பந்தள தேசத்து மகாராஜா, ஐயப்ப ஸ்வாமியை மன்னராக்கி, அவருக்கு ஆபரணங்கள் அணிவித்து, அவரை அழகு பார்க்க நினைத்தார். ஆகவே, விலை உயர்ந்த ஆபரணங்களைச் சமர்ப்பித்தார்.
அந்த ஆபரணங்களைத் தாங்கி வரும் பெட்டியே திருவாபரணப் பெட்டி என பயபக்தியுடன் சொல்லப்படுகிறது. திருவாபரணப் பெட்டி, வெள்ளிப் பெட்டி மற்றும் கொடிப் பெட்டி என மொத்தம் மூன்று பெட்டிகள். திருவாபரணப் பெட்டியில், ஐயப்ப ஸ்வாமிக்கு தங்கக் கவச ஆடைகள், நகைகள் ஆகியவை இருக்கும்.

வெள்ளிப்பெட்டியில், ஸ்வாமிக்கு நெய் அபிஷேகம் செய்வதற்கான தங்கக்குடம் மற்றும் தங்கத்தால் ஆன பூஜை சாமான்கள் இருக்கும். கொடிப்பெட்டி, மாளிகைபுரத்து மாதாவுக்கானது. அதில் மாளிகைபுரத்து அம்மனின் ஆபரணங் களும் பூஜைப் பொருள்களும் இருக்கும். மாளிகைபுரத்து அம்மனின் கொடிப்பெட்டியை ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் திருச்சந்நிதிக்கு எடுத்து வரமாட்டார்கள்.
ஐயனின் பிறந்த வீடான பந்தளம் அரண்மனை யில் இருந்து எடுத்து வரப்படும் திருவாபரணப் பெட்டியை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பார்கள். முன்னதாக திருவாபரணப் பெட்டிக்கு பூஜைகள் செய்துவிட்டு, பந்தளத்தில் இருந்து எடுத்துவரப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடுவது, கலியுகத்து அற்புதமே!

திருவாபரணப் பெட்டியைப் பரம்பரை பரம்பரையாகச் சுமந்து வருகிற குடும்பங்கள், கடும் விரதம் மேற்கொள்ளும். பந்தளம் அரண்மனையில் இருந்து சுமார் மூன்று நாட்கள் தலைச்சுமையாகக் கொண்டுசெல்லும்போது, பக்தர்கள் வழிநெடுக தீப்பந்தங்களைப் பிடித்தபடி, திருவாபரணப் பெட்டியின் தரிசனத்துக் காகக் காத்திருப்பார்கள்.
பெரியானை வட்டம், சரங்குத்தி வழியாக மாளிகைபுரத்து அம்மனின் பெட்டியை ஒப்படைத்துவிட்டு வருவர்.
பிறகு அவர்கள் ஐயப்பனுக்கு அணிவித்து அழகு பார்க்க, திருவாபரணப் பெட்டியை எடுத்துக் கொண்டு, பதினெட்டுப் படிகளைக் கடக்க... ‘ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என்கிற பக்தர்களின் கோஷம், விண்ணைத் தொட்டு எதிரொலிக்கும்.
மகரஜோதி தோன்ற, திருவாபரணங்கள் சார்த்தும்போது, முறுக்கு மீசையுடன் இருப்பதுபோல், ஐயன் ஐயப்ப ஸ்வாமியை அலங்கரித்திருப்பார்கள். அந்தத் தரிசனத்தைக் காணக் கண்கோடி வேண்டும்!
- பாண்டியராஜன், மதுரை-2