Published:Updated:

பேரழகும் பெரும் செல்வமும் அருளும் ரம்பா திருதியை; எளிமையாக வீட்டில் வழிபடுவது எப்படி?

ரம்பாதிருதியை

அன்னையிம் தரிசனத்தால் ரம்பா தான் முன்பு இருந்ததைக் காட்டிலும் பேரழகு கொண்டவளாக மாறினாள். அவளுக்குப் பெரும் செல்வம் கிடைத்தது. "நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள் அம்பிகை.

பேரழகும் பெரும் செல்வமும் அருளும் ரம்பா திருதியை; எளிமையாக வீட்டில் வழிபடுவது எப்படி?

அன்னையிம் தரிசனத்தால் ரம்பா தான் முன்பு இருந்ததைக் காட்டிலும் பேரழகு கொண்டவளாக மாறினாள். அவளுக்குப் பெரும் செல்வம் கிடைத்தது. "நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள் அம்பிகை.

Published:Updated:
ரம்பாதிருதியை
அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் நாள் திருதியை திதி. பொதுவாகவே திருதியை மிகவும் நல்ல நாளாகக் கருதப்படுகிறது. அதிலும் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அட்சயத் திருதியை என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் ஆபரணங்கள், உலோகங்கள், தானியங்கள் அனைத்தும் பன்மடங்கு சேரும் என்பது நம்பிக்கை. அதேபோன்று சிறப்பும் மகிமையும் உடைய திருதியை ரம்பா திருதியை.

வைகாசி மாத வளர்பிறை திருதியையும் கார்த்திகை மாத வளர்பிறை திருதியையும் ரம்பா திருதியை என்று போற்றப்படுகின்றன. இந்த நாளில் செய்யும் வழிபாடு சகல ஐஸ்வர்யங்களையும் தருவதோடு ஆரோக்கியமும் அழகும் மேம்படும் என்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த வழிபாடு தோன்றியது எப்படி? வீட்டில் எப்படிக் கடைப்பிடிப்பது என்பது குறித்து ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.

ரனொஆ
ரனொஆ

ரம்பா திருதியை

ரம்பாதிருதியை தோன்றியது குறித்துப் புராணத்தில் ஒரு நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. ரம்பா, ஊர்வதி, மேனகா ஆகிய மூவரும் தேவலோக அப்சரஸ்கள். இவர்கள் மூவருக்குள்ளும் யார் பேரழகி என்றும் நடனத்தில் சிறந்தவர் யார் என்றும் போட்டி ஏற்பட்டது. தங்களில் யார் சிறந்த நடன மங்கை என்பதைத் தேர்வு செய்யுமாறு இந்திரனை நாடினர். இந்திரன், மூவரும் நடனமாடினால், தான் நடுவராக இருந்து தீர்ப்பு சொல்வதாகச் சொன்னான். தேவசபையில் மூவருக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது.

மூவரும் சிறப்பாக நடனமாடினர். ரம்பாவுக்கு இந்திரனின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆக்ரோஷமாக அரங்கமே அதிருமாறு ஆட ஆரம்பித்தாள். இதனால் நடனத்தின் நளினம் குறைந்தது. ரம்பாவின் நெற்றிப்பொட்டும் சந்திரப்பிரபையும் கீழே விழுந்தன. இதைக் கண்டு ஊர்வசியும் மேனகையும் சிரித்துவிட ரம்பா அவமானப்பட்டு அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டாள்.

ஒரு கலையில் ஈடுபடும்போது அந்தக் கலையை மட்டுமே நினைக்க வேண்டுமேயன்றி கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் அளிக்கக் கூடாது. ரம்பா மனதில் பொறாமைக்கு இடம் அளித்ததால் அவள் மீது கலைவாணி கோபம் கொண்டாள். அவளின் அழகும் கலையும் அவளை விட்டு நீங்கியது.

இதனால் கலக்கம் அடைந்த ரம்பா, மீண்டும் தன் கலையையும் அழகையும் பெற என்ன வழி என்று இந்திரனிடமே கேட்டாள்.

'பூலோகத்தில் பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள குறைகள் தீரும்' என்றான்.

ரம்பா திருதியை
ரம்பா திருதியை

அதன்படி பூலோகம் வந்த ரம்பை, அன்னை கௌரிதேவியைத் தேடினாள். ஒரு நாள் அவள் அன்னையை திருப்பைஞ்ஞீலியில் கண்டுகொண்டாள். அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு உதவி புரிந்தள். தானும் மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாகச் (பொம்மையாக) செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள்.

ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த கௌரிதேவி, மறுநாள் தங்க நிறத்தில் ஸ்வர்ணதேவியாக அவளுக்குக் காட்சி தந்தாள்.

அன்னையிம் தரிசனத்தால் ரம்பா தான் முன்பு இருந்ததைக் காட்டிலும் பேரழகு கொண்டவளாக மாறினாள். அவளுக்குப் பெரும் செல்வம் கிடைத்தது. அம்பிகை மனம் மகிழ்ந்து, "நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள். அதன்படி ஆண்டில் இரண்டு தினங்கள் ரம்பா திருதியையாகக் கொண்டாடப்படுகின்றன.

எனவே ரம்பா திருதியை அன்று பெண்கள் அம்பிகையை வழிபட்டால் அவர்களின் அழகும் திறமையும் மென்மேலும் வளரும்; செல்வம் சேரும் என்கின்றன ஞான நூல்கள்.

ரம்பா திருதியை என்று ? எப்படிக் கடைப்பிடிப்பது ?

வரலட்சுமி விரதத்தன்று மண்டபம் அமைத்து, வாழைமரம் கட்டி, கலசம் வைத்து வழிபாடு செய்வோமோ அதேபோன்று வாழைமரம் கட்டி மஞ்சளினால் அம்பாள் முகம் செய்து வைக்க வேண்டும். பிறகு அம்பிகையை அதில் ஆவாஹனம் செய்து மலர்கள் மற்றும் அட்சதை தூவி வணங்க வேண்டும். துர்கை, லட்சுமி சரஸ்வதி மூவருக்கும் உரிய அஷ்டோத்திரங்கள் வாசித்து மலர் தூவி வழிபடலாம். வெல்லத்தினால் ஆன நிவேதனம் ஒன்றைச் சமர்ப்பிப்பதும் சிறந்தது.

இவ்வாறு அம்பிகையை ரம்பாதிருதியை அன்று வழிபட்டால் குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக திருமண வரம் வேண்டும் பெண்கள் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது சிறப்பு. மேலும் ரம்பாதிருதியை அன்று அம்பிகை கோயில்கொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அழகும் ஐஸ்வர்யமும் தேடிவரும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு ரம்பாதிருதியை 26.11.22 சனிக்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் கட்டாயம் அம்பிகையை வழிபடுவோம். பொதுவாகவே சனிக்கிழமை அன்று உலோகங்கள் வாங்கினால் அவை பல்கிப்பெருகும். அதுவும் ரம்பாதிருதியையோடு இணைந்துவரும் சனிக்கிழமை அட்சயத் திருதியைக்கு இணையானது. எனவே முடிந்தவர்கள் இந்த நாளில் தங்கம், வெள்ளி முதலியவற்றால் ஆன ஆபரணங்கள் அல்லது நாணயங்களை வாங்கி வீட்டில் சுவாமி படம் அல்லது பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெரும் என்கிறது ஜோதிடம்" என்றார் பாரதி ஶ்ரீதர்.