மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55-வது ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனியில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது .

`அனுஷத்தின் அனுக்கிரகம்' அமைப்பு நடத்திய இவ்விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கலந்துகொண்டு 'சித்த ஜாலம்' என்ற தலைப்பில் பேசும்போது,
"முனி என்பது மௌனி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ரிஷி முனி போன்றவர்கள் குருவை அடிப்படையாகக் கொண்டவர்கள். இவர்களுக்குக் கட்டுப்பாடு உண்டு. சித்தர்களுக்குக் கிடையாது, சித்தன் தன் வாயால் தன்னை சித்தன் என்று ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை. எந்த நிலையிலும் தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். எவன் வழியும் எந்த வழியும் தேவையில்லை என்று நினைக்கிறவன்தான் சித்தன். 'தன் வழி தனி வழி' என்று வாழ்கிறவர்கள் சித்தர்கள் .
நம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. நேற்று சிவராத்திரியை முன்னிட்டு சிவ பூஜையில் டிரம்ஸ் சிவமணியுடன் நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி கலந்து கொண்டார். சிறிது நேரத்தில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இறந்து போனார். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது என்பதற்கு இது ஒரு சாட்சி.

மயில்சாமி ஒரு நடிகர் மட்டுமல்ல, தான் சம்பாதித்ததை பிறருக்கு கொடுக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணம் உடையவர்.
இந்த உலகில் ஏதோ வாழ்கிறோம். சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருகிறது. மனித வாழ்க்கையில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நம் கையில் எதுவும் இல்லை. உடல் நம் வசமில்லாத ஒன்று.

உலகில் லட்சக்கணக்கான சித்தர்கள் இருந்தாலும் பதினெண் சித்தர்கள் என்ற கணக்கு உண்டு. 18-ம் எண் என்பது ஒரு மேஜிக் நம்பர். மகாபாரதத்தில் இல்லாதது எதுவும் இல்லை. மனித வாழ்க்கையின் சகல சிக்கல்களுக்கும் தீர்வு மகாபாரதத்தில் உண்டு" என்று பேசினார்.