மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள்: கோப்பி - 37

Human gods stories Goppi
பிரீமியம் ஸ்டோரி
News
Human gods stories Goppi

கோப்பி குடும்பத்துக்குப் பயந்து ஊரை விட்டுப்போன மக்கள், கோப்பியை நினைச்சு கலங்கிப்போனாக.

ந்தூர்ல புள்ளைகளை பள்ளிக்கூடம் சேக்குற வழக்கமெல்லாம் கிடையாது. எல்லாமே ஏழைக் குடும்பங்கதாம். பெரிய வீட்டு சமுத்திரத்தோட மகதான் கோப்பி. தேவதை மாதிரியிருப்பா. காலையில தூக்குச்சட்டியில கஞ்சியை ஊத்திக்கிட்டு கிளம்பினான்னா, பதினெட்டு ஜதை மாடுங்க, இருபது ஜதை ஆடுங்களை அணைகட்டி, மேய்ச்சு வயித்தை முழுசா நிரப்பி சாயங்காலம் கொண்டாந்து பட்டியில விடுவா.

கோப்பி வயசுப்புள்ளைக பத்திருபது பேரு ஆடு மாடுகளை ஓட்டிக்கிட்டு வரம்புக் காட்டுக்குள்ள போவாக. அதுல, கோமுகிப்பய மட்டும் அவகூட அன்பா பழகுவான். கோமுகி வீடு, ஊருக்கு ஒதுக்குப்புறத்துல இருக்கு. பெரிய வீட்டு ஆளுக, அந்தத் தெரு வழியா போகவர மாட்டாக. பெரிசா பேச்சு வார்த்தைகூட வெச்சுக்க மாட்டாக. ஆனா, இந்த வகை தொகையெல்லாம் தெரியுற வயசில்லை புள்ளைகளுக்கு. கோமுகி கொண்டு போற கஞ்சியை கோப்பி சாப்பிடுவா. கோப்பி கொண்டு போறதை கோமுகி சாப்பிடுவான். கோப்பியோட ஆடு மாடுக வழிதப்பி போயிருச்சுன்னா கோமுகிதான் ஓடிப்போயி பத்தியாருவான்.

கோப்பி பெரிய மனுஷியாயிட்டா. யாரைப் பாத்தாலும் வெக்கம் வருது. வயசுக்கு வந்த சடங்கு சாங்கியமெல்லாம் முடிஞ்சபெறவு, வழக்கம்போல ஆடு மாடுகளை ஓட்டிக்கிட்டு கிளம்புனா. கோமுகியும் ஆடு மாடுகளை ஓட்டிக்கிட்டு வரம்புக்காட்டுக்கு வந்தான். ரெண்டு புள்ளைகளும் வழக்கம்போல ஆடு மாடுகளை மேயவிட்டுட்டு மரத்தடியில உக்காந்து பேசிக்கிட்டிருந்தாக.

Human gods stories Goppi
Human gods stories Goppi

மாடுங்கள்லாம் வயிறு நிறைய மேஞ்சு முடிஞ்சு சுனைக்குத் தண்ணி குடிக்கப் போயிருச்சுக. ரெண்டு பேரும் எழுந்து சுனைக்குப் போய் எல்லாத்தையும் பத்திக்கிட்டு ஒண்ணுபோல ஊருக்குள்ள வந்தாக. இதுநாள் வரைக்கும் பச்சைப்புள்ளைக கணக்கா ரெண்டு பேரும் பேச்சு வார்த்தையா இருந்ததை யாரும் தப்பாப் பாக்கலே. இப்போ பெரிய புள்ளையா ஆயிட்டதால, ஆடு மாடு மேய்க்கிற மத்த புள்ளைகளுக்கு இது வித்தியாசமாப்பட்டுச்சு. அதுவும் பெரிய வீட்டுப்பொண்ணுக்கிட்ட இந்தப் பய கைகோத்துக்கிட்டுத் திரியிறது யாருக்கும் பிடிக்கலே.

அன்னிக்கே கோப்பியோட அப்பங்காரங் கிட்ட பத்த வெச்சுட்டாக. ஆடு மாடுகளை ஓட்டிக்கிட்டு வீட்டுக்குப்போன கோப்பியை கூப்பிட்டான் அப்பங்காரன். `அதென்ன அந்த சாதிக்காரப்பயலோட பேச்சு உனக்கு? நம்ம மானம் மரியாதியை காப்பாத்த மாட்டியா'ன்னு வஞ்சான். `அவன் நல்ல பையம்பா... மாடுகளைப் பத்த எனக்கு ஒத்தாசையா இருப்பான்'னு சொன்னா கோப்பி.

`வயசுக்கு வந்த புள்ளைக்கு ஆம்பளப் பய சகவாசம்லாம் சரிப்படாது.. நீ சின்னப் புள்ளையில்லை... பெரிய மனுஷியாயிட்டே. புரிஞ்சு நடந்துக்கோ'ன்னு திட்டி அனுப்பிட் டான்.

Human gods stories Goppi
Human gods stories Goppi

மறுநா, ஆடு மாடுகளோட போன கோப்பி, கோமுகி இருந்த பக்கமே திரும்பலே. அவன் வலிய வந்து பேசினப்பவும் முகம் கொடுக்கலே. ஏதோ பிரச்னைன்னு புரிஞ்சுக்கிட்டான் கோமுகி. நாலைஞ்சு நாள் ஓடுச்சு. கோப்பியால கோமுகிக்கிட்ட பேசாம இருக்க முடியலே. அப்பங்காரன் கண்டிச்சதை மறந்துபோனா. வழக்கம்போல ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சாக.

மகளைக் கண்காணிக்க, கூட ஆடு மேய்க்கிற பயலுக சில பேரை நியமிச்சிருந்தான் கோப்பி யோட அப்பங்காரன். அந்தப்பயலுக இதைப்பாத்துட்டுப் போயி சொல்லிக் குடுத்துட்டானுக.

சாயங்காலம் வீட்டுக்குப் போனா கோப்பி. வந்தவளை வாசல்லயே நிறுத்துனாக. `என்ன தைரியம் இருந்தா திரும்பவும் அந்தப் பயலோட கொஞ்சி குலாவிக்கிட்டுத் திரிவே. இனிமே இந்த வீட்டுல உனக்கு இடமில்லை. வெளியே போ'ன்னு திட்டினாக. கோப்பி கதறி அழுதா... `என்னை நம்புங்க... நாங்க எந்தத் தப்பும் பண்ணலே. நண்பர்களாதான் பழகுறோம்'னா. அவுக நம்பத் தயாரில்லை. ராத்திரி முழுவதும் திட்டுனாக. சாப்பிடக்கூடக் கூப்பிடலே.

நள்ளிரவாச்சு. கோப்பிக்குத் தூக்கமே வரலே. `கோமுகிகூட நட்பா இருக்கிறது தப்பா... நம்மை அப்பன் ஆத்தாகூட நம்ப மாட்டேங்கிறாங்களே'ன்னு நினைச்சு அழுதா. மனசுக்குள்ள நிறைய குழப்பங்கள். எழுந்தா. வீட்டைவிட்டு வெளியே வந்தா. கால்போன போக்குல நடந்தா. ஆள் அரவ மில்லை. பழக்கப்பட்டவங்கிறதால ஊர் நாயிங்ககூட குரைக்கலே.

`எந்தப் பிழையும் செய்யாத நம்மை பழி சொல்லிட்டாக... இனிமே உசுரோட வாழக் கூடாது'ங்கிற எண்ணம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. ஊர் எல்லைக்கு வந்துட்டா. எல்லையில மண்பாண்டம் செய்றவுக சூளைபோட்டு பானைகளை வேக வெச்சிருந்தாக. தகதகன்னு சூளை எரிஞ்சுக்கிட்டிருக்கு.

கோப்பி அந்தச் சூளைக்கு முன்னாடி போயி நின்னா. சூளையோட முகப்புல வெறகு வைக்க கொஞ்சம் எடம் விட்டிருப்பாக. அதை பிரிச்சா. நெருப்பு கனன்று எரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. எந்தத் தயக்கமும் இல்லாம சாதாரணமா அந்த நெருப்புக்குள்ள எறங்கினா. ஏற்கெனவே பதமா எரிஞ்சுக்கிட்டிருந்த நெருப்பு கோப்பியை வாரிச்சுருட்டிக்கிட்டு எரிய ஆரம்பிச்சுச்சு. பானையோட பானையா அவ உடம்பு வெந்து தணியத் தொடங்குச்சு.

Human gods stories Goppi
Human gods stories Goppi

விடிஞ்சுச்சு. கோப்பியை வீட்டுல காணாம கொதிச்சுப் போனாக எல்லாப் பேரும். `அந்த கோமுகிப்பயதான் அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டா'ன்னு அருவா கத்தின்னு ஆயுதங்களை அள்ளிக்கிட்டு அந்தக் குடியிருப்புக்குள்ளே புகுந்தாக. கண்ணுலபட்ட ஆளுங்களை எல்லாம் அடிச்சு துரத்துனாக. குடியிருப்புல இருந்த எல்லாரும் குழந்தை குட்டிகளைத் தூக்கிக்கிட்டு உயிரை கையில புடிச்சுக்கிட்டு ஓடுனாக. கோமுகியைப் புடிச்சு மரத்துல கட்டி வெச்சுட்டாக. `கோப்பி எங்கே போனான்னு எனக்குத் தெரியாது'ன்னு கத்திப்பாத்தான், கதறிப்பாத்தான். கையெடுத்துக் கும்பிட்டும் யாரும் காது கொடுத்துக் கேக்கலே. அடிச்சு, கட்டைக்கூட அவுக்காம போட்டுட்டு வந்துட்டாக.

சூளையில இருந்து வெந்த பானைகளை எடுக்க மண்பாண்டம் செய்யிற ஆளுக வந்தாக. சூளையைப் பிரிக்க, உள்ளே ஒரு பொண்ணு, பாதியளவு வெந்து சாம்பலாக் கெடக்குறதைப் பாத்து மிரண்டு போனாக. எல்லாரும் ஓடிவந்தாக. சூளைக்குள்ள கொஞ்சூண்டு சேலைத்துணி மட்டும் எரியாமக் கெடந்துச்சு. கோப்பியோட அப்பங்காரன் அந்தச் சேலைத்துணியை வெச்சு சாம்பலாக் கெடக்குறது தம் மவ கோப்பிதான்னு கண்டுபிடிச்சுட்டான். எல்லாரும் கதறி அழுதாக.

கோப்பி குடும்பத்துக்குப் பயந்து ஊரை விட்டுப்போன மக்கள், கோப்பியை நினைச்சு கலங்கிப்போனாக. நம்ம சாதிக் காரப் பயலோட நட்பா பழகுன ஒரே காரணத்துக்காக ஒரு கன்னிப்பொண்ணோட உசுரு போயிருச்சேன்னு நினைச்சு, அவளை கையெடுத்து கும்பிட ஆரம்பிச்சாக. கொஞ்சூண்டு சேலையக் காட்டி அடையாளம் சொன்னதால எல்லாரும் அவளை சீலைக்காரி, சீலைக்காரின்னு அழைக்கிறாக.

தலைமுறை தலைமுறையா அந்த வழிபாடு வளர்ந்துச்சு. மதுரைக்குப் பக்கத்துல சிலமலைப்பட்டின்னு ஓர் ஊரிருக்கு. அங்கே இன்னும் கோப்பி வாழ்ந்துக்கிட்டிருக்கா. தினமும் புதுப் பானையில தண்ணி வெச்சு அவ அக்னியை அணைச்சுக்கிட்டிருக்காக மக்கள்!