Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 7

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம் - 7

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

சின்ன வயதிலிருந்தே வீட்டில் சொல்லித் தரும் பழக்க வழக்கங்கள் எல்லாமே, என்னைப் பொறுத்தவரை லட்சுமி கடாட்சத்தை ஈர்க்கும் அமசங்கள்தான். காலையில் எழுந்தோமா, பல்லைத் தேய்த்தோமா, முகம் கழுவினோமா என்று எல்லா காலைக் கடன்களையும் முடித்ததும் அம்மா அல்லது பாட்டியிடமிருந்து வரும் கேள்வி...

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


“நெத்தில பொட்டு வெச்சியா?” என்பதுதான்.

மிகவும் சிறு குழந்தையாக இருந்தால் தாயே செய்து விடுவார். 9, 10 வயது ஆகிவிட்டாலே, ‘போ, மூஞ்சி அலம்பு... நெத்திக்கு இட்டுட்டு வா” என்பார்கள் கறாராக. சாயந்திர வேளைகளிலும் பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. எந்த நேரத்திலுமே இரண்டு கைகளாலும் தலை சொரியக் கூடாது. நான் அதைச் செய்ததே இல்லை.

ஏனென்றால், ஒரு முறை ‘ரெண்டு கையால தலையைச் சொரியக்கூடாது’ என்று சொன்ன பெரிய பாட்டியிடம் (அம்மாவின் பெரியம்மா) போய், ‘இப்படியா பாட்டி?’ என்று தலையில் கை வைக்கப் போனபோது, ‘சுள்’ளென்று விசிறிக் காம்பால் போட்டார் ஒரு போடு.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்
lakshmiprasad S


“எதைப் பண்ணாதே தப்புன்னு சொல்றோமோ, அதைப் பண்ணி, ‘இப்படியா’ன்னு வேற காட்டுவியா... விளக்கு வைக்கிற வேளையில்?” என்று அவர் போட்ட போடில், இப்போது வரைக்கும் என் இரு கைகளும் தலைக்குப் போகாது.

‘சாயந்திர வேளையில் தலை சொரியக் கூடாது என்றால், காலை வேளையில் சொரியலாமா’ என்று குழந்தைத்தனமாக எனக்குச் சந்தேகம் தோன்றும். அதாவது, பார்ப்பதற்கு அருவருப்பான, அழுக் கான சில விஷயங்களைச் செய்யக் கூடாது என்று பின்னர் புரிந்தது. அதைச் செய்வதால் தரித்திரம் வரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். தரித்திரம் என்றால் நோய், வறுமை போன்றவை. அவை வந்துவிடுமோ என்ற பயம் மனிதனுக்கு வரும்போது, சில அருவருக்கத்தக்க விஷயங்களைச் செய்ய மாட் டான்; அழுக்கான பொருட் களை உடன் வைத்திருக்க மாட்டான்.

இன்னொன்றும் சொல்வார்கள்...

‘படுத்து எந்திரிச்சா படுக்கையை ஒழுங்கா சுத்தி வைக்க மாட்டியா? பாயை முதல்ல சுருட்டி வை. இல்லேன்னா தரித்திரம்... அவ்வளவுதான்... மகாலெக்ஷ்மி போயிடுவா. அப்புறம் வரவே மாட்டா உன் வீட்டுக்கு’ என்பார்கள்.

பெரியவர்கள் சொல்லும் இந்த அறிவுரைகளுக்கெல்லாம் அடிப் படையான விஷயம் சுத்தம்தான். நீ முதலில் உன்னைச் சுத்தப் படுத்திக்கொள்; அடுத்து, உன்னைச் சுற்றி இருக்கும் இடத்தைச் சுத்தப் படுத்து. அந்த சுத்தம்தான் லட்சுமிகரம்.

இதையே கொஞ்சம் வேறு விதமாக, அதாவது நவீனமாக விவாதிப்பவர்கள், ‘சுத்தத்துக்கும் பணம் போறதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்கலாம்.

ஓகே... அவர்கள் வாதத்துக்கே வருவோம். தூய்மை இல்லையென்றால், நோய் வரும். உடலில் நோய் வந்தால் மருந்துச் செலவு, மருத்துவமனைச் செலவு... இந்தக் காலத்தில் ஆஸ்பத்திரி செலவைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஹையோ..! அதுவும் இப்போது இருக்கும் விலைவாசியில் இவற்றை நினைத்தாலே தலை சுற்றுகிறதல்லவா? அதுதான் நான் சொல்ல வந்ததும். சுத்தமாக இருக்கப் பழகிக்கொண்டாலே லட்சுமிகரமாக இருப்போம்.

முன்காலத்தில் எங்கள் வீடுகளில் எல்லாம் ‘ச்சீ’, ‘த்தூ’ போன்ற வார்த்தைகளெல்லாம் உபயோகப்படுத்தவே கூடாது. பிறரைத் திட்டும் போதுகூட, சில அருவருக்கத்தக்க வார்த்தை களை உச்சரிக்கக்கூட கூடாது. பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது என்ன வென்றால், நம் கண்களுக்குத் தெரியாமலேயே நம்மைச் சுற்றி எத்தனையோ ஆத்மாக்கள் சுற்றிக்கொண்டிருக்கும். அவற்றில் பல மகான்களின் ஆத்மாக்களும் இருக்கலாம். தகாத வார்த்தை சொல்லும்போது ‘ததாஸ்து’ (அப்படியே ஆகட்டும்) என்று அந்த ஆத்மாக்கள் சொல்லுவார்களாம். எனவே எப்போதும் நல்ல வார்த்தைகளை மட்டுமே சொல்லவேண்டும். நற்பவி, நற்பவி!

வாயில் நல்ல விஷயங்களைத்தானே சாப்பிடுகிறோம். நல்ல வார்த்தைகளையே சொல்லலாமே! கெட்ட விஷயங்களை சாப்பிடு வது இல்லையே! அப்புறம் ஏன் நல்ல வார்த்தைகளை விட்டு, கெட்ட வார்த்தைகள்?

துளசி மாடம்
துளசி மாடம்
Sujay_Govindaraj

நீங்கள் மந்திரம் ஓதுகிறீர்களோ, பூஜை செய்கிறீர்களோ, கடவுள் பேரைச் சொல்லு கிறீர்களோ இல்லையோ, நல்ல வார்த்தைகளையே சொல்லி, அப்படியே ஒரு நாள் முழுவதும் இருந்து பாருங்களேன்! உங்களைச் சுற்றிலும் மட்டுமல்ல, உங்களுக்குள்ளும் ஒரு நல்ல வைப்ரேஷன் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் ‘ஆரா’ மாறும். ‘ஆரா’ மாறும்போது, வீட்டின் அமைப்பும் மாறும். அமைப்பு மாறும்போது, உங்களைச் சுற்றிலும் இருப்பவர்களும் அவர்களை அறியாமல் பலப் பல நல்ல செயல்களைச் செய்வார்கள். நமக்கே யாரைப் பார்த்தாலும், ‘இவரை ஆசீர்வாதம் செய்யலாம். இவர் களுக்காக வேண்டலாம். எல்லாரும் நல்லா இருக்கட்டும்’ என்று எண்ணத் தோன்றும்.

எங்கள் ரெய்கி வகுப்பிலும் சரி, சிறிய வயதிலும் சரி... என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்றால், ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து!’ என்பதுதான். உலகில் இருக்கும் அனைவரும் சுகமாக இருக்கவேண்டும். அதைத்தவிர வேறொன்றுமறியேன் பராபரமே. அந்த மாதிரி நினைக்க ஆரம்பிக்கும்போதே, அதுவே லட்சுமிகடாட்சத்தின் ஒரு பிரதிபலிப்புதான்.

பால்ய பருவத்திலிருந்தே எனக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன்படி, என்னுடைய 10 வயதிலிருந்தே, மார்கழி மாதத்தில் அதிகாலை நாலரை மணிக்கு கோயிலுக்குப் போய்விடுவேன். பெரியவர்கள் யாராவது அழைத்துச் செல்வார் கள். திரும்பி வரும்போது, வீட்டு வாசலில் அழகான பெரிய கோலம் மலர்ந்திருக்கும். அப்படியான அந்தச் சென்னையே இப்போது பல இடங்களில் காணாமல் போய்விட்டது; பல வருடங்கள் முன்பு பார்த்திருக்கிறேன்!

கோபிச்செட்டிப் பாளையம் பகுதியில் படப்பிடிப்பு. அதிகாலையில் நாங்கள் நாலைந்து பேர் வாக்கிங் கிளம்பினோம். அந்த நேரத்திலேயே, பல வீடுகளில் ஆண்கள் ஹோஸ் பைப்பைப் பிடித்தபடி வாசலுக்கு தண்ணீர் தெளித்துக்கொண்டிருப்பார்கள். பெண்கள் பிறகு வாசலைப் பெருக்கி, துடைத்து விட்டு, கோலம் போடுவார்கள். இதே காட்சியைப் பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஒரு கிராமத்திலும் பார்த்திருக்கிறேன். ஆனால், ஐந்தாறு வருடங்கள் கழித்து அந்த ஊர்களுக்குப் போனபோது, பல வீடுகளில் அந்தக் காட்சியைக் காண முடியவில்லை. 10 வருஷம் கழித்துப் போன போது சுத்தமாகவே இல்லை.

என்ன ஆச்சு?! ஒரு ஏழரை மணிக்கு மேல் அந்த வீட்டில் வேலை செய்யும் யாரோ ஒரு பெண் வந்து கோலம் போடுகிறார். காரணம், தொழில், வேலை, பிள்ளைகளின் படிப்பு என்று பலர் வெளியூர் போய்விட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு கோலம் போட ஆள்வைத்து விட்டுப் போயிருக் கிறார்கள். ஆனால், பல வருடங்கள் முன்பு, கோலம் போட்டிருந்த முகப்புடன் நான் பார்த்த அந்த வீடே ஒரு தனி அழகு இல்லையா!

நான் இப்போது கொஞ்சம் பெருமையாகவே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் எங்கள் காலனியில் இருக்கும் ஓர் அம்மா போன் செய்து, “லக்ஷ்மி! வீட்டுக்கு முன்னால என்ன இவ்வளவு பெரிய கோலம்... யார் போட்டது?” என்றார்.

“ ‘ஜீன்ஸ்’ படம் பார்த்திருக்கீங்களா... அதில் ‘வாராயோ என் தோழி’ங்கிற பாட்டில், ‘தண்ணி தெளிச்சு நடுரோட்டில் கோலம் போடுவியா பாட்டி’ன்னு ஒரு வரியே இருக்கும். அதுக்கேத்த மாதிரி நானேதான் போட்டேன்” என்று சொன்னதும் ஆச்சர்யப்பட்டார்.

உண்மைதாங்க. நான் 21 புள்ளி வரை வைத்துக் கோலம் போடுவேன். ஆனால் எனக்கு இந்த காக்கா, குருவி, மீன், தாமரை இதெல்லாம் போட வராது. எவ்வளவு வேண்டுமானாலும் நெளி கோலம், சுழி கோலம், இழை கோலம் எல்லாமே மிக அழகாகப் போட்டுவிடுவேன். சின்ன வயதிலிருந்து சும்மா இருக்கும் நேரங்களில் பழகியது. எங்களுக்கு எல்லாம் ‘it is a must’. இன்றும் வீட்டுக்கு முன்னால் நான்தான் கோலம் போட்டு வைத்திருக்கிறேன்.

என்ன ஒன்று... முன்பெல்லாம் கோலம் போட்டால் நம் வீட்டுப் பிள்ளைகள் வெளியே வந்து நின்று கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் இன்றோ 10 வயது பையன் ‘தோ பார்றா கோலம்’ என்று கோலத்தின் மீது டயர் வண்டியை ஏற்றி அழித்துவிட்டு, கொஞ்சம் தூரம் தள்ளி நின்று, ‘ஸாரி மேடம்’ என்கிறான்.

அதனால் இப்போது கோலத்தை பெயின்டில் போட்டு வைத்துவிட்டேன். அதனால் வாசலில் தினமும் போடுவதில்லை. ஆனால், பெரிய கேட்டுக்கு நேரே துளசி மாடம் உள்ளது. வாசல் கதவுக்கு நேரே துளசி இருப்பதுதான் அழகு. இப்போதும்கூட, நான் வீட்டில் இருக்கும் நாட்களில், தினமுமே காலையில் நாலரை, ஐந்து மணிக்கு துளசி மாடத்தின் முன் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, துளசிக்கும் தண்ணீர் விட்டுவிட்டுத்தான் மறுவேலை.

துளசிதான் எனக்கு எல்லாமே. துளசி வெறும் செடி அல்ல; மகாலட்மியின் அம்சம்!

- கடாட்சம் பெருகும்...

வாய்க்கு அலங்காரம் வெற்றிலை!


வாரியார் சுவாமிகளிடம் அன்பர் ஒருவர் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

``சுவாமி! வாய் வழியே உட்கொள்ளும் பொருள்களை `வடை சாப்பிடுங்கள், அதிரசம் சாப்பிடுங்கள், இட்லி சாப்பிடுங்கள்' என்றுதான் கூறுகிறோம். ஆனால் வெற்றிலையைப் பொறுத்தவரை... வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறோமே ஏன்?'' எனக் கேட்டார்.

இதற்கு வாரியார் சுவாமிகள் அற்புதமான விளக்கம் தந்தார்.

``உடம்புக்கு அலங்காரமான ஆபரணங்களை `போட்டுக் கொள்ளுங்கள்' என்றுதான் குறிப்பிடுவோம். அந்த வகையில் கண்ணுக்கு மை தீட்டுவது அலங்காரம். சாப்பிட்டதும் வாய்க்கு அலங்காரம் தாம்பூலம் தரிப்பது. ஆகவேதான் `வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள்' என்கிறோம்'' என்றாராம்!

- சி.அழகு, திருப்பூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism