Published:Updated:

‘துணையாய் வருவான் ஐயப்பன்!’

ஐயப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஐயப்பன்

இத்தனை வருஷத்துல ஐயப்பன் என் வீட்டுக் கடமைகளிலும் ஒரு குறையும் வைக்கலை.

‘துணையாய் வருவான் ஐயப்பன்!’

இத்தனை வருஷத்துல ஐயப்பன் என் வீட்டுக் கடமைகளிலும் ஒரு குறையும் வைக்கலை.

Published:Updated:
ஐயப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஐயப்பன்

பரிமலைக்கு மாலையிட்டு செல்லும் ஐயப்பசாமிகள் அந்த சாஸ்தா மீதும் சபரி யாத்திரை மீதும் தீராத காதல் கொள்கின்றனர். ஓர் ஆண்டுகூடத் தவறாமல் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வோர் ஐயப்ப பக்தருக்கும் லட்சியமாக இருக்கும். அந்த லட்சியம் நிறைவேற அந்த சபரிகிரிவாசனின் பரிபூரண அருள் தேவை. அப்படி ஐயன் ஐயப்பனின் அருளைப்பெற்று, தொடர்ந்து 49 ஆண்டுகள் மாலையிட்டு விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வந்ததோடு, இந்த ஆண்டு 50-வது ஆண்டு யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறார் இசக்கிமுத்து குருசாமி.

எளிமையான தோற்றம், நெற்றியில் மணக்கும் விபூதி, மார்பில் தவழும் ஐயப்ப மாலைகள் எனப் பார்த்த மாத்திரத்திலேயே ஐயப்பனின் அருள்தொண்டர் அவர் என்பது விளங்கியது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எளிய பணி. ஆனால், சென்னையில் பல உயரதிகாரிகளும் வி.ஐ.பிக்களும் இவர் கையால் மாலை அணிந்து மலைக்குச் செல்லக் காத்திருக்கிறார்கள். அந்த அளவுக்குச் சிரத்தையான குருசாமி. மாறிவரும் காலச் சூழலில் ஒரே கொள்கைப் பிடிப்போடு அரை நூற்றாண்டு காலம் இருப்பது என்பது மிகப் பெரிய சாதனை. எப்படி இது சாத்தியமாயிற்று?! அவரிடமே கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நம்ம கையில என்ன இருக்கு. எல்லாம் அந்த ஐயப்பன் செயல். நாம தீர்மானம் பண்ணிப்போற மலை இல்லை சபரிமலை. அந்த ஐயப்பன் யார் வரணும்னு தீர்மானம் பண்ணணும். அவனோட தீர்மானத்தால்தான் நான் இத்தனை வருஷமும் போய் வரேன். இருமுடி கட்டி மகரஜோதிக்குப் போற கணக்குத்தான் 50. ஆனா, இடையிடையில் மாதப் பிறப்புகளுக்குப்போனதெல்லாம் நிறைய இருக்கு” என்கிறார் புன்னகையோடு.

ஐயப்பன்
ஐயப்பன்

“முதன்முறை நான் மாலை போட்டப்போ எனக்கு வயசு 11. அந்த வயசுல என் மனசுல ஐயப்பனை விதைச்சது ரெண்டு பேரு. ஒருத்தர் சுப்பையா சுவாமி, மற்றொருவர் வடகரை முப்புடாத்தி முதலியார். ரெண்டு பேருமே ஐயப்ப சாமிங்க. ஐயப்ப பூஜை நடக்கும் இடத்துக்கெல்லாம் என்னையும் கூட்டிப் போவாங்க. எங்க ஊரு செங்கோட்டை பக்கத்துல புளியறை. அங்கேயிருந்து ஆரியங்காவுக்கு 25 நிமிஷத்துல நடந்தே போயிடலாம். பள்ளிக்கூடம் போறேன்னு சொல்லிட்டு நான் ஆரியங்காவுக்குப் போயிடுவேன். அப்படித்தான் ஐயப்ப தரிசனம் எனக்குப் பிடிச்சுப் போக ஆரம்பிச்சது. அங்கே இருந்தவரைக்கும் சபரிமலைக்குப் போறது ரொம்ப எளிமையா இருந்தது. வளர்ந்து, பிழைப்புக்காகச் சென்னை வந்ததும் அந்த வழக்கம் விட்டுப்போயிடுமோன்னு பயம் வந்துச்சு. அந்த பயமே வைராக்கியமா மாறிச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையிலேருந்து தொடர்ந்து 17 வருஷங்கள் சபரிக்குப் பாத யாத்திரை போயிருக்கேன். அந்த யாத்திரைகள்ல பல அற்புதங்களை ஐயப்பன் செஞ்சிருக்கான்.

‘துணையாய் வருவான் ஐயப்பன்!’

நானும் சில சாமிமார்களும் சேர்ந்து சென்னையிலேருந்து பாத யாத்திரை கிளம்பிட்டோம். நல்ல மழை. மழையோ, புயலோ... சரணம் சொல்லி நடக்க ஆரம்பிச்சாச்சுன்னா குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் நிக்கறது இல்லை. திண்டிவனம் வந்தோம். அங்கே ஒரு பழைய கட்டடத்துல ஒதுங்கினோம். சமைக் கணும். பாத்திரங்கள், பொருள்கள் எல்லாம் இருக்கு. ஆனா, அடுப்பு மூட்ட விறகு வேணுமே. சுத்திமுத்தித் தேடினா முழுக்க மழையில நனைஞ்ச ஈர சுள்ளியாயிருக்கு. என்னடா பண்றது, `சாமிமார்கள் எல்லாம் பசியில இருக்காங்களே ஐயப்பா'ன்னு நெனச்சப்போ, ஒரு சின்னப் பையன் வந்தான். பார்க்க மாடு மேய்க்கும் பையன்போல இருந்தான்.

`என்ன சாமி தேடுறீங்க...'ன்னான்.

`ஒண்ணுமில்லைப்பா, சபரிமலைக்குப் பாத யாத்திரையா போறோம். இடையில இங்கே சமைச்சுச் சாப்பிடத் தங்கினோம். அடுப்பெரிக்க விறகு கிடைக்குமான்னு தேடுறேன். எல்லாம் ஈரமா இருக்கு'ன்னு புலம்பினேன்.

`இருங்க சாமி வர்றேன்'னு சொல்லிட்டுப் போனவன் சில நிமிஷத்துல கை நிறைய விறகோடு வந்தான். எல்லாம் நல்லா காய்ஞ்ச விறகுங்க. அவனுக்கு நன்றி சொல்லிட்டு சமைக்க ஆரம்பிச்சோம். அந்தப் பையனும் அங்கேயே விளையாடிட்டிருந்தான். என்னுடன் இருந்த சாமிகிட்ட, ‘இன்னிக்கு முதல் சாப்பாடு அந்தப் பையனுக்குத்தான் போடணும். அவனைப் பார்த்தா மாடு மேய்க்கிற பையன் மாதிரி தெரியலை’ன்னு சொன்னேன். அவரும், ‘அப்படித்தான் எனக்கும் தோணுது சாமி’ன்னார்.

சமைச்சு முடிச்சதும் சாப்பிடக் கூப்பிடத் திரும்பினா, அதுவரைக்கும் அங்கே விளை யாடிட்டிருந்த பையனைக் காணோம். அக்கம் பக்கத்துல விசாரிச்சா அவங்களுக்கும் தெரியலை. எங்கள் சந்தேகம் உறுதியாச்சு. அது, அந்த மணிகண்டன்தான்னு. இப்படி என் வாழ்க்கை முழுக்க பல்வேறு தருணங்கள்ல மனித ரூபத்துல வந்து ஐயப்பன் அநேகம் அற்புதங்களைச் செய்திருக்கான்.

ஒவ்வொரு முறை பதினெட்டாம் படி மிதிக்கும் போதும், ‘அடுத்த வருஷமும் இதே மாதிரி நான் வரணும் சாமி, அதுக்கு நீதான் பொறுப்பு’ன்னு வேண்டிப்பேன். அந்த வேண்டுதலை ஐயப்பன் இன்னிக்கு வரைக்கும் நிறைவேத்திட்டான்.

இந்த 50 வருஷத்துல நிறைய மாறியிருக்கு. இதுக்கு முன்னாடி காலங்கள்ல இருந்த சம்பிரதாயங்கள் நிறைய காணாமப் போயிருக்கு. முன்பெல்லாம் பம்பையில தீபம் விடுற வழக்கம் இருந்தது. சின்னத் தேர் மாதிரி செய்து அதுக்குள்ள தீபத்தை வெச்சு நதியில விடுவாங்க. அதெல்லாம் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். அதேபோல, பேட்டை துள்றது. இது எல்லாமே இன்னிக்குக் குறைஞ்சிட்டே வருது. காரணம், அவசரம். பக்தர்கள் ஒரே நாள்ல தரிசனம் முடிச்சு மலை இறங்கி வந்துர்றாங்களே. சபரிமலை யாத்திரைன்னா கண்டிப்பா 41 நாள்கள் விரதம் கட்டாயம். அதுக்குக் குறைவா இருக்கிறவங்க, பக்கத்துல இருக்கிற ஐயப்பன் கோயிலுக்குப் போகட்டும். சபரிமலைக்குப் போக வேண்டாம்.

எனக்கு 18 படிகளின் பாதுகாவலனான கருப்ப சாமின்னா ரொம்ப இஷ்டம். அந்தக் கருப்பசாமி என்கூட எப்பவும் இருப்பாரு. இதை பல நேரம் உணர்ந்திருக்கேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர்லயிருந்து மொபெட்ல நானும் என் மனைவியும் வந்துட்டிருந்தோம். யாருமே இல்லாத சாலை. ஒரு விபத்தாயிடுச்சி. எனக்குச் சின்ன காயம்தான். ஆனா, என் மனைவிக்குத் தலையில அடி. காது வழியா ரத்தம். பேச்சு மூச்சு இல்லை. ‘கருப்பா, ஆரியங்காவு ஐயனே’ன்னு கத்தினேன்.

அடுத்த நிமிஷம், எங்கேயிருந்துதான் வந்தாரோ அந்த மனுஷன். நல்ல உயரம். கறுப்பான தேகம். பார்க்கக் கருப்பசாமிபோல கம்பீரம். அவர் போட்ட சத்தத்துல மக்கள் கூடிட்டாங்க. ஒரு வண்டிய நிறுத்தி ஏத்திவிட்டாங்க. திருநெல் வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தோம். எல்லோரும் என்னென்னவோ சொல்லி பயமுறுத்தினாங்க. ஆனா, நான் அந்தக் கருப்பன் மேல பாரத்தைப் போட்டேன். சாயங் காலம் வந்த பெரிய டாக்டர் செக் பண்ணிட்டு, ‘ஒண்ணுமில்லை, நாளைக்கு வீட்டுக்குப் போயிட லாம்'னு சொல்லிட்டார். என் நம்பிக்கை திரும்ப வும் ஜெயிச்சதுல மகிழ்ச்சி.

இத்தனை வருஷத்துல ஐயப்பன் என் வீட்டுக் கடமைகளிலும் ஒரு குறையும் வைக்கலை. எனக்கு மூணு பொண்ணுங்க. மூணு பேரும் இப்போ திருமணமாகி நல்ல நிலைமையில இருக்காங்க. இதுக்கு மேல என்ன... ஐயப்பனும் கருப்பனும்தான் என் வாழ்க்கையை நடத்துறாங்க. அவங்க நடத்துற வரைக்கும் நடக்க வேண்டியதுதான். என்ன சொல்றீங்க... ” என்று சொல்லிச் சிரித்தார்.

இசக்கிமுத்து குருசாமி சொல்ல சொல்ல அந்த ஐயப்பன் மகிமைகளைக் கேட்டுச் சிலிர்த்தோம். தன் 50-வது ஆண்டு யாத்திரையையொட்டி ‘என் குருநாதா ஐயப்பா’ என்ற நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதைப் பெற்றுக்கொண்டு வணங்கி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism