Published:Updated:

திருவண்ணாமலை: 1,300 ஆண்டுகள் பழைமையான கொற்றவை,பிள்ளையார் சிற்பங்கள் கண்டுபிடிப்பு! கூறும் சேதி என்ன?

" இந்த கொற்றவை... சங்கு, சக்கரம் ஏந்தாமல் வேளாண் குறியீடான கதிர் - அரிவாளை சின்னமாகக் கொண்டிருப்பது போல காட்டப்பட்டுள்ளது."

திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் அருகே உள்ள இரு வெவ்வேறு கிராமங்களில் 1,300 ஆண்டுகள் பழைமையான கொற்றவை மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளுன. இவற்றைத் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

இது தொடர்பாக, இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம்.

"நண்பர்கள் இருவருடன் வந்தவாசி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, தேசூரை அடுத்த சாத்தபூண்டி எனும் கிராமத்தில் சிற்பம் ஒன்று இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்றோம். தேசூரில் இருந்து மழையூர் செல்லும் சாலையில் உள்ளது சாத்தபூண்டி. அந்த ஊரின் ஏரிக்கரையில் இருந்து சுமார் 0.5 கி.மீ வயல்வெளிக்குள் நடந்து சென்றதும், ஒரு வரப்பின்மீது வெட்டவெளியில் இருந்த பலகை கல் சிற்பம் ஒன்று காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட அந்தப் பலகை கல்லில் 8 கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தார் கொற்றவை.

வயல்வெளியில் கொற்றவை சிற்பம் - திருவண்ணாமலை
வயல்வெளியில் கொற்றவை சிற்பம் - திருவண்ணாமலை

போர்வீரர்கள் அணியும் கவசம் தலையை அலங்கரிக்க, இரு செவிகளில் குண்டலம் அணிந்து, நீள் வட்டமான முகம் கொண்டு அழகாகக் காட்சி தருகிறார். கழுத்தில் ஆரம் போன்ற அணிகலனை அணிந்தும், தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகள் அணிந்தும் காட்சியளிக்கிறார். எட்டு கரங்களைக் கொண்டு காணப்படும் இந்தக் கொற்றவை, தனது கரங்களில்... கதிர் - அரிவாள், வாள், அம்பு, சங்கு, வாள், வில் ஆகியன ஏந்தியபடி எருமையின் தலைமீது கம்பீரமாக நின்றபடி சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது.

கொற்றவையின் அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. அதுமட்டுமின்றி, அவருடைய இடையின் அருகே வலது புறமாகக் கிளியும், இடது புறமாகக் கலைமானும், கால்களின் அருகே வீரர்களும் வடிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாகப் பல்லவர் காலம் தொட்டு பிற்காலம் வரையிலான சிற்பங்களில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கொற்றவையை விஷ்ணு துர்கையாகக் காட்டும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்தக் கொற்றவை சங்கு, சக்கரம் ஏந்தாமல் சங்குடன் வேளாண் குறியீடான கதிர் - அரிவாளைச் சின்னமாகக் கொண்டிருப்பது போலக் காட்டப்பட்டுள்ளது.

சங்க காலம் முன்னர் தொடங்கி சங்கம் மருவிய காலம் வரையில், தமிழ் பண்பாட்டில் நிலம் சார்ந்த கடவுளாகவும் , தாய் தெய்வமாகவும் , தொல்குடி வழிபாடாகவும் இருந்தது கொற்றவை வழிபாடு. பின், பெருமளவில் மாற்றம் கண்டு 7 - ம் நூற்றாண்டுக்குப் பிறகு பெருந்தெய்வ வழிபாட்டுடன் கலந்து இன்று துர்கையாக மாறியுள்ளது. கதிர் - அரிவாள் மற்றும் சங்கை தாங்கியும், போர்வீரர் அணியும் தலைக்கவசம் போன்ற தலைக்கவசமும் அணிந்துள்ளதை வைத்தும், ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் பார்க்கையில் இதன் காலம் கி.பி.7 - ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதமுடிகிறது. எனினும் இப்பகுதியில் ஏற்கெனவே ஆவணம் செய்யப்பட்டுள்ள 6 - ம் நூற்றாண்டை சேர்ந்த சிம்ம விஷ்ணு காலத்திய நடுகற்களில் உள்ள சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களின் தாக்கம் இக்கொற்றவை சிற்பத்தில் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இக்கொற்றவை, இன்றும் வயல்வெளியின் மத்தியில், வெட்டவெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

திருவண்ணாமலை: அக்னி லிங்க சன்னதியில் பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு - சொல்லும் செய்தி என்ன?
புதரில் கிடந்த பிள்ளையார் சிற்பம்
புதரில் கிடந்த பிள்ளையார் சிற்பம்

மேலும், இவ்வூருக்கு அருகாமையில் உள்ள 'கடம்பை' என்னும் கிராமத்தில் புதர்களுக்கு மத்தியில் பலகைச் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தோம். அதனைச் சுத்தம் செய்து பார்த்த போது, அச்சிற்பம் பல்லவர் காலத்திய பிள்ளையார் சிற்பம் என்பதைக் கண்டறிந்தோம். 4 கரங்களுடன் காட்சியளிக்கும் பிள்ளையார், மிகவும் தேய்த்துள்ளதால் மேல் இரு கரங்களில் உள்ள ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. கீழ் இருக்கரங்களும் தொடையின் மீது வைத்தவாறு பத்மாசன கோலத்தில் அமர்ந்தவாறு வடிக்கப்பட்டுள்ளார். நீளமான இரு காதுமடல்களுடன், சிறிய துதிக்கை வலதுபக்கமாக இருக்க, உள்ளூர் கலைப்பாணியில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் அமைதியை வைத்து பார்த்தால், சுமார் 1,300 ஆண்டுகளுக்குமேல் பழைமையானதாக இருக்கலாம். அதாவது, கி.பி.7 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலச் சிற்பமாகக் கருதலாம். இதுபோன்ற சிற்பங்கள், முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு