சிவ வடிவங்களில் அற்புதமானது நடராஜ திருவடிவம். பரமனின் ஐந்தொழில்களை உணர்த்துவது, அவரின் ஆடல் திருக்கோலம் என்கின்றன ஞானநூல்கள்.
கோயில்களில் நடராஜர் தெற்கு நோக்கி அருள்கிறார். ‘இறைவனுக்குத் தென்றல் மற்றும் தென் தமிழின் மீது விருப்பம் அதிகம். ஆதலால் தெற்கு நோக்கி ஆடுகிறார்’ என்கிறார் திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
ஈசனின் ஐந்தொழில் தாண்டவங்களாக- அகோரத் தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம், ஆச்சர்யத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், சௌந்தர்யத் தாண்டவம் ஆகியவற்றைப் `பரத சூடாமணி’ எனும் நூல் குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியங்களில் இறைவனது பாண்டரங்கம், கொடு கொட்டி, காபாலம் எனும் ஆடல்கள் குறிக்கப்பட்டுள்ளன. திரிபுரம் எரித்தபோது இறைவன் ஆடியவை கொடுகொட்டியும், பாண்டரங்கமும் ஆகும்.
உமாதேவி ஒரு பக்கமும், இறைவன் ஒரு பக்கமுமாக நின்று அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலியன பொருந்த போர்க்களத்தில் ஆடியது கொடுகொட்டி.

இறைவன் திரிபுரம் எரித்தபோது ஊழிக்காலக் காற்று போல் சுழன்று ஆடியது பாண்டரங்கம். பிரம கபாலத்தை ஏந்தி இறைவன் ஆடியது காபாலம்.
இறைவனின் கூத்துகளை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்று ஐவகையாகக் காட்டுகிறார் திருமூலர். மட்டுமன்றி, `திருக்கூத்து தரிசனம்’ எனும் தலைப்பில் அதன் தத்துவத்தையும், உருவ அமைப்பையும் அவர் விளக்குகிறார்.
காரைக்கால் அம்மையார், தேவார மூவர், மணிவாசகர் ஆகி யோரது தெய்வீக நூல்களிலும், மற்ற திருமுறைகளிலும் தில்லைக் கூத்தனின் திருவருட் பெருமையும் அருமையும் விரிவாகக் காணப்படுகின்றன. தினமும் நடராஜரை மனதால் தியானித்து வணங்க நம் சிந்தனை சிறக்கும்; காரிய வெற்றி உண்டாகும்!
-தி.ராதிகா, திருச்சி-4