"ஸ்ரீ ராமா" என்று எங்கு கேட்டாலும் உடனே ஓடி வருபவர் அனுமன். பக்தியில் அனுமனை போல் நீங்காமல் இருக்க வேண்டுமென்று கூறுவர். அனுமன் ஜெயந்தியில் அனுமனின் கதையையும் காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வணங்குவோம்.

அனுமன் ஜயந்தி:
அனுமன் பிறந்த தினமே அனுமன் ஜயந்தி. அஞ்சனையின் மகனான இவர், பிறந்ததே மகத்தான கதை.
தேவர்களின் குருவான பிருஹஸ்பதிக்கு புஞ்சிகஸ்தலா என பெயர் கொண்ட ஒரு உதவியாளர் இருந்தாள். அவள் ஒரு பெண் குரங்கின் தோற்றத்தோடு பிறப்பெடுக்க சபிக்கப்பட்டாள். அவள் சிவ அவதாரத்தை குழந்தையாக பெற்றால் சாபம் நீங்கும். அவள் அஞ்சனாவாகப் பிறக்கிறாள். அவள் கற்புக்கரசியாய், தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தாள். அவள் தன் கணவரான கேசரியுடன் இணைந்து பல ஆண்டுகளாக கடுமையான தவங்களைச் செய்து, சிவனை வழிபடுகிறாள். அவளது பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு குழந்தை வரத்தை அளித்தார்.
அயோத்தியின் அரசன், தசரதன் சந்ததியைப் பெறுவதற்காக ஒரு யாகம் செய்தார். இதன் விளைவாக பெற்ற பிரசாதத்தை அவர் தனது மனைவிகளிடையே பகிர்ந்து கொள்ள, புனித மகன்களை பெற்றார். அப்படித்தான் ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன் பிறந்தார்கள். தெய்வீக நியதி படி, காற்றில் அந்த பிரசாதத்தின் ஒரு பகுதி பறந்து, காட்டில் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையிடம் கிடைத்தது.
வாயு பகவானால் கிடைத்த பிரசாதத்தை அஞ்சனை உடனே விழுங்கினாள். அதன் பலனாக அனுமன் பிறந்தான்.
அனுமன் பிறந்த பிறகு, அஞ்சனை சாபத்திலிருந்து விடுபட்டாள். அவள் சொர்க்கத்திற்குத் திரும்ப விரும்பினாள். அனுமன் தன் தாயிடம் அவனுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்றும், அவன் எப்படி வாழ வேண்டும் என்றும் கேட்டான். அதற்கு அவள் "உன்னை எவராலும் ஒருபோதும் அழிக்க முடியாது" என்று உறுதியளித்தாள், மேலும் "உதய சூரியனைப் போல பழுத்த பழங்கள் உணவாகும்" என்றும் கூறினாள்.

அனுமனின் லீலைகள்:
குழந்தையான அனுமன், ஒளிரும் சூரியனைக் கண்டதும், அது தன் தாய் சொன்ன பழம் என்று நினைத்தான். தெய்வீக குணம் கொண்ட அவன், ஒரே பாய்ச்சலில், அதை நோக்கி பறக்கத் தொடங்கினான். ராகு பகவான் இதைக் கண்டார். அவர் உடனே சூரியனை அனுமனின் கண்களிலிருந்து மறைத்தார். இதனால் கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அனுமன் சூரியனை தேடிக்கொண்டே இருந்தான். தேவர்கள் அனுமனை குறித்து இந்திரனிடம் புகார் செய்தார். இந்திரன் அனுமனை தன் ஆயுதமான இடியால் கன்னத்தில் காயம் ஏற்படுத்தி பூமியில் விழ வைத்தார். வாயு அனுமனை தாங்கி தனி பகுதிக்கு கொண்டு சென்றார்.
வாயு பகவான் சென்றதால் காற்றின்றி அனைத்து உயிர்களும் ஆபத்தில் இருந்தன. பிரம்மாவும் மற்ற தேவர்களும் வாயுவிடம் சென்று திரும்பி வரும்படி வேண்டினர். அவரை சமாதானப்படுத்துவதற்காக அவர்கள் குழந்தை அனுமனுக்கு பெரும் வரங்களை வழங்கினர். அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதமும் அனுமனை வெல்ல முடியாததாக மாற்றியது.
சூரியனே குருவாய்!
அனுமன் மனதளவில் சூரியனை தனது குருவாகத் தேர்ந்தெடுத்தார். சூரிய பகவானும் அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு சிக்கல் எழுந்தது. சூரியன் எப்பொழுதும் வானத்தை சுற்றிக்கொண்டே இருப்பார். அனுமனுக்கு உபதேசம் செய்வதற்காக அவனால் தன் பயணத்தை நிறுத்த முடியாது. ஆனால் அனுமான் மிகவும் வலிமையானவர், " நானும் உங்களோடு சமமான வேகத்தில் பயணிப்பேன்" என்று சூரியனோடு பயனிக்கிறார் . இவ்வாறு வானத்தில் பயணித்த அனுமன், அதே சமயம் பாடங்களிலும் முழு கவனம் செலுத்தினார். குறுகிய காலத்தில் அனைத்து வேதங்களிலும் தேர்ச்சி பெற்றார். சூரியன், அனுமன் தனது படிப்பை முடித்த விதத்தை போதிய குரு தக்ஷிணையாக கருதினார். ஆனால் அனுமன் ஏதேனும் கட்டளை இடுமாறு அவரை வற்புறுத்தினார். கிட்கிந்தாவில் வசிக்கும் தன் மகன் சுக்ரீவனுக்கு, அமைச்சராகவும், நிலையான துணையாகவும் இருந்து உதவி செய்யும்படி சூரியன் அனுமனை அனுப்பினார்.

ராமரோடு சந்திப்பு:
ராமர் வனவாசத்தில் இருந்தபோது அனுமன் ராமரை சந்தித்தார். அவர் தனது சகோதரர் லக்ஷ்மணனுடன் இருந்தார். மேலும் ராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவி சீதையைத் தேடிக்கொண்டிருந்தார். அவர்களின் தேடுதல், அவர்களை ரிஷ்யமுக மலைக்கு அருகில் கொண்டு சென்றது. அங்கே சுக்ரீவன் தன் சகோதரன் வாலிக்கு பயந்து தன் மந்திரிகளுடன் ஒளிந்து கொண்டிருந்தான். தன்னைக் கொல்ல வாலி இவர்களை அனுப்பியிருக்கலாம் என்று சுக்ரீவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, இவர்கள் நண்பர்களா? அல்லது எதிரிகளா? என்பதை அறிய அனுமனை அனுப்பினார். அனுமன் அந்தணர் வேடத்தில் அவர்களை அணுகினான். அனுமனை கண்ட ராமர் உடனே லக்ஷ்மணனிடம், 'வேதங்களிலும் அவற்றின் கிளைகளிலும் தேர்ச்சி பெறாமல் யாராலும் இவ்வாறு பேச முடியாது. இவரது முகத்திலோ, கண்களிலோ, நெற்றியிலோ, புருவத்திலோ அல்லது அவயவங்களிலோ எந்தக் குறையும் இல்லை. அவரது உச்சரிப்புகள் மனதைக் கவரும். வாளை உயர்த்திய பகைவனும் அழிவான். மிக சக்தி வாய்ந்தவர் இவர்" என்றார்.
ராமர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியதும், அனுமன் அவர் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். ராமர் அவரைத் தூக்கி ஆரத்தழுவிக்கொணடார்.
அதன்பிறகு, அனுமனின் கதை ராமரின் கதையுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. அனுமன் ராமனை சுக்ரீவனுக்கு அறிமுகப்படுத்துகிறார்; சீதையைத் தேடிச் செல்கிறான்; அவளை இலங்கையில் கண்டுபிடித்து ஆறுதல்படுத்துகிறான்; நகரத்தை எரித்து, பல அரக்கர்களை கொன்றான்; விபீஷணனையும் ராமனையும் ஒன்று சேர்க்கிறான்; ராமனுடன் இலங்கைக்குத் திரும்புகிறான், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடக்கும் போரில் அனைவரையும் அழிக்கிறான்; இமயமலையிலிருந்து உயிர் கொடுக்கும் மூலிகையான சஞ்சீவினியைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காப்பாற்றுகிறார்; என்றும் ராமருக்கு சேவை செய்கிறார்.

அனுமன் மகாபாரதத்திலும் இடம் பெறுகிறார். குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனின் தேரின் கொடியில் தன்னை நிலைநிறுத்தி, அதைப் பாதுகாத்து, பாண்டவர்களுக்கு உதவினார்.
அனுமன் சிரஞ்சீவி என்றும், நித்தியமாக வாழ்பவர் என்றும் கூறப்படுகிறது. அவர் கடவுளின் ஊழியர்களுக்கு சேவை செய்கிறார், பாதுகாக்கிறார் மற்றும் ஊக்குவிக்கிறார். துளசிதாஸ் போன்ற மகான்கள், அனுமனின் அருளாலினாலேயே கடவுள் தரிசனம் பெற்றனர்.
காயத்ரி மந்திரம்:
"ஓம் ஆஞ்நேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹே
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத்"
இதைச் சொல்லி அனுமனை வழிப்பட்டால், வாயுவின் சக்தியை பெறலாம். எடுத்த காரியங்கள் அனைத்துமே வெற்றியே.
மேலும் ராமாயணத்தின் சுந்தர காண்டம் படித்தும் அனுமனை வழிபடலாம். "நான் அரூபமாக அமர்ந்து சுந்தர காண்டம் கேட்பேன்" என்று அனுமனே கூறியுள்ளார். அனுமன் அருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.