பிரீமியம் ஸ்டோரி

கோழிக்கோடு பகுதியில் பிரபலமான வைத்தியர் ஒருவர் இருந்தார். `காராட்டு நம்பூதிரி’ என்று சொல்லக்கூடிய கேரளத்தின் பாரம்பர்யம் மிக்க அஷ்டவைத்திய நம்பூதிரியின் சீடராக விளங்கியவர் அவர்.

விஷ பாதிப்புகளைக் குணப்படுத்துவதில், பலருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவந்தார். அவர்களுடைய நோய்களை விரைவில் குணமாக்கியதால், எல்லோரும் அவரைப் போற்றி வந்தனர். வைத்திய வல்லமையைவிடவும் அவரின் மந்திர வல்லமை விஷத்தைப் போக்கிவிடும் என்பது ஊரறிந்த விஷயம். ஆம்! விஷத்தைக் களையக்கூடிய மந்திரம் அவருக்கு தெரிந்திருந்தது. அதனால் பலரும் அவரிடம் சீடர்களாகச் சேர்ந்து கற்றுத் தேர்ந்து வைத்தியர்களாகச் சிறப்புப் பெற்றார்கள்.

அதே ஊரில் கொச்சு ராமன் என்ற அப்பாவி சிறுவன் இருந்தான். மிகவும் ஏழை அவன். எப்படியாவது வைத்தியரிடம் சென்று மந்திர உபதேசம் பெற்று விட்டால், தானும் வைத்தியனாகி தனது வறுமையைப் போக்கிக் கொள்ளலாம் என்று விரும்பினான்.

spiritual moral story
spiritual moral story

ஆகவே, வைத்தியரைப் பற்றி அறிந்தவர்கள் சிலரிடம் விசாரித்தான். `வைத்தியரிடம் சீடனாகச் சேர்வது எளிதான காரியம் இல்லை’ என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் கொச்சுராமனிடம் விளையாட வேண்டும் என்று தோன்றியது. ``குருவிடமே சென்று `மந்திரம் வேண்டும்’ என்று உன் ஆசையைச் சொல். அவருக்குத் தட்சணை கொடுத்து, பின் மந்திரத்தை பெற்றுக் கொள்’’ என்றார்கள்.

அப்பாவியான கொச்சுராமனும் ``அப்படியா?’’ எனக் கேட்டான்.

“ஆம் ! குரு உனக்கு மந்திரம் கொடுத்துவிட்டால் நீ அதை ஐந்து லட்சம் உரு ஜபித்தால் போதும். உனக்கும் விஷ வைத்தியம் வசப்பட்டு விடும். நீயும் பெரிய வைத்தியனாகி விடுவாய்!” என்றனர்.

அவர்கள் சொன்னதை அப்படியே நம்பினான் கொச்சுராமன். குருவை தரிசிக்க ஆயத்தமானான். அவருக்குக் குருதட்சணை கொடுக்க வேண்டுமே?

கொச்சுராமனிடம் எதுவும் இல்லை. `கை நிறைய தட்சணை கொடு’ என்று அவனுக்கு வழிகாட்டியவர்கள் சொன்னது நினைவில் வந்தது. `என்ன செய்வது... எதைக் கொடுப்பது...’ என்று யோசித்து நின்றவனின் கண்களில் வீட்டுக் கூரையில் படர்ந்திருந்த பூசணிக் கொடி தென்பட்டது. ‘இதுதான் கை நிறைக்கும் காணிக்கை’ என்று தீர்மானித்தவன், கூரை மேல் ஏறி பூசணிக்காய்களைப் பறித்து வைத்தான்.

அதிகாலையில் மற்றவர்கள் விழிக்குமுன் எழுந்து தயாராகி, வைத்தியரின் வீட்டை அடைந்து வாசலில் காத்திருந்தான். அதிகாலை வேளையில் வெளியே வந்த வைத்தியர், இருட்டில் நின்றிருந்த கொச்சுராமனைக் கண்டு, ``யாரது?”என்று கேட்டார்.

உடனே அவன் அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, பூசணிக் காய்களை அவர் முன் வைத்தான். “நீங்கள், எனக்கு மந்திர உபதேசம் செய்து என்னையும் வைத்தியனாக்கவேண்டும்” என வேண்டினான்.

விடிந்தும் விடியாத நேரத்தில் வந்து பூசணிக்காய்களைச் சமர்ப்பித்து, மந்திரோபதேசம் கேட்கும் கோச்சுராமனைக் கண்டு வைத்தியருக்குச் சிரிப்பு வந்தது. அவனைக் கோமாளியாகவே பார்த்தார்.

“இந்தத் தட்சணையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்ட கோச்சுராமனை ஏளனத்துடன் பார்த்த வைத்தியர், ``விட்டி! கூஷ்மாண் டம்!’’ என்றார். `முட்டாள்! பூசணிக்காய்’ என்பது அந்த வார்த்தைகளுக்கான பொருள். ஆனால் மொழியறிவு இல்லாத கொச்சுராமன், அதுதான் மந்திரம் என்று நினைத்துக்கொண்டு ``ஐயா! மிக்க மகிழ்ச்சி!’’ என்று நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டான்.

வைத்தியரும் `அப்பாவி சிறுவனாக இருக்கிறானே’ என்று எண்ணியபடி வீட்டுக்குள் சென்றார்.

வீடு திரும்பிய கொச்சுராமனோ `விட்டி கூஷ்மாண்டம்’ என்பதையே மந்திரமாக நினைத்து உரு ஏற்ற ஆரம்பித்தான். நாள்கள் ஓடின. ஐந்து லட்சம் முறை ஜபம் முடிந்ததும், தனக்கு மந்திர ஸித்தி ஏற்பட்டுவிட்டது என்று தீர்மானித்துக் கொண்டான் கொச்சுராமன்.

ஆகவே, தெரிந்தவர்கள் அருகிலுள்ளவர்கள் என பலர் வீட்டுக்கும் சென்று ``மந்திர ஸித்தி பெற்றுவிட்டேன். பாம்புக் கடியைக் குணமாக்கு வேன். விஷ வைத்தியம் செய்வேன்’’ என்று கூறினான். ஆனால் அவன் வார்த்தையை நம்ப எவரும் தயாராக இல்லை.

இந்த நிலையில் ஒருநாள், பாம்பு கடித்து ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். ஊரிலுள்ள வைத்தியர்கள் எல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், கொச்சு ராமன் யதேச்சையாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

``நான் குணப்படுத்துகிறேன்’’ என்றான். எல்லோரும் அவனை ஏளன மாகப் பார்த்தார்கள். ஆனால் அவனோ மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்தான். தான் உருவேற்றிய `விட்டி கூஷ்மாண்டம்’ (முட்டாள் பூசணிக்காய்) மந்திரத்தை ஜபித்தான். பின்னர் அந்தத் தீர்த்தத்தை பாம்பு கடி பட்டவன் மீது தெளித்தான். என்ன ஆச்சர்யம், மறுகணம் விஷம் முறிந்து அந்த ஆசாமி எழுந்து உட்கார்ந்து விட்டான்.

இந்த விஷயம் காட்டுத் தீயென பரவியது. வெகு விரைவிலேயே கொச்சு ராமன் மிகப்பெரிய விஷ வைத்தியனாகி விட்டான்.

அவன் மந்திரம் ஜபித்தால் எப்பேர்ப்பட்ட விஷமும் இறங்கியது. இறந்தவரையே எழுப்பும் வல்லமை அவனுக்கு உண்டு என்று எல்லோரும் நம்ப தொடங்கினார்கள். சர்ப்ப தேவதையே அவனுடைய மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு ஏவல் செய்கிறது என்று வியந்து பேசினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் கோழிக்கோட்டை ஆண்ட சாமுத்திரி ராஜாவுக்கு விஷ உபாதை ஏற்பட்டது. பல மாந்த்ரீகர்களும் வைத்தியர்களும் முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனது. அரசரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக நீல நிறமாக மாற தொடங்கியது. இந்த நிலையில் அரண்மனையில் இருந்த ஒருவர், புதிய வைத்தியரான கொச்சுராமனைப் பற்றி மகாராணியிடம் தெரிவித்தார்.

``அனுபவசாலிகள் எல்லோருமே கைவிரித்துவிட்டார்கள். வேறுவழி இல்லை. அவரையும் அழைத்து பார்க்கச் சொல்வோம். உடனே அழைத்து வாருங்கள்’’ எனக் கட்டளையிட்டார் மகாராணி.

கொச்சுராமன் வந்து சேர்ந்தான். அரசரின் உடல் நீலம் பூத்துக் கிடப்ப தையும், வாயில் நுரை தள்ளி இருப்பதையும் கண்டான். “முதலில், ஒரு பாத்திரம் நிறைய கஞ்சி கொண்டு வாருங்கள்” என்றான்.

அவன் ஏன் கஞ்சி கொண்டுவரச் சொல்கிறான் என்பது எவருக்கும் புரியவில்லை. எல்லோரும் குழப்பத்துடன் அவனை நோக்கினார்கள்.

“அரசர் சாப்பிட்டு மூன்று நாள்கள் ஆகின்றன. விஷம் இறங்கியதும் அவருக்குப் பசி எடுக்கும். அதனால் கஞ்சியைக் கொண்டு வாருங்கள்’’ என்று நம்பிக்கையுடன் சொன்னான் கொச்சுராமன். கஞ்சி கொண்டு வரப்பட்டது.

கொச்சுராமன் மந்திர வைத்தியத்தை ஆரம்பித்தான். அரசர் அருகில் தரையில் அமர்ந்து, வழக்கமான பூசணிக்காய் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அடுத்தடுத்த கணங்களில் விஷம் மெள்ள இறங்க ஆரம்பித்தது. மெள்ள கண் விழித்த அரசர், தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் எழுந்து உட்கார்ந்தார்.

அதுமட்டுமா? கொச்சுராமன் கூறியபடியே, ``எனக்குப் பசிக்கிறது கஞ்சியைக் கொண்டுவாருங்கள்” என்றார். ஏற்கெனவே தயாராக இருந்த கஞ்சியைப் பருகிப் பசியாறினார்.

சூழ்ந்து நின்றிருந்த அனைவரும் வியப்பும் மகிழ்ச்சியுமாக கொச்சு ராமனைப் பாராட்ட ஆரம்பித்தனர். எவராலும் முடியாத நிலையில், விஷத்தைப் போக்கி அரசரைக் காப்பாற்றிய கொச்சுராமனுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரச மரியாதையுடன் பல்லக்கில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டான் கொச்சுராமன்.

spiritual story
spiritual story

கொச்சுராமனின் பல்லக்கு அவன் ஊருக்குள் நுழைந்தபோது, அவனை வியப்புடன் எதிர்கொண்ட கூட்டத்தில், அவனுக்கு உபதேசம் செய்த வைத்தியரும் நின்றிருந்தார். `இவனை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே’ என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பல்லக்கை நிறுத்தச் சொன்ன கொச்சுராமன், இறங்கி ஓடோடி வந்து அவரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

``குருநாதா! இதெல்லாம் உங்களின் கருணையால் விளைந்தவை. இந்தப் பரிசுகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என்று கூறி, தனக்குக் கிடைத்தப் பரிசில்களை அவரின் காலடியில் சமர்ப்பித்தான்.

வைத்தியருக்கு எதுவும் புரியவில்லை. “நான் என்ன செய்தேன்... உனக்கு எவ்வித உபதேசமும் நான் செய்யவில்லையே. நீதான் இறந்தவரையும் எழுப்பும் அளவில் மந்திர ஸித்தி பெற்றவனாக இருக்கிறாய். சொல்லப் போனால், நீதான் அதை எனக்கு உபதேசிக்க வேண்டும்’’ என்றார்.

பூசணிக்காய் மந்திரம்!

அப்போது கொச்சுராமன் சொன்னான்.

``குருதேவரே! நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும். ஒருநாள் அதிகாலையில் உங்கள் வீட்டு வாசலில் காத்திருந்து, தட்சணையாக பூசணிக்காய் சமர்ப்பித்து நமஸ்கரித்தேன். அப்போது நீங்கள் எனக்கு மந்திர உபதேசம் செய்தீர்கள். அந்த மந்திரத்தின் வல்லமையைக் கொண்டுதான் இந்த அளவுக்குச் சாதித்திருக்கிறேன்’’ என்றான்.

வைத்தியருக்கு அப்போதும் நினைவுக்கு வரவில்லை. “அப்படி என்ன மந்திரத்தை உபதேசித்தேன்?’’ எனக் கேட்டார்.

அவன் அவர் அருகில் வந்தான். ``விட்டி கூஷ்மாண்டம் (முட்டாள் பூசணிக்காய்) என்ற அற்புத மந்திரத்தை உபதேசித்தீர்களே. உங்களுக்கு நினைவில்லையா?’’ என்று கேட்டான்.

குரு அதிர்ச்சி அடைந்தார். இப்போது அவருக்கு அந்த விடியல் சம்பவம் நினைவுக்கு வந்தது. `வேடிக்கையாய் திட்டிய வார்த்தைகளையே மந்திரமாக நினைத்து உருவேற்றியிருக்கிறானே...’ என்ற சிந்தனை ஒருபுறம் எழுந்தாலும், வேறோர் உண்மையையும் அவர் உணர்ந்துகொண்டார்.

ஆம்! உண்மையான பக்தியும் பரிபூரணமான நம்பிக்கையும் இருக்கும் போது, குருவருளும் திருவருளும் தானே கைகூடும். அப்படியான குரு பக்தியே எல்லாவிதமான ஸித்திகளையும் ஒருவனுக்கு கொடுத்துவிடும் என்பதை அறிந்து சிலிர்த்தார்; புதிய வைத்தியரை சேர்த்து அணைத்துக் கொண்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு