திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டு, குருபகவானை தரிசிப்பார்கள். இந்நிலையில்தான் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி இக்கோயிலில் நடைபெறவுள்ள குருப்பெயச்ர்ச்சி விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில், இந்திய அளவில் புகழ்பெற்றதாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தக் கோயிலானது, நவகிரகங்களில் ஒன்றான குருபகவானுக்குப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய குருப்பெயர்ச்சியின் போது, இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குருபகவானின் அனுகிரகத்தைப் பெற, இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, குருபகவானை வழிபடுவார்கள். இந்த ஆண்டு குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்நிலையில்தான் இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு குருபகவானுக்குக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18-ம் தேதியில் இருந்து 22 -ம் தேதிவரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குருபகவானை தரிசிக்க வருபவர்கள், வெயில் மற்றும் மழையினால் பாதிக்கப்படாமல் இருக்க, நீண்ட தூரத்திற்குத் தகரத்தால் ஆன பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள். நெரிசல் ஏற்படாமல், பக்தர்கள் எளிதாக, குருபகவானை தரிசிக்க ஆங்காங்கே முறையான தடுப்புகள் அமைக்கப்படுகிறது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆலங்குடி ஊராட்சி நிர்வாகம் மெற்கொண்டு வருகிறது. திருவாரூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் இக்கோயிலின் பணியாளர்களும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.