Published:Updated:

இது காளி நடமாடும் வீடு - வாசகர் அனுபவம்

வள்ளி மாகாளி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
வள்ளி மாகாளி அம்மன்

“நீங்கள் இப்போது குடியேறியுள்ள வீடு சாதாரண வீடு அல்ல; இந்த வீடு யாருடையது தெரியுமா..? இதோ... இந்த வள்ளி மாகாளிதான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. அந்த வீட்டை `அம்மன் வீடு’ என்றே அழைப்பார்கள்’’ என்று அவர் சொன்னபோது அப்படியே ஸ்தம்பித்து விட்டோம்.

இது காளி நடமாடும் வீடு - வாசகர் அனுபவம்

“நீங்கள் இப்போது குடியேறியுள்ள வீடு சாதாரண வீடு அல்ல; இந்த வீடு யாருடையது தெரியுமா..? இதோ... இந்த வள்ளி மாகாளிதான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. அந்த வீட்டை `அம்மன் வீடு’ என்றே அழைப்பார்கள்’’ என்று அவர் சொன்னபோது அப்படியே ஸ்தம்பித்து விட்டோம்.

Published:Updated:
வள்ளி மாகாளி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
வள்ளி மாகாளி அம்மன்

‘யாதுமாகி நின்று யாவரையும் காத்தருளும் திருக்கோடிக்காவல் தட்சிணகாளிதேவியின் மகிமைகளை, 3.5.22 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் படித்து மகிழ்ந்தேன். சிறந்த வரப்பிரசாதி அந்தத் தாய். அவள் அருளால் நிகழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எங்கள் ஊரும் திருக்கோடிக்காவல்தான். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ளது. வழக்கில் திருக்கோடிக்கா என்றே அழைப்போம். இவ்வூர் பஞ்ச `கா’ தலங்களில் ஒன்று. மற்றவை: திருவானைக்கா, திருகுரக்குக்கா, திருகோலக்கா, திருநெல்லிக்கா.


திருக்கோடிக்காவல், காவிரி வடக்கு நோக்கி உத்திரவாஹினியாக பாயும் தலம். சிவபெருமானின் பொன்னார் திருமேனியே கோடிக்கா தலமாகத் திகழ்கிறது என்பது ஐதிகம். மூன்று கோடி மந்திரபீட தேவதைகளுக்குப் பெருமான் சாயுஜ்ய முக்தி அளித்த தலம் இது. திருக்கடவூரில் காலசம்ஹாரம் நிகழ்ந்த பிறகு, யமதருமன் சிவபெருமானோடு ஐக்கியமாகிக் கிடந்த தலமும்கூட!

இதனால் இவ்வூரில் சிவபெருமான் மட்டுமே சக்தி படைத்தவர். ஏனைய காவல் தெய்வங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. பொதுவாக காவல் தெய்வங்கள் எல்லையில் கோயில்கொண்டிருப்பார்கள். இவ்வூரில் மட்டும்தான் ஊரின் மத்தியில் சிவாலயத்தைச் சுற்றி எல்லை தெய்வங்கள் சந்நிதிகொண்டுள்ளார்கள். இது `திருக்கோடிக்கா' தலத்தின் சிறப்பம்சம்.

வாசகர் சுஜாதா
வாசகர் சுஜாதா
அம்மன் முகம்
அம்மன் முகம்அவ்வகையில், வள்ளி மாகாளி என்ற திருப்பெயருடன், திருக்கோடீஸ்வர ஸ்வாமிக்கு வலது பாகத்தில், தெற்கு திசையில் தனிக் கோட்டத்தில் அருள்கிறாள் தட்சிணகாளி. இங்ஙனம் தக்ஷிண பாகத்தில் அமர்ந்துள்ள பெண்தெய்வங்கள் விசேஷமானவர்கள். குறிப்பாக, யமவாதனை இல்லாத இந்தத் தலத்தில், ஜீவர்களின் நற்கதிக்கு அருளும் அம்பிகையாய் திகழ்கிறாள் தட்சிணகாளி.

எங்கள் தந்தையின் பணி நிமித்தமாக பல ஊர்களிலும் வசித்து வந்தது எங்கள் குடும்பம். காவிரி தேசத்தில் தங்கியிருந்து சிவப் பணியில் ஈடுபட்டு எஞ்சிய நாள்களைக் கழிக்க வேண்டும் என்பது எங்களின் நெடுநாள் விருப்பம்.

இந்த நிலையில், பல வருடங்களுக்குமுன் இவ்வூருக்கு சிவ தரிசனத்துக்காக வந்தோம். ஸ்வாமியின் சாந்நித்தியமும் ஊரின் அழகும் எங்களை ஈர்க்க, இங்கேயே சொந்தவீடு வாங்க வேண்டும் என்று தீர்மானித்தோம். ஸ்வாமியின் அருளும் கைகூடியது. இங்கே வீடு ஒன்று விற்பனைக்குத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது. ஓரிரு மாதங்களிலேயே அந்த வீட்டை வாங்கி குடிபுகுந்தோம்.ஒருமுறை கோயில் தரிசனத்துக்குச் சென்றிருந்தோம். வள்ளி மாகாளியின் சந்நிதி யில் நிற்கும்போது, பல வியப்பான தகவல்கள் ஊர் பூர்வீக வாசிகள் மூலம் கிடைத்தன.

“நீங்கள் இப்போது குடியேறியுள்ள வீடு சாதாரண வீடு அல்ல; இந்த வீடு யாருடையது தெரியுமா..?” என வினவினார் பூசகர். நான் திகைத்து நிற்கும்போதே, பதிலையும் சொன்னார் அவர்.

“இதோ... இந்த வள்ளி மாகாளிதான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. அந்த வீட்டை `அம்மன் வீடு’ என்றே அழைப்பார்கள்’’ என்று அவர் சொன்னபோது அப்படியே ஸ்தம்பித்து விட்டோம். அவர் தொடர்ந்து விவரித்தார்...

“மிகுந்த பாரம்பர்யமான அந்தணர்கள் வசித்த வீடு. வேதமும் ஜோதிடமும் கொண்டாடப்பெற்ற வீடு அது. முந்திய தலை முறைகளில், அந்த வீட்டில் இருந்தவர்கள் கொண்டாடிய அம்பிகை இவள். எல்லா விசேஷ நாள்களிலும் அந்த இல்லத்தின் பங்களிப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு.

முன்பு, இந்த அன்னைக்குச் சிலா விக்கிரகம் செய்தபோது, அந்த வீட்டில் ஒரு மண்டல காலம் எழுந்தருளி இருந்தபிறகே ஆலயத்துக்கு வந்து சேர்ந்தாள். அது அவளின் உத்தரவு. அவ்வளவு ஏன்... இன்றும் இவள் அந்த வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறாள் தெரியுமா?’’

நாங்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். இதுபற்றி, அந்த வீட்டுக்குரிய பெரியவர்களிடம் விசாரித்தபோது `உண்மைதான்’ என்று உறுதிசெய்தனர்.

“இந்த வீடு அவளுக்கு ரொம்ப பாத்யதை. இந்த ஆத்துல தங்கறதுன்னா அவளுக்கு அலாதி சந்தோஷம். நெனைச்சிண்டா வருவா... போவா...” என்றார்கள் சர்வ சாதாரணமாக. எங்களுக்கோ தூக்கிவாரிப் போட்டது!

“ராத்திரி வேளைகளில் கொலுசுச் சத்தம் எதையாவது கேட்டாயா..?” என்று கேட்டார் பெரியவர் ஒருவர்.

“ஆமாம். அடிக்கடி கொலுசுச் சத்தம் நன்னா கேட்கறது. கூடவே, ஜாதிமல்லிகை வாசனை... சமையல் கூடத்தில் யாரோ நடமாடறது போன்ற சத்தம்... குறிப்பா பெண்ணொருத்தி உலவுவது போன்ற உணர்வு...’’ என்றேன் சற்றுப் பயத்துடன்.

இது காளி நடமாடும் வீடு - வாசகர் அனுபவம்“பயப்படாதே! அது சாட்சாத் வள்ளி மாகாளிதான். அவளுக்குத் தோணும்போதெல் லாம் இந்த மாதிரி வந்து கொஞ்ச நாழி நடமாடிட்டு போவா” என்று அந்தப் பெரியவர் கூற, எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது.

“இந்த வள்ளி மாகாளி இருக்காளே... அவ சின்னக் குழந்தை மாதிரி. பெயர்தான் காளி... அசுர சம்ஹாரக் கோலம்... ஆனால், பிரியத்தைக் காட்டிட்டா அவள் குழந்தையேதான். அந்தாத்து பெரியவா ரொம்ப கொண்டாடுவா இவளை.

ஒரு தடவை சித்ரா பெளர்ணமி. எங்காத்து மனுஷா அத்தனைபேரும் ஒண்ணு கூடியிருக் கோம். அன்றைக்கு அம்மன் வீதியுலா.

இந்த அம்பாள் இந்த ஆத்தைத் தாண்டும் போது பிடிவாதமா நகராம நிக்கிறா. எவ்வளவு முயற்சி பண்ணியும் ஒரு அடிகூட நகர்த்த முடியலை. அவள்கிட்டேயே பிரார்த்தனை பண்ணிண்டோம். ஆனா அவளோ `என்னோட ஆத்துல தங்கிட்டுத்தான் பொறப்படுவேன்’னு உத்தரவு கொடுத்துட்டா.

உடனே ஆத்துக்குள்ளே அழைச்சுண்டு வந்து, கூடத்து ஊஞ்சல்ல அமர்த்தி உபச்சாரங்கள் பண்ணி, நானும் என் அண்ணாவுமா ஆளுக்கொரு பக்கம் கயிற்றைப் பிடிச்சு ஊஞ்சலை ஆட்டிவிடறோம். சந்தோஷமா ரசிச்சுண்டு உட்கார்ந்திருக்கா.

மூணு நாள்... மாற்றி மாற்றி ஊஞ்சலை ஆட்டிவிட்டுண்டு இருந்தோம். நைவேத்தியம், பூஜை எல்லாம் இங்கேயே நடந்துண்டு இருக்கு. அப்புறமா மெள்ள மனசு குளிர்ந்து உத்தரவு கொடுத்தாள். அதன்பிறகுதான் வீதியுலாவைப் பூர்த்தி பண்ணி கோயிலுக்கு அழைச்சுண்டு போனோம்’’

அவர் சொல்லச் சொல்ல... இப்போது எனக்குள் பயம் நீங்கி பக்தியும் பாசமும் பொங்கியது அந்த அன்னையின்மீது.

பெரியவர் தொடர்ந்தார்...

``நீங்க ஒண்ணும் பயப்படாதேள். அவ நடமாடிண்டு இருக்ற மாதிரி தோணித்துண்ணா, சட்டுனு ஆத்துல இருக்கிறதை சுவாமி மாடத்துல வெச்சு நைவேத்தியம் பண்ணுங்கோ. பெருசா ஒண்ணும் வேண்டாம். பழமோ, பாலோ, சின்ன வெல்லக்கட்டியோ போதும்.

அதேபோல்... தூங்கி முழிச்சிருக்கோமே... ஸ்நானம் பண்ணலையே... ராத்திரி ஆச்சே... மடியா இருக்கணுமோ... என்றெல்லாம் யோசிக்காதீங்கோ. அவளுக்குத் தெரியும்... எப்படி வரணும்; எதை வாங்கிக்கணும்னு!’’ அவர் பேசி முடிக்க, நாங்களோ பேச்சு எழ மறந்துபோன நிலையில்!

அதன்பிறகு, எங்கள் இல்லத்துத் தேவதையாக, குலதெய்வமாக அந்த ஆத்தாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டோம். திருவீதி உலாவுக்கான புது சிம்ம வாகனமும் இந்த வீட்டிலிருந்துதான் கொண்டுசெல்லப்பட்டது.

இன்றைக்கும் அவளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி தனி. அங்கு பாய், தலையணை பயன்படுத்துவதோ, படுத்து உறங்குவதோ கிடையாது. தினமும் அலம்பி சுத்தம் செய்வதற்கு அலுப்பதில்லை.

மனக்குறை ஏதெனும் நேர்ந்தால்கூட அவளிடமே மண்டியிட்டு வேண்டிக் கொள்கிறோம். அந்தக் குறைகளும் நாங்களே எதிர்பாராதவிதம் நிவர்த்தி ஆவதையும் கண்டுவருகிறோம்.அதே போல், வீட்டு விசேஷங்களில் முதல் நேர்த்தியும் அவளுக்குத்தான்.

எங்களது பெற்றோருக்கும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி வரையிலும் இந்த வீட்டில் செய்தாயிற்று. குழந்தைக் குட்டிகள் என பெரிய கூட்டுக்குடும்பமாகத் தழைக்கவைத்து, விருப்பம் போலவே சிவப்பணியில் ஈடுபடவைத்து, இன்றைக்கும் எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறாள், எங்கள் வள்ளி மாகாளி!

தொகுப்பு: ராகவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism