Published:Updated:

கோலாகல கோகுலாஷ்டமி: கொண்டாடுவது எப்படி? சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன? வழிகாட்டுகிறார் APN சுவாமிகள்

கோகுலாஷ்டமி

'தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்' என்கிறார் ஆழ்வார். நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் பெருமாள் தோன்றினாராம். அப்படியானால் கோகுலாஷ்டமி நாளில் நள்ளிரவில் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

கோலாகல கோகுலாஷ்டமி: கொண்டாடுவது எப்படி? சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன? வழிகாட்டுகிறார் APN சுவாமிகள்

'தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்' என்கிறார் ஆழ்வார். நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் பெருமாள் தோன்றினாராம். அப்படியானால் கோகுலாஷ்டமி நாளில் நள்ளிரவில் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

Published:Updated:
கோகுலாஷ்டமி
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று ரோஹிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணர், அவதரித்தார். அந்த அற்புதமான நாளே ‘கோகுலாஷ்டமி’ ஶ்ரீஜயந்தி என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

கொண்டாட்டங்களில் சிறந்தது கோகுலாஷ்டமி கொண்டாட்டம் என்பார்கள். அப்படிப்பட்ட கோகுலாஷ்டமியின் சிறப்புகள் என்ன? அதைக் கொண்டாடுவது எப்படி? இந்த நாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன என்பது குறித்து ஏபிஎன் சுவாமிகளிடம் கேட்டோம்

"பொதுவாக ராமநவமி என்று சொன்னால் அது பெரும்பாலும் சைவர்கள் வைஷ்ணவர்கள் என அனைவருக்கும் ஒரே நாளில் வரும். ஒரே நாளில் கொண்டாடுவோம். ஆனால் கிருஷ்ண ஜயந்தியைப் பொருத்த அளவில் சிலர் ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்று ஒரு நாளிலும் சிலர் ஶ்ரீ ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி என்று ஒரு நாளிலும் கொண்டாடுவது வழக்கம். ஏன் இப்படி இரண்டு தினங்களாக வருகிறது என்று பலரும் கேட்பார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்

இதற்கு சாஸ்திரபூர்வமாகப் பல்வேறு பொருள் நிறைந்த விடை உண்டு. ஆனால் இதற்கு அடியேன் விளையாட்டாகக் கூரத்தாழ்வான் சொன்ன பதிலில் இருந்து ஒன்றை எடுத்துச் சொல்வதுண்டு.

பெருமாள் ராமாவதாரத்தில் 'ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்' என்று வாழ்ந்தவர். எனவே அவர் பிறந்த தினமும் ஒரே நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரோ சுபாவத்திலேயே விளையாட்டுத்தனம் மிகுந்தவர். ஆண்டாள் கண்ணனைப் பாடும்போது, 'ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே...' என்று பாடுவாள். ஏற்றுக்கொள்ள முடியாத பொய்களைச் சொல்வானாம் கண்ணன். காரணம் கோகுலத்தில் அவன் விளையாட்டுப் பிள்ளை.

கண்ணனுக்கு இரண்டு தந்தை, இரண்டு தாய். ஆம், பெற்றெடுத்த தாய் தந்தை தேவகி - வசுதேவர். வளர்த்த தாய் தந்தை யசோதை - நந்தகோபர். வேதத்தில் 'அன்னவான் அன்னாதோ பவதி' என்று ஆசீர்வாதம் உண்டு. அதாவது நிறைய செல்வம் உடையவனாக இருக்க வேண்டும். அதே வேளை செல்வத்தை அனுபவிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேவகியும் வசுதேவரும் கண்ணனைப் பெற்றார்களே தவிர அவனின் பால்ய லீலைகளை அருகிருந்து ரசிக்க இயலாதவர்களாகி விட்டார்கள். அதே வேளை யசோதையும் - நந்தகோபனும் அருகிருந்து ரசிக்கும் தன்மையைப் பெற்றார்களே அன்றி அவனைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெறவில்லை. இப்படி இருவருக்கும் அவரவர் வேண்டிக்கொண்டபடியான பாக்கியத்தை அருள்வதற்காகவா கிருஷ்ணன் அவதரித்தான் என்றால் அதுவும் இல்லை என்கிறார் கூரத்தாழ்வார்.

மன்னர் குலத்தைச் சேர்ந்த ருக்மணியைக் கரம்பிடிக்க மன்னர் குலத்தில் அவதரித்தார். ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையைக் கரம்பிடிக்க கோகுலத்திலும் வளர்ந்தார் என்கிறார் கூரத்தாழ்வார். பார்த்தீர்களா... எப்படிக் கிருஷ்ணனின் விளையாட்டு.

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

இப்படிப் பட்ட கிருஷ்ணனை இரண்டு நாள்கள் கொண்டாடுவதுதானே சரி... அதனால் கிருஷ்ண ஜயந்தி என்று ரோகிணி நட்சத்திர நாளிலும் கோகுலாஷ்டமி என்று அஷ்டமி திதி நாளிலும் இரண்டு தினங்களாகக் கொண்டாடக் கிடைத்திருப்பது நம் பாக்கியமே. குறைந்தபட்சம் இரண்டு நாள்களில் ஒரு நாளேனும் கொண்டாட வேண்டும். வாய்ப்பிருப்பவர்கள் இரண்டு தினங்களும் அந்தக் கண்ணன் பிறப்பைக் கொண்டாடலாம்.

எப்போது கொண்டாடுவது?

'தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்' என்கிறார் ஆழ்வார். நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் பெருமாள் தோன்றினாராம். அப்படியானால் கோகுலாஷ்டமி நாளில் நள்ளிரவில் பெருமாளை வழிபடுவது சிறப்பு. ஆனால் அவ்வாறு வீட்டில் வழிபட முடியாது என்று நினைப்பவர்கள் மாலை வேளையில் கிருஷ்ணனை வழிபடலாம். வீட்டில் சாளக்கிராமம் இருந்தால் அதற்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் கிருஷ்ணன் படம் அல்லது விக்ரகம் வைத்திருந்தால் அதற்கு மலர் சாத்தி அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை பூஜைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கரங்களால் கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்யச் சொல்ல வேண்டும். அவரவர்களுக்குத் தெரிந்த பூஜையைச் செய்யலாம். கிருஷ்ணனைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியும் ஆத்ம சுத்தியும் தான் முக்கியம். அன்போடு செய்யும் எந்த பூஜையையும் அவன் ஏற்கிறான்.

பலவிதமான பட்சணங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு. குறைந்தபட்சம் அவல், வெண்ணெய் ஆகியவற்றை 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.

சொல்ல வேண்டிய ஸ்லோகம்

வீட்டில் இருக்கும் குழந்தைகளை அமரவைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்வது விசேஷம்.

வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்

ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்" என்றார் ஏபிஎன் சுவாமிகள்.

கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் புண்ணிய பலன்கள் கிட்டுவதோடு இந்த உலக வாழ்விற்குத் தேவையான சகல சுகங்களும் கிடைக்கும். எனவே கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி நன்னாளில் அவரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைவோம்.

ஏபிஎன் சுவாமிகள்
ஏபிஎன் சுவாமிகள்

இந்த ஆண்டு கோகுலாஷ்டமி எப்போது?

அஷ்டமி திதி இன்று இரவு (ஆகஸ்ட் 19 - 1.48 a.m) மணிக்குத் தொடங்கி (ஆகஸ்ட் 20 - நள்ளிரவு 2.47 a.m) வரை இருக்கிறது.

ரோகிணி நட்சத்திரம் சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் காலை 6.01க்குத் தொடங்கி 21 ஆகஸ்ட் காலை 8.11 வரை இருக்கிறது. எனவே எனவே கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள் நாளையும் நட்சத்திர அடிப்படையில் ஶ்ரீஜயந்தி கொண்டாட விரும்புபவர்கள் சனிக்கிழமையும் கொண்டாடுவது சிறப்பு. இரண்டு நாள்களுமே கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு.