‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பது சான்றோர் வாக்கு. பல புராணங்களின் மையமாக நின்று சுழலும் தன்மையுடையது. தந்தையின் சொல்லைக் காக்க அரச பதவி துறந்து வனவாசம் போனார் ராமபிரான். தந்தையின் சொல் கேட்டு தாயையே தண்டித்தார் பரசுராமன். இப்படித் தந்தையை முன்னிறுத்திச் சொல்லப்பட்ட அநேக புராண இதிகாசக்கதைகளின் சாரம், தந்தையைப் போற்றுவதுதான்.
சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே. உலகத்தில் அனைத்தையும் முதன்முதலில் நமக்கு அறிமுகம் செய்துவைப்பவர் அவர்தான். அவரே நம்மை குருவிடம் அழைத்துச் செல்கிறார் என்றாலும் குருவுக்கும் முன்பாக அனைத்தையும் நமக்குக் கற்றுக்கொடுப்பவர் அவர்தான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவள்ளுவர் பிள்ளைக்கும் தந்தைக்குமான கடமைகளைச் சொல்கிறார். தந்தை பிள்ளையைக் கற்றோர் கூட்டத்தில் கொண்டு சேர்த்து அதில் முன்னிலை பெற உதவுபவர். பிள்ளையின் கடமையோ ‘இப்படி ஒரு பிள்ளையைப் பெற அந்தத் தந்தை என்ன தவம் செய்தானோ’ என்று பெருமைகொள்ளச் செய்வது.
‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...’ என்கிறது ஒரு திரைப்படப் பாடல். நம் புராணங்களில் அவற்றுக்கு உதாரணமாத் திகழும் சில தந்தைகளை இங்கு சிந்திப்போம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவாய்மையும் மரபும் காத்து...
புராண இதிகாசங்களில் பல தந்தைகள் போற்றப்படுகிறார்கள். பல புதல்வர்கள் போற்றப்படுகிறார்கள். சில இடங்களில் புதல்வர்களால் தந்தைக்குப் பெருமை சேர்கிறது. இதிகாச நாயகன் என்றால் அது ராமனையே குறிக்கும். ராமபிரான் தந்தையின் சொல்லைக் காக்க வனவாசம் போனார். அங்கே பல இன்னல்கள். வாலியோடு மறைந்திருந்து யுத்தம் செய்ய வேண்டிய நிலை. இறுதியில் வாலி இறந்தான். இறப்பதற்கு முன்பாக ராமனிடம் சில கேள்விகளைக் கேட்கிறான்.
`வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே...’ என்று சொல்கிறான். ராமன் தசரதனின் மைந்தன். தசரதன் எப்படிப்பட்டவன் தெரியுமா? வாய்மையையும் அரச மரபின் லட்சணமான கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதையும் காத்து அதற்கு ஈடாகத் தன் உயிரையே கொடுத்த வள்ளல். தூய நெஞ்சம் படைத்தவன் என்று கூறுகிறான். அப்படிப்பட்ட தூயவனின் மைந்தனா நீ... என்று கேள்விகளைக் கேட்கிறான். தசரதன் தன் வீரத்தாலும் தூய பண்புகளாலும் அறியப்பட்டான். அப்படிப்பட்ட தசரதன் வீரமிக்க அரசன் மட்டுமல்ல பிள்ளைப் பாசத்திலும் அனைவரையும் விஞ்சிய தந்தையாகவும் நிற்கிறான் என்றால் அது மிகையில்லை.

வளர்த்த தந்தை
குமரேச சதகம் பாடிய குருபாத தாசர், ஒரு மனிதன் தன் வாழ்வில் ஒன்பதுபேரைத் தந்தை என்று போற்ற வேண்டும் என்று சொல்கிறார். பெற்றெடுத்தவர், ஆதரித்து வளர்த்தவர், கல்வியைச் சொல்லிக் கொடுத்தவர், ஞான உபதேசம் செய்த குரு, நல்ல முறையில் ஆட்சி செய்யும் அரசர், ஆபத்திலிருந்து காப்பாற்றிவர், அன்பு கொண்ட உள்ளம் உடையவர், தனது மகளைத் திருமணம் செய்துகொடுக்கும் மாமனார், வறுமையைத் தீர்த்தவர் ஆகிய ஒன்பது பேரும் தந்தை எனப் போற்றப்பட வேண்டியவர்கள் என்கிறார்.
புராண இதிகாசங்களில் சுட்டப்படும் வளர்ப்புத் தந்தைகள் அநேகர். ஆனால் அவர்களில் சிலர் பெரும் புண்ணியமும் புகழும் பெற்றவர்கள். கண்ணன் பிறந்தது தேவகி - வசுதேவருக்கு. ஆனால் வளர்ந்ததோ யசோதா - நந்தகோபனிடத்தில். ஆண்டால் நாச்சியார் கண்ணனை நந்தகோபன் குமரன் என்று தான் போற்றுகிறாள். கண்ணனை, பரப்பிரம்மன், பரமாத்மா என்று போற்றுகிறபோது மதிப்பு ஏற்படுகிறது. ஆனால் நந்தகோபன் குமரன் என்று போற்றுகிறபோது ஆனந்தம் உண்டாகிறது என்கிறார் பிரம்ம தேவர். இப்படி வளர்த்த தந்தை பெற்ற தந்தையைக் காட்டிலும் பெயரும் புகழும் அடைந்த பல தருணங்கள் புராணத்தில் உண்டு.
சாகுந்தலத்தில் சகுந்தலையைப் பெற்ற தந்தை விசுவாமித்திரர். வளர்த்த தந்தை கன்வ மகரிஷி. கன்வ மகரிஷி சகுந்தலையை வளர்க்கிறார். அவளை யாருக்கும் தெரியாமல் துஷ்யந்தன் கந்தர்வ மணம் புரிந்துகொள்கிறான். பிறகு நாடு திரும்பியவன் ஒரு சாபத்தினால் அவளை மறக்கிறான். அப்போது சகுந்தலையின் போராட்டம் விஸ்வாமித்திரர் தன் அகந்தை நீங்கி மகளுக்காக மனம் உருக விண்ணப்பம் செய்தபோது முடிவுற்றது என்பார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்பூதியடிகள் பெற்ற திருநாவுக்கரசு
அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அடியார். திருநாவுக்கரசர் மீது கொண்ட பக்தியின் காரணமாகத் தான் உடமைகள், செய்த தான தர்மங்கள் அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டியிருந்தார். ஏன் அவர் பிள்ளைகளின் பெயரும் திருநாவுக்கரசுதான். மூத்த மகன் பெயர் மூத்த திருநாவுக்கரசு. ஒரு நாள் திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் ஊருக்கு வந்தார். அப்பூதியடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து அவர் இல்லம் சென்று உணவருந்த ஒப்புக்கொண்டார். அப்பூதியடிகள் அப்பருக்கு உணவு வழங்கத் தன் மகனை இலை பறித்துவரச் சொன்னார்.
மூத்த திருநாவுக்கரசுவும் இலை பறிக்கும்போது ஒரு நாகம் தீண்டிவிட, அவர் உயிர் துறக்கும் முன்பாக இலையைக் கொண்டுவந்து சேர்த்துவிட எண்ணுகிறான். அவன் சிந்தனையைச் சொல்லும் சேக்கிழார் பெருமான்,

‘நல்லதாய் தந்தை ஏவ நான்இது செயப்பெற்றேன்’ என்று சொல்கிறான். மூத்த திருநாவுக்கரசு, நல்ல தாய் தந்தை என்று தன் பெற்றோருக்கு சான்றிதழ் தருகிறான். சாகும் தருவாயில் வெறுப்பும் கோபமும் அல்லவா அவனுக்கு வந்திருக்க வேண்டும். தன் தந்தை சொன்னதால் தனக்கு இது நேர்ந்துவிட்டது என்று வெறுப்படைந்திருக்க வேண்டும். ஆனால் அவனோ தன் தந்தையை நல்ல தந்தை என்கிறார். அப்படியானால் அவன் தன் தந்தைமேல் கொண்டது வெறும் பாசம் மட்டுமல்ல அதைவிட அதிகமான பக்தி. தன் வாழ்வில், தான் கொண்ட கொள்கையில் மாறாது வாழும் தந்தையர்க்குக் கிடைக்கும் கௌரவம். அப்படி அவர் வாழ்ந்ததற்குப் பரிசாகத்தான் மூத்த திருநாவுக்கரசை அப்பர் சாமிகள் மீண்டும் உயிர்பெற்றுவரச் செய்தார் என்றால் நல்ல தந்தையின் இலக்கணம் என்பது நீதி நெறி வழுவாத வாழ்க்கை என்று சொல்லலாம் அல்லவா.
ஜோதிடம் சொல்லும் பித்ரு ஸ்தானம்
ஜோதிடத்தில் தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியன் என்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் பாவமே பித்ரு ஸ்தானம். சூரியன் இந்தப் பிரபஞ்சத்தின் தந்தை என்று சொல்லலாம். அவர் இல்லை என்றால் உயிர்கள் வளரமுடியாது. அப்படிப்பட்ட சூரியபகவான் நல்ல நிலையில் ஒருவரின் ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். அந்த சூரியன் காலையும் மாலையும் கொஞ்சம் குளுமையான ஒளியோடு திகழ்வதைப்போல ஒரு தந்தை மகனிடம் நடந்துகொள்ள வேண்டும். அதேநேரம் கண்டிப்புடன் நடந்துகொள்வதைப்போல சுட்டெரிக்கும் அக்னியாகவும் திகழ வேண்டும். சூரியன் ஒளி பொழிந்தால்தான் நீர் ஆவியாகும். மழை பெருகும். பயிர் வளரும். உயிர் பெருகும். சூரியனின் வெப்பம் வேண்டாம் என்றால் இந்த உலக இயக்கமே நின்றுவிடும். அதேபோன்றுதான் தந்தையானவர் கண்டிப்புடனும் இருந்தால்தான் பிள்ளைகளின் வாழ்வு செழிக்கும்.

தந்தை மகன் நல்லுறவை அருளும் தகப்பன் சாமி திருக்கோலம்
குரு என்றாலே அனைவரின் சிந்தையிலும் தோன்றும் தெய்வ உரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரே ஜகத் குரு, ஞானத்தை அருளும் சிவபெருமானின் திருவடிவம். ஆனால் அப்படிப் பட்ட சிவபெருமானுக்கே முருகன் உபதேசம் செய்தான் என்கிறது புராணம். முருகப்பெருமான் தகப்பனுக்கே சாமியாகி சுவாமிமலையில் குருவாய் அமர்ந்து அருள் பாலிக்கிறான். மகன் தந்தையாக அமர்ந்த தத்துவம் பெரியது. தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது ஈகோ என்னும் அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இதனால் குடும்பத்தில் அமைதியற்ற நிலை உருவாகிவிடுகிறது.
இதைத் தவிர்க்க பெரியவர்களும் சிறியவர்களின் கருத்தை அறிந்துகொள்ள இறங்கி வர வேண்டும். அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்தும் சுமுகமாக இயங்கும். அந்தப் பரமேஸ்வரனே தன் மகனின் கருத்தை அறிந்துகொள்ள திருவுளம் கொண்டு சீடரானார் என்றாலும் நமக்கும் அதுதான் முன்மாதிரி. வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் எப்போதும் சண்டை என்று சொல்பவர்கள் சுவாமிமலை சுப்பிரமண்ய சுவாமியின் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் அமைதி நிலவும் என்கிறார்கள் பெரியோர்கள்.
அனைத்துத் தந்தையருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்!