திருவாரூர் கோயிலுக்குப் பூங்கோயில், கமலாலயம் என்றெல்லாம் பெயர்களுண்டு. செல்வத்திற்கு அதிபதியாகிய திருமகள் வழிபட்டமையால் இப்பெயர்கள் உண்டானது. திருவாரூரில் செட்டியார்த் தெருவில் வசித்தவர் இல்லறத்தாரான சைவ ஆசாரியர் 'ஞானப்பிரகாசர்'. அதனாலேயே இச்சுவாமிகளுக்கு 'திருவாரூர் செட்டித்தெரு பழுதைக்கட்டி ஞானப்பிரகாசர்' என்பது திருநாமம். இவரது சீடரும், மகனாருமாக விளங்கியவர் கமலை "ஞானபிரகாசர்' .
இவரது பிள்ளைத்திருநாமம் சிதம்பரநாதன் என்பதாகும்.
'மாசிலாமணி' என்ற பிறிதொரு நாமமும் உண்டு. பின்னாள்களில் இறையருளால் நிலைத்திட்ட தீக்ஷாநாமம் 'ஞானப்பிரகாசர்'. இவையனைத்தையும் சேர்ப்பித்து 'சிதம்பரநாத மாசிலாமணி கமலை ஞானப்பிரகாசர்' என்ற திருநாமம் இச்சுவாமிக்கு வழங்கப்பெறலாயிற்று.
சுருக்கமாக 'கமலை ஞானப்பிரகாசர்'.

இவர் தம் தந்தையாரிடமே ஞானோபதேசம் பெற்று உரிய காலத்தில் திருமணமும் செய்துகொண்டு வெள்ளுடை இல்லற ஞானியாக விளங்கியவர். சதா காலமும் தியாகேசர் திருவடிகளையே சிந்தித்திருந்த இவர் ,தம்முடைய முப்பதாவது அகவையில் சித்தீசப் பெருமான் அனுக்கிரஹத்தின்படி இறைவாக்கினால் 'ஞானப்பிரகாசன்' என்ற திருநாமம் பெற்றதுடன், நன்ஞானம் கூடிவரப் பெற்றார். பல சிறப்பான சாஸ்திர நூல்கள்; தல புராணங்கள் ஆகியவற்றைச் செய்தருளியிருக்கிறார்.
இந்நூல்களின் காலத்தினைக் கணக்கிட்டதன் மூலம் இச்சுவாமிகள் வசித்திருந்த காலம் கி.பி. 1550 - 1575 என உறுதி செய்யப்பெற்றுள்ளது. இவரது சீடர்கள் பலர், அவருடன் சிறந்தோராக விளங்கிய சிலரில் திருத் தருமபுர ஆதீனத்தை நிறுவிய பிரதம ஆசாரியர் 'ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த சுவாமிகள்' குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்.
தம்முடைய பதினாறாண்டுப் பருவத்தில், ஞானமார்க்கத்தில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகப் பெற்றோரைப் பிரிந்து, மதுரை சொக்கநாதப் பெருமானருளால், பொற்றாமரைக் குளத்து ஈசானிய பாகத்து கங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற லிங்கவடிவினரைப் பூஜித்து வந்த 'ஞானசம்பந்தன்' என்ற திருநாமம் உடைய இளைஞர். வடமொழியையும், தமிழையும் தாமே ஓதியுணர்ந்த ஆகச்சிறந்த அருளாளர். தகுந்த ஞானகுரு ஒருவர் தமக்கு வாய்க்கப் பெற வேண்டி, சொக்கரிடம் வேண்டிநிற்க, திருவாரூர் ஞானப்பிரகாச சுவாமிகளை நற்குருவாக ஏற்கும்படி ஒரு கனவின்மூலம் பெருமானால் அருளப் பெற்றார்.
ஞானசம்பந்தர் கனவில் தோன்றியருளிய சொக்கநாதர் அத்துடன் விட்டு விடவில்லை. 'கமலை ஞானப்ரகாசரின் கனவிலும் எழுந்தருளி, "நாடிவரும் நமதன்பன் ஞானசம்பந்தனை ஆட்கொண்டு ஞானம் வழங்கிடுக" என்று ஆக்ஞை செய்திட்டார். ஆலவாயிலிருந்து ஆரூருக்குப் புறப்பட்ட ஞானசம்பந்தர், ஆரூர்க் கோயிலை அடைந்து, பெருமானை வலம் வந்து, அங்கே வீற்றிருந்த ஆசார்யரைக் கண்டு, அவர்தம் திருப்பாதங்களில் சரணடைந்தார்.

சீடரை எதிர்நோக்கிக் காத்திருந்த ஆசார்யரும் ஞானோபதேசம் தந்தருளி அவரை ஆட்கொண்டு நற்சீடராக ஏற்றுக்கொண்டார். சிலகாலத்திற்குப் பின்பு, குருநாதர் உத்திரவின்படி காவிரித் தென்கரைத் தலமான, வில்வாரண்யம் எனப்பெறும் மயிலாடுதுறை அருகே திருத்தருமபுரம் அடைந்து திருமடம் ஒன்றை அமைத்து சைவத்தமிழை வளர்த்து வரலானார்.
இப்படியாக, திருத் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் சுவாமிகளால் நிறுவப்பெற்றது. திருவாரூர் 'சிதம்பரநாதன் கொல்லை'எனுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கமலை ஞானப்பிரகாச சுவாமிகளின் ஞானச்சமாதி திருக்கோயிலுக்கு, திருத்தருமை குருமகா சந்நிதானங்கள் அவ்வபோது விஜயம் செய்து தரிசித்துப்போற்றுவது வழக்கம். இப்பாரம்பர்யத்தின் நீட்சியாக, தற்போது அருளாட்சி செய்து வருகின்ற திருத்தருமையாதீன கர்த்தராகிய ஸ்ரீலஸ்ரீ 27 - குருமணிகள் தமது சீரிய முயற்சியால் கமலை ஞானப்பிரகாச குருநாதரின் ஞானச்சமாதி மண்டபத்தினை விரைவில் அழகுபொலியும் கற்றளியாகப் புத்தாக்கம் செய்தருள உள்ளார். தவிர, திருவாரூர் ராஜன் கட்டளை மடத்தில் கமலை சுவாமிகளின் ஞானத் திருக்கோயிலானது மிகவும் சிறப்பான முறையில் கடந்த மாதம் (25.10.2021 ) குருமணிகள் அருட்பார்வையில் மஹா கும்பாபிஷேகம் கண்டுள்ளது என்பதும் ஆன்மிக அன்பர்கள் மகிழத்தக்க செய்தி.
ஞான விழைவு உடையோர் கமலை குருநாதரின் இந்த ஞானத்திருச்சந்நிதியைத் தரிசித்து அளப்பறிய பலன்களைப் பெறலாம்.