Published:Updated:

வைகாசி மாத முக்கிய தினங்கள்: வரம் அருளும் விசாகம், நலம் தரும் நரசிம்ம ஜயந்தி... அருள் நிறை அனுஷம்!

முருகப்பெருமான்

இந்த மாதத்தில்வரும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களை அறிந்துகொள்வதன் மூலம் வீட்டிலேயே வழிபாடுகள் செய்து திருவருளும் குருவருளும் பெறலாம். இதோ வைகாசிமாதத்தில் தவறவிடக்கூடாத முக்கிய தினங்கள் உங்களுக்காக...

வைகாசி மாத முக்கிய தினங்கள்: வரம் அருளும் விசாகம், நலம் தரும் நரசிம்ம ஜயந்தி... அருள் நிறை அனுஷம்!

இந்த மாதத்தில்வரும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களை அறிந்துகொள்வதன் மூலம் வீட்டிலேயே வழிபாடுகள் செய்து திருவருளும் குருவருளும் பெறலாம். இதோ வைகாசிமாதத்தில் தவறவிடக்கூடாத முக்கிய தினங்கள் உங்களுக்காக...

Published:Updated:
முருகப்பெருமான்

17.5.21 சங்கர ஜயந்தி

வைகாசி மாத சுக்லபட்ச பஞ்சமி திதியே ஆதி சங்கரரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆதி சங்கரர், சிவபெருமானின் அவதாரமே என்றும் சொல்வார்கள். பாரத தேசம் முழுமையும் பயணித்து அத்வைதம் என்னும் சித்தாந்தத்தைப் பரப்பியவர். ஷண் மார்க்கங்களையும் இணைத்து முறைப்படுத்தியவர். ஆதி சங்கரரின் அவதார தினத்தில் நாம் குருவழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது. இந்த நாளில் நம் வீட்டில் நம் மனதைக் கவர்ந்த மகானின் திருவுருவப் படத்துக்கு மாலை சாத்தி, அவருக்குரிய துதிகளைச் சொல்லி வணங்குவது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

21.5.21 வாசவி ஜயந்தி

வாசவி ஜயந்தி அன்னை கன்னிகாபரமேஸ்வரி தேவியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. வணிகர் குலம் தம் குலதெய்வமாகக் கொண்டாடும் அன்னை கன்னிகாபரமேஸ்வரியை இந்த நாளில் மனதில் நினைத்து வழிபடுவது வாழ்வில் உண்டாகும் துன்பங்களைத் தீர்த்து நல்லருள் தரும். அன்னை கன்னிகாபரமேஸ்வரி ஆதி பரமேஸ்வரியின் அம்சங்களில் ஒருவர். எனவே இந்த நாளில் ஏதேனும் அம்மன் படத்துக்கு மலர்சாத்தி கன்னிகாபரமேஸ்வரி அம்மனை நினைத்து வணங்கினால் குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி
வாசவி கன்னிகா பரமேஸ்வரி

22.5.21 ஏகாதசி

வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்று போற்றப்படுகிறது. பகவான் விஷ்ணு வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்கின்றன புராணங்கள். அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது. இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதிகம். மறுநாள் துவாதசி அன்று பாரணை முடிக்க வேண்டும்.

துவாதசி பாரணை நேரம்: 23.5.21 |பகல் 1:33 முதல் 4:07மணிக்குள்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

24.5.21 - 7.6.21 - சோமவார பிரதோஷம்

‘சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றை நாளில் வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும்; சோதனைகள் விலகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில், நாள் முழுவதும் விரதமிருந்து சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, மாலையில் மீண்டும் நீராடி, சிவபுராணம் பாராயணம் செய்து சிவபெருமான் படத்துக்கு புஸ்பங்கள் சாத்தி வழிபாடு செய்தால் நன்மைகள் கூடும் என்பது நம்பிக்கை.

நந்தி - பிரதோஷம்
நந்தி - பிரதோஷம்

25.5.21 வைகாசி விசாகம்

தேவர்கள் துயர் தீர்க்க முருகப்பெருமான் அவதரித்த திருநாள், வைகாசி விசாகம். இந்த நாளில் முருக வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காலை முதலே முருகப் பெருமானைப் போற்றும் கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல், திருப்புகழ் போன்ற துதிகளைப் பாராயணம் செய்ய வேண்டும். முருகப்பெருமானின் படத்துக்கு செவ்வரளி மலர் சாத்தி வணங்கினால் நல்லருள் கிடைத்து சகல துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.

25.5.21 நரசிம்ம ஜயந்தி

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை மெய்ப்பிக்க பக்தனின் வாக்கை உண்மையாக்கத் தூணிலிருந்து பகவான் விஷ்ணு நரசிம்மமாக அவதாரம் செய்து துஷ்ட சம்ஹாரம் செய்த தினம்`நரசிம்ம ஜயந்தி.' இந்த நாளில் விரதமிருந்து வழிபாடு செய்து மாலை வேளையில் ஸ்ரீநரசிம்ம சுவாமி அல்லது ஸ்ரீமன் நாராயணனின் திருவுருவப் படத்துக்கு துளசி மாலை சாத்தி பானகம் நிவேதனம் செய்து வணங்கினால் கட்டாயம் நெருக்கடிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

26.5.21 குரு பூர்ணிமா, மகாபெரியவா ஜயந்தி

புத்தர் பிறந்த தினம், அவர் போதிமரத்தினடியில் தியானமிருந்து ஞானம் பெற்றது மற்றும் அவர் பரிநிர்வாணம் அடைந்தது என்னும் மூன்று முக்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்த தினமே குரு பூர்ணிமா. அதாவது வைகாசி பௌர்ணமி தினம். இந்த நாளில் புத்தபிரானை நினைத்து தியானம் செய்வது சிறப்பு. குருவழிபாட்டுக்கும் உகந்த தினம் இது.

26.5.21 மகாபெரியவா ஜயந்தி

‘நடமாடும் தெய்வம்’ என்று மக்களால் போற்றப்பட்ட காஞ்சி மகா பெரியவரின் அவதார தினம் வைகாசி அனுஷம். மகாபெரியவாளின் பக்தர்கள் ஒவ்வொரு மாத அனுஷத்தையும் சிறப்பாகக் கொண்டாடினாலும் வைகாசி அனுஷம் அவர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில் மகாபெரியவரை தியானம் செய்து அவரின் திருவுருவப் படத்துக்கு மலர் அல்லது வில்வம் சாத்தி வழிபடுவதன் மூலம் அந்த மகானின் அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாக முடியும். வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாபெரியவா
மகாபெரியவா

29.5.21 அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி

அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைகிறது. அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்துப் பசியாறிய நாள்கள் அக்னி தோஷமுள்ளவை என்பதால், கோயில்களில் இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறும். நம் வீட்டிலும் இந்த நாளில் காலையிலேயே எழுந்து நீராடி சிவபெருமானை தியானித்து வழிபட்டால் நம் குறைகள் யாவும் தீரும். ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.

மேலும், இந்த நாள் சங்கடஹர சதுர்த்தியாகவும் அமைகிறது. இந்த நாளின் மாலையில் விநாயகர் வழிபாடு செய்து மோதக நிவேதனம் செய்து வழிபட்டால் சகல சங்கடங்களும் விலகும் எனலாம்.

6.6.21 ஏகாதசி

இந்த ஏகாதசிக்கு ‘அபரா ஏகாதசி’ என்று பெயர். மரதத்தை வெட்டி வீழ்த்தும் கூர்மையான ஆயுதத்தைப் போன்று நம் பாவங்களையும் வெட்டி வீழ்த்தும் தன்மை வாய்ந்தது அபரா ஏகாதசி என்பது பெரியோர்களின் வாக்கு. இந்த நாளில் விரதமிருந்து திருமாலை திரிவிக்ரமராக (உலகளந்த பெருமாள்) எண்ணி வழிபட்டால் எல்லா வளங்களும் சேரும். இல்லம் தேடிவந்து லட்சுமி தேவி அருள்புரிவாள் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் விரதம் இருந்து துவாதசி அன்று பாரணை முடிப்பது நல்லது.

துவாதசி பாரணை நேரம்: 7.6.21 | நேரம் : காலை 5:53 முதல் 08:27 மணிக்குள்

ஶ்ரீஉலகளந்த பெருமாள்
ஶ்ரீஉலகளந்த பெருமாள்

10.6.21 அமாவாசை

முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உகந்த தினம் அமாவாசை திதி. இந்த நாளில் தகப்பன் இல்லாதவர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி அவரவர் நியமப்படி முன்னோர்களை வழிபட வேண்டும். முன்னோர்களின் ஆசி இருந்தால் நம் வாழ்க்கை செழிப்படையும். முடிந்த அளவுக்கு இல்லாதவர்கள் யாருக்கேனும் தானம் கொடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். இந்த நாளில் உங்களின் குலதெய்வத்தையும் எண்ணி வணங்குவது நல்லது.