Published:Updated:

தெய்வ மனுஷிகள்: அனந்தாயி

அனந்தாயி
பிரீமியம் ஸ்டோரி
அனந்தாயி

அனந்தாயி இப்போ ஸ்ரீவைகுண்டத்துல இருக்கா. அவளை எல்லாரும் ‘சந்தனமாரி’, ‘சந்தனமாரி’ன்னு அழைக்கிறாக

தெய்வ மனுஷிகள்: அனந்தாயி

அனந்தாயி இப்போ ஸ்ரீவைகுண்டத்துல இருக்கா. அவளை எல்லாரும் ‘சந்தனமாரி’, ‘சந்தனமாரி’ன்னு அழைக்கிறாக

Published:Updated:
அனந்தாயி
பிரீமியம் ஸ்டோரி
அனந்தாயி

அரிக்கும் அனந்தாயிக்கும் கல்யாணமாகி பத்து வருஷங்கள் கழிச்சுத்தான் புள்ளைப்பேறு வாச்சது. அழகா ஒரு பொம்பளைப் புள்ளை பெறந்துச்சு. கிருஷ்ணம்மான்னு பேரு வெச்சாக. புள்ள பேரழகி.

அரிதான் அந்த எட்டுப்பட்டிக்கும் தலைவர். இத்தனை வருஷம் கழிச்சு புள்ளை பெறந்ததை பெரிய விழாவெடுத்துக் கொண்டாடுனாரு மனுஷன்.

பிள்ளைக்கு ஜாதகம் கணிக்கணுமே... ஒரு வள்ளுவரை அழைச்சுக்கிட்டு வந்தாரு அரி. அவரு, புள்ளை பெறந்த நாளு நேரமெல்லாம் பாத்துக் கணிச்சு ஜாதகத்தை எழுதுனாரு. கூடவே, “புள்ளைக்கு சர்ப்ப தோசம். ஆயுள்ல பிரச்னையிருக்கு. பிறந்த நேரத்துலருந்து ஒரு சர்ப்பம் இந்தப்புள்ளைய சுத்தி வந்துக்கிட்டிருக்கு. சேதாரம் இல்லாமத் தீக்கணும்னா ஒரு யோசனை சொல்றேன், செய்யறியளா”ன்னு கேட்டாரு. “இந்தப் புள்ளதான் சோசியரே எங்களுக்கு எதிர்காலம்... நீங்க என்ன பரிகாரம் சொன்னாலும் செய்றோம்”னாக, அரியும் அனந்தாயியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சர்ப்பத்துக்குப் பகை கீரி... தோஷம் நீங்கணும்னா ஒரு கீரிப்புள்ளைய புடிச்சாந்து வீட்டுல வளக்கணும்”னாரு சோசியரு. உடனடியா ஆளுகளை மலைக்காட்டுக்கு அனுப்பி ஒரு கீரிப்புள்ளையை புடிச்சாரச் சொன்னாரு அரி. அவுகளும் சொன்னமாதிரியே ஒரு குட்டிக்கீரியை புடிச்சாந்தாக. காட்டுக்குள்ள ஆடியோடித் திரிஞ்ச கீரி, தொடக்கத்துல வீட்டுக்குள்ள அண்டாம முரண்டு புடிச்சுச்சு. கிருஷ்ணம்மாளுக்கும் கீரியைக் கண்டா பயம். பக்கத்துல வரவிடாம அழும். காலம் போகப்போக கிருஷ்ணம்மாவோட இணங்கிப்போச்சு கீரி. கிருஷ்ணம்மாவும் ஒரு பொம்மை கணக்கா அதுகூட விளையாடத் தொடங்குனா. வீட்டுல ஒரு புள்ளை மாதிரி ஆயிப்போச்சு கீரி.

தெய்வ மனுஷிகள்: அனந்தாயி

ஒருக்கா, அரி அவசர வேலையா வெளியூருக்குப் போயிட்டாரு. அன்னிக்கின்னு பாத்து, வயல்ல அறுப்பு வேலை. அம்பது அறுவது கூலியாளுக வந்து வயல்ல எறங்கிட்டாக. அவுகளையெல்லாம் கண்காணிச்சு வேலை வாங்கணுமே. அனந்தாயி வழக்கம்போல புள்ளையை கீரிக்கிட்ட ஒப்படைச்சுட்டு, “இந்தா பாரு... வேலை முடிஞ்சு வீடு திரும்ப சாயங்காலம் ஆயிப்போகும். புள்ளையைப் பத்திரமாப் பாத்துக்கோ”ன்னு சொல்லிட்டு ரெண்டு பேருக்கும் தீனியெல்லாம் எடுத்து வெச்சுட்டுக் கிளம்பிட்டா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெண்டு பேரும் ஓடிப்பிடிச்சு வெளை யாண்டாக. கொஞ்ச நேரத்துல கிருஷ்ணம்மா தூங்கிட்டா. அவளுக்குப் பக்கத்துலயே உக்காந்து காவல் காத்துச்சு கீரி. அப்போன்னு பாத்து ஏதோ சரசரன்னு சத்தம். வாசம் புடிச்சிருச்சு கீரி. ஒரு நல்ல பாம்பு அந்தப்பக்கமா ஊர்ந்து வருது. ஆக்ரோஷமா எழுந்துருச்சுச்சு கீரி. வாசனை வந்த திசையில கண்ணை நல்லா உருட்டித் தேடுச்சு. பாம்பு நேரா கிருஷ்ணம்மா படுத்திருக்கிற தொட்டிக்கிட்ட வருது. ஒரே பாய்ச்சல். பாம்போட கழுத்துல இருந்துச்சு கீரியோட வாயி. பாம்பும் போராடுது. ரெண்டுக்கும் பெரிய சண்டை. உருண்டு பெரண்டு, அடிச்சுப் புடிச்சு பாம்பை துண்டு துண்டா கடிச்சுப் போட்டிருச்சு கீரி. வீடெல்லாம் ஒரே ரத்தம். கீரி உடம்புலயும் ரத்தம் அப்பியிருக்கு. கிருஷ்ணம்மா, இது எதுவுமே தெரியாம தொட்டிலில் நல்லாத் தூங்கிக்கிட்டிருக்கா.

கீரி அப்படியே வெளியே வந்துச்சு. நேரா அனந்தாயி வேலை செய்யிற வயக்காட்டுக்கு ஓடுச்சு. கீரி மட்டும் தனியா வர்றதைப் பாத்து அனந்தாயிக்கு அதிர்ச்சியாப் போச்சு. உடம்பெல்லாம் ரத்தம் வேற. பதறிப்போனா. கீரி இருந்த நிலையைப் பாத்து, “அது புள்ளையை கடிச்சுக் கொன்னுட்டு வந்திருக்கு”ன்னு நினைச்சுட்டா பாவிமவ. “அய்யோ... என் புள்ளைக்கு என்னாச்சு... கடிச்சுக் கொன்னுட்டியா... உன்னையை நம்பி விட்டுட்டு வந்தேனே”ன்னு ஒப்பாரி வெச்சுக்கிட்டே, பக்கத்துல இருந்த மம்பட்டிக் கழியெடுத்து கீரியை அடிச்சா. ஒரே அடி... கீரி அப்படியே மல்லாக்க விழுந்திருச்சு. ரெண்டு தடவை கீழும் மேழும் போய்வந்த மூச்சு மொத்தமா அடங்கிப்போச்சு.

மழைன்னா மழை. அதுவரைக்கும் பேயாத மழை. ஊரெல்லாம் அடிச்சு வெளுக்குது. ஒரு வாரமாச்சு. விடலே. சுனை பொங்கி ஊருக்குள்ள தண்ணி வருது.

வீட்டுக்கு வந்து பாத்தா, கிருஷ்ணம்மா விளையாடிக்கிட்டிருக்கா... அவளைக் கட்டி யணைச்சு வாரி முத்தமிட்டா அனந்தாயி. பக்கத்துல துண்டு துண்டாக் கெடந்துச்சு பாம்பு. அப்பத்தான் அவளுக்குப் புரிஞ்சுச்சு. ‘புள்ளையக் கடிக்கவந்த பாம்பைக் கொன்னு போட்டுட்டு நம்மைக் கூப்பிட வந்திருக்கு’ன்னு புரிஞ்சுக்கிட்டு குற்ற உணர்வோட வயக்காட் டுக்கு ஓடுனா... ரத்தம் ஒழுக செத்துக்கெடந்துச்சு கீரி. எல்லாப்பேரும் சேர்ந்து கீரிக்கு மரியாதை பண்ணி அடக்கம் செஞ்சாக.

புள்ளை மாதிரி பாத்துப் பாத்து வளர்த்த கீரியை நம்ம கையால கொன்னுட்டமேன்னு அனந்தாயிக்கு மனசு கலங்கிப்போச்சு. தூக்கமில்லை. சாப்பாடில்லை. திடீர்னு எழுந்து உக்காந்து அழுவா. வேலை வெட்டி செய்றதில்லை. அரிக்கு பயமாப்போச்சு. என்னென்னவோ சொல்லித் தேத்திப் பாத்தார். அவ மனசு ஆறலே. சோசியரை அழைச்சு, “இவ இப்படிக் கிடக்குறாளே... கீரியைக் கொன்னதுக்கு என்ன பரிகாரம்”னு கேட்டாரு. “தீர்த்தயாத்திரை போயி, தலை முழுகிட்டு வாங்க, பாவம் தீரும்”னாரு சோசியரு.

சில உறவுக்காரங்களை அழைச்சுக்கிட்டு பாபநாசம் போனாரு அரி. தலைமுழுகி பரிகாரம் பண்ண ராவாயிருச்சு. ‘தங்கிட்டுக் காலையில போகலாம்’னு உறவுக்காரங்கள்லாம் சொன்னாக. அங்கிருந்த மடத்துல தங்குனாக. நடுராத்திரி எழுந்து கரைப்பக்கம் ஒதுங்குனாரு அரி. அங்கே கெடந்த ஒரு நாகப்பாம்பு கால்ல ஏறிக் கொத்திருச்சு. அந்த இடத்துலயே நுரை தள்ளி செத்துப்போனாரு அரி.

காலையில எழுந்து பாத்த உறவுக்காரகள்லாம் அதிர்ந்து போனாக. அனந்தாயிக்கு சேதி போச்சு. ஏற்கெனவே தளர்ந்து போயிருந்த மகராசி, மயக்கம் போட்டு விழுந்துட்டா. எல்லாரையும் பாபநாசம் வரச்சொல்லி அங்கேயே எரியூட்டிட்டு ஊருக்கு வந்தாக.

தெய்வ மனுஷிகள்: அனந்தாயி

புருஷன் செத்து ஒரு மாசமாச்சு. வயக்காடு, கொல்லைக்காடெல்லாம் அப்படி அப்படியே கெடக்கு. வெளைஞ்ச நெல்லு உதிர்ந்துகொட்டிப்போச்சு. பயிரெல்லாம் கருகிக்கெடக்கு. அனந்தாயி ஓரளவுக்கு உடலும் மனசும் மீண்டு எழுந்து வயக்காட்டுக்குப் போனா. ஆனா, அங்கே அரியோட சொந்தக்காரகள்லாம் கூடிவந்துட்டாக. “நீ செஞ்ச தப்பாலதான் அரி செத்துப்போனான். இனிமே இங்கே உனக்கு எடமில்லை. சொத்தும் இல்லை. புள்ளையைத் தூக்கிக்கிட்டு கிளம்பிரு”ன்னு விரட்டுனாக.

அனந்தாயி அதிர்ந்துபோனா. நேரா, நாட்டாமைக்காரர்கிட்டப் போனா. “புருஷனைப் பறிகொடுத்துட்டு நிர்க்கதியா நிக்குற என்னை இப்படி விரட்டுறாகளே”ன்னு கண்ணீர் விட்டு அழுதா. நாட்டாமைக்காரரை அரியோட சொந்தக்கார ஆளுக பை நிறைய காசு கொடுத்து நல்லாக் கவனிச்சுட்டாக. அவரும் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுட்டு, ``அவுக சொல்றதுதான் நியாயம்... நீ ஊரை விட்டுப் போயாகணும்” தீர்ப்பைச் சொல்லிப்புட்டார்.

“அடப்பாவி... நீதியைக் கொன்னுட்டு இப்படி என்னை அபலையா ஆக்கிட்டியே, நீ நல்லாயிருக்க மாட்டே... உன் வம்சம் அழிஞ்சிரும்”னு மண்ணை வாரித்தூத்துனா. எல்லாரும் சேர்ந்து அவளை ஊரைவிட்டுத் துரத்துனாக. புள்ளையைத் தூக்கிக்கிட்டு கால்போன போக்குல நடந்தா மகராசி. சோறில்லை... தண்ணியில்லை... கண்ணுல ஆறா வடியுது கண்ணீர். காடு கரைன்னு போய்க்கிட்டேயிருக்கா. கிருஷ்ணம்மா சோந்து போயிட்டா... “அம்மா பசிக்குது பசிக்குது”னு அழுவுறா... எதுவும் அனந்தாயி காதுல விழுகலே.

ஊரைக்கடந்து ஒரு மலை... எதிர்புறத்துல பெரிய பாதாளம் அங்கே ஒரு சுனையிருக்கு. அந்தச் சுனைக்குப் பக்கத்துல போய் நின்னா. “அறியாம நான் செஞ்ச ஒரு தப்பு என்குடும்பத்தைப் பழி வாங்கிருச்சு. எம்புருஷன் அப்பாவி. அநியாயமா அவரு உசிரை பறிச்சிட்ட... என்னையும் ஏமாத்தி ஊரைவிட்டு விரட்டிட்டாக. இனிமே நாங்க உசுரோட இருந்து என்ன செய்யப்போறோம். எங்களையும் கூட்டிக்க”ன்னு சொல்லி கையெடுத்து வணங்கிட்டு கிருஷ்ணம்மாளை அப்படியே சுனையில வீசுனா. புள்ளை அலறிக்கிட்டே விழுந்து மூழ்கிப்போனா. அடுத்த நொடி, அனந்தாயியும் குதிச்சா. அவ குதிச்ச வேகத்துல சுனை நீரெல்லாம் அதிர்ந்து அடங்குச்சு.

மழைன்னா மழை. அதுவரைக்கும் பேயாத மழை. ஊரெல்லாம் அடிச்சு வெளுக்குது. ஒரு வாரமாச்சு. விடலே. சுனை பொங்கி ஊருக்குள்ள தண்ணி வருது. பரணி மேல ஏறி உக்காந்திருக்காரு நாட்டாமைக்காரர். அவர் வீட்டுக்குள்ள சிறுசும் பெருசுமா ரெண்டு உடல் மிதந்து வருது. மிரண்டு போய் தண்ணியில குதிச்சு அடையாளம் பாக்குறாரு. அனந்தாயியும் கிருஷ்ணம்மாளும்.

“தாயே... தெரியாம தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு”ன்னு சொன்னவரை இழுத்துக்கிட்டுப் போவுது வெள்ளம். சுவர்லயும் தூண்லயும் மோதி ஆளு உருத்தெரியாமப் போயிட்டாரு.

படிப்படியா மழைவிட்டுச்சு. ‘இந்த அழிவுக்குக் காரணம், அனந்தாயி யோட கோபம்தான்’னு மக்களுக்குப் புரிஞ்சுபோச்சு. அவ நினைவா ஒரு நடுகல் வெச்சு சாமியாக் கும்புட ஆரம்பிச்சாக. வழிவழியா அந்த வழிபாடு வளர்ந்துச்சு.

அனந்தாயி இப்போ ஸ்ரீவைகுண்டத்துல இருக்கா. அவளை எல்லாரும் ‘சந்தனமாரி’, ‘சந்தனமாரி’ன்னு அழைக்கிறாக. எல்லாருக்கும் அன்பையும் ஆசீர்வாதத்தையும் அள்ளிக்குடுத்துக்கிட்டு உக்காந் திருக்கா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism