
முருகுவுக்கும் பேச்சிக்கும் கலியாணமாகி 10 வருஷங்களாச்சு. முருகு, ஊருக்குள்ள பெரிய நாட்டாமைக்காரு.
ஆனா, 10 தலைமுறையா அவுக குடும்பத்துல யாருக்கும் பொம்பளப்புள்ள வாய்க்கலே. ஏன், முருகு - பேச்சிக்கே வரிசையா வருஷத் துக்கு ஒரு பய... `அடுத்து பொண்ணு, அடுத்து பொண்ணு’ன்னு பாத்துப் பாத்து பேறுபாத்தா, எல்லாம் ஆம்பளைப் பயலுக. மொத்தம் ஏழாகிப்போச்சு.
சுடலைமாடன் கோயிலுக்குப் போயி, `மாடா... முதன்முறையா ஒண்ணு கேக்குறோம். எங்களுக்கு ஒரு பொம்பளப் புள்ளைய வரமாக் குடு'ன்னு கேட்டாக. பூசாரி சோழி போட்டுப் பாத்து, ``எண்ணிப் பன்னெண்டே மாசத்துல ஒரு தேவதை பெறப்பா. மாடனுக்கு உகந்ததா, `மாடத்தி’ன்னு பேரு வைங்க”ன்னு சொன்னாரு. பேச்சிக்கும் முருகுவுக்கும் மனசு குளிர்ந்துபோச்சு.

காலம் ஓடுச்சு. பூசாரி சொன்னமாதிரி மாடன் கண் தெறந்தான். பேச்சி முழுகாம இருந்தா. பேச்சிக்கு வயிறு பெருத்துக் கெடந்துச்சு. வைத்தியச்சி, ``நிச்சயம் பொம்பளைப் புள்ளதான்”னு உறுதியாச் சொன்னா. சரியா பத்தாம் மாசம், அழகு தேவதையா ஒரு பொம்பளப் புள்ளையைப் பெத்தெடுத்தா பேச்சி. முருகுவுக்கு சந்தோஷம் பிடிபடலே. தலைமுறையாப் பொம்பளைப் புள்ளையைப் பாக்காத குடும்பம். ஏழு அண்ணங்காரனுகளும் தங்கச்சி மேல உசுரா இருந்தானுவ.
மாடத்திக்கு 10 வயசாகும்போது, முருகுவுக்கு உடம்புக்கு முடியாம போச்சு. படுத்த படுக்கையா கெடந்தாரு. அப்பனைக் காப்பாத்த, பயலுவ மலைநாட்டுல இருந் தெல்லாம் வைத்தியர்களை அழைச்சுக்கிட்டு வந்தானுவ. ஆனா, முடியலே. ஒருநா நிசியில மனுஷன் போய்ச்சேந்துட்டாரு. புருஷன் போய்ச்சேந்த கவலை பேச்சியையும் படுக்கையில தள்ளிருச்சு. அடுத்த ஆறு மாசத்துல அவளும் போய்ச் சேந்துட்டா.
முருகு இறந்துபோன பின்னாடி ஊரு நாட்டாமைப் பொறுப்பு, மூத்த மவன் கந்தன் தலைக்கு வந்துச்சு. ஏழு பயலுவளும் ஒத்துமையா நிப்பானுக. மாடத்தியை உசுருக்கு உசுரா பாத்துக்கிட்டானுவ. அண்ணன்மார்களைக் கட்டிக்கிட்டு வந்தவளுகளும் நாத்தனாரை நல்லா பாத்துக்கிட்டாளுக.
அண்டையூர்ல பெருந்தலைக்கட்டுக் காரன் அருணன். கந்தனும் அருணனும் மாமன் மச்சான் மொற. அருணந்தான் அந்தூருக்கு நாட்டாமைக்காரன். ஒருக்கா, அண்டையூர்க்காரகளோட ஒரு வழக்கு. நெலத்தை ஒத்திவெச்சு கடன்வாங்குன பயக திருப்பிக் கட்டலே. இந்தூரு ஆளு போயி அங்கேயிருந்த வயக்காட்டை உழுதுப்புட்டான். கந்தன்கிட்ட பஞ்சாயத்து வந்துச்சு. அண்டையூர் ஆளு பணம் வாங்கிட்டு திருப்பித்தராம ஏமாத்தினது தெரியவந்துச்சு. அவங்கிட்ட இருந்து நிலத்தைப் பறிச்சு, கடன் கொடுத்தவங்கிட்ட கொடுத்து பிராதை முடிச்சுவெச்சான்.
ஆனா, அண்டையூர் ஆளுகளுக்கு கந்தன் மேல வருத்தம். `பஞ்சாயத்து நேர்மையா நடக்கலே... நம்மளைப் பழி வாங்கிட்டான்’னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாக. அருணன் காதுக்கும் சேதி வந்துச்சு. ``பொறுமையா இருங்க, நம்ம உறவுக்காரன்... பகைச்சுக்க வேண்டாம்”னு அமைதிப்படுத்தி அனுப்புனான்.
மாடத்தி பூப்பெய்திட்டா. `அந்த வட்டாரத்துல அவளுக்கிணையான பொண்ணு இல்லே'ன்னு ஊரெல்லாம் பேச்சு. அண்ணங்காரனுக, நாடே வியக்குற அளவுக்கு நீராட்டு விழாவை நடத்துனானுக. உறவுக்காரகள்லாம் `எனக்குக் கட்டு’, `உனக்குக் கட்டு’ன்னு சம்மந்தம் பேச வந்து வரிசைகட்டி நின்னாக. ஆனா, ``ஒரு வருஷம் கழிச்சுத்தான் இந்தப் புள்ளைக்கு கலியாண யோகம் வருது. அதுக்கு முன்னாடி எம்மாம்பெரிய சம்மந்தம் வந்தாலும் ஒப்புக்காதீய”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு நம்பூதிரி.
அண்டையூர் நாட்டாமை அருணனுக்கு ஒரு பய. அவனுக்கு மாடத்தி மேல ஒரு கண்ணு. இந்த சேதி அருணனுக்குத் தெரியவந்துச்சு. சரி... கந்தன்கிட்ட போயி பொண்ணு கேப்போம்னு தாம்பூலத்தட்டெல்லாம் எடுத்துக்கிட்டு ஊர் பெரிய மனுஷங்களோட போனான் அருணன். வந்தவுகளை முகம் மலர வரவேத்து வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டுப் போய் உக்கார வெச்சு உபசரிச்சான் கந்தன்.
“மாடத்தியை எம் பயலுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம்”னு ஆரம்பிச்சான் அருணன்.
``சரிதான் மச்சான்... உங்களோட சம்மந்தம் வெச்சுக்கிறதுல பிரச்னையில்லை. ஆனா, ஒரு வருஷம் கழிச்சுத்தான் தங்கச்சிக்கு கெரகம் கூடிவருதுன்னு சொல்லியிருக்காரு நம்பூதிரி. எதுவா இருந்தாலும் அதுக்கப்புறம் பேசிக்கலாம்”னு சொன்னான்.
அருணனுக்கு முகம் வாடிப்போச்சு. ``சரி மச்சான் பாக்கலாம்”னு சொல்லிட்டு ஊரு உறவுகளைக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டான். கந்தனைப் புடிக்காத பயலுகளுக்கு இது நல்ல சாக்காப்போச்சு. ``உங்க தராதரம் பத்தியெல்லாம் தப்புத்தப்பா கந்தனும் அவன் தம்பிக்காரனுங்களும் பேசுறானுங்க. அவனுங்க வீட்டுக்கு ஏன் பொண்ணு கேட்டுப் போனீங்க”ன்னு ஏத்திவிட்டுட்டானுவ. அருணனுக்குக் கோபம் கூடிப்போச்சு. கந்தன் மேல வன்மமாகிப்போச்சு. சரியான நேரத்துல பழி வாங்கணும்னு காத்திருந்தான்.

வருஷம் ஓடுச்சு. தங்கச்சிக்கு கல்யாண ஏற்பாட்டுல இறங்குனானுக அண்ணங் காரனுங்க. கந்தனுக்கு தங்கச்சியை அருணன் குடும்பத்துல கொடுக்கணும்னு ஆசை. ஆனா, உறவுக்காரங்கள்லாம், `அவன் ஏற்கெனவே பொண்ணு கேட்டு வந்துபோனவன். அப்போ இல்லேன்னு சொல்லி அனுப்பி வெச்சுட்டு, இப்போ வலிய போய் பேசினா சுத்தப்படாது. வேற சம்மந்தம் பாத்துக்கலாம்’னு சொல்லிட்டாக. அசலூர்ல இருந்து ஒரு நல்ல சம்மந்தம் வந்துச்சு. `எங்க அண்ணனுங்க யாருக்குக் கழுத்தை காட்டச் சொன்னாலும் காட்டுவேன்'னு சொல்லிட்டா மாடத்தி. ஒரு முகூர்த்தத்துல ஊரு உலகமே வாழ்த்த கலியாணம் முடிஞ்சுச்சு.
`தான் கேட்டுப்போன பொண்ணை அசலூர்க் காரனுக்குக் கட்டிக்கொடுத்துட்டானே’ன்னு அருணனுக்கு ரத்தம் கொதிச்சுப்போச்சு. கந்தன் குடும்பத்தைப் பழிவாங்க நாள் பாத்துக்கிட்டிருந்தான்.
மாடத்தியை மகாராணி கணக்கா பாத்துக்கிட்டான் மாப்பிள்ளைக்காரன். அடுத்த மாசமே முழுகாம இருந்தா மாடத்தி. ஆனா, மாமியாக்காரிக்கும் மாடத்திக்கும் சரியா வரலை. மகன் இருந்தா ஒருமாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரின்னு நடந்துக்கிட்டா மாமியா. மாடத்தி எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்தா. அடுத்தடுத்து ரெண்டு புள்ளைகளும் பொறந்துச்சு. ஆம்புளைப் புள்ளைக்கு `சுடலை’ன்னும் பொம்பளைப் புள்ளைக்கு `எசக்கி’ன்னும் பேரு வெச்சாக. மருமகப் புள்ளைகளுக்கு தங்கமும் வைரமும் தளும்பத் தளும்ப கொண்டாந்து செஞ்சுட்டுப்போனானுக மாமங்காரனுக.
மாடத்தி வீட்டுக்காரனுக்கு லங்காவுக்குப் போயி சம்பாதிக்கணும்னு ஆசை. புருஷன் பேச்சைத்தட்டாத மாடத்தி, கண்ணு கலங்கினபடிக்கு, `போயிட்டு வாங்க'ன்னு சொன்னா. வீட்டுல விட்டா அம்மாக்காரி கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பான்னு மாடத்தியை அழைக்கிட்டு பெறந்த வீட்டுக்கு வந்தான் மாப்பிள்ளை.
``மச்சாங்களா... நான் லங்காவுக்கு தொழில் செய்யப்போறேன். அஞ்சு வருஷமோ ஆறு வருஷமோ... திரும்பி வர்ற வரைக்கும் எம் பொண்டாட்டியையும் புள்ளைகளையும் உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போறேன். கண்ணுக்குக் கண்ணா பாத்துக்கிடணும்”னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான்.
நாளு, நாலுகால் பாய்ச்சல்ல ஓடுச்சு. ஊர்ல கொடை. பதினெட்டூரு சனங்க கூடி நடத்துற விழா. புள்ளைகளுக்கெல்லாம் புத்தாடை உடுத்தி திருவிழா பாக்க கூட்டிக் கிட்டுப் போனா மாடத்தி. பெருசு பெருசா ராட்டினங்கள் இருந்துச்சு. சுடலையும் எசக்கியும் `ராட்டினத்துல ஏறணும்'னு அழுதுச்சுக. ரெண்டு புள்ளைகளையும் ஏத்திவிட்டுட்டு அதுக சந்தோஷத்துல சிரிக்கிறதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தா மாடத்தி. ராட்டினம் சுத்தி முடிச்சு நின்னப்போ, ஓர் ஆளு புள்ளைகளை ராட்டினப் பொட்டியில இருந்து தூக்கி மாடத்திக்கிட்ட கொடுத்தாரு. இதை அருணனும் அவுக உறவுக்காரகளும் பாத்துக்கிட்டிருந்தாக. அவுக மனசுக்குள்ள விஷம் சுரக்க ஆரம்பிச்சிருச்சு.
இது நடந்து கொஞ்சநாள் கழிச்சு, அருணனோட பங்காளி வகையறாவுக்கும் கந்தனோட சொந்தக்காரன் ஒருத்தனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையாகிப்போச்சு. பஞ்சாயத்து கந்தன்கிட்ட வந்துச்சு. கந்தன் நியாயம் பேசுனான். அருணனும் அவனோட ஆளுகளும், ``என்னய்யா நீரு... ஊரு உலகத்துக்கெல்லாம் பெரிய இவரு மாதிரி நியாயம் சொல்றீரு. உம்ம தங்கச்சியை மட்டும் கண்டுக்கிற மாட்டேங்கிறீரு... அவ, திருவிழாவுல அசலூர்க்காரன்கூட ராட்டினத் துல ஏறி விளையாடிக்கிட்டுத் திரியறா”ன்னு சொல்லிப்புட்டாக.
கந்தனுக்கும் கூடநின்ன தம்பிக்காரனு களுக்கும் கோபம் ஏறிப்போச்சு. `என்னய்யா சொன்னீரு'ன்னு சண்டைக்குக் கிளம்புனானுக. எல்லாப்பேரும் கூடி ரெண்டு தரப்பையும் சமாதானம் செஞ்சு அனுப்பி வெச்சாக.
உள்ளூரு ஆளுககிட்ட விசாரிச்சானுக அண்ணன்காரனுக. எல்லாப்பேரும் மாடத்தியை ராட்டினத்துக்குப் பக்கத்துல பாத்ததா சொன்னாங்க.
மாமியாக்காரிக்கும் மாடத்திக்கும் சரியா வரலை. மகன் இருந்தா ஒருமாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரின்னு நடந்துக்கிட்டா மாமியா.
கந்தனுக்கும் தம்பிக்காரனுகளுக்கும் பெரிய அவமானமாப்போச்சு. `தங்கச்சியை தங்கத்துக்குத் தங்கமா பாத்துப்பாத்து வளத் தெடுத்தோம். இப்படியொரு அவப்பெயரை தேடித் தந்துட்டாளே’ன்னு வேதனை. இந்த அவமானத்துல இருந்து வெளியே வரணும்னா ஒரே வழிதான். நம்ம கௌரவத்தைக் காப்பாத்தியாகணும். இறுதியா ஒரு முடிவுக்கு வந்தானுக.
மறுநாள் காலையில தங்கச்சியை அழைச்சான் கந்தன். ``ஆத்தா... முள்ளுக்காட்டுல நிறைய மரங்க சாஞ்சு கெடக்கு. நாங்க போயி வெட்டிப் போட்டு வைக்கிறோம். கூழெடுத்துக்கிட்டு வந்திரு ஆத்தா”ன்னு சொல்லிட்டு ஏழு பேரும் கிளம்பிட்டானுக. அண்ணங்களுக்குப் புடிச்ச சோளக் கூழெடுத்துக்கிட்டு கிளம்புனா மாடத்தி. புள்ளைக இரண்டும் `நாங்களும் வர்றோம்'னு கிளம்புச்சுக. `முள்ளுக்காட்டுல பாம்பு, அரணைன்னு நிறைய விஷப்பூச்சிக கெடக்குது. நீங்க விளையாடுங்க. நான் மட்டும் போயிட்டு ஓடியாந்திருவேன்'னு சொல்லிட்டுக் கிளம்புனா.
முள்ளுக்காட்டு ஆலமரத்தடியில ஏழு அண்ணனுகளும் உக்காந்திருந்தானுக. ``ஆத்தா... இந்த வெறகுகளைக் கொஞ்சம் வெரசா அள்ளிப் போடு. வானம் கருக்குது”ன்னு சொன்னான் கந்தன். மாடத்தி குனிஞ்சு வெறகுகளை எடுத்தா பாருங்க. எழுந்திருச்சு வந்து வாளைச் சுழட்டு னான் ஓர் அண்ணங்காரன். மாடத்தி தலை துண்டாகிப்போச்சு. ``உன்னை எங்க சொத்தா நினைச்சோம். இப்படி எங்க பேரைக் கெடுத்து அவமானப்படுத்திட்டியே ஆத்தா. ஆசை ஆசையா தூக்கி வளத்த கையாலயே வெட்டி கொல்ல வெச்சுட்டியே”ன்னு கண்ணீர் விட்டான் கந்தன். மாடத்தி வாயிலருந்து, ``அண்ணா, இப்படி ஒரு பாவம் பண்ணிட்டியளே”ன்னு வார்த்தைகள் வந்து அடங்கிப்போச்சு. எல்லாப்பேரும் தங்கச்சிக்காரியைப் பாத்து கத்திக் கதறி அழுதானுக.
உடலையும் தலையையும் எடுத்து அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்குப் போனானுக. புள்ளைக ரெண்டும், `மாமா... அம்மா எங்கே'ன்னு கேட்டுச்சுக. `அம்மா, அப்பாவைக் கூட்டியாற லங்காவுக்குப் போயிருச்சு'ன்னு சமாதானம் செஞ்சாக.
இது நடந்து ஒரு வாரத்துக்குள்ள கந்தனுக்கு முதுகுல ராஜபிளவை கண்டுபோச்சு. ஆடு மாடெல்லாம் செத்து விழுந்துச்சு. பயிரெல்லாம் கருகிப்போச்சு. சிண்டு சிறுசுகலெல்லாம் நோய்வாய்ப்பட்டு படுத்திருச்சுக. மத்த அண்ணங் காரனுகளுக்கும் வேற வேற அறிகுறிகள் வரத் தொடங்குச்சு.
கெட்டதெல்லாம் ஒண்ணாச்சேந்து நடக்கு தேன்னு பயந்துபோன உறவுக்காரக, நம்பூதிரியை அழைச்சாந்து குறி கேட்டாக. ``அகாலமாப்போன இந்த வீட்டோட தாய் தெய்வம் ஒண்ணு பலி கேக்குது. அதைச் சாந்தப்படுத்தணும். அந்த தாய்க்குக் கல்லெடுத்து வழிபட்டு, அது காலடியில சரணடைஞ்சிருங்க”ன்னாரு நம்பூதிரி. `மாடத்திதான் எல்லாத்தையும் ஆட்டு விக்கிறா’ன்னு எல்லாருக்கும் புரிஞ்சுபோச்சு. ``எங்களை மன்னிச்சிரு ஆத்தா”ன்னு அவளைக் கையெடுத்துக் கும்புட ஆரம்பிச்சாக. மாடத்தியும் கருணையோட சாந்தமாகி தெய்வமா உறைஞ்சுட்டா.
மாடத்தியைப் பாக்கணும்போல இருந்தா, திருச்செந்தூரு பக்கத்துல இருந்து பன்னம்பாறைக்குப் போங்க. கம்பீரமும் கனிவுமா நின்னுக்கிட்டிருக்கா மாடத்தி. அவ முகத்தைப் பாத்து கையெடுத்துக் கும்பிட்டு வந்தா, மனசுக்குள்ள இருக்கிற எல்லா கெட்ட எண்ணமும் அழிஞ்சு போவும்.