மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - பளிச்சி - 32

Human gods stories Palichi
பிரீமியம் ஸ்டோரி
News
Human gods stories Palichi

அடர்ந்த காட்டுக்கு நடுவுல இருக்கு அந்த ஊரு. ஊரோட தலைவர் கொத்தல்லி பேச்சுக்கு மறுபேச்சு பேசாது ஜனம். எல்லா வீடும் மூங்கிலை ஊணி கோரைப்புல்லு மேஞ்ச வீடுக.

சிறுத்தை, காட்டுப்பன்னின்னு விலங்குகளும் மனுஷங்களுக்கு இணையா உலவித்திரியுற காடு. குடியிருப்புக்கு மேல ஓர் அருவி. அருவிக்குப் பக்கத்துல இருக்கிற காந்தமரத்துலதான் அந்த ஜனங்களின் தேவதை குடியிருக்கா. பல்லெல்லாம் பூஞ்சையாகிப்போன கரிக்கோட்டான் கிழவன்தான் பூசாரி. அவன் உருவுல இறங்கி வர்ற தேவதை, நல்வாக்கு சொல்லுவா. வாக்குக் கேட்காம ஒரு காரியமும் செய்ய மாட்டாக அந்த மக்கள்.

தேனெடுக்கிறது, கடுக்காய், நெல்லிக்காய் சேகரிக்கிறது, கிழங்குகளைத் தோண்டி எடுக்கறதுன்னு காடு சார்ந்தே அவங்க வாழ்க்கை இருந்துச்சு. ஆம்பளைக எல்லாரும் அதிகாலை கிளம்பி காட்டுக்குள்ள போயிருவாக. ராவோடதான் திரும்பி வருவாக. பொண்டுகள்லாம் ஆம்பிளைக சேகரிச்சுக்கொண்டாந்த பொருள்களை தலையில சுமந்துக்கிட்டு கீழ்நாட்டுக்குள்ள போய் நெல்லுக்கு, தானியத்துக்கு வித்துட்டு வருவாங்க. அதை வெச்சுத்தான் சோறு தண்ணி ஆகாரமெல்லாம்.

கொத்தல்லிக்கு ஒரு மவ. பேரு பளிச்சி. அவ பெறந்து விழுந்தப்போ, பளியக் குடியில எப்படி இப்படியோர் அழகுப் புள்ள பெறந்துச்சுன்னு சாதி சனங்களே ஆச்சர்யப்பட்டுப்போனாக. நம்ம வனதேவதையே மனுஷ உசுரெடுத்து வந்து பெறந்திருக்குன்னு வாக்குச் சொன்னான் பூசாரி கரிக்கோட்டான்.

Human gods stories Palichi
Human gods stories Palichi

கொத்தல்லி, மகளை உசுருக்கு உசுரா பாத்து வளத்தான். காட்டுக்கொடி மாதிரி சுதந்திரமா வளந்தா பளிச்சி. புள்ளைக்குப் பாதம் நோகுமுன்னு காட்டுப்பொருள் விக்கக்கூட கீழ்நாட்டுக்கு அனுப்புறதில்லை. ராணி கணக்கா கிராமத்துக்குள்ளயே திரிவா. கொத்தல்லியும் அவம் பொஞ்சாதியும் காலை யில காட்டுக்குள்ள ஏறுனா அந்தியிலதான் திரும்புவாக. பளிச்சி மட்டும் வீட்டுல இருப்பா.

கீழ்நாட்டுல தானிய யாவாரம் செய்றவன் மணிக்கொடி. காட்டுக்குள்ள வாழுற மக்கள்கிட்ட பொருள்களை வாங்கிட்டுப் போயி கீழ்நாட்டுல விப்பான். ஆளு இளம் பய. இன்னும் கலியாணமாகலே. அக்கா, தங்கச்சின்னு அஞ்சாறு பேரோட பெறந்தவன். வாட்டசாட்டமா இருப்பான்.

அன்னிக்கு மூங்கிலரசி வாங்க காட்டுக்குள்ள வந்தவனுக்கு கடுமையான தண்ணித் தாகம். வெயிலு மண்டையை உடைக்குது. தொண்டை வறண்டுபோச்சு. சுனை, வாய்க்கா, அருவி, ஊத்துன்னு எல்லாம் காஞ்சு கெடக்கு. எங்காவது ஒரு வாய் தண்ணி கெடைக்காதான்னு தேடி அலைஞ்சவன், கடைசியா இந்தக் கிராமத்துக்கு வந்துட்டான். எல்லா வீடும் அடைச்சுக் கெடக்கு. ஒத்தைவீடு - பளிச்சி வீடு மட்டும் தெறந்திருக்கு. வாசல்ல நின்னுக்கிட்டு, “அம்மா... வீட்டுல யாராவது இருக்கீங்களா... கொஞ்சம் தண்ணி கொடுங்களே”ன்னு கேட்டான்.

யாருமில்லாத நேரத்துல திடீர்னு ஒரு வேத்தாளு... அதுவும் ஓர் ஆம்பளையோட குரல் கேக்குதேன்னு பளிச்சிக்குக் குழப்பம். எட்டிப்பாத்தா. இதுவரைக்கும் பார்த்தறியாத ஓர் ஆம்பளை நிக்குறான். வெளியே போகலாமா, வேணாமான்னு யோசிச்சா. என்ன இருந்தாலும் தாகம்னு கேட்டு வந்தவுகளை தவிக்கவிடுறது நியாயமில்லை. ஒரு பானையில தண்ணியள்ளிக்கிட்டுப் போயி கொடுத்தா. இருந்த தாகத்துக்கு ஒரு சொட்டு விடாம குடிச்சு முடிச்சான் மணிக்கொடி.

தாகம் தீர்ந்ததும் பளிச்சியோட முகத்தைப் பாத்தான் மணிக்கொடி. நிலா மாதிரி முகம். “இந்த கிராமத்துல எல்லா வீடும் அடைச்சுக் கெடக்கு... நீ மட்டும் தனியா இருக்கியே... பெரியவுகள்லாம் எங்கே?”ன்னு கேட்டான். அவனோட அணுகுமுறை பளிச்சியோட பயத்தைப் போக்குச்சு. அவள் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தான் மணிக்கொடி. அந்த நொடியே அவன் மனசுக்குள்ள புகுந்துட்டா பளிச்சி.

பளிச்சிக்கும் அவன், திடீர்னு மனசுக்கு நெருக்கமான மாதிரி தெரிஞ்சுச்சு. தயக்க மெல்லாம் காணாமப் போச்சு. நேரம் போனது தெரியலே. பேசிக்கிட்டே இருந்தாக ரெண்டு பேரும். தன் குடும்பம் பத்தி, தொழில் பத்தியெல்லாம் சொன்னான் மணிக்கொடி. பொழுது கவுந்திருச்சு. காட்டுக்குப் போன ஆம்பளைக திரும்புறதுக்கு முன்னோட்டமா நாய்க்கூட்டம் குரைச்சுக்கிட்டே நகர்ந்து வருது. பளிச்சிக்கு பகீர்னு ஆகிப்போச்சு. யாரு என்னன்னே தெரியாத ஓர் ஆம்பளைக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிக்கோமேன்னு அச்சமாப் போச்சு. முகத்துல படர்ந்து வழியுது வெக்கம். கதவை அடைச்சுட்டு உள்ளே போகப் போனா. “பளிச்சி... இதுவரைக்கும் உன்னமாதிரி ஒரு பொண்ணை நான் பாக்கலே. உன்னைப் பாத்த நிமிஷம் மனதைப் பறிகுடுத்துட்டேன். நாம ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கலாமா” ன்னு கேட்டான் மணிக்கொடி.

பளிச்சி மெரண்டு போனா. எந்த ஊரு, என்ன குலம்னு எதுவுமே தெரியாது. திடீர்னு முகம் பாத்து திருமணம் செஞ்சுக்கலாமான்னு கேட்கிறானேன்னு உடம்பு பதறுது. ஆனா, தன்னையறியாம அவன் மனசுக்குள்ள இறங்கிட்டான்னு உணர்ந்தா. முழுசா முகத்தை நிமிர்ந்து பாத்தா. கண்ணு ரெண்டும் திருமணம் செஞ்சுக்கலாம்னு சொன்னுச்சு. அவளோட புன்னகையையும் வெட்கத்தையும் பாத்த மணிக்கொடி, “இது போன ஜென்மத்துப் பந்தம் போல பளிச்சி. தாகமெடுத்து தண்ணி குடிக்க வந்தவன் நான். உன்னைப் பாக்கத்தான், தாகமெடுக்க வெச்சு என்னை இந்தப் பக்கம் நடத்திக்கொண்டாந்திருக்கான் அந்தக் கடவுள். நான் சீக்கிரமே திரும்பவும் இங்கே வருவேன். பெத்தவங்ககிட்ட பேசி அவங்களையும் அழைச்சுக்கிட்டு வந்து உன் அப்பாக்கிட்ட பொண்ணு கேட்பேன். முறைப்படி சாதி, சனம் கூடிநிக்க திருமணம் செஞ்சுக்குவோம்”னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.

அவன் போனதும் திடீர்னு எதையோ இழந்துட்டமாதிரி இருந்துச்சு பளிச்சிக்கு. வேலை முடிச்சு வீட்டுக்கு வந்த கொத்தல்லியும் அவன் பொஞ்சாதியும் மகள் முகம் சோந்துபோயிருக்கிறதைப் பாத்து என்ன, ஏதுன்னு விசாரிச்சாக. எதையும் வெளிக்காட்டிக்கலே பளிச்சி.

நாளாச்சு, வாரமாச்சு, மாசமாச்சு. ‘வர்றேன்’னு சொல்லிட்டுப்போன மணிக்கொடி வந்தபாடில்லை. தவிச்சுப்போனா பளிச்சி. சாப்பாடு, தண்ணி இறங்கலே. ராத்திரி தூக்கம் வரலே. காரணமேயில்லாம அழுகை வருது. மகளோட நிலைமையைப் பாத்து கொத்தல்லிக்குக் கவலையாப் போச்சு. ஆவி, கீவி அடிச்சிருக்குமோன்னு கரிக்கோட்டாங்கிட்ட குறியெல்லாம் கேட்டுப்பாத்தான். “இந்த காட்டுக்குத் தொடர்பில்லாத ஒரு வேத்து ஆன்மா, கிராமத்துக்கு வந்து பளிச்சுக்குள்ள இறங் கிருச்சு”ன்னு சொன்னான் கரிக்கோட்டான். பரிகாரமெல்லாம் பண்ணுனாக. ஆனா, பரிகாரத்தால தீர்ற வியாதியா அது?

மணிக்கொடிக்கு என்ன ஆச்சோ தெரியலே. காட்டுக்குள்ள வாழ்ற ஒரு பொண்ணை கட்டிக்கிற பெத்தவுக சம்மதிச்சிருக்க மாட்டாகளோ என்னவோ... ஒரு செய்தியும் இல்லே. தினமும் எழுந்ததுலேருந்து வாசல்லயே உக்காந்து ஒத்தயடிப்பாதையையே பாத்துக்கிட்டிருந்தா பளிச்சி.

ஒருநாள் ராத்திரி. நல்ல மழை. வனத்துல ராப்பூச்சிகூட சத்தமில்லாம ஒண்டிக்கெடக்கு. கிராமத்து ஆளுக நல்லா தூங்கிக்கிட்டிருக்காக. மெள்ள எழுந்தா பளிச்சி. வீட்டை விட்டுவெளியே வந்தா. வேகவேகமா நடக்க ஆரம்பிச்சா. மணிக்கொடி சொன்ன அடையாளங்களை வெச்சுக்கிட்டு நடந்தா. பழகுன காடு. செடியும் கொடியும், `போகாதே போகாதே'ன்னு புடிச்சுப் புடிச்சு இழுக்குது. எல்லாத்தையும் விலக்கிக்கிட்டு கல்லையும் முள்ளையும் ஏறி மிதிச்சு நடக்கிறா.

விடிஞ்சுச்சு. மணிக்கொடி சொன்ன அடையாளத்தை வெச்சு அவன் ஊரைக் கண்டு பிடிக்க முடியலே. ஏறி ஒரு மலைத்திட்டுல உக்காந்தா.

அங்கே கிராமத்துல, புள்ளையக் காணு மேன்னு கொத்தல்லி தவிச்சுப்போனான். இளவட்டப் பயலுக ஆளுக்கொரு திக்கா போய் தேடுறானுவ. ‘ஏதோ ஓர் ஆவி அவ உடம்புல ஏறி நடத்திக்கூட்டிக்கிட்டுப் போயிருச்சு’ன்னு காது வளந்த மூத்தா சொன்னா. ‘ராவுல ஒதுங்கினவளை சிறுத்தைக எதுவும் இழுத்துக்கிட்டுப் போயிருக்குமோ’ன்னு சில பேரு பேசிக்கிட்டாக. கொத்தல்லியோட பொஞ்சாதி மயங்கி விழுந்தவ எழுந்திருக்கவேயில்லை.

எங்கே போறது, என்ன செய்றதுன்னு தெரியாம மலைத்திட்டுல உக்காந்த பளிச்சி எழுந்திருக்கவேயில்லை. அன்னந்தண்ணி ஆகாரமில்ல. கிராமத்துக்கும் போக முடியாது. மணிக்கொடி இனிமே வருவான்னும் நம்பிக்கையில்ல. அப்படியே சாஞ்சு படுத்தா. கண்ணெல்லாம் உள்ளே இழுத்திக்குச்சு. மெள்ள மெள்ள அவ உடம்புல இருந்து உசுரு விலகுது. அவளைப் பாத்து கானகமே கண்ணீர் வடிக்குது.

கிராமத்து ஆளுக அங்கயிங்கே தேடி கடைசியா மலைத்திட்டுக்கு வந்துட்டாக. பளிச்சி, வாடி வதங்கி பெணமாக் கெடந்தா. மகளோட சாவை கொத்தல்லியால தாங்க முடியலே. அவனும் மாரடைச்சுசெத்துப்போனான். மயக்கமடைஞ்சு கெடந்த கொத்தல்லியோட பொஞ்சாதியும் எழுந்திருக்கவேயில்லை.

தேவதை மாதிரி இருந்தவ இப்படி திட்டுல வந்து உசுர விட்டிருக்காளேன்னு எல்லாப் பேரும் புலம்பி அழுதாக. ‘இவ சாதாரண மனுஷியில்லை. தங்களோட குலதெய்வம்’னு அந்த மலைத்திட்டயே கோயிலாக் கும்புட ஆரம்பிச்சாக. வருஷாவருஷம் பளிச்சிக்கு படையல் போட்டு, எங்களைக் காப்பாத்து தாயின்னு கையெடுத்து கும்பிட்டாக.

பளியருக எங்கேயிருக்காகளோ, அங்கெல்லாம் அவங்களுக்கு காவல் தெய்வமா பளிச்சி உக்காந்திருப்பா. போடிக்குப் பக்கத்துல காட்டுக்குள்ள, சிறைக்காடுன்னு ஓர் ஊரிருக்கு. அங்கேயிருக்கிற பளியக் குடியிருப்புக்கு மேப்புறமா கல்லு வடிவத்துல உறைஞ்சிருக்கா பளிச்சி. எல்லையில உக்காந்து, அந்த மக்களை அவதான் காப்பாத்துறா!