
கார்த்திகை தரிசனம் -
குருவாயூர் ஏகாதசியும் லட்சதீபமும்!
கார்த்திகைக் கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறும் தலங்களில் குருவாயூரும் ஒன்று. இங்கு, கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியை, ‘குருவாயூர் ஏகாதசி’யாகக் கொண்டாடுகிறார்கள். அன்று தொடங்கி தொடர்ந்து 18 நாள்களுக்கு லட்ச தீபம் ஏற்றப் படுகிறது.
குருவாயூரப்பன் திருக்கோயில் கோபுரத்தின் முன், பிரமாண்ட மான தீபஸ்தம்பம் ஒன்று உண்டு. தவிர, மூலஸ்தானத்தைச் சுற்றி நான்கு சுவர்களிலும் - மரச் சட்டங்களில் சுமார் மூவாயிரம் பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்படி, இந்தக் கோயிலில் உள்ள எல்லா விளக்குகளிலும் வருடத்துக்கு ஒரு முறை... கார்த்திகை மாதம், சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி, தொடர்ந்து 18 நாள்கள் (தினமும் இரவில்) தீபம் ஏற்றிவைப்பார்கள். இந்த விளக்குகளின் தீப ஒளியில், சுவர்க்கலோகமாக திருக்கோயில் காட்சி தரும். இந்த விழாவின்போது விரதம் கடைப்பிடித்து, விளக்கு தரிசனம் செய்வோருக்கு பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
`விளக்கொளி பெருமாள்!’
காஞ்சிபுரம் ஶ்ரீதீபப்பிரகாசர் கோயிலில் மகாவிஷ்ணு, ஜோதி வடிவில் காட்சி தருகிறார்
முற்காலத்தில் பிரம்மதேவர் மகா விஷ்ணுவைக் குறித்து ஒரு யாகம் செய்ய நினைத்தார். அந்த யாகத்தைப் பூவுலகின் புனித நகரமாகிய காஞ்சியில் செய்யவும் விரும்பினார். யாகத்தை மனைவி உடன் இருக்க நடத்தவேண்டும் என்பது நியதி. ஆனால், அப்போது சரஸ்வதி அருகில் இல்லாத காரணத்தால், காயத்ரி தேவியை உடன் வைத்துக்கொண்டு யாகத்தைத் தொடர்ந்தார்.
தன்னை மதிக்காமல் பிரம்மதேவர் யாகம் செய்வது பற்றிக் கேள்விப்பட்ட சரஸ்வதி, பெரும் வெள்ளமெனப் பெருக்கெடுத்து யாகபூமியை அழிக்க ஆவேசத்துடன் வந்தாள். அதன் காரண மாக அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. பிரம்மதேவர் மகா விஷ்ணுவைப் பிரார்த்திக்க, பகவான் ஜோதி வடிவினராகத் தோன்றி யாகம் தடையின்றி நடைபெறச் செய்தார்.
அதைக் கண்டு சினம் கொண்ட சரஸ்வதி அக்னி வடிவில் மாயநலன் என்ற அரக்கனை ஏவி யாகபூமியை அழிக்கும்படி அனுப்பினாள்.
ஜோதி வடிவினராக இருந்த மகாவிஷ்ணு, அக்னி வடிவில் வந்த அரக்கனை ஒரு தீபம் போல் ஏந்தி யாகபூமியில் மேலும் வெளிச்சம் ஏற்படச் செய்தார். பிரம்மதேவரின் யாகமும் தடையின்றி நடைபெற்றது. இங்ஙனம் ஜோதிவடிவாய் தோன்றிய பெருமாளுக்கு விளக்கொளிப் பெருமாள் என்றும் தீபப்பிரகாசர் என்றும் திருப் பெயர்கள் ஏற்பட்டதாகத் தல வரலாறு. திருக்கார்த்திகைத் திருநாளில், பக்தர்கள் திரளாக வந்திருந்து விளக்கொளிப் பெருமாளுக்கு தீபங்கள் ஏற்றி, ‘பெருமாள் கார்த்திகை’யைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாத வர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், விரைவில் தங்களின் பிரார்த்தனைகள் பலிக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை தேரோட்டம்
பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள விஸ்வ நாத ஸ்வாமி ஆலயத்தில், கார்த்திகைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜகந்நாத ஸ்வாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!
பெருமாளுக்குத் தைலக் காப்பு!
சென்னையை அடுத்து உள்ள திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் கோயில், வைணவ திவ்யதேசங்களில் ஒன்று. இங்கே, கார்த்திகை திருநாள் அன்று பெருமாளுக்குச் சந்தனத் தைலக்காப்பு சாத்தப்படுகிறது. அதாவது சந்தனப்பொடியுடன், தைலத்தை சேர்த்து திருக்கார்த்திகை நாளில் வீரராகவப் பெருமாளுக்குச் சாத்துகின்றனர்.
திருவரங்கத்தில் தீபம்!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் கார்த்திகை பௌர்ணமி அன்று சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருள்வார் ரங்கநாதர். அப்போது கார்த்திகைக் கோபுர வாயிலில் சொக்கப்பனை (பாஞ்சராத்ர தீபம்) ஏற்றுவர்.

பிறகு,ஶ்ரீரங்கநாதர் சந்தன மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு, திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை அரையர்கள் பாடுவர். இதையடுத்து, மார்கழி விழாவின் பொருட்டு நம்மாழ்வாருக்கு விவரமாகக் கடிதம் எழுதுவர். இதனை, முகப் பட்டயம் என்பார்கள். இந்த வைபவம் முடிந்ததும் சந்நிதிக்குத் திரும்புகிறார் ரங்க நாதர். இந்த நன்னாளில் இங்கு வந்து பெருமாளைத் தரிசிக்க நமது பாவங்கள் தொலையும்.