Published:Updated:

நாளெல்லாம் உந்தன் திருநாளே!

வேங்கடாசலம்
பிரீமியம் ஸ்டோரி
வேங்கடாசலம்

நாமும் திருமலையின் சிறப்புகளோடு திருமலையில் அருளும் திருவேங்கடவனின் மகிமைகளையும் அறிந்து மகிழ்வோம்.

நாளெல்லாம் உந்தன் திருநாளே!

நாமும் திருமலையின் சிறப்புகளோடு திருமலையில் அருளும் திருவேங்கடவனின் மகிமைகளையும் அறிந்து மகிழ்வோம்.

Published:Updated:
வேங்கடாசலம்
பிரீமியம் ஸ்டோரி
வேங்கடாசலம்

ளியாகவும், காடாகவும், தீர்த்தமாகவும், மலையாகவும் இருக்கும் பகவான்... திருமலையில் பர்வத ரூபமாகவே உள்ளான். திருமலையே பகவானின் ரூபமானதால், ஆதி காலத்தில் திருமலையில் காலால் ஏறமாட்டார்கள்; முழங்காலில் கோணி கட்டிக்கொண்டு முழங்காலால்தான் ஏறுவார்கள். `முதலில், திருமலைக்குத்தான் ஏற்றம்; அதன்பின்தான் எம்பெருமானுக்கு ஏற்றம்' என்பார்கள் பெரியோர்கள்.

நாமும் திருமலையின் சிறப்புகளோடு திருமலையில் அருளும் திருவேங்கடவனின் மகிமைகளையும் அறிந்து மகிழ்வோம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் வேங்கடவனை, நம் பாவங்களை எல்லாம் நீக்கி அருளும் அந்த பாலாஜியை எப்போதும் நம் மனதில் இருத்திக்கொண்டால், நாளெல்லாம் திருநாளே!

வேதங்களே மலைகளாக!

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்

சென்று சேர் திருவேங்கட மாமலை

ஒன்றுமேதொழ நம்வினை ஓயுமே

(திருவாய்மொழி 3.3.8)

- என்கிறார் நம்மாழ்வார். கோவர்த்தனகிரி நினைத்ததாம்... ‘கிருஷ்ண அவதாரத்தில் சின்னக் குழந்தையான பரமாத்மா நம்மை ஏழு நாட்கள் தூக்கிக்கொண்டானே! அந்தக் குழந்தைக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணமுடியும். அடுத்த ஜன்மத்தில் ஏழு மலைகளாக மாறி, அவனைத் தாங்கவேண்டும்’ என்று.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு கல்லுக்கு பகவானிடத்தில் எத்தகைய விசேஷமான அன்பு! நமக்கு மனம், சரீரம், ஞானம் எல்லாம் கொடுத்திருக்கிறார் இறைவன். எனில், இவற்றையெல்லாம் பகவத் அர்ப்பணம் பண்ணவேண்டாமா!

அவதார புருஷனைத் தாங்கி நிற்கும் திருவேங்கட மலையின் சிறப்பை ‘வேங்கட வெற்பென விளங்கும் வேதவெற்பே’ என்று ஸ்வாமி தேசிகன் புகழ்கிறார். ‘வெற்பு’ என்றால் மலை. வேதத்தின் ஏழு காண்டங்களே ஏழு மலைகளாக மாறி, பகவானைத் தாங்குகின்றனவாம்!

‘குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம் பாடி’ (நாச்சியார் திருமொழி 8.3) என்கிறாள் ஆண்டாள். நாமும் புண்ணியம் மிகுந்த அந்தத் திருமலையை - திருமலை நாயகனை அனுதினமும் போற்றிப் பணிவோம்.

நாளெல்லாம் உந்தன் திருநாளே!

வேங்கடாசலம்!

த்தலத்தின் மகிமை குறித்து ஜனகருக்கு, அவருடைய குருவான ஸதாநந்தர் விளக்கியதாக பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கிறது.

க்ருதே வ்ருஷாத்ரிம் வக்ஷ்யந்தி த்ரேதாயாம் அஞ்ஜநாலம்

த்வாபரே ஸேஷஸைலேதி கலெளஶ்ரீவேங்கடாசலம்

அதாவது, கிருதயுகத்தில் ‘வ்ருஷாத்ரி’ என்றும், திரேதா யுகத்தில் ‘அஞ்ஜனா சலம்’ என்றும், துவாபர யுகத்தில் ‘சேஷ ஸைலம்’ என்றும், கலி யுகத்தில் ‘ஸ்ரீவேங்கடாசலம்’ என்றும் அழைக்கப் படும் புண்ணிய பூமி திருமலை என்கிறது அந்தப் புராணம். ‘ஸ்ரீவேங்கடாசலம்’ என்னும் திருப்பெயருக்குக் காரணமான ஒரு திருக்கதை உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காளஹஸ்தியைச் சேர்ந்த மாதவன் என்கிற அந்தணன், வேத வேதாங்கங்களை நன்கு அறிந்தவனாய் கல்வியிற் சிறந்து விளங்கினான். அவனுடைய 21-வது வயதில் பாண்டிய தேசத்தைச் சார்ந்த சந்திரலேகை என்கிற கன்னிகையை மணம் புரிந்தான். வெகுநாட்கள் சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்த மாதவனின் வாழ்வில் விதி விளையாடியது. வழிதவறிப்போய் குந்தளை என்கிற கன்னிகையை மணம் புரிந்து அவளுடன் 12 வருட காலம் இல்லறம் நடத்தினான். ஒரு நாள் அவள் மரணமடையவே, கிருஷ்ணா நதி தீரத்திலிருந்து ஊர் திரும்பினான். அங்கு, இவனைக் கவனிப்பார் இல்லை.

இந்தத் தருணத்தில், திருமலைக்கு யாத்திரை யாகச் செல்லும் அரசர்களைப் பின்தொடர்ந்து சென்றான். அவர்கள், கபில தீர்த்தக் கரையில் தங்கி மொட்டையடித்துக் கொண்டு நீராடி, பித்ரு தர்ப்பணாதிகளைச் செய்தனர். மாதவனும் அப்படியே பித்ருக்களை வழிபட்டான். மறுநாள் விடியற்காலையில், அரசர்களைத் தொடர்ந்து மாதவனும் மலை ஏறினான். திருமலையில் இவன் கால் பட்டதும் அவன் சரீரத்தில் ஓர் மாற்றம் தென்பட்டது. அதுவரை செய்த பாபங்களை வாந்தியாக எடுத்தான். அவன் சரீரத்திலிருந்து தோன்றிய அக்னி பாபங்களைச் சுட்டெரித்தது. மாதவன் திருமலை சம்பந்தத்தால் புனிதனானான்.

நாளெல்லாம் உந்தன் திருநாளே!

பிரம்மாதி தேவதைகள் அங்கு கூடினர். பிரம்மா மாதவனை அணைத்துக்கொண்டு, ‘`மாதவா! பாபம் நீங்கப்பெற்றாய். திருமலையில் ஸ்வாமி புஷ்கரிணியில் நீராடு. வராஹப் பெருமாளை தரிசி. அடுத்த பிறவியில் நீ ஆகாச ராஜன் எனும் பெயரில் அரசனாகப் பிறந்து, புகழுடன் விளங்குவாய்’’ என ஆசீர்வதித்தார்.

பிறகு, பிரம்மா திருமலைக்கு ‘வேங்கடாசலம்’ என பெயர் சூட்டினார். ‘வேம்’ என்றால் பாபங்கள்; ‘கட’ என்றால் அழிக்கிறார்; அசலம் என்றால் மலை என்று பொருள். நாமும் நம் பாவங்கள் அழிய ஏழுமலையானை நாடிச் செல்வோம்; ஏற்றம் பெறுவோம்.

`தாத்தா தண்ணீர் கொடு'

திருமலையில் பெருமாளுக்குத் தீர்த்தக் கைங்கர்யம் செய்து வந்தவர் திருமலை நம்பிகள்.

அவர் பணி தினமும் பெருமாள் திருமஞ்சனத்துக்கு நீர் எடுத்து வருவது. அதுவும் கோயிலிலிருந்து சுமார் 7 கி. மீ தொலைவில் இருக்கும் பாபவிநாசத் தீர்த்தத்துக்குத் தினமும் மலைப் பாதையில் நடந்து சென்று நீர் எடுத்து வரும் கைங்கர்யம். திருமலை நம்பிகளுக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் தன் முதுமையை நினைக்காமல், தினமும் நடந்து சென்று நீர் எடுத்துவந்தார்.

பக்தர்கள் சிரமத்தை அந்தப் பரமன் அறியமாட்டானா என்ன... ஒருநாள், வேடுவ இளைஞனாக வந்து திருமலை நம்பிகளை வழிமறித்தார் பெருமாள். ``தாத்தா குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று கேட்டார். நீர் கேட்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். `இல்லை’ என்று சொல்வது பாவம். ஆனால், வேடனுக்கு நீர் கொடுத்தால் மீண்டும் போய் நீர் எடுத்து வரவேண்டும்.

``தம்பி, உனக்கு நீர் தருகிறேன். நீ ஒரு உதவி செய். பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய நீர் வேண்டும். எனக்கோ வயதாகிவிட்டது. அதனால், குடித்து முடித்ததும் மீண்டும் தீர்த்தக் கரைக்குப் போய் நீயே நீரெடுத்துவந்து கொடு'' என்றார் திருமலை நம்பிகள்.

ஆனால், பெருமாளோ அவருடன் விளையாடத் திருவுளம் கொண்டார்.

``தாத்தா, நான் ஒன்றும் தாகத்தில் கேட்க வில்லை. நீங்கள் நீர் தர வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். சரி என்று திருமலைநம்பிகள்

சில அடி நடந்ததும் வேடன் அம்பு ஒன்றை நம்பிகள் சுமந்து செல்லும் குடத்தில் எய்தான். குடம் உடைந்து நீர் கொட்டியது. கோபியரின் குடங்களை உடைத்துத் தயிர் பருகியதுபோல், திருமலை நம்பிகளின் உடைந்த குடத்திலிருந்து ஒழுகிய நீரை பெருமாள் குடித்தார். இதைக் கண்ட திருமலை நம்பிகள் அயர்ந்துபோனார்.

``தம்பி, நான் உனக்கு நீர் தருகிறேன் என்று தானே சொன்னேன்... ஏன் இப்படிச் செய்தாய். இனி எப்படி நான் நீர் எடுத்துச் செல்வேன்.அதுவும் நீண்டதூரம் போக வேண்டுமே... பானையை வேறு உடைத்துவிட்டாயே” என்று புலம்பினார். உடனே வேடன், தன் வில்லை எடுத்து மீண்டுமொரு அம்பை அங்கிருந்த பாறை ஒன்றில் எய்தார். அவ்வளவுதான் அங்கே ஒரு சிறு ஊற்று அருவியெனக் கொட்டியது.

``தாத்தா, இதுவும் புண்ணிய தீர்த்தம்தான். ஆகாயத்திலிருந்தே கொட்டுகிறது பார் கங்கை’’ என்று சொல்லிச் சிரித்தார். திருமலை நம்பிகளுக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. சாஷ்டாங்கமாக விழுந்து வணங் கினார். பெருமாள் அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

நம்பிகளை ஆசீர்வதித்து,

``நீர் இனி இங்கேயே நீர் எடுத்துக்கொள்ளும். அதுவும் முடியாத நாள்களில், என் ஆலயத்துக்குள்ளேயே இருக்கும் பங்காருபாவியில் நீர் எடுத்து அபிஷேகம் செய்யலாம்” என்று சொன்னார்.

பெருமாளே உரிமையோடு தாத்தா என்று அழைத்ததால் அவருக்குத் `தாத்தாச்சாரி’ என்ற பெயர் உண்டாயிற்று. கோயிலில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வேளையில், `பங்காருபாவி’ உள்ளதைக் காணலாம். இன்றும் பெருமாளுக்கு ஆகாச கங்கை தீர்த்தத்தில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் ஆகியன கலந்து திருமஞ்சனம் செய்கிறார்கள்.

கோவிந்தா எனும் நாமம்!

தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வேங்கட மலையில் ஜனங்கள் எல்லோரும் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பாடிக்கொண்டு போகும் அழகை நினைத்தாலே ஆனந்தம். அடியார்களும் பெரியோர்களும் `கோவிந்தன்' எனும் திருநாமத்தின் மகிமையைப் பலவாறு போற்றியுள்ளார்கள்.

திருவேங்கடவனுக்கு மிக உவப்பானதாக `கோவிந்தா' எனும் திருநாமம் அமைந்ததற்குக் காரணமாகப் புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. திருவேங்கடவனாக பூமியில் அவதரித்த எம்பெருமான், அகத்தியர் ஆசிரமத்துக்குச் சென்று தனக்கென்று பசு ஒன்றைத் தானம் அளிக்கும்படி கேட்டாராம். வந்திருப்பது சாட்சாத் வைகுண்டவாசனே என்பதை அறிந்துகொண்ட அகத்தியர், பெருமாளை வணங்கியதுடன், ``பிரம்மசாரிகளுக்குக் கோதானம் தர இயலாதே. இல்லறத்தில் இருந்தால்தான் ஒருவன் பசுவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ள இயலும்...’’ என்று கூறிவிட்டாராம்.

பின்னர், பத்மாவதித் தாயாரை மணமுடித்த பிறகு, மீண்டும் அகத்தியர் ஆசிரமத்துக்குச் சென்றாராம் ஏழுமலையான். அந்த நேரத்தில் அங்கே அகத்தியர் இல்லை என்பதைச் சீடர்கள் சொல்ல, அங்கிருந்து புறப்பட்டு விட்டார் பெருமாள்.

அடுத்த சில நாழிகைகளில் அகத்தியர் வந்து சேர்ந்தார். சீடர்கள் மூலம் விவரம் அறிந்தவர், பதைபதைத்துப் போனார். உடனடியாக பசு ஒன்றை அவிழ்த்துக்கொண்டு, பெருமாளிடம் பசுவை எப்படியேனும் ஒப்படைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், பெருமாள் சென்ற வழியிலேயே ஓட்டமும் நடையுமாக விரைந்தார்.

நாளெல்லாம் உந்தன் திருநாளே!

விரைவில் பெருமாளைக் கண்டுகொண்டவர், `கோவு இந்தோ...’ என்று கூவி அழைத்தாராம். திருவேங்கடவன் திரும்பிப் பார்க்கவில்லை. அகத்தியர் இவ்வாறு 108 முறை கூவி அழைத்த பிறகே, எம்பெருமான் நின்று அகத்தியரின் வரவை அறிந்து மகிழ்ந்து அருள் செய்தாராம்.

`கோவு’ என்றால் பசு என்று பொருள். `கோவு இந்தா...’ என்ற அழைப்பொலியே `கோவிந்தா’ எனும் திருநாம முழக்கமாகத் திருமலை திருப்பதியில் பிரசித்திபெற்றதாம்!

பூங்கிணறு... சுப்ரபாதம்!

திருமலையில் வேங்கடாசலபதி மட்டுமே குடிகொண் டுள்ளார். மற்றைய கடவுளருக்கு எனச் சிற்பமோ, சித்திரமோ கூடக் கிடையாது. எனவே, மற்ற தெய்வங்களுக்கு உரித்தான புஷ்பங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சாத்தப்படும் பாவனையுடன் வேங்கடாசலபதியின் பாத கமலங்களிலேயே சமர்ப்பிக்கப்படுகின்றன.

நாளெல்லாம் உந்தன் திருநாளே!

மற்ற தெய்வங்களுக்கும் சேர்த்துச் சமர்ப்பிக்கப்பட்ட புஷ்பங்களைத் தனது பிரசாதமாக வேங்கடாசலபதி வழங்குவது முறையல்ல என்பதால், அவர் சந்நிதியில் இருக்கும் புஷ்பங்களைப் பக்தர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, அவையனைத்தும் கோயிலை ஒட்டியிருக்கும் பூக்கிணற்றில் சேர்க்கப்படுகின்றன. இந்த நியதியை ஏற்படுத்தியவர் ஸ்ரீராமானுஜர்.

மேலும், கோயில்களில் மூலவருக்குப் புஷ்பம் சாத்தும் போது மார்க்கண்டேயர், பிருகு, பிரம்மன், சங்கரன் ஆகிய மற்றைய கடவுளருக்கும் புஷ்பாஞ்சலி செய்யவேண்டும் என்பது நியதி.

அனுதினமும் வேங்கடாசலபதி சந்நிதிமுன் இசைக்கப்படும் பள்ளி எழுச்சிப்பாடல், சுப்ரபாதம். இது, 29 சம்ஸ்கிருதப் பாசுரங்களை உள்ளடக்கியது. இது, 14-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரதிவாதி பயங்கரம் அன்னமாச்சாரியார் அவர்களால் இயற்றப்பட்டது.

திருவேங்கடவனை தியானிக்க...

கலியுக வேங்கடவனை தியானம் செய்ய ஒரு ஸ்லோகம் உள்ளது.

நமோ வேங்கடேஸாய புருஷாய மஹாத்மநே

ப்ரணத: க்லேச நாசாய கோவிந்தாய நமோ நம:

இதைத் தினமும் சொல்லி வேங்கடவனை வழிபட்டால், நன்மைகள் பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism