Published:Updated:

லட்சுமி கடாட்சம் 10

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம் 10

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

உறவுகள் எனக்கு மிகவும் குறைவு. எனக்குச் சகோதர, சகோதரிகள் கிடையாது. இந்தச் சினிமாதான் எனக்கு அந்த உறவுகளை எல்லாம் கொடுத்தது.

லட்சுமி கடாட்சம் 10

சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட சேனல் ஒன்றில் அருமையான ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். நடிகர் ரமேஷ் அரவிந்த் அதைத் தொகுத்து வழங்கினார்.

நம்மை அழைத்து வந்து நம்மிடம் பல விஷயங்களைக் கேட்டுப் பேச ஆரம்பிப்பார். நாமே எதிர்பாராத தருணத்தில், நாம் எதிர்பார்க்காத... பல வருஷங்களாக நம்மைத் தெரிந்த பலரிடமும் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை, நினைவுகளைக் கேட்பார்.

அவர்களை எல்லாம் பல காலமாகச் சந்தித்தே இருக்கமாட்டோம். திடுமென அவர்கள் நம் பின்னால் வந்து நிற்பார்கள். இல்லையென்றால் மறைந்திருந்து நம்மிடம் பேசுவார்கள்; குரல் மட்டும் கேட்கும். திடீரெனத் தோன்றித் திக்குமுக்காட வைப்பார்கள். தட் இஸ் எ வொண்டர்ஃபுல் ஷோ!

நான் ஏன் இதை இப்போது பகிர்கிறேன் என்றால், உறவுகள் எனக்கு மிகவும் குறைவு. எனக்குச் சகோதர, சகோதரிகள் கிடையாது. இந்தச் சினிமாதான் எனக்கு அந்த உறவுகளை எல்லாம் கொடுத்தது. இங்கே வேலை செய்யும்போது, பலரும் என்னைச் சகோதரியாகப் பார்த்து, பாவித்து... அதெல்லாம் மறக்க முடியாத விஷயங்கள். பள்ளியில் கிடைத்த நட்புகள் ஒரு பலம் என்றால், சினிமா தந்த உறவுகள் மற்றொரு பலம்.

ரமேஷ் அரவிந்தின் அந்த ஷோவில் ஒரு முறை திடீரென்று, “உங்களுடைய பள்ளித் தோழிகளை நினைவிருக்கிறதா? இன்னும் யாரெல்லாம் தொடர்பில் இருக்காங்க?” என்று கேட்டார்கள்.

“நான் யாரையுமே தொடர்புகொள்ளலங்க. ஏன்னா எப்போ பார்த்தாலும் நான் காலில் றெக்கையைக் கட்டிட்டுப் பறக்கிற ஆளு. ஏதோ ஒரு வேலையாக ஓடிக்கிட்டே இருக்கேன். அந்த ஓட்டத்துக்கு இடையில் என் குடும்பம், குழந்தைகள்... எத்தனையோ பொறுப்புகளுக்கு இடையில் ‘தாய்’ என்கிற பொறுப்பையும் விடாம பார்த்துக்கணும்.

நடிக்கும் கேரக்டர்தான் எனக்கு ரொம்ப முக்கியம். வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்யும்போது இறைவனை வேண்டிக்குவேன். `கடவுளே! எனக்குத் தெரியாது... நாளைக்கு இந்த சீன் ஒரே டேக்கில் ஓகே ஆகணும்’ அப்படீன்னு வேண்டிக்கிட்டு ஓடின காலகட்டம். ரெண்டாவது டேக் வாங்கினா அவமானம்னு நினைச்சிட்டிருந்த காலகட்டத்தில் பள்ளியையும் அங்கே படிச்சவங்களையும் எப்படிங்க ஞாபகம் வச்சுக்க முடியும்?” என்று பதில் சொன்னேன்.

திடீரென்று பார்த்தால்... அங்கே இருந்த திரையில் என் பள்ளித் தோழிகள். எனக்கு ஒரு நிமிஷம் அப்படியே... என்ன செய்றது, என்ன சொல்றதுன்னும் எதுவுமே தோன்றவில்லை. எல்லோருமே நன்கு படித்து, இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் பெரிய பெரிய அலுவலகங்களில் நல்ல பொறுப்புகளை வகிக்கிறார்கள்.

அவர்கள் எல்லாரும் நேரம் ஒதுக்கி வந்து, என்னைப் பற்றிச் சொல்லி, பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்தக் காலகட்டம், நாங்கள் நடித்த நாடகங்கள், நாங்கள் ஜெயித்த இன்டர் ஸ்கூல் மேட்ச்சுகள் பற்றியெல்லாம் பேசினார்கள்.

`நாம எப்படியெல்லாம் விளையாடினோம்... நீ எங்களை மார்ச் ஃபாஸ்ட்டில் எப்படியெல்லாம் லீட் பண்ணிப் போனே... உன்னோட தைரியம் அப்பவே தெரியும்...’ என்றெல்லாம் அவர்கள் சொன்னபோது, திகைத்துப்போனேன்.

குறிப்பாக அன்றைய தினம் வந்தவர்களில், என் நெருங்கிய தோழி சரஸ்வதியும் ஒருத்தி. பள்ளி நாடகத்தில் நான் சீதையாக நடிக்க, அவள்தான் ராமனாக வேஷம் போட்டாள். லக்ஷ்மி,சரஸ்வதி என்பார்கள் எங்களை. அத்துடன் வசந்தா... இவர்கள் இருவரும் முக்கியமான தோழிகள்.

ஆக, தோழிகள் யாருமே சம்பந்தப்பட்ட சேனலின் நிருபர் கேட்டபோது, எவ்வித ஈகோவும் பார்க்கவில்லை. `லக்ஷ்மி என்ன... அவ பெரிய நடிகையா இருந்தா இருக்கட்டுமே... நாங்களும் பெரியவங்கதானே’ என்றெல்லாம் நினைக்கவில்லை.

‘நாங்களும் பெரியவர்கள்; லக்ஷ்மியும் பெரியவள். ஏனென்றால் எங்கள் பின்புலம் எங்கள் பள்ளி. எங்களுக்கு அந்தப் பள்ளி சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள்... அன்பு, பாசம், அடக்கம், விட்டுக்கொடுத்துப் போதல்... அனைத்தும் காரணம்’ என்றல்லவா நினைத்திருக்கிறார்கள்.

நாங்கள் பெரும்பாலான நேரம் பள்ளியில் செலவழித்தோம். காலை 9 மணிக்குப் போனால் மாலை 5 மணிக்குத்தானே வரு வோம். வரும்போது ஆடி ஓய்ந்து வருவோம். கைகால் அலம்புவோம். ஏதோ ஒன்றைச் சாப்பிடுவோம். ஹோம் வொர்க் பண்ணுவோம். படுத்துத் தூங்கிவிடுவோம். அப்போது டிவி இல்லாத காலகட்டம். ரேடியோவில் நியூஸ் கேட்டே ஆகவேண்டும்.

இப்படி அந்தச் சிநேகிதிகள், பள்ளியில் நான் செய்த விஷயங்களை... நானே மறந்துபோன விஷயங்களை எடுத்துச்சொல்லி, பள்ளித் தருணங்களைப் பகிர்ந்துகொண்ட நேரத்தில், நான் உடைந்துபோய் அழுதேன். அதிலிருந்து அந்தத் தோழிகளுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. ‘வாட்ஸ் ஆப்’ என்று ஒன்று இருப்பதை அவர்கள் எனக்குச் சொல்லிக்கொடுக்க, இன்று வரை தொடர்கிறோம்.

அதுவரையிலும் நான் எந்த சோஷியல் மீடியாவிலும் கிடையாது. ஏனெனில் அது ஒரு கமிட்மென்ட். என்னை யாரும் தவறாக எண்ண வேண்டாம். எல்லா சோஷியல் மீடியாவுமே ஒரு கமிட்மென்ட்தான். ஏதேனும் ஒன்றைப் பார்த்தால், அதற்குள் கமென்ட் போடவேண்டும்; பதில் அளிக்க வேண்டும். எதையாவது சொல்லத் தோன்றும். எதற்கு வம்பு! அந்த நேரத்தில் வேறு எதையாவது உருப்படியாகச் செய்யலாமே!

லக்ஷ்மி சிவச்சந்திரன்
லக்ஷ்மி சிவச்சந்திரன்


சாதாரணமாக என்னை யாராவது ‘உனக்கு என்ன தெரியும்?’ என்று கேட்டால், ‘எனக்குச் சமைக்கத் தெரியும். சம்பாதிக்கத் தெரியும்’ என்றுதான் சொல்லுவேன்.

சமைப்பதைக்கூட எங்களுக்குப் பள்ளியில் ஒரு வகுப்பாக எடுத்தார்கள். அதில் எங்களுக்குப் போட்டியும் வைப்பார்கள். நான் ஏன் இந்தத் தொடரில் என் பள்ளியைப் பற்றிப் பேசுகிறேன் என்றால், எல்லாவற்றிலும் ஓர் அடிப்படை அறிவை போதித்தது பள்ளிதானே!

எங்கள் பள்ளியில் தையல் கற்றுத் தந்தார்கள். எம்பிராய்டரி சொல்லித் தந்தார்கள். எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயம். பூ அலங்காரத்திலிருந்து சமையல் வரை பல போட்டிகள். எங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, எதையாவது ஒன்றைச் செய்வோம். ‘ஸ்போர்டிவாக எல்லாவற்றிலும் பங்குகொள்ள வேண்டும். தோற்பது, ஜெயிப்பது விஷயம் இல்லை’ என்பது எங்களுக்கு வைஸ் பிரின்சிபாலாக இருந்த கமலா மேடம் இட்ட கட்டளை.

‘கமலா டீச்சர்’ என்றாலே... நடுங்கித் தீர்த்திடுவோம். இப்போது நினைத்தால்கூட பயம் வருகிறது. அந்த பயம் அவர் மேல் பக்தி இருப்பதனால் வந்த பயம். அவர் எங்களை எல்லாம் கண்டிப்பாக வளர்த்து, எல்லோருக்கும் பயிற்சி கொடுத்து... எங்களுக்கு டான்ஸ் வருதோ, பாட்டு வருதோ... எல்லாவற்றிலும் பங்குகொள்ளச் சொல்லி, பள்ளி நாடகங்களில் ‘நீ அதை ட்ரை பண்ணு, நீ இதை ட்ரை பண்ணு’ என்று எடுத்துச் சொல்லி வளர்த்துவிட்டார்.

இப்படி `ட்ரை பண்ணு’ என்று சொல்லிச் சொல்லியே எங்களை முன்னாலே தள்ளித் தள்ளிவிட்டது எங்கள் பள்ளியும் எங்கள் ஆசிரியைகளும்தான்.

வாணி ஜெயராம் என்னுடைய சீனியர். நந்தினி ரமணி ஒரு திறமையான இசை மற்றும் நடனக் கலைஞர், விமர்சகர். அவரும் எனக்கு சீனியர். ஸ்கூல் பீப்பில் லீடராக இருந்தார். அவருக்கு நான் அசிஸ்டென்ட்டாக இருந்திருக்கிறேன். இதுபோல பல திறமையான, வெற்றிகரமான சாதனையாளர்களைக் கொடுத்திருக்கிறது எங்கள் பள்ளி.

சில வருடங்களுக்கு முன்பு எங்கள் பள்ளியில் ஒரு பெரிய விழா கொண்டாடினார்கள். அதுபற்றிச் சொல்லும்போதே அழுது விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அப்படியொரு நெகிழ்ச்சியான தருணம் அது!

-கடாட்சம் பெருகும்...

வைகாசி மகிமைகள்!

வசந்தம் தரும் வைகாசி மாதத்தை `மாதவ மாதம்' என்றும், `வைசாகம்' என்றும் அழைப்பது உண்டு. வைகாசி விசாகம் முருகனின் அவதார தினம்.

ஜோதி வழிபாடு, ஜீவ காருண்யம் முதலான வற்றை உலகுக்கு போதித்த ராமலிங்க வள்ளலார், வடலூரில் 'சத்தியஞான சபை' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அங்கே தர்மசாலையையும் நிறுவினார். அன்று அவர் தர்மசாலையில் ஏற்றிய ஜோதி, இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நாள் ஒரு வைகாசி மாதத்தில் தான் நடந்தது.

புத்தர், வைகாசி மாதம் பௌர்ணமியன்று தான் அவதரித்தார். அரண்மனையைத் துறந்து, போதி மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்த புத்த பிரான், ஞானம் பெற்ற திருநாளும் வைகாசி பௌர்ணமியே!

வைகாசி மாதத்தில் பெருமாளை துளசி தளத்தால் பூஜை செய்தால், நிறைய பலன்களைப் பெறலாம்.

வைகாசி பௌர்ணமியில் சிவபெருமானுக்கு சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு. அன்று செந் தாமரை, அலரிப்பூ, செவ்வந்தி ஆகிய மலர்களைக் கொண்ட மாலையை சிவபெருமானுக்கு அணிவித்து வணங்கினால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism