Published:Updated:

அற்புதங்கள் நிகழ்த்தும் அனுமன் தரிசனம்!

அனுமன் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுமன் தரிசனம்

- பி.சந்திரமௌலி

இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ‘கடவுள் நமக்குப் புலப்படாத நிலையில் எங்கோ இருந்து நம்மை ரக்ஷிக்கிறார். அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்கள்’ எனக் கருதி அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.

‘கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் வியாபித்திருக்கிறார்; உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம்’ என்று கருதி, செயல்படுவது 2-வது வகை.

`இறை நமக்குள்ளேயே இருந்து நம்மை இயக்குகிறார்’ என்று கருதி, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது 3-வது வகை. அனுமனின் பக்தி, இந்த 3-வது வகையைச் சேரும்.

அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத் தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாயுபுத்திரனின் அருளால் நம் புத்தி பலமாகும்; சிந்தனை தெளிவாகும்; நம் உள்ளமே கோயிலாகும். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஜயமாகும். வரும் 2.1.22 ஞாயிறன்று ஸ்ரீஅனுமத் ஜயந்தி. இந்தத் திருநாளில் அனுமனைப் போற்றும் விதம், அவரின் மகிமைகளைப் படித்து மகிழ்வோம்.

அனுமத் ஜயந்தி
அனுமத் ஜயந்தி

கிருஷ்ணன் அளித்த ராம தரிசனம்!

ஒருமுறை, தென்திசை நோக்கி யாத்திரை வந்தார் நாரதர். அனுமன், தென்திசையில் இருந்து பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். இருவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்ட னர். அனுமன் நாரதரையும் பத்ரிகாஸ்ரமத்துக்கு வரும்படி அழைத்தார். நாரதரும் உடன் சென்றார்.

வழியில் சமுத்திரத்துக்கு நடுவே இருந்த அழகான ஒரு பட்டினத்தைக் கண்டனர். ``இதென்ன ஊர்?’’ என்று கேட்டார் அனுமன். ``பலராமனின் ஊர்’’ என்றார் நாரதர். அவ்வளவுதான் கடும் கோபம் கொண்டார் அனுமன். கதாயுதத்தை ஓங்கியபடி, ‘`யார் பலராமன்? என் ராமனைவிட பலமானவனா..? ஊருக்குள் சென்று அவன் பெயரில் ‘பல’ இருக்கக் கூடாது எனச் சொல்லுங்கள். இல்லையேல் நடப்பதே வேறு’’ என்று கர்ஜித்தார்.

நாரதருக்கு பயம். வேறுவழியின்றி வாசுதேவனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். அருகில் கருடனும் பலராமனும் இருந்தனர். நாரதர் சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டனர். அனுமனை கட்டி இழுத்து வருகிறோம் என்று புறப்பட்டனர்.

ஆனால் கருடனை வாலால் சுழற்றி, கடல் நீரில் தோய்த்து எடுத்து வீசியெறிந்தார் அனுமன். பலராமனாலும் அனுமனை அடக்க இயலவில்லை. ‘`வேறு வழியே இல்லை. அனுமனின் கோபத்தைத் தணிக்க ஒரே வழி... நான் ராமனாக மாறுகிறேன்; நீ லட்சுமணனாக மாறி விடு’’ என்று பலராமனிடம் சொன்னார் பரமாத்மா. மேலும் சத்யபாமாவையும் சீதையாக மாறச் செய்து, மூவருமாக இணைந்து ஸ்ரீராம பட்டாபிஷேக கோலத்தை அனுமனுக்குக் காட்டினார்களாம். அனுமன் அகம் மகிழ்ந்தார்.

அப்போது அனுமனுக்கு பகவான், ஸ்ரீராமனாக, அடுத்து ஸ்ரீகிருஷ்ணனாக, இதையடுத்து சேஷ சயனத்தில் லட்சுமியுடன் ஸ்ரீநாராயணனாக... என மாறி மாறி காட்சி கொடுத்தாராம்.

ஆனால், கிருஷ்ணனாகவும் நாராயணனாகவும் அவர் காட்சி தந்த போது, சட்டென்று கண்ணை மூடிக் கொண்ட மாருதி, ஸ்ரீராமராகக் காட்சி தரும்போது மட்டும் கண்களை அகல விரித்து ஆனந்தமாக ஸேவித்தாராம்! அதாவது ராமரைத் தவிர அனுமனின் மனம் வேறு எங்கும், வேறு எவரிடமும் செல்லாது!

`ஸ்ரீராம ஜெய ராம...'

சீதாபிராட்டியால் சிரஞ்ஜீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறார்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூரண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

- என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள் ளது. ‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் கருத்து. கடைசி வரியில் உள்ள ‘ராக்ஷஸாந்தகம்’ என்பது, ‘அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், துவேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும்.

அனுமனை உபாஸித்து அருள் பெற, ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.

ஆஞ்சநேயர் தரிசனம்!

செஞ்சி மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சிறிய குன்று ஒன்றின் மீது வாலில் மணி தொங்க, கையை ஓங்கிய நிலையில் காட்சி தரும் அனுமனை தரிசிக்கலாம். இது காண்பதற்கரிய திருக்கோலம்!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்- புது மண்டபத்தில், தாவிச் சென்று சூரியனைப் பிடிக்க முயற்சி செய்யும் ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது.

சோளிங்கபுரம் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் (மூலவர் விக்கிரகம்) கையில் சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

செங்கல்பட்டு புகைவண்டி நிலையம் அருகில் உள்ள ஆலயத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயரை, கோட்டைச் சுவரில் சுயம்புவாகத் தோன்றியவர் என்கிறார்கள். இவரது சந்நிதியில் உண்மையைச் சொல்லியே பிரார்த்திக்கவேண்டும். பொய் சத்தியம் செய்தால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடுமாம்!

ராவணனது தர்பாரில், மிக கம்பீரமாக அவனுடன் வாதிடும் அனுமனின் திருக் கோலத்தை கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயிலில் தரிசிக்கலாம்.

ராமதாஸர் கங்கையில் கண்டெடுத்த ஸ்ரீஆஞ்சநேயர் விக்கிரகம், காசி அனுமன் கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் தன் வலக் கையை தலைக்கு மேல் தூக்கியவாறும் இடக் கையை கீழே தொங்க விட்டபடியும் காட்சி அளிக்கிறார்.

இருளில் தெளிவாகவும், பகலில் மங்கலான தோற்றத்திலும் காட்சி தரும் அதிசய ஆஞ்சநேயரை, மைசூர் சாமுண்டி மலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தரிசிக்கலாம். இவர், இங்குள்ள துளசி மாடம் அருகே சுயம்புவாக தோன்றியவராம்.

ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில், ராமாயணம் பாராயணம் செய்யும் கோலத்தில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார் அனுமன்.

உடுப்பிக்கு கிழக்கே சுமார் 3 மைல் தூரத்தில் அமைந்துள்ள சிறிய குன்று ஒன்றின் அடிவாரத்தில், குளக்கரையில் விசேஷமான கோலத்தில் இருக்கும் அனுமனை தரிசிக்கலாம். இவர், மேனியெங்கும் ரோமங் களுடன், கோவணம் மட்டும் அணிந்து ‘பாலரூப ஆஞ்சநேயராக’ தரிசனம் தருகிறார்.

செந்தூரம் எதற்கு?

அனுமன்
அனுமன்


ஒரு முறை, சீதாதேவி நெற்றி வகிட்டில் செந்தூரம் இட்டுக்கொண் டிருப்பதைக் கண்ட அனுமன், ‘எதற்காக செந்தூரம் இட்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘என் ஸ்வாமி ( ஸ்ரீராமன்) நீண்ட ஆயுளுடன் திகழ செந்தூரம் அணிகிறேன்’ என்றாள் சீதை.

‘அப்படியெனில், என் ஸ்வாமி நீடுழி வாழ நான் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொள்கிறேன்’ என்று செந்தூரத்தை பூசிக் கொண்டார் அனுமன். இதனால், செந்தூரம் அனுமனுக்கு உகந்த ஒன்று என்கிறது புராணம்.

செந்தூரத்துக்கு மருத்துவக் குணமும் உண்டு. நெற்றி வகிடு ஆரம்பமாகும் இடத்தை, ‘மர்ம ஸ்தானம்’ என்கிறது ஆயுர்வேதம். அங்கு அடிபட்டால் உயிர் பிரியவும் வாய்ப்பு உண்டு. செந்தூரம் அதற்கு பாதுகாப்பு என்பது ஆயுர்வேதத்தின் கருத்து. ‘வகிட்டில் சுழி இருந்தால் நல்லதல்ல; அதை நிவர்த்தி செய்ய செந்தூரம் இட வேண்டும்’ என்கிறது தர்ம சாஸ்திரம் (நிமித்த சாஸ்திரம்). புருவ மத்தி, வகிட்டின் மையம் இவற்றைப் பாதுகாக்க விபூதி, குங்குமம் இட்டுக் கொள்வர். புருவ மத்தியில் சந்தனம் இடுவதும், உச்சந்தலையில் விபூதி பூசுவதும் இதற்காகதான்!

‘செந்தூராருண விக்ரஹாம்’ என்று அம்பாளை வர்ணிக்கிறது புராணம். செந்தூரம் அணிந்திருக்கும் அம்பாளின் முகம் ஒப்பற்றது என்று போற்றுகிறார் ஆதிசங்கரர் (வணந்தீ சிந்தூரம்...). ஆயுர்வேத மருந்துகளில் செந்தூரத்துக்குத் தனியிடம் உண்டு. எனவே, ஆஞ்ச நேயரின் பிரசாதமாக செந்தூரத்தைப் பெற்று இட்டுக் கொள்வது மிகவும் சிறப்பானது.

ஹனுமத் ராமாயணம்
ஹனுமத் ராமாயணம்

அனுமன் எழுதிய ராமாயணம்

நம் தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு கால கட்டத்தில், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் ‘ஹனுமத் ராமாயணம்’ என்பதை ஹனுமானே அருளிய தாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்துப் பிறகான காலம். ஒருநாள் இமய மலைச் சாரலில் நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. அருகிலிருந்த மலைச் சிகரத்தின் பாறைகளில் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அவை ஸ்ரீராமனின் சரிதத்தைச் சித்திரித்தன. அவர் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருந்தன.

பாறைகளில் இதை எழுதியவர் யாரென்று தேடிச் சென்றார்.இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே அனுமன் ஸ்ரீராமநாமத்தில் திளைத்திருந்தார். அருகில் அமர்ந்த வால்மீகியும் ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினார். உடன் கண்விழித்த அனுமன், வால்மீகியை வணங்கினார். அவரிடம் பாறைகளில் இருந்த வரிகள் பற்றிக் கேட்டார் வால்மீகி.

``அடியேன் ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரையிலும் எனக்குத் தெரிந்தவற்றை, நானே பாறைகளில் என் நகத்தால் எழுதிவைத்தேன். ஆனாலும் அது தங்களின் ராமாயணத்துக்கு ஈடாகாது!’’ என்றார் அனுமன்.

அவரின் பக்தியையும் பணிவையும் கண்ட வால்மீகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அத்துடன், ``ஆஞ்சநேயா! நீ எழுதிய காவிய வரிகளில் திகழும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்’’ என்றார்.

அதைக்கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரை யாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயணக் காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, ‘`தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியம் பூரணத்துவமானது; காலத்தால் அழியாதது! ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது’’ என்று அமைதியுடன் கூறினார்.

அனுமனின் இந்தத் தியாகத்தைக் கண்டு வால்மீகி திகைத்தார். அனுமனை வாழ்த்தினார். ‘`ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்’’ என்று கூறிச் சென்றார்.

அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம்.

`வாலில் இட்ட தீ’

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்


சீதையைத் தேடிச் சென்ற அனுமன் இலங்கையில் அசோக வனத்தில் அன்னையைக் கண்டு ஆசிபெற்றான். அதன் பிறகு ராவணக் கூட்டத்தார் அவனை எதிர்த்ததும், அனுமன் இலங்கையை எரித்ததும் நாமறிந்த கதை. அன்னையின் சூடாமணியுடன் திரும்பிய அனுமன் பெருமகிழ்வோடு ஸ்ரீராமனைச் சந்திக்கச் சென்றார்.

‘கண்டேன் சீதையை’ என்று கூறி, ராமனின் திருவடிகளில் விழுந்து, சூடாமணியைக் கொடுத்தார். அகமும் முகமும் மலர, தன் பிரபு தன்னை அணைத்து ஆசி கூறுவார் என்று எதிர்பார்த்த அனுமனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

சூடாமணியைக் கண்களில் ஒற்றிக்கொண்ட ராமனின் கண்கள் கலங்கின. அவர் முகத்தில் எந்தப் பேரானந்தமும் தென்படவில்லை. மாறாக, கவலையின் சாயல் கருமேகம் போல அவர் முகமண்டலத்தை வியாபித்திருந்தது. அனுமனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டன. அதற்கான காரணத்தை ஸ்வாமியிடமே வினவினார் ஆஞ்சநேயர்.

ஸ்ரீராமன், `‘ஆஞ்சநேயா! என் சீதாதேவி இருக்கும் இடத்தை அறிந்து வரத்தான் உன்னை அனுப்பினேன். ஆனால் நீயோ இலங்கையைத் தீக்கிரையாக்கி, பாதி இலங்கையையும் ராவணனின் குடிமக்களையும் அழித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு ஏன் என்னிடம் அனுமதி கேட்கவில்லை?’’ என்றார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அனுமன். ‘`பிரபு! என் வாலுக்கு ராவணன் தீயிட்டான். அந்த வாலை அங்கும் இங்கும் சுழற்றி ஆட்டினேன். பட்ட இடமெல்லாம் தீப்பற்றியது. இது ராவணன் செய்த தவற்றினால்தான் ஏற்பட்டது. இதில் என் பிழை ஏதுமில்லையே?’’ என்றார் அனுமன்.

‘`உன் வாலில் வைக்கப்பட்ட நெருப்பு உன்னைச் சுட்டதா?’’

‘`இல்லை பிரபு. நான் தங்களின் நாமத்தை விடாமல் ஜபித்தேன். அதன் மகிமையால் எனக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை’’ என்றார் அனுமன். ‘`உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீ ஜபித்த மந்திரத்தை, இலங்கை மக்களுக்கும் சொல்லிக் கொடுத்த பின்பு அல்லவா நீ இலங்கையை எரித்திருக்க வேண்டும்? உன்னைக் காப்பாற்றிக்கொண்டாய். ஆனால், இலங்கை மக்களை அல்லலுக்கு ஆளாக்கிவிட்டாயே..! இந்தப் பாவம் என்னையும் அல்லவா சேரும்!’’ என்று கேட்டார் ஸ்ரீராமன்.

அனுமன் நெடுஞ்சாணாக ஸ்ரீராமனின் காலில் விழுந்தார். ‘`பிரபு! என்னை அறியாமல் இது நிகழ்ந்துவிட்டது. என்னை மன்னித்தருளுங் கள்’’ என்று கதறினார்.

‘`ஒருவேளை ராவணன் மனம் மாறி, சீதாதேவியை அழைத்து வந்து என்னிடம் ஒப்படைத்தாலும், நான் கண்டிப்பாக இலங்கைக்குச் சென்றே ஆகவேண்டும். அக்னியால் அழிந்த இலங்கையை மீண்டும் உருவாக்கித் தந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் உதவியும் செய்து, இந்தப் பாவத்துக்கு நான் பிராயச்சித்தம் தேடவேண்டும்’’ என்றார் ஸ்ரீராமன். அனுமன் இப்போது உள்ளம் பூரித்தார்.

தர்மத்தின் ஸ்வரூபமாகவும், அன்பின் சின்னமாகவும் திகழும் ஸ்ரீராமனின் திருவடிகளை வணங்கி, ‘`ராம்... ராம்’’ என்று ஜபிக்க ஆரம்பித்தார் அனுமன். இப்போது அவர் ஜபித்தது தனக்காக அல்ல; தன்னால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக. அந்தச் செயலால் மகிழ்ந்த ஸ்ரீராமன் அனுமனைக் கட்டித்தழுவி ஆசி வழங்கினார்.

மகான் ராமதாஸர் சொல்லும் கதை...

சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாஸர். சிறந்த ஆஞ்சநேய பக்தர். அவரது கருத்துப்படி ஆஞ்சநேயர் பிறந்த கதை இதுதான்

‘புத்திர காமேஷ்டி யாகத்தின்போது கிடைத்த தெய்வீக பாயசத்தை, தன் மனைவியரான கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோருக்கு அளித்தார் தசரதன். அப்போது, சுமித்திரையின் கையிலிருந்த பாயசத்தை வாயுதேவன் எடுத்துச் சென்று, அஞ்சனையிடம் கொடுத் தான். அஞ்சனை அதைப் பருகி, ஆஞ்சநேயனைப் பெற்றாள்!’ என்று குறிப்பிடுகிறார். ஆக, அனுமனும் ஓர் அவதாரப் புருஷனே!