`நம் பிள்ளைகள் டாக்டராக வேண்டும்; கலெக்டராக வேண்டும்; ஐடி துறையில் நுழைந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும்’ என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. யாருக்காவது தம் பிள்ளைகள் `விவசாயம் செய்ய வேண்டும்’ என்கிற எண்ணம் இருக்கிறதா?’ நூற்றுக்கு 99 சதவிகிதம் இல்லை.

`சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்கிறார் திருவள்ளுவர். `உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும், உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் உழவுத் தொழிலே முதன்மையானது’ என்கிற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் தெளிவுரை மிக முக்கியமானது.
உழவில்லையென்றால் உணவில்லை. உணவு இல்லையென்றால் மனிதர்களில்லை. ஆனாலும் கல்வியில் வேளாண்மை புறந்தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. விவசாயக் கல்லூரியில் சேரும் பிள்ளைகள் அதன் அருமை புரிந்த பெற்றோர்களால் மட்டுமே படிக்க வருகிறார்கள்.
`நான் விற்பனைக்கல்ல...’ என்ற ஒரு சிறு கதையில், `விதை பாவுவது, பாத்தி கட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது என எல்லா வேலைகளும் எனக்குத் தெரியும். இருபத்தைந்து வயதில் நான் முழு விவசாயி ஆகிப்போனேனே தவிர, நான் படித்தது அந்தக் காலத்து பத்தாங் கிளாஸ். அதனால்தான் என் மகனை விவசாயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்கவிடாமல், பட்டணத்திலேயே படிக்கவைத்து முன்னேற்றிவிட்டேன்’ என்று குறிப்பிடு கிறார் எழுத்தாளர் குன்றக்குடி சிங்கார வடிவேல்.
இது ஓர் ஆற்றாமை. பல இடங்களில் இதுதான் யதார்த்தம். ஆக, விவசாயம் வருமானத்துக்கு உத்தரவாதமில்லாத தொழில்.
வருமானம் இருக்கட்டும்.. உழவில்லையென்றால் உணவில்லை, எதுவுமேயில்லை. `நாலு கிலோ வெங்காயம் நூறு ரூபா...’ என்று தெருவில் விற்று வருகிற சிறு வியாபாரியின் குரலைக் கேட்டால் `பகீர்’ என்று இருக்கிறது. இதில் விவசாயிக்கு என்னதான் லாபம் கிடைக்கும் என்று யோசிக்கவைக்கிறது. விவசாயத்தின்பால் அரசும் நாமும் அக்கறைகொள்ளவேண்டிய தருணமிது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், விவசாயி ஒருவரிடம் வந்தார். ``உங்க இடத்துல ரோடு போடப்போறோம். அதுக்காக உங்க நிலத்தைப் பார்க்கப்போறேன்.''
``சரி. வயலோட உள்பகுதிக்கு மட்டும் போகாதீங்க.''
``நான் அதிகாரி. எனக்கு எங்கு வேணும்னாலும் போக அனுமதியிருக்கு. பாருங்க... இது என் ஐ.டி கார்டு.''
``சரி அதுக்குமேல் உங்க இஷ்டம்.’’ விவசாயி வரப்பில் அமர்ந்துகொண்டார்.
அதிகாரி சிறிது நேரத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
அவரை, முரட்டுக்காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார்.
காப்பாற்றும்படி அலறிய அதிகாரியிடம் விவசாயி சொன்னார்... ``ம்... சீக்கிரம்... உங்க அடையாள அட்டையை அந்த மாட்டுகிட்ட காட்டுங்க!’’