கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

மாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்!

ஸ்ரீதர்மேஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீதர்மேஸ்வரர் ஆலயம்

கே.வெங்கடேஷ் பாபு

ஆன்மிகம்

மிழக வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தைப் பெறுவது மணிமங்கலம் என்ற ஊர். சென்னைக்கு அருகில் தாம்பரத்தை அடுத்துள்ள இந்த ஊர் இன்றும் செழிப்பாகவும் கிராமியச் சூழலிலும் நிலைத்திருப்பது வியப்பான உண்மை. பல்லவர்களின் நிலைத்தப் புகழுக்கு காரண மான மணிமங்கலம் போர் நடைபெற்றது இங்குதான்.

நரசிம்மவர்மப் பல்லவனுக்கும் சாளுக்கியன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே கி.பி 640-ம் ஆண்டு வாக்கில் இந்தப்போர் நடைபெற்றது. இப்போரில்தான் சாளுக்கியர்களை எதிர்த்து பல்லவர்களின் முதல் வெற்றி கிட்டியது. இதனாலேயே பல்லவப் பேரரசு மேலும் பல காலம் ஆட்சி புரியும் வாய்ப்பையும் பெற்றது. மாமல்லன் நரசிம்மவர்மனின் இந்த வெற்றியை கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. இதுகுறித்த சான்றுகள் இந்த ஊரில் இன்றும் காணக் கிடைக்கின்றன.

மாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்!

சுமார் 1400 ஆண்டுகள் வரலாற்றைச் சுமந்திருக்கும் இந்த ஊர், ரத்தினம் உள்ளிட்ட நவமணிகளை விற்கும் வணிகர்களை அதிகம் கொண்டிருந்ததால், `மணிமங்கலம்' என்று பெயர்பெற்றதாம். பின்னர் சோழர் காலத்தில், `லோகமாதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரைக் கொண்டது. நான்கு வேதங்களில் தேர்ச்சி பெற்ற வேத சிரோமணிகளுக்கு இந்த ஊர் தானமாக அளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் ராஜசூளாமணி சதுர்வேதி மங்கலம், பாண்டியனை இருமடி வெண்கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம், கிராமசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் இவ்வூரின் பெயர் மாறினாலும் ஆதிப் பெயரான மணிமங்கலம் என்பது நிலைத்துவிட்டது.

மாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்!

இந்த ஊரின் பழைமைக்கும் பெருமைக்கும் சான்றாக ஐந்து கோயில்கள் விளங்குகின்றன. அவை: அருள்மிகு தர்மேஸ்வரர் ஆலயம், அருள்மிகு வையாலேஸ்வரர் ஆலயம், அருள் மிகு கயிலாசநாதர் ஆலயம், அருள்மிகு ராஜகோபாலப் பெருமாள் ஆலயம், அருள்மிகு வைகுந்தப் பெருமாள் ஆலயம்.

ஸ்ரீதர்மேஸ்வரர் ஆலயம்

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்குச் சொந்தமான இந்த ஆலயம் அழகும் தூய்மையும் துலங்க திகழ்கிறது. தன்மீச்சரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம், 2000 ஆண்டு வரலாற்றைக் கொண்டது என்கிறார் ஆலய அர்ச்சகர். கிழக்கு நோக்கிய பிரதான வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வடக்கு நோக்கிய மகாமண்டபம் தாண்டி ஸ்ரீ தர்மேஸ்வரரையும் ஸ்ரீவேதாம்பிகையையும் தரிசிக்கலாம். பிள்ளை வரமருளும் அன்னை இவள்.

ஸ்ரீதர்மேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீதர்மேஸ்வரர் ஆலயம்

தூங்கானை மாட விமானமும் கோஷ்டங் களில் விஷ்ணு, பிரம்மா, துர்கை, தட்சிணா மூர்த்தி வடிவங்களையும் காணலாம். நான்கு வேதங்களும் தனித் தனியே வழிபட்ட விநாய கர்களையும் இங்கு வழிபடலாம். சோழா் கால கட்டடக் கலை வடிவங்களையும் விஜயநகரம் மற்றும் நாயக்கா் கால அமைப்பையும் கொண் டுள்ள இந்த ஆலயச் சுவர்கள் முழுக்கவே கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.

பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் இந்த ஊரின் மகிமையையும் இந்தக் கோயிலுக்குத் தானம் அளித்தவர்களின் விவரங்களையும் சொல்கின்றன. பல்லவ மன்னன் ஒருவரிடம் ஈசனே வந்து விரும்பி கேட்டுக்கொண்டபடி எழுந்த ஆலயம் இது என்கிறார்கள்!

மாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்!

இந்த ஆலயத்தின் சிறப்பம்சம், இங்குள்ள நவகண்ட வீரர்களின் சிலைகள். நவ கண்டம் என்பது உடலின் முக்கிய நரம்பு முடிச்சைக் கொண்ட கழுத்தை (கண்டத்தை), தன் கையால் தானே துண்டித்துக் கொள்வது. வாளின் ஒரே வீச்சில் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் `அறிகண்டம்' என்றும் கூறப்படும்.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள்

இந்த வழக்கம் பழங்காலம் தொட்டே பரவலாக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களின்படி போர் தெய்வமான கொற்றவைக்கு முன்பாக, வீரர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக் காக தம்மைத் தாமே பலியிடும் வழக்கம் இருந்துள்ளது. இக்கோயிலில் உள்ள நான்கு நவ கண்ட வீரர்களின் சிற்பங்கள் இந்த ஊரில் நடைபெற்ற பல்வேறு போர்களைக் குறிப்பவை யாக உள்ளன. நான்கு நவ கண்ட சிலைகளில் ஒன்று 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது அப்போது இப்பகுதியை ஆண்ட சிற்றரசரான யாதவராயரின் நலன் வேண்டி கொற்றவைக்குக் கொடுக்கப்பட்ட நவ கண்டம் என்றும் கூறப்படுகிறது.

நவ கண்ட வீரர்கள்
நவ கண்ட வீரர்கள்

செம்பாதி என்ற வீரன் இவ்வாறு பலியிட்டுக் கொண்டான்; அவன் குடும்பத்துக்கு இந்த ஊரில் இருநூறு குழி நிலம் வழங்கப்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீராஜகோபாலப் பெருமாள் ஆலயம்
ஸ்ரீராஜகோபாலப் பெருமாள் ஆலயம்

ஸ்ரீராஜகோபாலர் ஆலயம்

தென்னகத்தின் துவாரகாபுரி என்று போற்றப்படும் இந்தத் தலம் பராந்தக சோழன் காலத்தில் நிா்மாணிக்கப்பட்டதாம். சோழா் காலத்தைச் சாா்ந்த 20 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. துவாரபுரித் தேவன், காமக்கொடி விண்ணகர ஆழ்வாரப்பன், வண்டு வராபதி எம்பெருமான் எனப் பல திருநாமங்களோடு ஸ்வாமி இங்கு வணங்கப்படுகிறார்.

மாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்!

இந்த ஆலயத்தின் தாயாா் செங்கமலவல்லித் தாயார். ஆண்டாள் நாச்சியாரையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக ஸ்ரீராஜகோபாலசுவாமி கிழக்கு நோக்கி அருள்கிறார். வலது கரத்தில் சங்கும் இடது கரத்தில் சக்கரத்தையும் தாங்கி அருளும் இந்தப் பெருமாளின் திருக்கோலம் விசேஷம் வாய்ந்தது என்கிறார்கள்.

ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்
ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்

ஸ்ரீராமாநுஜா் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து இங்கு வந்து எழுந்தருளி பெருமாளுக்குக் கைங்கா்யங்கள் செய்து வரம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இங்கு வந்து வழிபட்டால், கண் தொடர்பான எல்லா பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள்.

மாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்!

ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்

ரின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ள இந்தக் கோயில், பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலைப் போன்ற பாணியில் அமைக்கப்பட்டதாம்.

ஸ்ரீவைகுந்த பெருமாள் ஆலயம்
ஸ்ரீவைகுந்த பெருமாள் ஆலயம்

கோயிலின் விமானமும் கருவறையும் மட்டுமே பழங்கால அமைப்பில் உள்ளது. வெளியே உள்ள மற்ற சந்நிதிகள் சமீபத்தில் கட்டப்பட்டவையே. இந்தக் கோயிலில் 5 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று முதலாம் ராஜராஜ சோழனின் 15-ம் ஆட்சியாண்டிலும் மற்றொன்று விக்கிரமச் சோழனின் 5-ம் ஆட்சியாண்டிலும் இந்தக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகளைப் பற்றி கூறுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் செல்வ வளமும் பதவி உயர்வும் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவைகுந்த பெருமாள் ஆலயம்

முற்காலச் சோழா்களின் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், மீண்டும் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டனவாம்.

ஸ்ரீவையாலீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீவையாலீஸ்வரர் ஆலயம்

ராஜராஜ சோழனின் 5-ம் ஆட்சி ஆண்டில் இந்த ஊரைச் சேர்ந்த எழுகிளை சிங்கமன்றாடி என்பவர், இங்கு நாள்தோறும் ஒரு நந்தா விளக்கு ஏற்ற 96 ஆடுகளை நிவந்தமாக அளித்துள்ளார் என்று ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள 11 கல்வெட்டுகள் மூலம் சோழா்கால ஆட்சி மாண்புகளையும் இவ்வூரின் பெருமைகளையும் அறிந்து கொள்ளலாம்.

திருவாய்ப்பாடி ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள் கோயில், விண்ணகர ஆழ்வாா் கோயில், திருவாய்ப்பாடி ஆழ்வாா் கோயில் என்றெல்லாம் வணங்கப்பட்ட இந்த ஆலயம், இன்றும் பழைமை மாறாமல் அருள் பாலித்து வருகிறது, இங்கு வந்து வேண்டினால் கர்மவினைகள் நீங்கும் என்கிறார்கள்.

ஸ்ரீவையாலீஸ்வரர் ஆலயம்

யல் வெளியில் இருப்பதால் இந்த ஆலயம் வயலீஸ்வரர் என்றும் வையாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் பிரமாண்டமாக திகழ்ந்த இந்தக் கோயில், தற்போது கவனிப்பார் யாருமின்றி, ஒரு வயலுக் குள் திகழ்கிறது. சிவலிங்கத் திருமேனியும் நந்தியும் மட்டுமே கொண்ட சிறு கோயிலாக உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதால், இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழிகூட சரிவர இல்லாமல் உள்ளது.

சோழர்கள் காலத்துக் கோயில் என்று சொல் லப்பட்டாலும் அதற்கான எந்த அடையாளமும் இன்றி பரிதாபமான நிலையில் திகழ்கிறது.

இங்ஙனம் திருக்கோயில்களால் சாந்நித்தியம் பெற்றும், சுமார் 1500 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்புகளுடனும், மிகத் தொன்மையான புராணப் பெருமைகளோடும் திகழ்கிறது மணிமங்கலம்.

வரலாற்றில் விருப்பம் கொண்ட அன்பர்கள், அமைதியான சூழலில் இறை தரிசனத்தை விரும்பும் அடியார்கள் இந்தத் தலத்துக்குச் சென்று ஐந்து ஆலயங்களையும் தரிசித்து வழிபட்டு வரலாம்.

இறை தரிசனத்தோடு ஆலயம் ஒவ்வொன் றிலும் உள்ள சரித்திரச் சிறப்புகளை, கல்வெட்டு தகவல்களை, புராணத் தகவல்களை அறிந்து மகிழ்வதோடு அவை குறித்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லலாம்.

மொத்தத்தில், `நாம் எத்தனை பெரிய நாகரீகத்திலிருந்து கிளைத்து வந்திருக்கிறோம்' என்பதை இந்த மணிமங்கலம் யாத்திரை உங்களுக்கு நிச்சயம் உணர்த்தும் என்றே நம்புகிறோம்!