மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள்: சீதளா - 36

சீதளா
பிரீமியம் ஸ்டோரி
News
சீதளா

கும்பகோணம் பக்கத்துல வலங்கைமான்னு ஓர் ஊரு இருக்கு. அதுக்குப் பக்கத்துல இருக்கிற வரதராஜம்பேட்டையில, பாடைகட்டி மகாமாரியம்மன் பெயரில் இப்போ குடியிருக்கா சீதளா.

காதன், அந்தப் பகுதியில விவசாயத்தை நம்பியிருக்கிற பெரிய சம்சாரி. கொள்ளிடத்தாயி புண்ணியத்துல வேளாண்மை முப்போகம் வெளைஞ்சுக்கிட்டிருந்துச்சு. காலையில வயக்காட்டுக்குள்ள இறங்குனா மனுஷன் சாயங்காலம் அஸ்தமனத்துலதான் கரைக்கு ஏறுவாரு. அப்படியோர் அர்ப்பணிப்பு விவசாயத்துல.

அவன் பொண்டாட்டி பேரு கோவிந்தம்மா. மகராசி தங்கமான மனுஷி. யாருக்கும் தீங்கு வினை நினைக்க மாட்டா. பசின்னு வந்து நின்னா, தனக்கு இருக்கோ இல்லையோ மொத்தமா அள்ளிக் குடுத்துருவா. வெளையற வெள்ளாமையில சரிபாதியை கோயிலு, தானதருமம்னு பாத்துப் பாத்து அள்ளிக் குடுத்துருவா.

புருஷன் மேல கொள்ளைப்பாசம் கோவிந்தம்மாவுக்கு. விதவிதமா சமைச்சுப்போடுவா. `புருஷன் ஒத்தையாளா கஷ்டப்படுறாரே'ன்னு விளையுற தானியங்கள்ல முறுக்கு, தட்டைன்னு பலகாரங்கள் செஞ்சு பக்கத்தூருகள்ல போயி வித்துட்டு வருவா.

ஒண்ணுக்குக்கொண்ணு ஒத்தாசையா சந்தோஷமா இருந்தாலும் காதனுக்கும் கோவிந்தம்மாவுக்கும் தீராத ஒரு மனக்கவலை உள்ளுக்குள்ள இருந்துச்சு. கலியாணமாகி பதினைஞ்சு வருஷமாச்சு. ஊர் காவலாளியா நிக்குற அந்த மகமாயி, புள்ளை வரம் கொடுக்க மறுக்கிறா. ரெண்டு பேரும் ஒருத்தருக்கிட்ட ஒருத்தர் வருத்தத்தைப் பகிர்ந்துக்காம அவுகவுக மனசுக்குள்ளயே போட்டு பொருமிக்கிட்டிருக்காக. ஊராளுக, காதுபட ஒண்ணு, காதுபடாம ஒண்ணுன்னு பேச ஆரம்பிச்சுட்டாக. நல்லது கெட்டதுல முன்னாடிப் போயி நிக்க முடியலே. வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயிலில்லை.

ஒருக்கா, அறுப்பு நேரம்... அந்த வருஷம் வானம் மும்மாரி பொழிஞ்சு ஆத்துல தண்ணி கரைபுரண்டு ஓடி, காடுகரையெல்லாம் நல்ல விளைச்சல். பொதிப் பொதியா வீட்டுக்கு வந்து சேருது தானியம். பத்தாயம் நெறைஞ்சு, குருது நெறைஞ்சு, வீட்டு வாசல்ல பட்டறை கட்டி இருப்புவைக்கிற அளவுக்கு வெளைஞ்சு தள்ளிருச்சு.

காதனுக்கும் கோவிந்தம்மாவுக்கும் சந்தோஷம். ஐயனார் கோயில்ல புத்தரிசியில பொங்க வெச்சு பூசை பண்ணாங்க. அதுக்காக ஊரோரம் இருக்கிற குளத்துல தலைமுழுகி எழுந்தப்போ, ஒருபக்கமா குழந்தையோட அழுகைச் சத்தம் கேட்டுச்சு. சதா மனசுக்குள்ள குழந்தையைப் பத்தியே நினைச்சுக்கிட்டிருக்கிறதால, பிரமையா இருக்குமோன்னு ரெண்டு பேருக்கும் நினைப்பு. திரும்பவும் தலைமுழுகிட்டு எழுந்திருச்சப்போ குழந்தை விடாம அழுதுகிட்டிருக்கு. பதற்றத்தோட ரெண்டு பேரும் எழுந்திருச்சு அழுகைச் சத்தம் வந்த திசையில ஓடுனாக.

குரங்குக்கொய்யா பத்தைக்குள்ள அழகா ஒரு பட்டுத்துணி சுத்தி தேவதையாட்டம் ஒரு குழந்தை கெடக்கு. பெறந்து சில மணி நேரம்தான் ஆகியிருக்கும்போல. பசியில குழந்தை கதறுது. அதைப் பாத்தவுடனே கோவிந்தம்மாவுக்கு தாய்மை சுரந்திருச்சு. ‘அந்த மகமாயியே இந்தக் குழந்தையை நம்ம பார்வைக்குக்கொண்டுவந்திருக்கா’ன்னு நினைச்சாக கோவிந்தம்மாவும் காதனும். ஆசை ஆசையா தூக்கி கொஞ்சுனா கோவிந்தம்மா. அவளை அப்படியே கட்டிப்பிடிச்சுக்குச்சு குழந்தை.

தெய்வ மனுஷிகள்: சீதளா - 36

‘இந்தக் குழந்தையை நாமளே வளர்க்க லாம்’ன்னா கோவிந்தம்மா. காதனும், ‘நாம அழுதழுது கேட்ட குரல், அந்த மகமாயி காதுல விழுந்திருச்சு. அவளே கொண்டாந்து நமக்கிட்டே குடுத்திருக்கா. நாமளே வளர்க்கலாம்’னான். ரெண்டு பேரும் குழந்தையைத் தூக்கிக்கிட்டு அய்யனாரைக் கும்பிட்டுட்டு வீட்டுக்கு வந்தாக. புதுப்பட்டுல தொட்டி கட்டி தூங்க வெச்சாக. ‘சீதளா’ன்னு பேரு வெச்சாக.

சேதி பரவத் தொடங்குச்சு. ‘கோவிந்தம்மா ஒரு புள்ளையைக் கண்டெடுத்திருக்காளாமே’ன்னு பொம்பளைகள்லாம் பொறணி பேச ஆரம்பிச்சாக. மெள்ள மெள்ள காதன் வீட்டு முன்னாடி கூட்டம் கூட ஆரம்பிச்சுச்சு. சேதி நாட்டாமைக்காரருக்குப் போச்சு.

நாட்டாமை கொஞ்சம் விவகாரமானவர். பரிவாரங்களோட காதன் வீட்டுக்கு வந்தாரு. கூடவே நாட்டாமை பொண்டாட்டியும் வந்தாக. அவரை வரவேத்து வீட்டுக்குள்ள அழைச்சுக்கிட்டுப்போனாக காதனும் கோவிந்தம்மாவும். நிலா மாதிரி வட்ட வடிவ முகத்தோட தூங்கிக்கிட்டிருந்த அந்தக் குழந்தையைப் பாத்தவுடனே நாட்டாமை பொண்டாட்டிக்கு மனசுல ஆசை ஏறிடுச்சு. `எல்லாப் புள்ளைகளும் சொல்லி வெச்ச கணக்கா ஆம்புளைப் புள்ளைகளா பெறந்து தொலைச்சுட்டானுவ. ஆசைக்கு ஒரு பொம்பளைப் புள்ள வேணும்னு எல்லா சாமிக்கிட்டயும் கேட்டுக்கேட்டு அலுத்துப் போச்சு. இப்பத்தான் கண் தெறந்திருக்கா அந்த மகமாயி'ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு நாடகத்தை ஆரம்பிச்சா...

“ஊருக்குள்ள எந்தப் பொருள் கிடைச்சாலும் அதை நாட்டாமைக்காரகக்கிட்ட ஒப்படைக் கிறதுதானே முறைமை. இதெப்படி நீங்களே உங்க விருப்பத்துக்கு தூக்கியாந்து தொட்டிகட்டிப் போட்டிருக்கீங்க”ன்னா. நாட்டாமைக்காரருக்கு பொண்டாட்டி யோட மனநிலைமை புரிஞ்சுபோச்சு. கூட வந்த பரிவாரங்களும் நாட்டாமை பொண்டாட்டி சொன்னதுக்கு `ஆமா' போட்டாங்க.

சீதளா
சீதளா

இறுதியா ஊர்க்கூட்டத்தைக் கூட்டுனாக. கோவிந்தம்மா பதறிப்போனா. சீதளாவை தன்னோட மகளாவே மனசுக்குள்ள தரிச்சுக்கிட்டா மகராசி. காதனுக்கும் என்ன செய்யறதுன்னு தெரியலே. நாட்டாமைக்காரர் பேசினாரு. “ஊருக்குள்ள ஒரு குழந்தை கிடைச்சா, முறையா நாட்டாமைக்காரர்கிட்ட கொண்டுவந்து கொடுத்திருக்கணும். அதுதான் முறை. காதனும் கோவிந்தம்மாவும் அவுக சொத்தா மாத்திக்கிட்டது தப்பு. ஊராளுக என்னப்பா சொல்றீக”ன்னு கேட்டாரு. நாட்டாமைக்காரரைப் பகைச்சுக்க யாருக்கும் மனசில்லை. “அய்யா... நீங்க சொல்றதுதான் சரி”ன்னுட்டாக.

“குழந்தை நாட்டாமை வூட்டுலதான் வளரணும். அதுக்கு யாரும் சொந்தம் கொண் டாடக்கூடாது”ன்னு தீர்ப்பு சொல்லிட்டாரு நாட்டாமை. ஊராளுக குழந்தையை கோவிந்தம்மாக்கிட்ட இருந்து வாங்கி நாட்டாமைக்கிட்ட குடுத்திட்டாக. காதனும் கோவிந்தம்மாவும் கண்ணீர் வடிக்கிறாக. ‘சரி... அந்த மகமாயி ஏதோ திட்டம் போட்டு இந்தக் காரியத்தைப் பண்றா... நடக்கிறது நடக்கட்டும்’னு மனசைத் தேத்திக்கிட்டாக.

சீதளா நாட்டாமைக்காரர் வீட்டுல வளர்ந்தா. நாட்டாமைக்காரர் பொண்டாட்டி யும் குழந்தையை நல்லாவே பாத்துக்கிட்டா. பால் சோறும் தேன் சோறும் பாத்துப் பாத்து ஊட்டி வளத்தா. குழந்தை நல்லவிதமா வளர்ந்துச்சு.

நல்லா வான் பெய்ஞ்சு செழிப்பா இருந்த ஊரு... திடீர்னு வறண்டு போச்சு. ஊருக்கு நடுவால இருந்த பெரிய ஏரி படிப்படியா நீர்வத்திப் போச்சு. வாய்க்கா, வரப்பெல்லாம் காஞ்சு கெடக்கு. வெயிலு மண்டையைப் பொளக்குது. பத்தாயம் குடைஞ்சு, குருது துடைச்சு, பட்டறை உடைச்சு இருந்த தானியத்தையெல்லாம் எடுத்து சாப்பிட்டாச்சு. அடுத்த வேளைக்குத் தானியமில்லை. ஒருபக்கம் பசி, இன்னொருபக்கம் நோவு... அம்மை நோய் வந்து புள்ளைகளை வதைக்குது. ஆடு மாடெல்லாம் கொத்துக் கொத்தா செத்து விழுவுது.

நாட்டாமைக்காரர் பொண்டாட்டி படுத்த படுக்கையாயிட்டா. நாட்டாமைக்கும் காலு கையெல்லாம் வலுவிழந்துபோச்சு. சாமியாடிக்கிட்ட போய் குறி கேட்டாரு நாட்டாமை. “மகமாயி கோபம்... ஏதோ செய்யக்கூடாத தப்பைச் செஞ்சுட்டிய. நல்லா யோசிச்சு, தப்பு என்னன்னு கண்டு பிடிச்சு பரிகாரம் பண்ணிருங்க”ன்னு பூடகமாச் சொல்லிட்டாரு சாமியாடி. நாட்டாமை யோசிச்சுப் பாத்தாரு. ‘காதன்-கோவிந்தம்மாக்கிட்ட இருந்து சீதளாவை அபகரிச்சதுதான் காரணமா இருக்கணும்’னு புரிஞ்சுக்கிட்டாரு.

தெய்வ மனுஷிகள்: சீதளா - 36

உடனடியா ஊர்க்கூட்டத்தைக் கூட்டினாரு. காதனையும் கோவிந்தம்மாவையும் அழைச்சு சீதளாவைக் கையில தூக்கிக் குடுத்தாரு. `தெரியாம தப்புப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்க'ன்னு அவங்களைக் கையெடுத்துக் கும்புட்டாரு. ஊர் மக்களும் கோவிந்தம்மாக்கிட்ட மன்னிப்பு கேட்டாக.

கோவிந்தம்மா மனசு குளிர்ந்துபோச்சு. சீதளாவை வாங்கி மார்போட அணைச்சுக் கிட்டா. ஆசை ஆசையா முத்தம் கொடுத்தா. வீட்டுக்குக் கொண்டுபோய் பார்த்துப் பார்த்து வளர்த்தா.

படிப்படியா வானம் கருத்துச்சு. வெம்மை குறைஞ்சுச்சு. படபடன்னு மழை அடிக்க ஆரம்பிச்சுச்சு. நிலமெல்லாம் பச்சை பூக்க ஆரம்பிச்சுச்சு. ஊர்ல இருந்த கெட்ட காத்தெல்லாம் ஓஞ்சு நோய்நொடியெல்லாம் மறைஞ்சுச்சு. சீதளா விறுவிறுன்னு வளர்ந்து நின்னா. நேரத்துக்கு ஓர் ஆடையுடுத்தி அழகு பாத்தா கோவிந்தம்மா. ஊரே சீதளாவை ராஜகுமாரி கணக்கா கொண்டாடுச்சு.

சீதளாவுக்கு ஏழரை வயசாச்சு. புள்ள ஓடியாடி விளையாண்டு திரிஞ்சவ, திடீர்னு படுத்த படுக்கையாயிட்டா. உடம்பெல்லாம் சின்னச் சின்ன கொம்பளமா மாறிருச்சு. “மகமாயிதான் சீதளா உடம்புல அம்மையா ஏறியிருக்கா”ன்னு சாமியாடி சொன்னாரு. பெரிய பெரிய வைத்தியரெல்லாம் அழைச்சுக்கிட்டு வந்து வைத்தியம் பாத்தாக. அம்மை இறங்கலே. ஒருநாள், அதிகாலையில நிரந்தரமா கண்ணை மூடிட்டா அந்தத் தெய்வக்குழந்தை.

கோவிந்தம்மாவும் காதனும் கதறியழுதாக. ஊரே ஆத்துப்போச்சு. அந்த மகமாயி குழந்தையாப் பெறந்துவந்து ஏதோ ஒரு படிப்பினையைக் குடுத்துட்டுப் போயிருக் கான்னு பேசிக்கிட்டாக. காதன், தன் தோட்டத்துலயே சீதளாவை அடக்கம் செஞ்சாரு. அதுக்கப்புறம் நெடுங்காலம் காதனும் கோவிந்தம்மாவும் சீதளாவை அடக்கம் செஞ்ச எடத்துலயே கெடந்தாக. அந்தப் புள்ளையை மறக்க முடியலே. புள்ளை உசுரோட வாழ்ந்துக்கிட்டிருக்கிறதா நினைச்சு, சமைக்கிறது, செய்யறதெல்லாம் அதுக்கும் படைப்பாக. காலப்போக்குல காதனோட மரபாளிங்க, சீதளாவை சாமியாக் கும்புட ஆரம்பிச்சாக.

கும்பகோணம் பக்கத்துல வலங்கைமான்னு ஓர் ஊரு இருக்கு. அதுக்குப் பக்கத்துல இருக்கிற வரதராஜம்பேட்டையில, பாடைகட்டி மகாமாரியம்மன் பெயரில் இப்போ குடியிருக்கா சீதளா. சிரிச்ச முகத்தோட உட்காந்திருக்கிற சீதளாவைப் பாக்க ஊரு கடந்து, மாவட்டம் கடந்தெல்லாம் மக்கள் வந்துட்டுப் போறாக. அந்தப் பக்கம் போனா, நீங்களும் அந்தப் புள்ளையை ஓர் எட்டு பாத்துட்டு வாங்க!

படங்கள்: அப்துல்லா