Published:Updated:

எடுத்த காரியத்தில் வெற்றி கிட்ட ஆண்டாள் அருளும் அற்புத வழி! திருப்பாவை - 5

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

தடைகளுக்கு அஞ்சுவதைவிட, அதைத் தாண்டிமுடித்து விஞ்சுவதுதானே திறம்... கையில் விளக்கிருக்கக் காரிருளுக்கு அஞ்சலாமோ...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றுமணி விளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசுஆகும் செப்புஏல்ஓர் எம்பாவாய்

ஆண்டாள்
ஆண்டாள்

`ஆழிமழைக்கண்ணா' என்று ஆண்டாள் பாடியதை ஆவென வாய்பிளந்து கேட்டு ரசித்தனர் ஆய்ச்சியர்.

``ஆஹா, கோதை உன் பாசுரத்தைக் கேட்டதுமே பெருமழையில் நனைந்ததுபோலுள்ளது. எல்லாம் சரி. ஆனாலும் என் மனத்தில் ஒரு சந்தேகம். இன்னும் சிலருக்கும் இருக்கலாம். நீ சொல்வதைப்போலவே இந்த நோன்பை நாங்கள் தொடங்குகிறோம். ஒருவேளை, ஏதேனும் தடை நேர்ந்து நோன்பு பாதிக்கப்படலாம் அல்லவா... அப்படி நிகழ்ந்தால், அது தெய்வக் குற்றமாகிவிடாதா... புண்ணியம் பெருவதைவிட பாவங்களைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது உத்தமம்தானே...

இந்த உலகில் எந்தத் தீய காரியத்தைத் தொடங்கினாலும், எந்தத் தடங்கலும் வருவதில்லை. நல்ல காரியங்களுக்கோ ஆயிரம் தடங்கல்கள். ராமாவதாரத்தில் ராமர் பட்டாபிஷேகம்போல மங்களகரமான காரியம் ஏதேனும் உள்ளதா? ஆனால், அதில் தடை ஏற்பட்டது. இத்தனைக்கும் பட்டாபிஷேகத்துக்கான முகூர்த்தத்தை நிச்சயித்தது வசிஷ்ட மாமுனி. மாமுனிகளின் கணிப்பே தவறுமென்றால், மானுடர் நம் கணக்கு என்னாகும்... மார்கழி நீராட நாங்கள் தயார். ஆனால், நீ எம் சந்தேகம் தீர்த்து வழிநடத்து கோதை" என்றாள் ஆய்ச்சி ஒருத்தி.

ஸ்ரீராமர்
ஸ்ரீராமர்
ஆழிமழைக் கண்ணா... மழையின் அறிவியலை விளக்கும் ஆண்டாளின் பாசுரம்... திருப்பாவை 4

ஆண்டாள் சிரித்தாள். அந்த காலைப் பொழுதின் விடிவெள்ளி மின்னியதுபோலிருந்தது.

``அடேங்கப்பா... சந்தேகம் என்று கேட்டாலும் சரியாகத்தான் கேட்டாய். ராமர் பட்டாபிஷேகம் செய்து பரிபாலனம் செய்ய மட்டுமா அவதரித்தார்... அவர் நினைத்திருந்தால், கைகேயியினை மறுத்திருக்கலாம், பரதன் வரும் மட்டும் பொறுத்திருக்கலாம். ஆனால் அவரோ, தன் அவதார நோக்கம் அறிந்ததால், அனைத்தும் நிகழ அனுமதித்தார்; தம்பியோடும் நங்கையோடும் வனம் புக அடியெடுத்தார். மூன்றே அடியில் நோக்கம் முடித்தது ஓர் அவதாரம். அதன் குறைதீரவோ என்னவோ, தேசமெங்கும் பாதம்பதித்து நடந்தது ராமாவதாரம். அண்ணலின் பாத தீட்சையால் அழியாப் புண்ணிய பூமியாகியது நம் பாரத தேசம். தடைகளுக்கு அஞ்சுவதைவிட, அதைத் தாண்டிமுடித்து விஞ்சுவதுதானே திறம்... கையில் விளக்கிருக்கக் காரிருளுக்கு அஞ்சலாமோ...

நாம் நோன்பிருந்து போற்றி வணங்கப்போகும் கண்ணன் கூட சிறையில்தான் அவதரித்தான். வடமதுரையின் தலைவனானான். யமுனைதீரங்கள் எல்லாம் அவன் ஆளுகையில் இருந்தன. அவன் ஆயர்குலத்தில் தோன்றிய, எந்த இருளாலும் தின்னமுடியாத ஒப்பற்ற ஒளியை வீசும் அற்புத மணி விளக்கு.

விஷ்ணு
விஷ்ணு

அவனைச் சுமந்து பெற்றடுத்தவள் ஒருத்தி; ஆனால், அவனை வளர்த்து எல்லாப் பேறுகளையும் பெற்றவள் ஒருத்தி. என்ன தவம் செய்தனை என்று இவனைப் பெற்றவளினைக் கண்டு வானவரும் மேலவரும் பொறாமைகொள்ளும் வண்ணம் தாயின் குலம் விளங்கச் செய்த தாமோதரன் அல்லவா... உண்மையில், அவனைப் பெற்ற தேவகியைவிட, அவனை சீராட்டிய யசோதை அல்லவா அத்தனை பாக்கியங்களையும் பெற்றாள்...

இப்படிப்பட்ட மாயங்கள் புரியும் அந்த மாலவனை, மார்கழி நீராடி நம்மை நாமே தூய்மை செய்துகொண்டு, நல்ல மலர்களைத் தூவித் தொழுதுபாடுங்கள். இந்த உடலும் மனமும் தனித்தனியே இயங்கும் தன்மை உடையது. உதடுகள் நாம ஜபம் செய்ய, மனம் வேறு ஒரு வஸ்துவில் குடிகொள்ளும் மாயையை உடையது. எனவே, நாம் வாயால் பாடும்போது மனதாலும் அவனை சிந்திப்போம்.

விஷ்ணு
விஷ்ணு

கலியுகத்தில் கடைத்தேற ஒரே வழி, பகவான் நாம சங்கீர்த்தனமே. அவனை நினைவில் நிறுத்தி, அவன் நாமத்தையே சங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்தால், இதுவரை நம் வாழ்வில் நாம் செய்த பிழைகள் எல்லாம் மன்னிக்கப்படும். இனி வரும் பாவங்களும் தகர்ந்தோடும். தீயினில் வீழ்ந்த தூசு எப்படிப் பிழைக்காமல் போகுமோ அப்படி, நம் பாவங்கள் எல்லாம் தீர்க்கும் அந்த கோவிந்த நாமத்தை நாம் தவறாமல் போற்றுவோம். வாருங்கள் தோழிகளே..."

காலம்முழுக்கக்கூட இருந்து கரைசேர்க்கும் அந்த கோவிந்த நாமத்தின் மகிமைகளை அறிந்து, நாமும் இந்த மார்கழியில் நீராடி மகிழ்வோம்.

ஆண்டாளின் இந்தப் பாசுரத்தைப் பாட, நம் வாழ்வில் உண்டாகும் தடைகள் நீங்கிக் காரிய வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு