Published:Updated:

சென்னையின் காவல் தெய்வங்கள்!

பாடிகாட் முனீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
பாடிகாட் முனீஸ்வரர்

ஆன்மிகம் - கே.வெங்கடேஷ் பாபு

சென்னையின் காவல் தெய்வங்கள்!

ஆன்மிகம் - கே.வெங்கடேஷ் பாபு

Published:Updated:
பாடிகாட் முனீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
பாடிகாட் முனீஸ்வரர்

சென்னை என்ற நகரம் பிறந்து 382 ஆண்டுகளே ஆகியிருக்கலாம். ஆனால், தொண்டை மண்டலம் என்ற பெயரில், பல கோட்டங்களாக, பலநூறு ஆண்டுகள் பழைமையானதாகத் திகழ்ந்திருக்கின்றன, சென்னையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும். அவை பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக்காலத்தில் பெரும் புகழ்பெற்று விளங்கியுள்ளன.

இந்தப் பகுதிகளில் உள்ள பல ஆலயங்கள் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. இத்தகு தொன்மை வாய்ந்த தருமமிகு சென்னை மண்டலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கின்றன, மண்ணின் மணத்தோடு இதன் பெருமையைச் சொல்லும் காவல் தெய்வங்களும் கோயில்களும்!

மலை சார்ந்த குறிஞ்சி, காடு சார்ந்த முல்லை, வயல் சார்ந்த மருதம், கடல் சார்ந்த நெய்தல், பாலை நிலம் யாவுமே கொண்டது சென்னை மண்டலம். அந்தந்த நிலத்துக்கு ஏற்ப காவல் தெய்வக் கோயில்களும் அமைந்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

முற்காலத்தில் சென்னையில் பசுமையாகக் காட்சி தந்த மவுண்ட் ரோடு, திருமுல்லை வாயில், மாம்பலம், பல்லாவரம் போன்ற இடங்களில் பச்சையம்மன், முப்பாத்தம்மன் போன்ற பசுமையைக் குறிக்கும் பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டனர்.

சென்னையின் காவல் தெய்வங்கள்!

நீர்வளம் மிக்க சைதாப்பேட்டை, அடையாறு, செங்குன்றம், சூளைப் பகுதிகளில் நீருக்கு ஆதாரமான கங்கையம்மன் ஆட்சி செலுத்துகிறாள். அடர்த்தியான காடுகளைக் கொண்டதாய்த் திகழ்ந்த இடங்களில் செல்லியம்மன் வணங்கப்படுகிறாள்.

திருவான்மியூர், வேளச்சேரி, ராமாபுரம் பகுதிகளில் செல்லியம்மனே காவல்தெய்வம். தமிழ் இலக்கியங்கள் இவளை `காடுகாள் செல்வி, கானமர் செல்வி, காடு கிழாள், காடமர் செல்வி' எனச் சிறப்பிக்கின்றன.

துளிர்க்காத வனத்தம்மனே துலக்கானத் தம்மன் என்ற பெயரில் மந்தைவெளி, சோழிங்கநல்லூர், திருவல்லிக்கேணி, ராயபுரம், செம்மஞ்சேரி பகுதிகளில் அருளாட்சி செலுத்துகிறாள்.

விஜயநகர காலத்தில், சென்னைப் பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்கள் வசித்த இடங்களில் தர்மராஜா கோயில்கள் அமைக்கப்பட்டு, பஞ்சபாண்டவர்களே அந்தப் பகுதிகளின் காவல் தெய்வங்களாக அமைக்கப்பட்டனர். பரங்கிமலை, மயிலை, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் இவ்வகை தர்மராஜா கோயில்கள் இருக்கின்றன.

சென்னையில் மயானம் இருந்த பகுதிகளில் அங்காளபரமேஸ்வரி, பாடிகாட் முனீஸ்வரர், மன்னார்சாமி, எல்லையம்மன் ஆகிய தெய்வங்கள் கோயில் கொண்டிருப்பர். ராயபுரம் மன்னாதீஸ்வரர் கோயில், சிந்தாதிரிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடிகாட் முனீஸ்வரன் கோயில் ஆகியவை அவற்றில் சில.

மாமல்லபுரம் அருகே கடும்பாடி என்ற கிராமத்தின் காவல் தெய்வமான அம்மன், அங்கிருந்து புலம்பெயர்ந்த மக்களால், அவர்கள் புதிதாக வசிக்க வந்த இடத்தில் வழிபடப்பட்டாள். சைதை, திருவல்லிக்கேணி பகுதிகளில் கடும்பாடியம்மன் கோயில் கொண்டிருப்பதை இன்றும் காணலாம்.

அதேபோல், கொட்டிவாக்கம், மடிப் பாக்கம், பழைய பெருங்களத்தூர், விருகம்பாக்கம் போன்ற வேம்பு மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வேம்புலி அம்மன் கோயில் கொண்டாள். அம்மை நோயின் தாக்கம் அதிகம் இருந்த பெரம்பூர், மாம்பலம், தண்டையார்பேட்டை பகுதிகளில் மாரியம்மன் கோயில் கொண்டாள்.

படை வீரர்கள் முகாமிட்டு இருந்த பகுதிகளில் படைவீட்டம்மன், ரேணுகா பரமேஸ்வரி ஆகிய தெய்வங்களுக்குக் கோயில்கள் எழும்பின. இங்ஙனமே தீயசக்திகளை அழிக்கும் தெய்வமாகப் பிடாரியம்மன் அனகாபுத்தூர், மேடவாக்கம், அயனாவரம், கொளப்பாக்கம், அரும்பாக்கம் பகுதிகளில் வணங்கப்படுகிறாள்.

சேத்துப்பட்டு, அடையாறு பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் சாயலாக பெரியபாளையத்தம்மன் அருள்புரிகிறாள்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில் கொண்டிருக்கும் காவல் தெய்வங்கள் யாவரும் மக்களின் வாழ்வியலோடு கலந்த சாமிகளாகவே அருளாசி பரப்பி நிற்கிறார்கள். இந்தக் காவல் தெய்வக் கோயில்கள் ஒவ்வொன்றிலும் பல நூற்றாண்டுக் காலமாக நிலவிவரும் கதைகளும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையின் காவல் தெய்வங்கள்!

மயிலையின் காவல் அரசி!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கோல விழி அம்மன் எனும் பத்ரகாளி திருக்கோயில், விக்கிரமாதித்தன் காலத்தைச் சார்ந்தது என்ற நம்பிக்கை உண்டு. மட்டுமன்றி, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் இது என்பது சித்தர் வாக்கின் மூலம் தெரியவருகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் உள்ள கலைநயம் மிக்க நடனமாடும் காளிதேவியின் உற்சவ விக்கிரகம், சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆக, இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பான வழிபாட்டில் இருந்துள்ளது என்பதை அறியலாம். கடலின் சீற்றத்திலிருந்து மயிலையைக் காக்கும் காவல்தேவி இவளே என்று வணங்குகிறார்கள் பக்தர்கள்.

சென்னையின் காவல் தெய்வங்கள்!

மாடம்பாக்கம் லலிதாபரமேஸ்வரி

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ளது, லலிதா பரமேஸ்வரி கோயில். 500 ஆண்டுகள் பழைமை கொண்ட இந்த ஆலயத்தில், பதினெட்டு சித்தர்களின் தரிசனத்தைக் காணலாம். இவர்கள் தத்தமது வாகனத்துடன் அருள்வது சிறப்பு.

பச்சைக்கல்லால் ஆன மகாமேரு உருவமே இங்கு அம்பிகையாக வழிபடப்படுகிறது. இங்கு பெண்கள் சென்று அபிஷேகம் செய்யவும், பூசை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். சோழர்கள் காலத்தில் சிறப்பு பெற்று விளங்கிய இந்த ஆலயம் பிற்காலத்தில் சிதிலமுற்றது. பின்னர் விஜயநகர காலத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டதாம்.

சென்னையின் காவல் தெய்வங்கள்!

காளிகாம்பாள் கோயில்

கடற்கரையின் அருகில் வாழும் மீனவப் பெருமக்கள், தங்களைக் காக்கும் தெய்வமாகத் திகழ்ந்த அம்பிகைக்குச் செந்தூரம் அளித்து வழிபட்ட தகவல் உண்டு. `சென்னி யம்மன்’ என்று போற்றப்பட்ட இந்த தேவி, பிற்காலத்தில் காளிகாம்பாள் என்று பெயர்கொண்டாள் என்கிறார்கள்.

சென்னம்மன் என்று தெலுங்கு அரசர்கள் ஆட்சியில் போற்றப்பட்ட இந்தக் காளி, இந்தப் பகுதியை நிர்வாகம் செய்த சென்னப்ப நாயக்கருக்குக் குலதேவி. இதனாலேயே சென்னம்மன் நினைவாக பின்னாளில் உருவான இந்த நகரமும் சென்னை என்றே பெயர் கொண்டது என்றொரு தகவலும் உண்டு.

இங்கு தல விருட்சம் மாமரம். தீர்த்தம் கடல் நீர். இதன் பரிவார தேவதை கடற்கன்னி. எனவே, மீனவ மக்களின் இஷ்ட தெய்வமாக இந்த தேவி விளங்கி வருகிறாள். ஆரம்பத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் எழுந்தருளி இருந்த அன்னை, கோட்டை விரிவாக்கம் செய்யப்பட்ட காரணத்தால் 1639-க்குப் பிறகு தம்புச்செட்டி தெருவுக்கு எழுந்தருளினாள் என்கிறார்கள்.

சென்னையின் காவல் தெய்வங்கள்!

பர்மா நகர் முனீஸ்வரர் ஆலயம்

சென்னை, கிண்டி அருகில் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், பர்மா நகரில் உள்ளது முனீஸ்வரர் ஆலயம். இங்கே சுமார் 48 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் முனீஸ்வரர். இவருக்கு `பீளிக்கா முனீஸ்வரன்’ என்று பெயர்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, மதுரையில் வாழ்ந்த மக்கள் சிலர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வாசலில் உள்ள மொட்டை முனீஸ்வரரை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர். பஞ்சம் பிழைக்க அவர்கள் பர்மாவுக்குச் சென்ற போது, மொட்டை முனீஸ்வரர் தலத்தில் இருந்து பிடிமண் எடுத்துச் சென்று தாங்கள் வசித்த பிளீக்கா பகுதியில் முனீஸ்வரருக்குக் கோயில் எழுப்பி வழிபட்டார்களாம்.

பின்னாளில், சென்னைக்கு வந்து குடியேறியவர்கள், பீளிக்காவில் இருந்து பிடிமண் எடுத்து வந்து, இங்கே கோயில் கட்டினார்கள். இன்றும் இந்தக் கோயிலில் விழா வைபவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

அமாவாசை நாளில், இங்கே பூஜிக்கப்பட்ட முடிகயிறு வழங்கப்படுகிறது. இந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால் எதிரிகள் தொல்லை, தீயசக்திகளின் அச்சுறுத்தல், காத்து கருப்பு ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் என்பது நம்பிக்கை!

சென்னையின் காவல் தெய்வங்கள்!

பாடிகாட் முனீஸ்வரர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது பாடிகாட் முனீஸ்வரர் ஆலயம்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. ஆங்கிலேயர்களின் நாட்குறிப்புகளில் இடம்பெற்ற தகவலின்படி, கிழக்கிந்திய கம்பெனியினர் வியாபாரத்தின் பொருட்டு சென்னையில் குடியேறும்போது, சுயம்புவாக இருந்த இந்தக் காவல்தெய்வத்தை, `காட்டு முனீஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்துள்ளனர், இப்பகுதி மக்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் சென்னையில் தங்கி, படை பலத்தைத் திடப்படுத்திக்கொள்ள எண்ணியபோது, புதிதாகக் கோட்டை கொத்தளங்களை நிர்மாணித்தனர். எனவே, கோயிலைச்சுற்றிக் கோட்டை மதில்கள் பளிச்சிட்டன. இறைவனின் பெயரும் மக்களிடையே `கோட்டை முனீஸ்வரர்' என்று வழங்க ஆரம்பித்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தப் பகுதியில் வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் அதிக அளவில் நடந்ததாம். ஆகவே ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை `பாடி கட்டுற ரோடு' என்றே அழைப்பார்களாம். அதையொட்டி இந்த சாமியும், `பாடி கட்டுற ரோடு - முனீஸ்வரர்' என அழைக்கப்பட்டார். அப்பெயரே பின்னர் `பாடிகாட் முனீஸ்வரர்' என்றானது எனச் சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள்.