
உதவலாம் வாருங்கள்
சக்தி விகடன் 11.1.22 தேதியிட்ட இதழில் `கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் குறித்து அறிவோம். அதேபோல் பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் உண்டு என அறிந்தேன். அந்தத் தலங்கள் எங்குள்ளன’ என்று தூத்துக்குடி வாசகர் எம்.செந்தில்நாதன் கேட்டிருந்தார். அவருக்காக கீழ்க்காணும் விவரங்களை சென்னை வாசகர் `சிம்மவாஹினி’ டி.ஜி.நாராயணராவ் பகிர்ந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருத்துறைப்பூண்டி தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம்
மன்னார்குடி அருகிலுள்ள வடுவூர் கோதண்டராமர் ஆலயம்
திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் அருகில் அதம்பார் எனும் ஊரில் அருளும் கோதண்டராமர் ஆலயம்
திருவாரூர் அருகில் முடிகொண்டானில் கோதண்டராமர் ஆலயம்
குடவாசல் அருகில் பருத்தியூர் ராமன் கோயில்
இந்த ஐந்து தலங்களையும் பஞ்சராமர் கோயில்கள் எனப் போற்றுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில்...
நெடுங்குணம் யோக ராமர் ஆலயம்
படவேடு யோக ராமர் ஆலயம்
ரகுநாத சமுத்திரம் யோக ராமர் ஆலயம்
இஞ்சிமேடு யக்ஞ ராமர் ஆலயம்,
பெரிய கொளப்பளூர் சதுர்புஜ ராமர் ஆலயம் ஆகிய தலங்கள் பஞ்சராமர் தலங்கள் எனப் போற்றப்படுகின்றன.
சக்தி விகடன் 28.12.21 தேதியிட்ட இதழில் இன்னம்பர் தலம் குறித்து அவிநாசி வாசகர் ராமநாதன் கேட்டிருந்தார்.அந்தத் தலம் பற்றிய கீழ்க்காணும் விவரங்களை சென்னை வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் பகிர்ந்துள்ளார்.
கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரிக்கு வடக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இன்னம்பர்.
பங்குனி 13, 14, 15 மற்றும் ஆவணி - 31, புரட்டாசி 1, 2 ஆகிய தேதிகளில் இன்னம்பர் நாதரை சூரியன் வழிபடுவது விசேஷம்.
சோழமன்னனின் கணக்கர் சுதன்மன். ஒருமுறை அவர் காட்டிய கணக்கில் சந்தேகம் கொண்டான் மன்னன். அதனால் வருந்திய சுதன்மன் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் சுதன்மன் வடிவில் தோன்றி மன்னின் சந்தேகங்களைப் போக்கி அருள்புரிந்தாராம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 45-வது தலம் இது. இத்தலத்தின் இறைவன் சுயம்பு மூர்த்தி. பள்ளியில் சேர விரும்பும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபடுகிறார்கள். பேச்சுத் திறன் இல்லாதவர்கள், படிப்பில் மந்தமானவர்களுக்கு... அவர்களின் நாவில் நெல் கொண்டு அட்சரம் எழுதி பிரார்த்திக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டும் அன்பர்கள் இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
இந்த ஆலயம் காலையில் 7 முதல் 12 மணி வரையிலும்; மாலையில் 4 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தீர்க்காயுளை அளிக்கும் வல்லமை கொண்டது சிவகவச ஸ்தோத்திரம். ஸ்காந்த புராணத்தில் உள்ளது என்பார் என் குருநாதர். சிறுவயதில் இந்தக் கவச ஸ்தோத்திரத்தை மனப்பாடமாகச் சொல்வது உண்டு. தற்போது மறந்துவிட்டது. அற்புதமான இந்தக் கவசம் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- கே.சிவகுருநாதன், திருநெல்வேலி-3
பயணம் சிறக்கவும் வெற்றியடையவும் சொல்லவேண்டிய ஸ்லோகம் ஒன்று உண்டு. காத்தவீர்யன், சகுந்தலையின் புதல்வனான பரதன் ஆகியோரைப் போற்றும் விதமாக அந்த ஸ்லோகம் இருக்கும். இது எந்த நூலில் உள்ளது. தமிழ் விளக்கத்துடன் எவரிடமேனும் இந்த ஸ்லோகம் இருந்தால் அனுப்பி உதவுங்களேன்.
- எம்.சுலோச்சனா, கடலூர்
சிவாலயத்தில் நந்திதேவர் திருமேனிகள் எந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பெரிய ஆலயங்கள் சிலவற்றில் கொடி மரம், அர்த்த மண்டபம் முதலாக ஐந்து இடங்கள் வரையிலும் நந்திதேவரை தரிசித்திருக்கிறேன். இதுகுறித்த வழிகாட்டல் தேவை. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.
- சி.கார்த்திகேயன், விழுப்புரம்
பாண லிங்கங்கள் நேபாளத்தில் கிடைக்கும் என்பார்கள். நம் தமிழகத்தில் பாணலிங்கங்கள் எங்கு கிடைக்கும். வீட்டில் பாண லிங்கம் வைத்து வழிபடுவதற்கான நியதிகளைச் சொல்லும் நூல் ஏதேனும் உண்டா? இதுபற்றி விவரம் அறிந்தவர்கள் வழிகாட்டுங்களேன்.
- க.வேல்முருகன், கோவில்பட்டி
ருத்ராட்ச மரம் எல்லா மண்ணிலும் வளருமா... அந்த மரக்கன்றுகள் தேவைப்படும் நிலையில் எங்கு கிடைக்கும்? கிடைக்கும் இடம் குறித்து விவரம் அறிந்தவர்கள் பகிருங்களேன்.
- ஜி.வெங்கடேஷ், சென்னை-44
தோழி ஒருத்தி நுரையீரல் தொடர்பான பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவம் தற்காலிக நிவாரணம் அளித்தாலும் நிரந்தரத் தீர்வு கிட்டவில்லை. இந்தப் பாதிப்பு நீங்க வழிபடவேண்டிய திருக்கோயில் எது? என்ன வழிபாடு செய்யவேண்டும். வழிகாட்டி உதவுங்களேன்.
- கே.ராஜேஸ்வரி, மதுரை-4