பாபாவைக் கொன்றுவிட்டு, மகராஜை அழைத் துச் செல்ல திட்டம் தீட்டினர். அதன்படி ஒருநாள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வந்தனர்.

சதிக்கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவன் ஒரு செங்கலை எடுத்து, பாபாவின் தலையை நோக்கிக் குறி வைத்து எறிந்தான். ஆனால் அதை தன் தலையில் தாங்கிக்கொண்டார் ஶ்ரீவெங்குசா மஹராஜ். அதேநேரம் அதை எறிந்தவனோ அந்த இடத்திலேயே சுருண்டுவிழுந்து இறந்தான். கூட்டத்தினர் அதிர்ந்தனர். தங்களின் தவறை உணர்ந்தவர்கள், ஶ்ரீவெங்குசா மஹராஜிடம் மன்னிப்பு வேண்டினர். இறந்தவனைப் பிழைக்கவைக்கும்படி பிரார்த்தித்தனர்.

வெங்குசா மகராஜ், ``அந்த வல்லமை இனி எனக்குக் கிடையாது. ஒருவேளை என்னுடன் இருக்கும் யோகீஸ்வரரான இளைஞர் மனம் வைத்தால், இறந்தவன் பிழைக்கலாம்’’ என்றார். உடனே அவர்கள் பாபாவிடம் சென்று மன்றியிட்டு வேண்டினார்கள்.

கருணை கொண்டார் பாபா. ஆம்! அவர் நிகழ்த்திய முதல் அற்புதம் அந்தக் காட்டில் நிகழ்ந்தது. பாபா, தன் குருவின் காலடி பட்ட மண்ணை எடுத்து வந்து இறந்தவனின் நெற்றியில் பூசினார். மறுகணம் அவன் விழித்தெழுந்தான்!

அதன்பின்னர், அங்கிருந்து உடனடியாக ஷீர்டிக்குச் செல்லும்படிபாபாவைப் பணித்தார் ஶ்ரீவெங்குசா மகராஜ். மேலும் அவர், “ஷீர்டி என்ற புனித ஸ்தலமே இனி நீ வாசம் செய்யப்போகும் இடமாகும். வருங்காலத்தில் அனைவரும் அங்கு வந்து உன்னை தரிசித்து, தங்களின் குறைதீரப் பெறுவார்கள். அந்தத் தலத்தைவிட்டு வேறு எங்கும் நீ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் உன்னைத் தேடி அங்கு வந்து ஆசி பெறுவார்கள்’’ என்றும் அருளினார்.

தன் குருவின் உத்தரவை ஏற்றார் பாபா. குருநாதரை வணங்கினார். அவரின் தலையைத் தாக்கிய செங்கல்லையும், கஃப்னி என்ற அவருடையநீளமான அங்கியையும் குருவின் நினைவாகப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.சேலாவாடியிலிருந்து ஷீர்டிக்கு வந்து சேர்ந்த ஶ்ரீசாயிபாபா, தமது வாழ்நாள் முழுக்க... சுமார் 60 ஆண்டுகள் அங்கேயே வசித்து, சமாதி நிலையை அடைந்தார். அவர் அந்தத் தலமும், ஷீர்டி எனும் அந்தப் புனிதத் தலத்தின் மகிமையால் இவ்வுலகும் பெற்ற பெரும்பேறு அளப்பரியது என்பது நாமறிந்ததே.

நம் சத்குருவின் குருவும் சித்தபுருஷருமான ஶ்ரீவெங்குசா மகராஜ் ஸ்தூல சரீரத்துடன் பல்வேறு அற்புதங்களை, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார்.

குருவின் குரு!
Givaga

வட்டம் வரைந்து நிகழ்த்திய அற்புதம்!

ஶ்ரீ
வெங்குசா மகராஜ் , தார்வாட் மலைப்பகுதிகளிலும் பெல்லாகவி மலைப்பகுதிகளிலும் பல ஆண்டுகள் கடுமையான யோக நிஷ்டையில் இருந்தார். இன்றைக்கும் மனித சமூகத்தை ரட்சிக்கும் வகையில் தமது யோக ஆற்றலின் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள், அந்தப் பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி மக்கள். அவர்கள் ஶ்ரீவெங்குசா மகராஜை தங்களின் குலதெய்வமாகவே வழிபட்டு வருகிறார்கள்.

ஒருமுறை ஶ்ரீமஹராஜ் மலைக்குகையில் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தாராம். அப்போது கிராமவாசிகள் சிலர் தங்கள் பசுக்களை மேய்ப்பதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றனர். திடுமென பெருங் காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. மேய்ச்சலுக்குச் சென்றவர்கள் பயந்துபோனார்கள். அவர்கள் மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றிருந்த வேளையில், ஶ்ரீவெங்குசா மகராஜ் காட்சியளித்தார்.

அவர்களைச் சுற்றிலும் மிகப்பெரிய வட்டம் வரைந்தார். பின்னர் மறைந்து போனார். என்ன ஆச்சர்யம்... அவர் வரைந்த வளையத்துக்குள் காற்றும் மழையும் நுழையவில்லை. இரவு முழுவதும் அந்த வட்டத்துக்குள் பாதுகாப்புடன் இருந்தார்கள் கிராமவாசிகள். விடிந்ததும் கிராமத்துக்கு வந்தவர்கள் எல்லோரிடமும் ஶ்ரீவெங்குசா மகராஜ் நிகழ்த்திய அற்புதத்தைக் கூறி வியந்து போற்றினார்களாம்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் காட்சி தந்தார்!

ரு முறைஶ்ரீவெங்குசா மகராஜை தங்களின் இல்லத்துக்கு உணவு உபசாரம் ஏற்க வரும்படி, ஒரே நேரத்தில் இருவேறு குலத்தைச் சேர்ந்தவர்கள் அழைத்தார்கள். அவரும் புன்னகையோடு அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களுக்குச் செல்வது சாமானியர்களுக்குச் சாத்தியம் இல்லை. ஆனால், ஶ்ரீவெங்குசா மகராஜ் தாம் வாக்களித்தபடியே ஒரே நேரத்தில் இருவரின் வீட்டிலும் உணவு உண்டார். அந்தக் காட்சியைக் கண்டு கிராம மக்கள் வியந்து போனார்கள்.

கைத்தடியும் அற்புதமும்!

வெ
ங்குசா மகராஜ் பெரும்பாலும் எவரிடமும் உரையாடுவது இல்லை. குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனையுடன் மக்கள் அவரைத் தேடி வருவார்கள். அப்போது, தனது கைத்தடியை இரண்டு கரங்களில் ஏந்திக்கொண்டு தொட்டிலை ஆட்டுவது போல் இரண்டு முறை தாலாட்டுவார்.

பிரார்த்தனையுடன் வரும் மக்கள் ஆசி கிடைத்ததாகக் கருதி நம்பிக்கையுடன் திரும்புவார்கள். அவர்களின் நம்பிக்கை விரைவில் பலிக்கும். விஷமிகள் சிலர், மகராஜின்கைத்தடியில்தான் ஏதோ ரகசியம் இருக்கிறது என்று எண்ணி, அதை திருடி எடுத்துச் சென்று ஒளித்துவைத்துவிட்டார்கள். பின்னர் ஏதும் தெரியாதவர்கள் போல் வந்து கவனிக்க ஆரம்பித்தார்கள். அன்றும் குழந்தை வரம் வேண்டி பெண் ஒருவர் வந்தார். சுவாமியை வணங்கிப் பிரார்த்தித்தார்.

உடனே ஶ்ரீவெங்குசா மகராஜ் தன் கரங்களை நீட்டினார். என்ன ஆச்சர்யம்... அவரின் கரங்களில் அந்தக் கைத்தடி காட்சியளித்தது. வழக்கம்போல் தாலாட்டும் பாவனையில் ஆசிபுரிந்தார் மகராஜ். இதைப் பார்த்துக்கொண்டிருந்த திருட்டு விஷமிகள் ஶ்ரீவெங்குசா மகராஜின் கால்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். அவரும் அவர்களை மன்னித்து அருளினார்.

இப்படி ஶ்ரீசாயிபாபாவின் குருவான ஶ்ரீவெங்குசா மஹராஜ் நிகழ்த்தும் அற்புதங்கள் இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஶ்ரீசாயிபாபா தன் குருவின் வார்த்தைகளில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார். நாமும் பாபாவின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து பக்தி செலுத்துவோம். அவர் நம்முடைய நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை.

செங்கல்லில் குருவின் உயிர் மூச்சு!

ன் குருவிடமிருந்து பிரசாதமாகப் பெற்ற செங்கல்லின் மீது தலை வைத்து ஆனந்தமாக உறங்குவது பாபாவின் வழக்கம்.

ஒருமுறை அவருடைய பரம பக்தரான நானாசாகிப் “பாபாஜி! செங்கல் தலையணை தங்களுடைய தலைக்கு வேதனையைத் தரும். நான் இலவம்பஞ்சுத் தலையணையைச் செய்து தருகிறேன்’’ என்று கூறினார்.

உடனே பாபா சிரித்துக்கொண்டே “நானா! உனக்கு இந்த செங்கல்லின் மகத்துவம் தெரியாது. இதில் என் குருநாதரின் மூச்சுக் காற்று அடங்கியுள்ளது. இதில் தலையை வைத்து உறங்குவதன் மூலம், தினமும் நான் என் குருநாதரிடமிருந்து உபதேசத்தைப் பெறுகிறேன். என்றைக்கு இந்தச் செங்கல் கீழே விழுந்து உடைகிறதோ, அன்று எனது முடிவும் குறிக்கப்பட்டுவிடும்!” என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார்.

அதேபோல், ஒரு முறை அந்த செங்கல் கை தவறி கீழே விழுந்து உடைந்தபோது, அவரின் வார்த்தைகள் மெய்யாயின.

குருவின் குரு!

எல்லா உயிர்களிடத்தும்...

ங்களது பெயரையும், வடிவத்தையும் நீக்கிவிட்டால்,
உள்ளே உணர்வு நிலை காணப்படும்.
இந்த உணர்வு நிலை உங்களிடத்தும்,
அனைத்து உயிர்களிடத்தும் நிலைபெற்றுள்ளது.
அது நானேயாகும். இதைப் புரிந்து கொண்டு
உங்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும்
என்னைக் காண முயலுங்கள்.
இந்தப் பயிற்சியின் மூலம் என்னுடன்
ஒன்றாகும் நிலையை அடைய முடியும்!’’

- ஷீர்டி சாயிபாபா