Published:Updated:

ஆறு மனமே ஆறு - 44

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு - 44

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

தொகுப்பு: எம்.எஸ். நாகராஜன்

இயற்கையிடம் பெறப்பட்டவற்றில் ஒரு பங்கையேனும் இயற்கைக்குக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கு யக்ஞங்கள் உதவும். சிலர் மனதில் கேள்வி தோன்றலாம்... பழங்காலம் போன்று இப்போதும் யக்ஞங்கள் தேவைதானா’ என்று. செங்கற்களை அடுக்கி, நடுவில் மணலைப் பரப்பி, அக்னி முகமாக சமித்துகள் இட்டு நெய் வார்த்து செய்யப்படுவது மட்டுமே யக்ஞங்கள் என்று நினைத்தீர்களா மக்களே? யக்ஞம் என்றால் அதுமட்டுமல்ல; ஐந்துவித யக்ஞங்களை விளக்குகின்றன நம் ஞானநூல்கள். அவை என்னென்ன தெரியுமா?

ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு


ரிஷி யக்ஞம்: நமக்கு ஆன்மிகம் சாஸ்திரம் மற்றும் ஞானத்தைப் போதித்தவர்கள் ரிஷிகள், ஞானிகள் ஆவர். அவர்களின் சிந்தனைகள், உபதேசங்கள், அவர்கள் அளித்த அருள்களஞ்சியங்களைப் படித்தலும், கேட்டலும் சிந்தித்தலும், அவர்கள் அவற்றில் சொன்னபடி நடத்தலும் சிறப்பாகும். இதையே ரிஷி யக்ஞம் என்பார்கள்.

தேவ யக்ஞம்: நாம் நமது வாழ்வில் கடைப்பிடிக்கும் வழிபாடுகள், பூஜைகள் மற்றும் தெய்வ ஆராதனைகளை - வழிபாடுகளை தேவ யக்ஞம் என்று விளக்குவார்கள்.

ந்ரு யக்ஞம்: `அதிதி தேவோ பவ’ என்பது நம் முன்னோர் காட்டிய வழி. அதன்படி விருந்தினரை உபசரித்து, அவர்களை திருப்திப்படுத்துவது மிகவும் அவசியம். இதை ந்ருயக்ஞம் என்று அழைப்பார்கள்.

பித்ரு யக்ஞம்: பெற்றோரைப் பேணிக் காப்பது, அவர்களின் அமரத்துவத்துக்குப் பிறகும் எப்போதும் மனதில் நிறுத்தி வழிபடுவதை - முன்னோருக்கான வழிபாடுகளை முறைப்படி செய்வதைப் பித்ரு யக்ஞம் என்பார்கள்.

பூத யக்ஞம்: இயற்கையின் அங்கமான நதிகள், காடுகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றைப் பேணிக் காக்கும் முறையை பூத யக்ஞம் என்று அழைப்பது வழக்கம்.

இவை ஒவ்வொன்றும் நம் வாழ்க்கைக்கும் மிக இன்றியமையானது. கட்டாயமாக நாம் கடைப்பிடிக்க வேண்டியவை இந்த பஞ்ச யக்ஞங்கள்!

மனிதனும் இயற்கையும்!

பூத யக்ஞம் என்று பார்த்தோம் அல்லவா? மனிதப் பிறப்புக்கு எப்படி ஒரு காரணமும் காரியமும் உண்டோ, அப்படி இயற்கைக்கும் காரண-காரியம் உண்டு. இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் உண்டு.

ஆக, இயற்கையை அதன் இயல்பிலேயே ஏற்கவேண்டும்; போற்றவேண்டும். மனிதனானவன் இயற்கையை நம்பி வாழ்கிறான். ஆனால், மனிதன் தனது சுயநலத்துக்காக அவற்றை அழிப்பதைக் காண்கிறோம். இது தவறு. பழங்காலத்து நீதிக்கதை ஒன்று உண்டு.

கிராமத்து விவசாயி ஒருவன் தனக்குப் பிறகு சொத்துக்களைப் பராமரிக்க, தன் பிள்ளைகளில் தகுதியானவனைத் தேர்வு செய்ய விரும்பினான். ஆகவே தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் அழைத்தான். “நாட்டு நடப்பை அறிந்து, நல்ல அனுபவங்களைப் பெற்று வாருங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தான்.

மூவரில் மூத்தவனும் இரண்டாமவனும் வலிமையானவர்கள். கடைக்குட்டிப் பிள்ளை மெலிந்தவன். ஆனால் நல்ல சிந்தனை கொண்டவன்.

மூவரின் பயணம் இனிதே தொடங்கியது. வழியில் அளவில் பெரிய எறும்புப் புற்று ஒன்றைக் கண்டனர். அண்ணன்கள் இருவரும் புற்றை இடித்து எறும்புகளை அழித்து ஆனந்தம் கொள்ள நினைத்தனர். கடைக்குட்டியோ அவர்களைத் தடுத்துச் சமாதானப்படுத்தி எறும்புகளையும், புற்றையும் காப்பாற்றினான்.

பயணம் தொடர்ந்தது. மூவருக்கும் பசி எடுத்தது. ஏரிக்கரையில் உணவு மூட்டையுடன் அமர்ந்தனர். ஏரிக்கரையில் வாத்துக் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. அவற்றைக் கண்டதும் வேட்டையாட முடிவெடுத்து மூத்தவன் தன் வில்லை எடுத்து அம்பு தொடுக்கக் குறி பார்த்தான். கடைக்குட்டி அவர்களைத் தடுத்து வாத்துக்களைக் காப்பாற்றினான்.

உணவை உண்டு முடித்தபிறகு ஏரிக்கரையில் சற்று இளைப்பாறி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். மாலைப் பொழுது வந்தது. இருள் சூழ்ந்தால் பயணிக்க முடியாது. ஆகவே மூவரும் அருகிலிருந்த மரத்தடியில் இரவைக் கழிக்க முடிவெடுத்தனர். அந்த மரத்தின் உச்சியில் தேன் அடையைக் கண்டு தேனை உண்ண அதையும் அழிக்க எண்ணினர்.

இப்போதும் கடைக்குட்டி தடுத்தான். ``ச்சே... எதற்கும் ஒத்துவராதவன் நீ’’ என்று அவன் மீது சலித்துக் கொண்டனர் மூத்தவர்கள்.

மனிதனும் இயற்கையும்!
மனிதனும் இயற்கையும்!
amagata


அந்த வனப்பகுடியில் ஒரு குடிசை இருந்தது. அதில் தன் மகளுடன் பெரியவர் ஒருவர் வசித்தார். அவரிடம் தங்களது பயண நோக்கத்தைச் சகோதரர்கள் எடுத்துரைத்தனர்.

`மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்று வாழ்த்திய முதியவர், அந்தச் சகோதரர்களிடம் அங்கிருந்த கற்பலகை ஒன்றைப் படிக்கச் சொன்னார். கற்பலகையில் முதலாவது வழிகாட்டல் - `காட்டில் சிதறிக்கிடக்கும் 1000 முத்துக்களை, சூரியன் மறைவதற்குள் கண்டுபிடித்துச் சேகரிக்க வேண்டும். இல்லையெனில் கற்சிலையாக மாற நேரிடும்’ என்றிருந்தது. இலைதழைகளும் காய்ந்த சருகுகளும் பரவிக் கிடந்ததால் முத்துக்களைக் கண்டெடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் மூத்தவர்கள் இருவரும் சிந்திக்காமல் காரியத்தில் இறங்கி இருவருமே சிலையாகிவிட்டனர்.

மூன்றாம் நாள்- கடைக்குட்டியின் முறை. அவன் அவசரப்படவில்லை. ஆயிரம் முத்துக்களையும் கண்டெடுப்பது எப்படி என்று சிந்திக்கத் தலைப்பட்டான். ஆனால் அவனுக்கு உதவி செய்ய வந்தன எறும்புகள்.

``கவலைப்படாதே! எங்களை நீ காப்பாற்றினாய். உனக்கு நாங்கள் உதவுகிறோம்” என்று எறும்புகள் குறித்த நேரத்தில் முத்துக்களைச் சேகரித்து அவனிடம் ஒப்படைத்தன. அடுத்த கட்டளை - ஏரியில் மூழ்கிப்போன தங்க மோதிரத்தை மீட்டுவர வேண்டும்!

`இது அசாத்தியமான விஷயம்.’ என்று கலங்கினான் கடைக்குட்டி. அப்போதும் உதவி அவனைத் தேடி வந்தது. ஆம்! அவனால் காப்பாற்றப்பட்ட வாத்துக் கூட்டம் ஏரிக்குள் மூழ்கி மோதிரத்தை எடுத்துவந்து கொடுத்தது.

இரண்டாவது கட்டளையையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்த இளையவன், மூன்றாவது கட்டளையை நிறைவேற்ற தயாரானான். ஆனால் அந்த மூன்றாவது கட்டளை, அவன் வாழ்க்கையையே மாற்றி அமைக்க வல்லது என்பது அவனுக்குத் தெரியாது! மூன்றாவது கட்டளை என்ன?; கடைக்குட்டி அதை நிறைவேற்றினானா? தொடர்ந்து பார்ப்போம்!

-மலரும்...

அம்மாவை விட்டுப் பிரியப் போவதில்லை’

பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்ட ரீயூனியனில் 1953-ம் ஆண்டு பிறந்தவர் மது; இந்திய வம்சாவளியினர். அன்பர் மதுவுக்கு சந்நியாஸி ஆகவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. இவருடைய சகோதரி ருக்மணிக்கும் ஆன்மிகத்தில் பெரும் ஆர்வம் இருந்தது.

1976-ம் ஆண்டு பாரதம் வந்தடைந்த மது, இமயமலைக்குச் சென்றார். அங்கே பேலூர் ராமகிருஷ்ண மடத்தின் ஸ்வாமி வீரேஸ்வரானந்தரைச் சந்தித்தார். அவரிடம் தியானம் செய்வது பற்றிய அறிவுரையும் ஆலோசனையும் தரும்படி வேண்டினார். ஸ்வாமியோ ``உன்னைப் பொறுத்தவரையில் தென் பாரதம்தான் சரியான இடம்’’ என்று வழிகாட்டினார். மது திருவண்ணாமலையை அடைந்தார். அங்கே அவரைச் சந்தித்த பக்தர் ஒருவர், “காளியின் பக்தரான நீங்கள், வள்ளிக்காவு களரியில் - காளி வடிவில் இருக்கும் அம்மாவைச் சரணடையுங்கள்.உங்களின் லட்சியம் நிறைவேறும்’’ என்றார். அதன்படி மது 1980-ல் வள்ளிக்காவு வந்து சேர்ந்தார்.

அப்போது தேவிபாவ தரிசனத்தில் இருந்த அம்மா, “மதுவுக்காகவே இவ்வளவு நாள் காத்துக்கொண்டிருந்தேன். அவனை உள்ளே வரச் சொல்’’ என்றார். மதுவுக்கு வியப்பு. தான் வந்தது அம்மாவுக்கு எப்படித் தெரியும் என்று திகைத்தார்.

அம்மாவோ, “ராமகிருஷ்ண மடத்து ஸ்வாமி வீரேஸ்வரானந்தரின் தீர்க்கதரிசனத்தால் நீ என்னை வந்தடைந்தாய். அப்படித்தானே மகனே?’’ என்று கேட்டு மதுவின் வியப்பை பன்மடங்காக்கினார்.

பின்னர், ஆன்மிகப் பயணத்தில் ரீயுனியனில் மடம் ஒன்றை நிறுவி நிர்வகித்து வந்த மதுவுக்கு, 1985 பிப்ரவரி 24 -ம் நாள் தீக்ஷையும், பிரம்மசாரி பிரேமானந்த சைதன்யா எனும் திவ்ய நாமமும் அளிக்கப் பட்டன. `எனக்கு வழிகாட்டிய அம்மாவை விட்டுப் பிரியப் போவதில்லை’ எனும் இன்றுவரை தொடர்கிறது இவரின் தொண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism