திருக்கதைகள்
Published:Updated:

குருவாயூர் அற்புதங்கள்!

குருவாயூர்
பிரீமியம் ஸ்டோரி
News
குருவாயூர்

தொகுப்பு: எஸ்.கண்ணன்

அண்டங்கள் அனைத்துக்கும் ஆதிமூலமான பரம்பொருள், தன் பக்தர்களுக்கு எளிதில் வசப்படும் விதம் ஒரு குழந்தையாய் அருளும் புண்ணிய க்ஷேத்திரம் குருவாயூர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரை ‘தென் துவாரகை’ என அடியார்கள் போற்றுவர்.

குருவாயூரப்பன்
குருவாயூரப்பன்


நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை போன்ற நூல்கள் குருவாயூரப்பனது மகிமைகளை அழகுற எடுத்துரைக்கின்றன. வில்வமங்களம், மானதேவன் குருர் அம்மா, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்ற அடியார்கள் பலரும் போற்றிக் கொண்டாடிய திருத்தலம் இது.

மாசிப் பிரம்மோற்சவம் இங்கே விசேஷம். இந்த விழாவையொட்டி யானை ஓட்டம் எனும் வைபவம் நிகழும். தேவஸ்தான பராமரிப்பில் உள்ள யானைகள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயம் இது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் யானையே, அடுத்த ஓர் ஆண்டுக்கு குருவாயூரப்பனைச் சுமக்கும் பாக்கியம் பெறுமாம்!

இந்த வருடம் வரும் மார்ச் 3-ம் தேதி மாசிப் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அற்புதமான இந்தத் தருணத்தில் நாமும் குருவாயூர் மகிமைகளைப் படித்தறிந்து, சிந்தை மகிழக் கொண்டாடுவோம் குருவாயூரப்பனை!

குருவாயூர் மகாத்மியம்!

நாரத புராணத்தின் ‘குருபாவனபுர மகாத்மியம்’ குருவாயூர் தலத்தின் மகிமைகளை விவரிக்கிறது. துவாபர யுகத்தில், ‘துவாரகையை ஏழு நாள்களில் கடல் கொள்ளும். அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்!’ என்று உத்தவரிடம் அருளினார் கிருஷ்ணர். அதன்படியே அனைத்தும் நடந்தன.

குருவும் வாயு பகவானும் அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். அப்போது கேரளத்தில் தாமரைக் குளக் கரை ஒன்றில் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரின் வழிகாட்டல்படி, விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில், அந்த விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர். அந்த சிவபெருமான் மம்மியூரில், பார்வதிதேவியுடன் எழுந்தருளியுள்ளார் என்பது ஐதிகம். இவ்வாறு குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்தத் தலம் ‘குருவாயூர்’ ஆனது.

பிணி தீர்க்கும் திருத்தலம்

பரிக்ஷித்து மன்னனின் மகன் ஜனமேஜயன். இவன் தன் தந்தை யின் மரணத்துக்குக் காரணமான தட்சகன் என்ற பாம்பைப் பழி வாங்கும் பொருட்டு, வேள்வி வளர்த்து உலகில் உள்ள பாம்புகளைக் கொன்று குவித்தான். அந்தப் பாவத்தால் ஜனமேஜயனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. பின்னர், தத்தாத்ரேயரின் வழிகாட்டல்படி, குருவாயூரப்பனின் திருவடி தொழுது நோய் நீங்கப்பெற்றான் என்கின்றன புராணங்கள்.

நாராயண பட்டத்திரி, தனக்கு ஏற்பட்ட பிணி நீங்கே குருவாயூர் கோயிலுக்கு வந்து மச்சவதாரம் முதலான பகவானின் அவதாரங் களையும் சிறப்புகளையும் நாராயணீயம் எனும் ஞானநூலாகப் பாடி அருள்பெற்றார். அவர், கருவறைக்கு எதிரில் உள்ள மேடை அருகே நின்றவாறு நாராயண பட்டத்திரி, கண்ணனிடம் பேசியவாறே நாராயணீயம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

குருவாயூர்
குருவாயூர்
santhosh_varghese

குருவாயூரப்பன் தமிழகத்தில் பரவலாக அறியப் படுவதற்குக் காரணமானவர் அனந்தராம தீட்சிதர். ஒரு முறை அவர் நோயால் பீடிக்கப்பட்டு உபன்யாசம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் சிறிது காலம் குருவாயூரில் தங்கி குருவாயூரப்பனை வழிபட்டதால் நோய் நீங்கப் பெற்றார் எனும் தகவல் உண்டு. இன்றைக்கும் தேடி வந்து வழிபடுவோரின் உடல் - உள்ளப் பிணி தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது குருவாயூர்.

பாதாள அஞ்சனம்... அபிஷேகப் பிரசாதம்!

கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் குருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உண்ணி (குழந்தை) கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.

மேலிரு கரங்களில் சங்கு-சக்கரமும், கீழிரு கைகளில் கதாயுதம்- தாமரையும் திகழ்கிறது. கழுத்தில் துளசி, முத்து மாலைகள் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனத்துடன் வலப்புற மார்பில் வத்ஸம் என்ற சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துபமும் அணிந்து ‘ஸ்தானகம்’ எனும் நின்ற நிலையில் அருள்புரிகிறான் குருவாயூரப்பன்.

யானைகள் பந்தயம்
யானைகள் பந்தயம்
santhosh_varghese

இந்த விக்கிரகம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வால் உருவாக்கி வணங்கப்பட்ட பின் பிரம்மன், கண்ணன் ஆகியோரால் பூஜிக்கப் பட்டது. இந்த விக்கிரகம் ‘பாதாள அஞ்சனம்’ என்ற உயர் தரக் கல்லில் வடிவமைக்கப்பட்டது. குருவாயூரப்பனது உற்சவர் விக்கிரகம் பொன்னால் ஆனது.

குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களைப் பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்.

விடியற்காலை கருவறை திறந்தவுடன், முன்தினம் சாத்தப்பட்ட சந்தனக் கலவையைக் கண்டுகளிக்கலாம். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் செய்யப்படுகிறது. விக்கிரகத்தில் இருந்து அபிஷேக எண்ணெயை வாகை மரப் பட்டையால் ஆன கலவையால் அகற்றுவர். இதை `வாகை சார்த்து’ என்பர்.

அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்போருக்கு கோயில் செக்கில் ஆட்டிய அபிஷேக எண்ணெயுடன் அபிஷேக தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

மன பாரம் தீர்க்கும் துலாபாரம்!

குருவாயூரில் துலாபாரம் பிரசித்தமானது. தங்களது வேண்டுதலை யொட்டி எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நாணயங்கள், பழங்கள், சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர். சொறி, சிரங்கு போன்ற தோல் நோய் பீடிக்கப் பட்டவர்கள், இங்கு எடைக்கு எடை சேனைக் கிழங்கை காணிக்கை செலுத்துகிறார்கள்.

துலாபாரம்
துலாபாரம்


தங்களின் பிரச்னை என்னவோ வேண்டுதல்கள் என்னவோ அதுகுறித்து சங்கல்பித்துக்கொண்டு குருவாயூரப்பனை மனதார வேண்டி வழிபட்டு, துலாபாரம் செலுத்தினால் சகல துன்பங்களும் நீங்கும்; மன பாரம் தீரும். வீட்டில் சந்தோஷமும் சுபிட்சமும் நிலைத்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒருமுறை, பக்தர் ஒருவர் வாழைப் பழங்களை துலாபாரம் செலுத்தச் சென்றார். அப்போது அவர் கட்டியிருந்த பட்டு வேஷ்டி வீணாகி விடும் என்பதால் வேறு வேஷ்டியைக் கட்டச் செய்தாராம் அவரின் தாய். ஆனால், வாழைப் பழங்கள் எவ்வளவு வைத்தும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லையாம். அனைவரும் திகைத்தனர். அர்ச்சகர் ஒருவர், பக்தரது பட்டு வேஷ்டியையும் தராசில் வைக்கச் சொன்னார். பின்னரே தட்டு சமமாயிற்று!

விசேஷ பிரார்த்தனைகள்!

அன்னப் பிராசனம்: எல்லா நாள்களிலும் இங்கு அன்னப் பிராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். இந்தக் கோயிலுக்கு வந்து சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கி யமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

அன்னப் பிராசனம்
அன்னப் பிராசனம்


அடிமை கிடத்தல்: குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர். பின் மற்றொருவர் மூலமாகக் குழந்தையை எடுத்து வரச் செய்வர். அதற்கான காணிக் கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர்

ஆள் ரூபம்: அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால் குறிப்பிட்ட கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை `ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’ என்கிறார்கள்.

குந்துமணி காணிக்கை
குந்துமணி காணிக்கை


குந்துமணி: மூலவருக்கு முன்புறம் தென் பகுதியில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதிகம்.

12 திருப்பெயர்கள்!


குருவாயூரப்பன் தினமும் 12 திவ்ய நாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்செய்கிறார். அந்த விவரம்:

நிர்மால்ய தரிசனக் காலத்தில் - விசுவரூபன்; தைலாபிஷேக தருணத்தில் - வாத ரோகாக்னன்; வாகை சார்த்தல்- கோகுலநாதன்; சங்காபிஷேகம்- சந்தான கோபாலன்; பால அலங்காரம்- கோபிகாநாதன்; பால் முதலிய அபிஷேகம்- யசோதா பாலன்; நவகாபிஷேகம்- வனமாலா கிருஷ்ணன்; உச்சிகால பூஜை- சர்வாலங்கார பூஷணன்; சாயங்கால பூஜை- சர்வமங்கள நாயகன்; தீபாராதனை- மோகன சுந்தரன்; அத்தாழ (இரவு) பூஜை - விருந்தாவனசரன்; திருப்பள்ளி பூஜை- சேஷசயனன்.