Election bannerElection banner
Published:Updated:

மஹா சிவராத்திரி: சகல செல்வங்களையும் அருளும் சிவராத்திரி விரதம்... கடைப்பிடிப்பது எப்படி?

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி

அறியாமல் செய்த விரதங்களுக்கே அளப்பரிய பாக்கியம் கிட்டும் என்றால் அறிந்தே நாம் மேற்கொள்ளும் சிவராத்திரி பூஜைகளுக்குக் கிடைக்கும் பலன்களை அளவிடவே முடியாது. இத்தனை சிறப்புடைய மகாசிவராத்திரி விரதத்தை மேற்கொள்வது எப்படி?

அந்த வேடனின் பெயர் அங்குலன். அவன் கண்ணெதிரில் எந்தவொரு விலங்கும் நடமாட முடியாது.

சாதாரணமாக வேடர்கள் தரையில் வலை விரித்து, அதில் சிக்குபவற்றைப் பிடிப்பார்கள். ஆனால் அங்குலனோ, மரங்களிலும் சேர்த்தே வலை விரிப்பான். தரையிலுள்ள வலையிலிருந்து தப்பிக்கும் விலங்குகள், மரங்களில் இருக்கும் வலையில் மாட்டிக் கொள்வதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.

அங்குலனுக்கு மனைவியும் குழந்தைகளும் உண்டு. அமைதியாகப் போய்க்கொண்டிருந்த அங்குலனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கி அவனுக்கு அருள் செய்ய, ஆண்டவன் நினைத்தார் போலும்.

ஒரு நாள்... அங்குலன் தனது வழக்கப்படி வலைகளை விரித்துவிட்டுக் காத்திருந்தான். பறவைகளோ விலங்குகளோ எதுவும் அவற்றில் சிக்கவில்லை. சின்னஞ்சிறிய அணில்கூடச் சிக்கவில்லை.

அங்குலன் வருந்தினான். அவன் வருத்தத்தை மேலும் அதிகமாக்குவது போல, சூரியனும் மறையத் தொடங்கினான்.

முதல் கால பூஜை
முதல் கால பூஜை

‘‘ஹும்..! பகல் பொழுது முழுதும் வீணாகப் போய்விட்டது. எதுவும் கிடைக்கவில்லை. வயிறு பசிக்கிறது. என் நிலையே இப்படியென்றால், வீட்டில் உள்ளவர்கள்...?

வேறு வழியில்லை. இன்று வீட்டுக்குப் போகக் கூடாது. போனால் பசியுடன் இருக்கும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். ‘ஒன்றும் கொண்டு வரவில்லையா? பசிக்கிறதே!’ என்பார்கள்.

‘இன்று இரவு இங்கேயே தங்கி, நாளைக்கு ஏதாவது கொண்டுபோக வேண்டும்’ என்று தீர்மானித்த அங்குலன்,

காட்டிலேயே ஒரு குளத்தங்கரையில் இருந்த வில்வ மரத்தின் மீது ஏறி வாகாக உட்கார்ந்தான். ‘இரவு நேரத்தில் இங்கு ஏதாவது விலங்குகள், குளத்தில் தண்ணீர் குடிக்க வரும். எதற்கும் தயாராக இருப்போம். ஏதாவது வந்தால் அடித்துவிடலாம்!’ என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் கீழே குளத்தைப் பார்த்தான். குளம் தெரியவில்லை. முன்னால் இருந்த வில்வக் கிளைகள் மறைத்திருந்தன.

அடுத்து, அம்பை எடுத்த அங்குலன், அதைக்கொண்டு வில்வ இலைகளை உதிர்த்து, குளம் தெரியும்படி செய்து கொண்டான்.

அங்குலன் மரத்தில் இருந்து உதிர்த்த வில்வ இலைகள் முழுவதும், அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

விலங்குகள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த அங்குலன் முன்னால் விலங்குகள் எதுவும் வரவில்லை. ஆனால், அவனுக்குத் தூக்கம் வந்தது. கூடவே பயமும் வந்தது.

‘என்ன இது? பகல் பொழுது முழுவதும் அலைந்து திரிந்தது இப்படி அசத்துகிறதே! இங்கு தூங்கிக் கீழே விழுந்துவிட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட வேண்டும். என்ன செய்யலாம்?’ என்று நினைத்த அங்குலன், மரத்திலிருந்து வில்வ இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான்.

அவ்வளவு இலைகளும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. காற்று அதிகமாக வீசாத காட்டுப் பகுதியானதால் ஸ்வாமியின் மீது விழுந்த வில்வ இலைகள் அப்படியே, யாரோ ஒருவர் பொறுப்பாக பூஜை செய்து அலங்கரித்ததைப் போல் இருந்தது.

இரண்டாம்  கால பூஜை
இரண்டாம் கால பூஜை

பொழுது விடிந்தது. ஒரு விலங்குகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப்போன அவன், வேறு வழியின்றி வீடு திரும்பினான்.

அங்கே அங்குலனின் மனைவி, ‘‘காட்டுக்குப் போனவரை இன்னும் காணோமே! இரவும் போய்விட்டது. என்ன நடந்ததோ?

தெய்வமே! அவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும்!’’ என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

அங்குலன் வீடு திரும்பியதும் அவன் மனைவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தெய்வத்துக்கு நன்றி சொன்னாள்.

காலங்கள் ஓடின. வாழ்நாள் முடிவில் அங்குலன், சிவ கணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான்.

காட்டில் அங்குலன் பகல் பொழுது முழுவதும் சாப்பிடாமல் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து, மரத்தின் மேல் இருந்தபடி வில்வ இலைகளை உதிர்த்தது, ஒரு சிவராத்திரி நாளின் போது. இதை, சிவபெருமான் தனக்குச் செய்த சிவராத்திரி விரத வழிபாடாக ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாகத்தான் அங்குலனுக்கு சிவ கணங்களில் ஒருவராகும் பேறு கிடைத்தது. அறியாமல் செய்த விரதங்களுக்கே அத்தனை பாக்கியம் கிட்டும் என்றால் அறிந்தே நாம் மேற்கொள்ளும் சிவராத்திரி பூஜைகளுக்குக் கிடைக்கும் பலன்களை அளவிடவே முடியாது. இத்தனை சிறப்புடைய மகாசிவராத்திரி விரதத்தை மேற்கொள்வது எப்படி?

மகா சிவராத்திரி விரத நியதிகள்...

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

மறுநாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களைச் செய்த பின், சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும்.

முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்குரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலைகள், தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பின் நடுப்பகலில் நீராடி, உச்சிகால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்றாம் கால பூஜை
மூன்றாம் கால பூஜை

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும், நியதிப்படி பூஜை செய்ய வேண்டும்.

முதல் ஜாமம்

நேரம்: மாலை 6 முதல் 9 மணி வரை

அபிஷேகம்: பஞ்சகவ்யம்

ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: வில்வம், அகில்

அர்ச்சனை: தாமரைப்பூக்கள்

நைவேத்தியம்: பயத்தம்பருப்பு கலந்த பொங்கல்

வேத பாராயணம்: ரிக் வேதம்

இரண்டாம் ஜாமம்

நேரம்: இரவு 9 முதல் 12 மணி வரை

அபிஷேகம்: பஞ்சாமிர்தம். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம்.

ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: சந்தனம், தாமரைப்பூ

அர்ச்சனை: துளசி

நைவேத்தியம்: பாயசம்

வேத பாராயணம்: யஜுர் வேதம்

மூன்றாம் ஜாமம்

நேரம்: இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை

அபிஷேகம்: தேன்

ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை.

அர்ச்சனை: மூவிலை வில்வம்

நைவேத்தியம்: எள் சாதம்

வேத பாராயணம்: சாம வேதம்

நான்காம் கால பூஜை
நான்காம் கால பூஜை

நான்காம் ஜாமம்

நேரம்: அதிகாலை 3 முதல் 6 மணி வரை

அபிஷேகம்: கரும்புச் சாறு

ஸ்வாமிக்குச் சார்த்தவேண்டியவை: அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டை மலர்.

அர்ச்சனை: நீலோத்பலம்

நைவேத்தியம்: சுத்தான்னம்

வேத பாராயணம்: அதர்வண வேதம்

இப்படி நான்கு கால பூஜைகளையும் செய்து சிவராத்திரி விரதத்தை சிறப்பாக முடித்தால் அந்தப் பரமேஸ்வரனின் அருள் ஸித்திக்கும். மகாசிவராத்திரி விரதத்தை மேற்கொள்பவர்களின் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் தீரும். குறிப்பாக கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிர்ப்பவர்கள், பகைவர்களால் துன்புறுபவர்கள் இந்த மகாசிவராத்திரி அன்று விரதமிருந்து வழிபட்டால் அவர்களின் தொல்லைகள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்று சிவராத்திரி (11.3.2021). இந்த நாளில் நாம் சிவபெருமானை ஆலயங்கள் சென்றோ அல்லது நம் வீட்டிலேயோ வணங்கி வரம் பெறலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு