Published:Updated:

திருப்பதியில் தீபாவளி

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருப்பதியில் தீபாவளி

திருமலை தெய்வமாம் ஶ்ரீவேங்கடவன், பக்தர்களுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார். அதற்காக தீபாவளிக்கு முதல் நாள் பக்தர்களின் எண்ணெய்க் குளியலுக்கு வேண்டிய நல்லெண்ணெய், தேவ ஸ்தானத்தால் இலவசமாக அளிக்கும் மரபு வழக்கத்தில் உண்டு.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு, நான்கு மாட வீதிகள் வழியாக கோயில் அர்ச்சகர்கள் பெரிய `கேன்'களில் நல்லெண்ணையைக் கொண்டு வருவார்கள்.

அப்போது அங்குள்ள பக்தர்களுக்கு நல்லெண்ணெய் வழங்கப்படுமாம். இந்த எண்ணெயை பக்தர்கள் தீபாவளி அன்று விடியற்காலை பூஜித்து தலையிலும் உடலிலும் தேய்த்து நீராடுவார்கள்.

பக்தர்களுக்கு மட்டுமல்ல... கோயிலில் பணியாற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நல்லெண்ணெய் பிரசாதம் வழங்கப்படுகிறது.

தீபாவளி அன்று காலை... ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை, `கோயில் தங்க வாசல்' முன்பு உற்ஸவ மூர்த்தி மலையப்ப ஸ்வாமி, வைரமுடியுடன், தங்க-வைர நகைகள், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, ஶ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருள்வார். அங்கு ஸ்வாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். இதை தரிசித்தாலே நமது துன்பங்கள் விலகும்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி



திருமஞ்சன சேவை முடிந்ததும், மீண்டும் ஸ்வாமிக்கு அலங்கார- ஆராதனைகள் நடைபெறும். அப்போது லட்டு, ஜிலேபி போன்ற பலகாரங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் படைக்கப் பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

இரவு ஏழு மணிக்கு ஶ்ரீதேவி- பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி, மாட வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்புரிவார். ஸ்வாமி ஊர்வலத்துக்கு முன் மத்தாப்பூ, வண்ண வண்ண பூத்திரி ஆகியவற்றைக் கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடுவர்.

முன்பெல்லாம் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம். இப்போது, திருமலை யில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளதால், மத்தாப்பூ கொளுத்தி சுவாமியுடன் தீபாவளி யைக் கொண்டாடுகிறார்கள். பக்தர்களுடன் தீபாவளி கொண்டாடும் பெருமாளை அன்று தரிசிக்க, வாழ்வில் வசந்தம் வீசும்.

- டி.ஆர். பரிமளம், திருச்சி-21