Published:Updated:

மாற்பிடுகு பெருங்கிணறு!

திருவெள்ளறை
ஸ்வஸ்திக் குளம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவெள்ளறை ஸ்வஸ்திக் குளம்

திருவெள்ளறை ஸ்வஸ்திக் குளம்

வைணவ திவ்ய தேசங்களில் குறிப்பிடத் தக்கது திருவெள்ளறை. `வெள்ளறை’ என்பது வெண்மையான பாறைகளில் ஆன மலை என்பதைக் குறிக்கும். `திரு’ என்பது இத்தலத்தின் உயா்வைக் குறிப்பது. தொன்மை கருதி இத்தலம் `ஆதி வெள்ளறை’ என்று சிறப்பிக்கப்படுகிறது. மேலும் ஸ்வேதகிரி, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் ஆகிய திருப்பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

மாற்பிடுகு பெருங்கிணறு!

ந்தத் தலத்தின் நாயகன் அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள். பங்கயச் செல்வி, செண்பகவல்லி ஆகியன தாயாரின் திருநாமங்கள். தாயாரின் உற்சவருக்கும் பங்கயச் செல்வி என்ற திருநாமமே வழங்கப்படுகிறது. தாயாா் நீலிகாவனத்தில் தவம் செய்து பெரு மாளிடம் பெற்ற வரத்தின்படி, இத்தலத்தில் எல்லா அதிகாரங்களும் தாயாருக்கே. உற்சவ காலங்களில் தாயாா் முன்னே செல்ல, பெருமாள் பின்னால் தொடா்வது வழக்கத்தில் உள்ளது.

ஆம்! பகவான் தந்த வரத்தால் மகிழ்ந்த அலை மகள், தன் சாந்நித்தியத்தைப் பரிபூரணமாய் நிறைத்து வைத்திருக்கும் அற்புத க்ஷேத்திரம் இது.

ஶ்ரீமகாலட்சுமி தவம் செய்த பூங்கிணறு கோயில் வளாகத்தில் உள்ளது. இது தவிர ஏழு புனித தீா்த்தங்கள் இங்குள்ளன. அவை: திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குச ஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி, பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம் மற்றும் மணிகா்ணிகா.

இங்கு ஸ்வஸ்திக் குளம் எனப்படும் சக்கரக்குளம் ஒன்றும் உள்ளது. ஒரு துறையில் குளிப்பவா்களை, இன்னொரு துறையில் குளிப்பவா்கள் காணமுடியாத வண்ணம் இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்பிடுகு பெருங்கிணறு!

திருக்குளத்தின் நான்குபுறமும் உள்ளே இறங்க வசதியாக 52 படிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் இந்தக் குளத்தை நாலுமூலைக்கேணி என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனா். இந்தத் தீர்த்தம் `மாற்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டதை, இதன் சுவரில் உள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது.

பல்லவ மன்னன் தந்திவா்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து விசய நல்லூழான் தம்பி கம்பன் அரையன் என்பவனால் இக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணற்றினைப் பாதுகாப்பவா்கள் இவ்வூரின் `மூவாயிரத்து எழுநூற்றுவா்’ என்று ஒரு கல்வெட்டு தொிவிக்கிறது.

`மாற்பிடுகு’ என்றால் `பேரிடி’ என்று பொருள். பல்லவர்களின் கீழ் சிற்றரசா்களாக இருந்த முத்தரைய மன்னா்கள் `மாற்பிடுகு’ என்ற பட்டத்தைக் கொண்டிருந் தாா்கள். ஆலம்பாக்கத்திலிருந்த ஒரு ஏரிக்கும் `மாற்பிடுகு ஏரி' என்ற பெயா் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முத்தரையா்கள் நீா்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் அளித்ததை அறியலாம்.

இந்தத் தீர்த்தக் குளத்தின் மேற்குச் சுவரில் காணப்படும் ஒரு கல்வெட்டில் `இளமை நிலையானது அன்று. வாழ்வின் இறுதிக் காலத்தில் அறம் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல், அறத்தினை உடனே செய்யவேண்டும்' என்ற கருத்து கொண்ட பாடலைக் காணலாம்.

மாற்பிடுகு பெருங்கிணறு!

13-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் `மாற்பிடுகு பெருங்கிணறு' சீா்குலைந்தது. பிற்காலத்தில் குடந்தையைச் சாா்ந்த வணிகன் `உய்யநெறிகாட்டினான்' என்பவன், இக்குளத்தைச் சீரமைத்தானாம். இந்தத் தகவலைப் போசள மன்னன் வீர ராமநாதனின் 25-வது ஆட்சியாண்டில் அமைக்கப்பட்ட கல்வெட்டு மூலம் அறியலாம்.

தீர்த்தத்தின் ஒவ்வொரு புறமும் பட்டிகள் வழியே இறங்கும் இடத்தில் மேற்புறத்தில் மூன்று குறுக்குத் தூண்கள் உள்ளன. அவற்றில் யோகநரசிம்மா், பல்லவ மன்னன் நந்திவா்மன் போன்ற உருவம், காளையை அடக்கும் கண்ணன், சப்த கன்னியா், உமா சகிதராக சிவபெருமான், தட்சிணாமூா்த்தி, துா்கை ஆகியோரின் சிற்ப வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் புறத்தில் உள்ள தூணில் காணப்படும் சிற்ப வடிவம், இந்தத் தீர்த்ததை அமைத்த கம்பன் அரையனாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, இந்தத் தீர்த்தத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்துப் பராமரித்து வருகிறது.

மகிமைகள் மிகுந்த திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாளை தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், அவசியம் இந்த மாற்பிடுகு பெருங்கிணற்றையும் தரிசித்து வாருங்கள்.