திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

`உலகத்தை மறந்து விடுங்கள்!’ - மாதா அமிர்தானந்தமயி தேவி

மாதா அமிர்தானந்தமயி தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
மாதா அமிர்தானந்தமயி தேவி

‘இறைவனை நினைக்க, மறக்க வேண்டும்!’ - இது எப்போதும் பக்தர்களுக்கு நான் சொல்லும் போதனை.

மனித மனம் எப்போதும் நடந்து முடிந்த நிகழ்வுகளிலும் இனி நடக்க இருப்பவை பற்றிய கனவுகளிலும் மூழ்கியிருக்கிறது. இதனால் ஆனந்தமாகக் கழியவேண்டிய, ‘இந்த நிமிடம்’ நஷ்டமாகிறது.

‘கடந்த காலம் என்பது செல்லுபடியாகாத காசோலை மாதிரி’ எனச் சொல்லலாம். நடந்து முடிந்ததையே எப்போதும் நினைப்பது, பிணத்தை விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போன்றது. இறந்தவர் ஒரு நாளும் எழுந்துவரப் போவதில்லை. செலவழிந்த நிமிடங்கள் திரும்பக் கிடைப்பதில்லை. அதுபோல இனி நடக்கப்போவதைக் குறித்துச் சிந்தித்து மனக் குழப்பம் அடையவும் தேவையில்லை. நீங்கள் நினைப்பது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். நிறைவேறாத கற்பனைகளைச் சுமந்து வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

இந்த நிமிடம் முழுசாக உங்களுக்குச் சொந்த மானது. அது கையில் இருக்கும் பணம் போன்றது. விருப்பத்துக்கேற்றபடி அதைச் செலவழிக்க முடியும். சரியான வழியில் செலவழிக்காமல் போனால், சரியான பலன் கிடைக்காது. பணமும் வீணாகிவிடும். கடந்ததையும் இனி கடக்கப் போவதையும் மறந்துவிடுங்கள்.

‘இறைவனை நினைக்க, மறக்க வேண்டும்!’ - இது எப்போதும் பக்தர்களுக்கு நான் சொல்லும் போதனை. ஆனால், இதைக் கேட்கிறவர்கள் மனத்தில் ஒரு குழப்பமான கேள்வி எழும். ‘மறந்தால் அப்புறம் எப்படி நினைக்க முடியும்?’

ஆனால், மறப்பது அவசியம். இறைவனை நினைப்பதற்கு மட்டுமில்லை; எந்த ஒரு செயலையும் கவனமாகச் செய்ய வேண்டும் என்றால், மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும்.

குழந்தைகள் பாடங்களைப் படிக்கும்போது, விடுமுறையில் ஆடிய கிரிக்கெட் விளையாட்டு பற்றியோ, டி.வி-யில் எப்போதோ பார்த்த கார்ட்டூன் படங்களைப் பற்றியோ நினைத்துக்கொண்டி ருந்தால் படிக்க முடியாது. இயந்திரத்தனமாக உதடுகள் மட்டும் பாடத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும். மனம் வேறு எங்கேயோ ஊர் சுற்றிக்கொண்டிருக்கும். படித்தது மூளையில் ஏறாது.

மாதா அமிர்தானந்தமயி தேவி
மாதா அமிர்தானந்தமயி தேவி

சாதிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி, பரிசோதனைக்கூடத்தில் இருக்கும்போது வெளியுலகத்தை மறந்துவிடுகிறார். வெளியில் பகல் வெளிச்சம் இருக்கிறதா... பகல் முடிந்து இருட்டிவிட்டதா... மழை கொட்டுகிறதா... வெயில் கொளுத்துகிறதா என்று வெளியுலகச் சூழ்நிலை எதுவும் அவர் மனத்தை பாதிப்பதில்லை. அதே பரிசோதனைக் கூடத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு ஆராய்ச்சிகள் நடக்கலாம். அதையெல்லாம் அவர் கவனிக்க மாட்டார். தனது வேலையில் மட்டும் கவனமாக இருப்பார். இப்படி கண்ணும் கருத்துமாக இருப்பவர்களே தங்கள் லட்சியத்தில் வெல்கிறார்கள்!

உங்கள் தினசரி வாழ்க்கையில் இதுபோல மறப்பதும் நினைப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணத்திலும் சில பொருள்கள் மறக்கப்படுகின்றன. வேறு சில பொருள்கள் புதிதாக நினைவுக்கு வருகின்றன. குடும்பத்தை மறக்கும்போதுதான் அலுவலகம் நினைவுக்கு வருகிறது.

அலுவலகத்தில் நுழைந்து வேலை பார்க்க உட்கார்ந்ததும் குடும்பம் பற்றிய நினைப்பு மறந்துவிடுகிறது. அலுவலகத்தில் மேலதிகாரி எதற்காகவோ திட்டும்போது, அதுவரை மனத்தில் இருந்த சந்தோஷமான எண்ணங்கள் மறந்துபோகின்றன. மாலை அலுவலகம் முடிந்து எல்லோரும் வீட்டுக்குத் திரும்பும் சலசலப்பு கேட்கும்போதுதான் மனைவி, குழந்தைகள் ஞாபகம் வருகிறது. அந்த நிமிடமே வேலையில் இருந்த கவனம் மறந்துபோகிறது.

இப்படி ஒரு விஷயத்தை மறப்பதும் இன்னொரு விஷயத்தைப் புதிதாக நினைப்பதும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு கணத்திலும் இடையறாமல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள்தான் அதை உணர்வதில்லை.

வாழ்க்கையில் ஒன்றை மறப்பதுதான் இன்னொன்றை நினைப்பதற்கான வழி. இறைவனை நினைப்பதற்கும் இது பொருந்தும். இறைவனை நினைக்க உலகத்தை மறக்க வேண்டும். ஏனென்றால், இந்த உலகம் முழுவதை யும் இறைவனாகக் காணும் சக்தி உங்கள் யாருக்கும் இல்லை. அதனால் உலகத்தைப் பார்க்கும்போது கடவுளை மறந்துவிடுகிறீர்கள். தொடர்ந்து இறைவனை நினைப்பது என்றால் உலகத்தையும் உலகப் பொருள்களையும் மறப்பதே ஆகும்.

இப்படி இறைவனை நினைத்து உலகை மறப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? நீங்கள் அழகான ஒரு வீடு கட்டுவதாக வைத்துக்கொள்வோம். இது வாழ்நாள் முழுவதும் உங்கள் கனவாக இருந்திருக்கும். அதில் என்னென்ன இருக்க வேண்டும் என்று வருஷக்கணக்கில் திட்டமிட்டு இருப்பீர்கள். மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து இந்த வீட்டைப் பற்றி மட்டுமே நினைத்து வந்திருப்பீர்கள். கடைசியில் ஒரு நாள் உங்கள் கனவுகள் நிஜமாகி வீட்டைக் கட்டி முடித்து அதில் குடியேறிய பிறகு மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கிறது இல்லையா..?!

அதேபோல இடைவிடாமல் இறைவனை நினைத்து, உலகத்தையே மறக்கும்போது உங்களுக்கு நிம்மதியும் நிறைவும் கிடைக்கிறது. புது வீட்டுக்குக் குடி போனதும் உங்களுக்குக் கிடைக்கும் நிறைவு சீக்கிரமே மறைந்து விடும். ஏனென்றால், அதைவிட பெரிய ஆசை ஒன்று அடுத்ததாகத் தோன்றிவிடும். ஆனால், மற்ற அனைத்தையும் மறந்து இடையறாது இறைவனை நினைப்பதால் கிடைக்கும் அமைதியும் மனநிறைவும் அப்படி மறைந்து விடாது... அது நிலையானது.

மனிதர்களில் பலரும் எதற்காக ஏங்குகிறார்கள்? இந்த உலகில் இல்லாதது எது? மன அமைதிதானே! வாழ்க்கையை இன்பமயமானதாக மாற்ற அன்பும் அமைதியும் வேண்டும். மனத்தின் ஆசைகளுக்கு எல்லைகள் கிடையாது. ஒன்று கிடைத்ததும் அதைவிட உயர்ந்த இன்னொரு பொருள்மீது அது ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆசைகள் தொடரத் தொடரப் பிரச்னைகளும் உருவாகும்.

பேராசைக்கார கிராமவாசி ஒருவன் இருந்தான். அவன் சிவ பெருமானின் தீவிர பக்தன். ‘‘எனக்கு ஏராளமான செல்வம் வேண்டும்!’’ என அவன் வேண்டி வந்தான். தீவிர பக்தனாக இருப்பதால் அவன் கோரிக்கையை பகவானால் நிராகரிக்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘‘நாளை காலை கிராம எல்லைக்குப் போ! அங்கு ஒரு சந்நியாசி யிடம் விலை மதிக்க முடியாத ஒரு வைரம் இருக்கிறது. அதைக் கேள். அவரும் தந்து விடுவார். அது உன்னைப் பெரிய பணக்காரனாக்கிவிடும்!’’ என்றார்.

‘நிஜமாகவே இது நடக்குமா?’ என்று யோசித்தபடி அவன் நொடிகளை யுகங்களாகக் கழிக்க ஆரம்பித்தான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தான்.

பொழுது புலரும்போதே எழுந்து கிராம எல்லைக்கு ஓடினான். சிவபெருமான் சொன்ன மாதிரியே அங்கு மரத்தடியில் ஒரு சந்நியாசி அமர்ந்திருந்தார். அவரை நெருங்கி வணங்கிய கிராமவாசி, ‘‘சுவாமி! தங்களிடம் விலையுயர்ந்த வைரம் ஒன்று இருக்கிறதாமே... அதை தயவுசெய்து எனக்குக் கொடுங்கள்’’ என்று வேண்டினான்.

சந்நியாசி ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. அவனைப் பார்த்து, ‘‘அப்பனே! என்ன கேட்டாய்? வைரக்கல்லா?’’ என்றபடி தன்னிடம் இருந்த சிறிய துணிமூட்டையைப் பிரித்து, அதற்குள் இருந்த வைரத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

வைரத்தைக் கையில் வாங்கிய கிராமவாசி பிரமிப்போடு அதை பல தடவை திருப்பித் திருப்பிப் பார்த்தான். அவனால் தன் கண்களை நம்ப முடிய வில்லை. அவன் நினைத்ததைவிட அது பல மடங்கு பெரியதாக இருந்தது. அநேகமாக அது உலகிலேயே பெரிய வைரமாக இருக்கக்கூடும் என தோன்றியது. ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் மிதந்த அவன், சந்நியாசிக்கு நன்றி சொல்லக் கூட மறந்தவனாக வீட்டுக்குத் திரும்பினான். பலவிதமான ஆசைக்கனவுகள்... வைரத்தை விற்றுக் கிடைக்கும் பணத்தில் என்னென்ன வாங்கலாம் எனப் பட்டியல் போட்டான்.

இரவு வந்ததும் அவனுக்கு பயம் வந்தது. ‘யாராவது திருடன் வந்து வைரத்தைத் தூக்கிச் சென்றுவிட்டால் என்ன செய்வது?’ அவனால் தூங்க முடியவில்லை! வைரத்தைப் பாதுகாப்பாக எங்கே வைப்பது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த இடமும் அவனுக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை. காலையில் வைரம் கையில் கிடைத்தபோது இருந்த சந்தோஷம், சுத்தமாக வடிந்துவிட்டது. வைரத்தைக் கவர்ந்து செல்ல வரும் திருடர்கள் தன்னைக் கொன்று விடுவார்களோ என யோசித்தபோது அவனுக்குத் திகில் ஏற்பட்டது.

ராத்திரி பூராவும் தூங்காமல் படுக்கையில் புரண்டபடி இருந்தான். ‘இந்த வைரம் கிடைப்பதற்கு முன்பு இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்கினோமே!’ என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த வைரத்தை சர்வசாதாரணமாக வைத்திருந்த, அவன் கேட்டதும் தயங்காமல் கொடுத்த அந்த சந்நியாசிமீது அவனுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

மறுநாள் விடியற்காலை சந்நியாசியைத் தேடி ஓடினான். ‘‘சுவாமி! விலைமதிக்க முடியாத வைரத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னிடம் தரக்கூடிய அளவுக்கு உங்கள் உள்ளத்தில் என்ன செல்வம் இருக்கிறதோ அதை எனக்குக் கொடுங்கள்!’’ என பணிவாகக் கேட்டபடி வைரத்தைத் திருப்பித் தந்தான்.

கிராமவாசி விரும்பிக் கேட்ட அந்த பெரும் செல்வம்... ஆன்மிகம்!

(27.2.2006 இதழிலிருந்து...)